Wednesday, September 20, 2006

உறவுகள்

என்னுடைய நண்பர் ஒருவருடைய ஒரே மகனுக்கு கடந்த வருடம் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

மகன் ஓரு பி.காம் பட்டதாரி. ஒரு தனியார் நிறுவனத்தில் குமாஸ்தா. மருமகளோ பி.ஈ பட்டம் பெற்றவர். ஒரு பல்நாட்டு நிறுவனத்தில் கணினி பொறியாளர்.  பெற்றோருக்கு ஒரே பெண் என்றாலும் தன் பெற்றோரால் வரதட்சணைக் கொடுக்க முடியவில்லையென்ற என்ற ஒரே காரணத்திற்காக தன்னை விட குறைவாக படித்திருந்த, வருமானம் உள்ளவரை திருமணம் செய்துக்கொண்டவர்.

என்னுடைய நண்பரோ ஐந்திலக்க ஊதியத்துடன் படித்த மருமகளாயிற்றே என்ற காரணத்திற்காக வரதட்சி¨ணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று அந்த சம்மந்தத்திற்கு ஒத்துக்கொண்டவர்.

‘அவ என்னெ விட படிச்சிருக்காப்பா. நல்ல வேலையிலயும் இருக்கா. என்னெ விட சம்பளமும் கூட. இப்ப இல்லன்னாலும் என்னைக்காவது பிரச்சினை வரும்பா.. நா சொல்றத கேளுங்க.’ என்று வாதாடிய மகனை சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.

மகன் நினைத்தது போலவே பிரச்சினை வெடித்தது. நீ பெரிசா நான் பெரிசா என்ற ஈகோ பிரச்சினை. அதுவும் ஒரு வருடத்திற்குள்ளாகவே.  இரு குடும்பத்தாரும் எத்தனை முயன்றும் இளம் தம்பதியர் இருவரும் பிரிவதென தீர்மானிக்க, ‘இப்படியொரு முடிவோட எங்களோட வந்து மட்டும் இருக்கலாம்னு நினைக்காதே.’ என்ற தன் பெற்றோருடைய எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் விடுதியொன்றில் தங்குவதென தீர்மானித்தார் அப்பெண்.

இந்த பிரிவுக்கு என்ன காரணம்?

யோசித்துப் பார்க்கிறேன்..

கணவன்-மனைவி உறவு மட்டுமல்ல மனித உறவுகள் எல்லாமே நீ எனக்கு இதை செய்தால் நான் உனக்கு இதை செய்வேன். அல்லது நீ நான் நினைத்ததுபோல் நடந்துக்கொண்டால்தான் நான் நீ நினைப்பதுபோல் நடந்துக்கொள்வேன்.. என்கின்ற அடிப்படையில்தான்.. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் அந்த உறவையே அறுத்தெறியவும் நம்மில் பலரும் தயங்குவதில்லை.

மனித உறவுகளில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒருவரை அவருக்காகவே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது.

ஆனால் இறைவன் அப்படியல்ல. என்னை எனக்காகவே என்னுடைய எல்லா குற்றம் குறைகளோடு ஏற்றுக்கொள்கிறார். ‘என் கிட்ட வர்றதுக்கு உனக்கு எந்தவித தகுதியும் தேவையில்லை.’ என்கிறார்..

நமக்கு எத்தனையோ எதிர்பார்ப்பு இருக்கலாம்.. ஆனால் அவருக்கு?

நம்முடனான அவருடைய உறவு எந்த எதிர்பார்ப்பும் இல்லாதது.

அதுவே நிரந்தரமான உறவும்கூட..

சிந்திப்போம்..

6 comments:

dondu(#4800161) said...

"பெற்றோருக்கு ஒரே பெண் என்றாலும் தன் பெற்றோரால் வரதட்சணைக் கொடுக்க முடியவில்லையென்ற என்ற ஒரே காரணத்திற்காக தன்னை விட குறைவாக படித்திருந்த, வருமானம் உள்ளவரை திருமணம் செய்துக்கொண்டவர்."
அப்பெண்ணின் துணிச்சலான பின் நடவடிக்கையைப் பார்க்கும்போது இதுதான் எங்கோ இடிக்கிறது. ஒரு வேளை இப்படி இருந்திருக்கலாமோ? அதாவது பெற்றோர்களாக பார்த்து வைத்தத் திருமணத்தில் ஜாதி மட்டும் பார்த்திருப்பார்கள் போல.

பேசாமல் அந்தப் பெண் தன் அலுவலகத்திலேயே தன் படிப்பிற்கேற்றவராகப் பார்த்து திருமணம் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதற்கும் ஒரு வேளை பெண்ணின் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள் போல.

அன்புடன்,
டோண்டு ராகவன்

tbr.joseph said...

வாங்க ராகவன் சார்,

பெற்றோர்களாக பார்த்து வைத்தத் திருமணத்தில் ஜாதி மட்டும் பார்த்திருப்பார்கள் போல.//

பேசாமல் அந்தப் பெண் தன் அலுவலகத்திலேயே தன் படிப்பிற்கேற்றவராகப் பார்த்து திருமணம் செய்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதற்கும் ஒரு வேளை பெண்ணின் பெற்றோர் முட்டுக்கட்டை போட்டிருப்பார்கள் போல.//

நீங்க சொன்ன ரெண்டுமே நூத்துக்கு நூறு சரி சார்.

துளசி கோபால் said...

அன்கண்டிஷனல் லவ்.

கிடைக்கறது கஷ்டம்தான். இது கடவுள்கிட்டேயும், பெட்ஸ் pets கிட்டேயும்தான் கிடைக்கும்.

tbr.joseph said...

வாங்க துளசி,

பெட்ஸ் கூட நாலு நாளைக்கு சாப்பாடு வைக்கலைன்னா கோச்சிக்கும், இல்லையா?

கடவுள் அப்படியில்லையே..

கோவி.கண்ணன் [GK] said...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், அந்த பெண்ணின் பெற்றோர்களே, அந்த பெண் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது தெரிகிறது.

1. அந்த பெண் மீது தவறு இல்லை ஆனால் பெற்றோர்கள் ஊர்வாய்க்கு பயப்படுபவர்கள் என்றால் பெற்றோர்கள் இன்னும் அறியாமையில் இருக்கிறார்கள் என்று கொள்ளவேண்டியிருக்கிறது.

2. அந்த பெண்மீது தவறு இருந்து, பெற்றோர்கள் அது தெரிந்தே பொறுக்க முடியாமல் அவளை வீட்டில் சேர்க்கவில்லை என்றால், அந்த பெற்றோர்களின் செயல் ஞாயமானது. ஆனால் அத்தகைய பெண்ணுக்கு திருமணம் செய்யும் முன் பெற்றோர் நன்கு யோசித்திருக்கவேண்டும். செய்யாமல் போனதால் பாதிக்கப்பட்டது மற்றொரு குடும்பம்.

tbr.joseph said...

வாங்க கண்ணன்,

நீங்க சொல்ற ரெண்டுமே காரணமா இருந்திருக்கலாம்.

ஆனால் அந்த சம்பவத்தை நான் குறிப்பிட்டிருந்தது இறைவனுடனான நம்முடைய உறவு எத்தனை மேன்மையானது என்பதைக் காட்ட மட்டுமே.

மனித உறவுகளின் அஸ்திவாரம் எத்தனை பலஹீனமானது என்பதை காட்டுவதற்கு அந்த மண முறிவு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே..

இதைப் போன்றதுதான் தந்தை-மகன், சகோதர-சகோதர-சகோதரி உறவுகள் போன்ற மற்ற எல்லா உறவுகளுமே..

Post a Comment