Friday, September 22, 2006

மனசு

மனசுக்குள் மத்தாப்பு, மனசுக்குள் மழைக்காலம் என்றெல்லாம் திரைப்படங்களுக்கு பெயர் சூட்டுகிறார்கள்.

ஆனால் இந்த மனசு நம் உடலில் எங்கே இருக்கிறது என்று கேட்டால் அவர்களுக்கு விடை தெரியுமோ என்னவோ?

இறைவன் எங்கே இருக்கிறார் என்பவர்களுக்காவது இதற்கு விடை தெரியுமா?

இமய மலையின் அடிவாரத்தில் ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

உளவியல் ஆராய்ச்சி செய்யும் கல்லூரி மாணவர் ஒருவர் அப்பாதை வழியாக செல்ல நேர்ந்தது.

கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருந்த ஞானியைப் பார்த்ததும் வியப்புடன் அவர் கண் விழிக்கும் வரை எதிரே இருந்த ஒரு பாறையில் அமர்ந்து காத்திருந்தார்.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஞானி தன் எதிரில் அமர்ந்திருந்த இளைஞனைப் பார்த்து புன்முறுவலுடன், ‘என்ன தம்பி பார்க்கிறாய்?’ என்றார்.

அவன் தயக்கத்துடன், ‘இல்லை சாமி எதற்காக கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தீர்கள்? என்றார்.

‘எனக்குள்ளிருக்கும் இறைவனுடன் உரையாடிக்கொண்டிருந்தேன்.’

மாணவனுக்கு சிரிப்பு வந்தது. ‘இறைவனா? அதுவும் உங்களுக்குள்ளேயா? என்ன சாமி ஜோக் அடிக்கறீங்க? கடவுள் என்பதே ஒரு பொய். அது சாமியாருங்க பிழைக்க உபயோகப்படுத்தும் ஒரு கற்பனை. இதுல.. நீங்க பேசிக்கிட்டிருந்தீங்கன்னு சொன்னா எப்படி சாமி நம்பறது?’

அவனுடைய குரலிலிருந்த கேலி ஞானியை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. இவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று யோசித்தார்.

‘சரி தம்பி. நான் கேட்பதற்கு பதில் சொல். நீயோ ஒரு இளைஞன். இதுவோ என்னைப் போன்ற ஞானிகள் வந்து தியானம் செய்யும் மலையடிவாரம். உனக்கு இங்கு என்ன வேலை?’ என்றார்.

‘நான் ஒரு உளவியல் ஆய்வாள மாணவன். ஓய்வில்லாத வேலை. யாருடனும் பேசாமல் புத்தகத்தையே பார்த்து பார்த்து போரடித்து சற்று மன ஆறுதலுக்காக இங்கே வந்தேன். வந்து மூன்று நாட்களாகின்றன. இன்றுதான் கடைசி நாள். நாளை மீண்டும் என்னுடைய ஆய்வுக்கு திரும்ப வேண்டும்..’

ஞானி பதில் பேசாமல் சிரித்தார்.

இளைஞனுக்கு கோபம் வந்தது. ‘எதுக்கு சாமி சிரிக்கிறீங்க?’

‘மன ஆறுதல்னு சொன்னீங்களே? அந்த மனசு எங்கருக்குன்னு ஒங்களுக்கு தெரியுமா?’

இளைஞன் என்ன பதில் சொல்வதென தெரியாமல் மவுனமாயிருந்தான்.

‘ஒங்க ஒடலும் மனசும் சோர்ந்திருந்தப்போ இப்படி செஞ்சா என்னன்னு தோனியிருக்கும். அதான் புறப்பட்டு வந்துட்டீங்க? சரிதானே?’

ஆமாம் என்று தலையை அசைத்தான் மாணவன்.

‘அதாவது ஏதோ ஒன்னு உங்களுக்குள்ளருந்து இந்த யோசனையை சொல்லியிருக்கு? சரிதானே?’

ஆமாம் என்று மீண்டும் தலையை அசைத்தான் மாணவன்.

‘இப்ப மட்டுமல்ல.. நீங்க ஒவ்வொரு முறை தவறு செய்யறப்பவும் இந்த மாதிரி செய்யறது சரியில்லைன்னு ஒரு குரல் கேட்டிருக்கும். சரிதானே?’

'ஆமாம்’

‘நீங்க யாருக்காவது உதவி செய்யப் போயி வம்புல மாட்டிக்குறப்ப ஒனக்கு இது தேவையான்னு குரல் கேக்குமே?’

'ஆமாம்.’

‘அது யாரோட குரல்னு எப்பவாவது யோசிச்சதுண்டா?’

‘இல்லை’

‘அதுதான் தம்பி கடவுள். உங்களுக்குள்ள இருக்கறது கடவுளாருந்தா தப்பு செய்யும் போதெல்லாம் செய்யாதேன்னு சொல்லி குரல் வரும்.. சாத்தானாருந்தா பேசாம இருக்கும். நீங்க இப்ப கடவுளே இல்லைன்னு சொன்னீங்களே அது நீங்க ஒங்க படிப்பையும், ஆராய்ச்சியையும் வச்சி சொன்னது. ஒங்களுக்குள்ளருந்து தினம் நொடிக்கொருதரம் வர்ற குரல் யாருடையதுன்னு ஒங்க படிப்ப வச்சி ஆராய்ஞ்சி கண்டு பிடிங்க. அப்புறம் தெரியும் கடவுள் இருக்காரா இல்லையான்னு.. போய்ட்டு வாங்க.’

ஞானி மீண்டும் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்து போக சற்று நேரம் வரை அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தன் வழியில் சென்றார் அந்த இளைஞர்.

வழியெல்லாம் ஞானி கூறியதைப் பற்றிய சிந்தனையே தொடர்ந்தது.

நாம் மனசாட்சி என்று சொல்கிறோமே அதைத்தான் நான் கடவுள் என்று நம்புகிறேன்.. அவரைத் தான் தினமும் வழிபடுகிறேன்.

நான் என்ன நான், நாம் எல்லோருமேதான்.. கடவுள் எங்கே என்று கேட்பவர்களும்தான்.

சிந்திப்போம்..7 comments:

துளசி கோபால் said...

//நாம் மனசாட்சி என்று சொல்கிறோமே அதைத்தான் நான் கடவுள் என்று நம்புகிறேன்.. அவரைத் தான் தினமும் வழிபடுகிறேன்.//

சத்தியமான வார்த்தைங்க.

tbr.joseph said...

கரெக்டா நான் உணர்ச்சி பூர்வமா எழுதன அந்த ரெண்டு வாக்கியத்த எடுத்து பின்னூட்டமா போட்டு.. சத்தியமான வார்த்தைங்கன்னு சொல்லி..

நன்றிங்க துளசி..

தேவ் | Dev said...

ஜோசப் சார் நல்ல பதிவு. :)

leomohan said...

அழகாக சொன்னீர்கள். இதையே நான் முன் கதை வடிவில் எழுதியிருந்தேன்.

http://www.muthamilmantram.com/showthread.php?t=15253

http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்று
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

tbr.joseph said...

வாங்க தேவ்,

ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கீங்க.. ரொம்ப நன்றி..

tbr.joseph said...

வாங்க லீயோ,

அழகாக சொன்னீர்கள். இதையே நான் முன் கதை வடிவில் எழுதியிருந்தேன்.//

அப்படியா? படிச்சி பாக்கேன். நன்றி..

வெற்றி said...

ஜோசப் ஐயா,
மிகவும் அருமையான பதிவு. நல்ல தமிழில் எளிமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

Post a Comment