Monday, September 18, 2006

அன்பிற்காக வாழ்வோம்

வானதூதர் (Angel) ஒருவர் ஒரு கையில் தீப்பந்தமும் மறுகையில் தீயை அணைக்கும் அடைப்பானையும் வைத்துக்கொண்டு மேகத்தினூடே விரைகிறார். இதைப் பார்த்த ஒரு பெண், ‘எதற்காக இவை இரண்டையும் வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்கிறார்.

‘என் வலது கையில் இருக்கும் தீப்பந்தத்தைக் கொண்டு சொர்க்கத்தை எரித்துவிடப்போகிறேன்.’ என்கிறார் வானதூதர்.

அப் பெண் வியப்புடன், ‘அப்படியா? சரி, இந்த தீப்பந்தம் எதற்கு?’ என்கிறார் வானதூதருடைய இடக்கையில் இருந்த அடைப்பானைச் சுட்டிக்காட்டி.

‘இதைக் கொண்டு நரகத்தில் இருக்கும் நெருப்பை அணைத்துவிடப் போகிறேன்.’

அப் பெண் வாயடைத்துப் போய் நிற்கிறார். பிறகு, ‘ஏன் இப்படிச் செய்யப் போகிறீர்கள்?’ என்கிறார்.

வானதூதர் சோகத்துடன், ‘மக்களில் பெரும்பாலோர் நரகத் தீய்க்கு அஞ்சியும், சொர்க்கத்தின் சுகத்தை நினைத்துமே நல்லவர்களாக வாழ முயல்கிறார்களே தவிர, கடவுளின் மேல் கொண்ட உண்மையான, மேன்மையான அன்பிற்காக வாழ்வதில்லை.’ என்கிறார்.

உண்மைதான்.

இந்த அவசர உலகில் நல்லவனாக, பிறரன்பு உள்ளவனாக வாழ்வதற்கு எவற்றையெல்லாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது?

‘இவ்வுலகில் நீ இழக்கும் எல்லாவற்றிற்கும் பன்மடங்கு மேலான சுகத்தை அளிக்கும் நோக்கத்துடன் உனக்கு நான் தரும் பரிசுதான் சொர்க்கம். அந்த முடிவில்லா வாழ்வை தரும் பரிசுக்கு தகுதியுடையவனாக நீ இருக்க வேண்டாமா?’ என்று நம்மை கேட்கிறார் இறைவன்.

இதற்காக மட்டுமாவது மனிதன் நல்லவனாக பிறர் சிநேகம் உள்ளவனாக வாழ மாட்டானா என்று நினைக்கிறார் இறைவன்..

நியாயம் தானே?

'இந்த அவசர உலகில் என்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரையும், என்னுடைய இன்பத்திலும், துன்பத்திலும் எனக்கு தோழனாக, ஆறுதலாக நின்ற என் நண்பர்களையும் நினைத்துப் பார்க்கக் கூட நேரமில்லாத எனக்கு இறைவனைப் பற்றி சிந்திக்க எங்கே நேரம்?' என்கிறோம் நாம்..

இது நியாயம்தானா?

சிந்திப்போம்

********

5 comments:

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

வணக்கம் ஜோசப் சார்.
சிந்திக்க வைத்த சின்னக் கதை!
என் சிறு வயதில் பாட்டியிடம் நான் கேட்டதாக என் அம்மா சொல்லுவார்கள்...
"பாட்டி, ஏன் நாம் நல்ல பசங்களா இருக்கணும்? அப்ப தான் சொர்கதுக்கு போவோமா?"
பாட்டி சொன்ன பதில், "இல்லடாப்பா, அப்ப தான் நாம் கடவுளோட அன்புக்கு பாத்திரமாவோம்"
....அப்ப புரிஞ்சுதோ இல்லையோ...உங்க கதை சிம்பிளா சொல்லுது!

//மக்களில் பெரும்பாலோர் நரகத் தீய்க்கு அஞ்சியும், சொர்க்கத்தின் சுகத்தை நினைத்துமே நல்லவர்களாக வாழ முயல்கிறார்களே தவிர//

அப்பிடியாச்சும் நல்லவர்களாக இருந்தால் சரி! இப்பல்லாம் பயமுறுத்தினாக் கூட அவனவன் கண்டுக்கறா மாதிரி தெரியவில்லை:-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//சொர்க்கத்தை எரித்துவிடப்போகிறேன்.
நரகத்தில் இருக்கும் நெருப்பை அணைத்துவிடப் போகிறேன்//

ஆகா, நீங்க கருட புராணத்தயே மாத்தறீங்களே...இருங்க இருங்க anniyan.com ல்ல சொல்லி வைக்கிறேன் :-):-)

பயத்தினால் பண்பு மாற்றங்கள் வாராது.
வந்தாலும் நிலையாக இருக்காது. அதனால் "பய பக்தி" என்றே சொல்லாதீர்கள். பயத்தைக் குறைத்து பக்தியில் நிறைத்துக் கொள்ளுங்கள் என்ற ரமண மகரிஷியின் சொற்கள் தான் நிழலாடின, உங்கள் பதிவைப் படிக்கும் போது!

tbr.joseph said...

வாங்க KRS,

அப்பிடியாச்சும் நல்லவர்களாக இருந்தால் சரி! இப்பல்லாம் பயமுறுத்தினாக் கூட அவனவன் கண்டுக்கறா மாதிரி தெரியவில்லை//

பயமுறுத்தி ஒருவனை நல்லவனாக ஆக்க முடியுமா என்ன? ஒருவன் தானாக தன் தவற்றை உணர்ந்து திருந்தவேண்டும். அதுதான் நிலைத்து நிற்கும்..

tbr.joseph said...

பயத்தினால் பண்பு மாற்றங்கள் வாராது.
வந்தாலும் நிலையாக இருக்காது. அதனால் "பய பக்தி" என்றே சொல்லாதீர்கள். பயத்தைக் குறைத்து பக்தியில் நிறைத்துக் கொள்ளுங்கள் என்ற ரமண மகரிஷியின் சொற்கள் தான் நிழலாடின, உங்கள் பதிவைப் படிக்கும் போது! //

இதுவும் நீங்க எழுதினதா KRS? முந்தைய பின்னூட்டத்திற்கு நேரெதிராக இருக்கிறதே?

நீங்கள் சொன்னது உண்மைதான்.. பயத்தால் ஏற்படும் எதுவுமே.. அது பாசமானாலும், பக்தியானாலு, நிலைச்சி நிக்காது..

பாசமும், பயமும் மனதிலிருந்து உணர்வுபூர்வமாக வரவேண்டும்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//இதுவும் நீங்க எழுதினதா KRS? முந்தைய பின்னூட்டத்திற்கு நேரெதிராக இருக்கிறதே?//

ஜோசப் சார்,
என்னுடையது தான். என்னுடையது தான். என்னுடையது தான் ஐயா! (தருமி ஸ்டைலில் படிக்கவும்)

முதல் பின்னூட்டம் ஒரு சராசரி எளியவனின் ஆதங்கம் தான் சார்!

அதனால் தான் புரிதலுடன் கூடிய பின்னூட்டத்தை தனியாக இட்டேன், இரண்டாவதாக! கோவிச்சுக்காதீங்க சார் :-):-)

Post a Comment