Saturday, May 13, 2006

வானத்தில் ஒரு அறிகுறி!

பூமியில் மனிதக்குலம் பலுத்து பெருகப் பெருக மனிதர் செய்யும் தீமைகளும் பெருகுவதையும் அவர்களின் சிந்தனைகள் தீமையைச் சுற்றியே சுழல்வதையும் கண்டு கடவுள் மனம் வருந்தினார்.

‘நான் படைத்த மனிதரை இப்பூமியிலிருந்து அழித்தொழிப்பேன். மனிதர்முதல் கால்நடைகள், ஊர்வன, பறப்பன அனைத்தையும் அழித்துவிடப்போகிறேன்.’ என்று முடிவெடுத்தார்.

ஆனால் அக்காலத்தில் வாழ்ந்து வந்தவர்களுள் நீதிமானாகவிருந்த நோவா என்பவர்மேல் இறைவன் கருணைகூர்ந்தார். அவருக்கு சேம், காம், எப்பேத்து என மூன்று புதல்வர்கள் இருந்தனர்.

கடவுள் நோவாவைப் பார்த்து, ‘எனது முன்னிலையிலிருந்து மனிதர் எல்லோரையும் ஒழித்துவிடப்போகிறேன். ஏனெனில் அவர்களால் மண்ணுலகில் வன்முறை நிறைந்திருக்கின்றது. உனக்காகக் கோபர் மரத்தால் ஒரு பேழை செய்துக்கொள். அதில் அறைகள் பல அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு. நீ செய்ய வேண்டிய பேழை மூன்னூறு முழம் நீளமும், ஐம்பது முழம் அகலமும், முப்பது முழம் நீளமும் உடையதாய் இருக்க வேண்டும். பேழைக்கு மேல் கூரை அமைத்து அந்த கூறை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி அமைத்துக்கொள். மேழையினுடைய் தகவை ஒரு பக்கத்தில் பொருத்து. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என மூன்று தளங்களை அமைத்துவிடு.

நான் வானுலகின் கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்கென மண்ணுலகின் மேல் வெள்ளப் பெருக்கு வரச் செய்வேன். மண்ணுலகில் உள்ளவையெல்லாம் மடிந்துபோம். உன்னுடனோ, என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன். உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல். உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு சதையுள்ள எல்லா உயிரினிங்களிலிருந்தும் வகைக்கு இரண்டை (ஒரு ஜோடி) உன்னுடன் உயிர்பிழைத்துக்கொள்ளுமாறு பேழைக்குள் கொண்டு செல். உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருட்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள். அவை உனக்கும் நீ பேழைக்குக் கொண்டு செல்பவைக்கும் உணவாகட்டும்.’ என்றார்.

கடவுள் தமக்குக் கட்டளையிட்டபடியே நோவா எல்லாவற்றையும் செய்து முடித்தார்.

மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது அறுநூறு! நோவாவும் அவர் குடும்பத்தினரும் கடவுள் கட்டளையிட்டபடி அவர் தேர்ந்தெடுத்திருந்த விலங்குகள், பறவைகள் யாவும் அவர் தயாரித்திருந்த பேழைக்குள் சென்றனர்.

ஏழு நாட்களுக்குப் பின் மண்ணுலகில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது.  வெள்ளம் பெருக்கெடுத்து பேழையை தூக்க அது நிலத்திலிருந்து உயர்ந்து எழுந்து, நீரில் மிதந்தது. வெள்ளம் பெருகி, பெருகி மிக உயர்ந்த மலைகளும் மூழ்கும் வரை உயர்ந்தது.

நூற்றைம்பது நாளளவும் பூமியைச் சூழ்ந்திருந்த பெருவெள்ளம் மன்ணுலகில் வாழ்ந்த எல்லா ஜீவராசிகளையும் மூழ்கடித்தது.

பேழைக்குள் அடைந்துகிடந்த நோவாவையும் அவருடன் இருந்த கால்நடைகளையும் நினைவுகூர்ந்த கடவுள் மண்ணுலகின் மீது காற்று வீசச் செய்தார். வெள்ளம் தணியத் துவங்கி நூற்றைம்பதாம் நாள் வெள்ளம் முற்றிலுமாக வடிந்தது.

அவ்வருடத்தின் ஏழாவது மாதம் பதினேழாம் நாள் வடியத்துவங்கிய வெள்ளம் படிப்படியாக குறைந்து பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிய ஆரம்பித்தன. மேலும் நாற்பது நாட்கள் முடிந்தபின் பேழையின் கூரையில் இருந்த சாளரத்தை திறந்து நோவா காகம் ஒன்றை வெளியே அனுப்பினார். அது மண்ணுலகில் வெள்ளம் வற்றும் வரை போவதும் வருவதுமாக இருந்தது.

பின்னர் நிலப்பரப்பில் வெள்ளம் வடிந்துவிட்டதா என அறிய புறா ஒன்றை வெளியே அனுப்பினார். ஆனால் அது கால் வைத்து தங்குவதற்கு இடம் கிடைக்காததால் அவரிடமே திரும்பி வந்தது. இன்னும் ஏழு நாட்கள் காத்திருந்து புறாவை மீண்டும் வெளியே அனுப்பினார். அது திரும்பி வராமல் போகவே வெள்ளம் வடிந்துவிட்டதன உறுதிப்படுத்திக்கொண்டார்.

நோவா தன்னுடைய அறுநூற்றொன்று வயதான ஆண்டின் முதல் மாதத்தின் முதல் நாளில் பேழையின் மேற்கூரையைத் திறந்துப் பார்த்தார். நிலமெல்லாம் வற்றி உலர்ந்திருந்தது.

கடவுள் நோவாவிடம், ‘நீயும் உன்னுடன் பேழையிலிருக்கும் அனைவரும் வெளியே வா. மன்னுலகில் அவை பலுகிப் பெருகி பன்மடங்காகட்டும்.’ என்றார்.

நோவா கடவுள் தனக்குச் செய்த நன்மைகள் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் முகமாக ஒரு பலிபீடம் கட்டில் அதன்மேல் எல்லா வகை விலங்குகள், பறவைகளிலிருந்து எடுக்கப்பட்டவற்றை பலியாக ஒப்புக்கொடுத்தார்.

அவருடைய பலியை ஏற்றுக்கொண்ட கடவுள், ‘மனிதரை முன்னிட்டு நிலத்தை இனி நான் சபிக்கவே மாட்டேன். ஏனெனில் மனிதரின் இதயச் சிந்தனை இளமையிலிருந்தே தீமையை உருவாக்குகின்றது. இப்போது செய்தது போல இனி எந்த உயிரையும் அழைக்கவே மாட்டேன். மண்ணுலகு இருக்கும் நாளளவும் விதைக்கும் காலமும் அறுவடைக் காலமும், குளிரும் வெப்பமும், கோடைக்காலமும் குளிர்க்காலும் பகலும் இரவும் இனி என்றுமே ஓயாது.’ என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, ‘உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன். மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது. எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்.’ என்றார்.

ஒவ்வொரு முறையின் வானவில் வானத்தில் தோன்றும்போதெல்லாம் இனி மழை வராது என்கிறோமே அதுதான் கடவுள் நோவாவுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையின் அடையாளம் என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள்!

பைபிள் கதைகள் தொடரும்


0 comments:

Post a Comment