Saturday, May 20, 2006

பாபேல் கோபுரம் (Babel Tower)

வெள்ளப்பெருக்கிலிருந்து காப்பாற்றப்பட்ட நோவாவும் அவருடயை குடும்பத்தினரும் பலுகிப் பெருகி உலகெங்கும் பரவினர். நோவா வெள்ளப்பெருக்கிற்குப் பிறகு முன்னூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்து தன்னுடைய தொள்ளாயிரத்து ஐம்பதாவது வயதில் மரணமடைந்தார்!

ஒரே குடும்பத்திலிருந்து பிறந்த குழந்தைகள் ஒரு மொழியைப் பேசுவதில் அதிசயமில்லையே. ஆகவே உலகெங்கும் ஒரே மொழி பேசப்பட்டு வந்தது.

அவர்களுள் பலரும் பயணமாகி ஓரு சமவெளி நிலத்தை அடைந்தபோது செங்கல் தயாரித்து தாங்கள் குடியிருக்க வீடுகளை அமைக்கவாரம்பித்தனர். செங்கல்லை கற்களாகவும் கீலை காரையாகவும் (சாந்து) உபயோகித்தனர்.

அப்போது அவர்கள் ‘வாருங்கள் நாம் உலகெங்கும் சிதறிப் போவதற்கு முன் நாம் அனைவரும் சேர்ந்து வானளாவிய கோபுரம் ஒன்றை எழுப்புவோம்.’ என்று தங்களுக்குள் முடிவெடுத்து அதை செயலாக்குவதில் தீவிரமடைந்தனர்.

வானத்து மேகங்களை முட்டும் அளவுக்கு உலக மானிடர் கட்டிய கோபுரத்தைக் கண்ட கடவுள், ‘மானிடர் அனைவரும் ஒரே மொழி பேசுவதாக இருக்கின்றனர். அதனால்தானே கடவுளையே சவால் விடும் அளவுக்கு இத்தகைய செயலில் இறங்கியுள்ளனர். அவர்கள் பேசும் மொழியை மாற்றிவிட்டால் இது சாத்தியமாகாதே. மேலும் ஒரே இடத்தில் வசிக்கும் இவர்களை உலகெங்கும் சிதறிப்போகச் செய்வோம்.’ என்று தனக்குள் கூறிக்கொண்டார்.

கோபுரத்தை எழுப்புவதில் மும்முரமாக இருந்த மானிடர் திடீரென்று தாங்கள் பேசும் மொழி மற்றவர்களுக்கு விளங்காமல் போவதைக் கண்டு குழம்பி தங்களுக்குள் வாதிடத் துவங்கினர். ஒருவர் பேசுவது மற்றவருக்கு விளங்காமல் கோபுரம் கட்டும் பணி தடைப்பட்டது. பாதியிலேயே அரைகுறையாக நின்றுபோன கோபுரத்திற்கு பாபேல் (Babel Tower) என்று பெயரிடப்பட்டது.

நோவாவின் புதல்வர்களில் ஒருவரான சேமின் வழியில் வந்தவர்களுள் வந்த ஆபிராமின் (அபிரகாம் அல்ல) மனைவி சாராய் பார்ப்பதற்கு மிகவும் அழகானவள். ஆனால் குழந்தைப் பேறு இல்லாமல் மலடியாய் இருந்தாள்.

ஆபிராமின் தந்தை தெராகு தான் வாழ்ந்து வந்த நாட்டை விட்டு கானான் என்ற நாட்டில் குடிபுகும் எண்ணத்துடன் தன் புதல்வர்கள் மற்றும் மருமகள் சாராயுடனும் புறப்பட்டு வழியில் காரான் என்ற நாட்டிற்கு வந்ததும் அங்கேயே தங்கி வாழலானார்.

தெராகுவின் மரணத்திற்குப் பிறகு கடவுள் ஆபிராமை நோக்கி, ‘ உன் தந்தை வீட்டிலிருந்தும், உன் இனத்தவரிடமிருந்தும் பிரிந்து நான் உனக்கு காண்பிக்கும் நாட்டிற்குச் செல். உன்னை நான் ஆசீர்வதித்து வழிநடத்துவேன்.’ என்றார்.

ஆபிராம் உடனே தன்னுடைய மனைவி சாராய், தண் சகோதரன் லோத் ஆகியோரை அழைத்துக்கொண்டு புறப்பட்டார். அப்போது அவருக்கு வயது எழுபத்தைந்து. வழியில் சில காலம் வாழ்ந்தபின் நெகேபு என்ற இடத்தில் தங்கியிருந்தார். அங்கும் கடும் உணவுப் பஞ்சம் பேற்படவே எகிப்து நாட்டை நோக்கி பயணம் செய்தார்.

அவர் எகிப்தை நெருங்கிய சமயத்தில் தன் மனைவி சாராயிடம், ‘நீ கண்ணுக்கு அழகானவள். எகிப்தியர் நீ என்னுடைய மனைவி என்று அறிந்தால் உன்னுடைய அழகின் நிமித்தம் என்னைக் கொன்றுவிடுவர். ஆகவே நீ என் சகோதரி என சொல்லிவிடு.’ என்றார்.

அவர் நினைத்தது போலவே சாராயியைக் கண்ட எகிப்தியர் ‘இவள் எவ்வளவு அழகானவள்’ என்று புகழ்ந்ததுடன் எகிப்தை ஆண்டுவந்த் பாரவோனின் அதிகாரிகள் அவர்கள் இருவரையும் மன்னனுடைய அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். பாரவோன் அவளுடைய அழகில் மயங்கி தன்னுடைய மனைவியருள் ஒருவராக அவளை அடைந்தான்.

மேலும் அவள் பொருட்டு பாரவோன் ஆபிராமுக்கு நன்மைகள் பல செய்தான். வேலைக்காரரையையும் கால்நடைகளையும் அன்பளிப்பாக அளித்தான்.

அவனுடைய துர் நடத்தையை அறிந்த ண்டவர் அவனுக்கும் அவனுடைய குடும்பத்தாருக்கும் கொடிய கொள்ளை நோய் வரச்செய்தார்.

இதனால் மனம் நொந்த பாரவோன் ஆபிராமை அழைத்து, ‘சாராய் உன் மனைவி என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை? நான் அவளை உன் சகோதரி என்று சொன்னதால்தானே அவளை என் மனைவியாக எடுத்துக்கொண்டேன். இப்போதே நீ உன் மனைவியை அழைத்துக்கொண்டு புறப்படு.’ என்று கட்டளையிட்டான்.

ஆபிராமும் தன் மனைவி மற்றும் தன் சகோதரன் லோத்தை அழைத்துக்கொண்டு  தனக்குரிய பொருட்கள், கால்நடைகளுடன் எகிப்தைவிட்டு புறப்பட்டார்.

தொடரும்..

0 comments:

Post a Comment