Sunday, May 07, 2006

பைபிள் கதைகள் = காயின் - ஆபேல்

ஆதாமும் ஏவாளும் கடவுள் செய்யலாகாது என்று கட்டளையிட்ட செயலை செய்துவிடவே கடவுள் அவர்கள் இருவரையும் இன்பவனத்திலிருந்து விரட்டிவிட்டார்.

இன்ப வனத்தில் இருந்த சமயத்தில் வெளிச்சத்தையும் இருளையும் பிரித்தறிந்திராத ஆதாம் முதல் நாள் முடிவில் பூமியை இருள் கவிந்தபோது அஞ்சி மனம் கலங்கிப்போனான்.

அவமானமும், களைப்பும் அவனை மேற்கொள்ள தன்னுடைய செயலின் தீவிரம் புரிந்தது. தன்னுடைய தவறுக்கு பரிகாரம் செய்தே தீரவேண்டும் என்று நினைத்தான்.

ஆகவே, தனக்குப் பின்னால் வந்த மோயீசன், எலியாஸ், அபிரகாம் ஆகியோரைப் போலவே நாற்பது நாட்கள் விரதம் இருந்தான்.

பிறகு தன் மனைவி ஏவாளோடு குடும்பம் நடத்த ஆரம்பித்தான். காயின், ஆபேல் என்று இரு புதல்வர்கள் பிறந்தனர்.

காயின் முரடனாயிருந்தான். அதற்கு நேர் மாறாக ஆபேல் சாந்தமுள்ளவனாய் இருந்தான். இவ்விரு சகோதரர்களுக்கிடையில் இருந்த குரோதம் இன்றுவரை சகோதரர்களுக்கு இடையில் இருப்பதை நாம் காண்கிறோம்.

ஆனால் காயின் தீயவன் அல்ல. அவனும் கடவுளை நேசித்தான். தன்னுடைய நிலத்தில் விளைந்தவற்றில் சிறந்ததை கடவுளுக்குக் காணிக்கையாக படைத்தான். தன்னுடைய சகோதரன் ஆபேலைப் போலவே உழைத்தும் தன்னால் அவனைப் போல செல்வந்தனாக முடியவில்லையே என்று ஆரம்ப காலத்தில் இருந்த வருத்தம் நாளடைவில் பொறாமையாக மாறி கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது. அதன் காரணமாக ஆபேலை வெறுக்கத் துவங்கினான். உடன் பிறந்த சகோதரரை நேசிக்காத காயினின் காணிக்கையை ஏற்றுக்கொள்ள கடவுள் மறுத்துவிட்டார்.

ஆனால் பேலோ தன்னுடைய மந்தையிலிருந்த ஆடுகளில் கொழுத்த ஆட்டை கடவுளுக்கு காணிக்கையாக அளித்தான். அத்துடன் கடவுளை நேசித்ததைப் போலவே தன்னுடைய சகோதரன் காயினையும் நேசித்தான். ஆகவே கடவுளும் அவனுடைய காணிக்கையை ஏற்றுக்கொண்டார். அவனுடய உழைப்பிற்கு ஏற்ற பலனையும் அபிரிதமாய் அளிக்க ஆபேல் மென்மேலும் செல்வந்தனான்.

மனம் வெறுத்துப் போன காயின் ஒரு நாள் தன் சகோதரன் ஆபேலைச் சந்தித்து, ‘நானும் உன்னைப்போல்தான் உழைக்கிறேன். நீ செல்வந்தனாய் இருக்கிறாய். ஆனால் நானோ வறியவனாய் இருக்கிறேன். நீ என்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறாய் என்று எனக்குத் தெரியும்.ஆகவே உன்னுடைய சொத்தில் பாதியை எனக்குத்தா. நானும் உன்னைப் போலவே செல்வந்தனாகிவிடுவேன்.’ என்றான்.

‘என்னைப் போலவே நீயும் தூய்மையான உள்ளத்துடன் கடுமையாக உழைத்தால் உன் உழைப்பு பயன் தரும். நீயும் செல்வந்தனாவாய்.’ என்று தன்னுடைய சொத்தில் எதையும் தர மறுத்துவிட்டான்.

ஆத்திரமடைந்த காயின் பேலைக் கொன்று அவனுடைய சொத்துக்களை முழுவதும் அடைய அன்றே தீர்மானித்து தகுந்த சந்தர்ப்பத்திற்குக் காத்திருந்தான்.

இந்நிகழ்ச்சி நடந்து சிலதினங்களுக்குப் பிறகு காயின் ஒரு நாள் ஆபேலைப் பார்த்து, ‘வெளியே சென்று வரலாம் வா’ என்று அழைத்தான். அவனுடைய மனதில் இருந்த தீய எண்ணத்தை அறிந்திராத ஆபேல் அவனுடன் சென்றான்.
வயல்வெளியில் இருவரும் நடந்துசென்றபோது ஆபேல் எதிர்பாராத நேரத்தில் காயின் அவன் மீது பாய்ந்து அவனைக் கொன்றுபோட்டான்.

தன் முன் பிண்மாய் கிடந்த ஆபேலின் உடலைப் பார்த்ததும் தன்னுடைய செயலின் தீவிரத்தை உணர்ந்த காயின் கடவுளின் கோபத்திற்கு பயந்து ஓடி ஒளிந்தான்.

ஆனால் கடவுள் அவனை விடவில்லை. ‘உன் சகோதரனின் ரத்தம் நம்மை நோக்கி கூவுகிறது. அவன் எங்கே?’ என்றார்.

காயினோ, ‘என்னை ஏன் கேட்கிறீர். நான் என்ன அவனுக்கு காவலாளியா?’ என்றான்.

எல்லாம் அறிந்த கடவுள், ‘உன் கையால் உன் சகோதரனின் ரத்தத்தை நிலத்தில் சிந்த வைத்தாய். ஆகவே இன்று முதல் அதே பூமியில் சபிக்கப்பட்டவனாய் இருப்பாய். அதன்மேல் நீ பயிரிடும் எதுவும் உனக்கு பலன் தராது. பூமியில் நீ நிலையில்லாமல் நாடோடியைப் போல் அலைந்து திரிவாய்.’ என்று சபித்தார்.

தன்னுடைய தவற்றையுணர்ந்த காயின் கடவுளின்முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து, ‘நான் செய்த தவறு மன்னிக்கமுடியாத தவறு. சொந்த சகோதரனைக் கொன்ற என்னை காண்பவனெல்லாம் கொல்ல துணிவானே.’ என்றான்.

அவன் மேல் கருணைக் கொண்ட கடவுள் அவனை இனம் கண்டுகொண்டு எவனும் அவனைக் கொல்லாதபடி அவனுக்கு ஒரு அடையாளம் இட்டார். காயின் ஆண்டவர் முன்னிருந்து விலகி ஏதேனுக்கு (Athens) கிழக்கே நாடோடியாய் அலைந்து திரிந்தான்.

பைபிள் கதைகள் தொடரும்..

0 comments:

Post a Comment