Saturday, April 22, 2006

மதமும் மதகுருமார்களும்

சென்னையில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றில் பணியாற்றி முதன்மைப் பொதுமேலாளாராக ஓய்வுபெற்ற ஒருவருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது.

நான் தமிழகத்தில் மேலாளராக பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது எண்பதுகளில், இருந்து அவருடன் ஏற்பட்ட நட்பு இது. கடந்த ஆண்டுதான் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நன்கு படித்தவர். பொருளாதாரத்திலும் வங்கி அலுவலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத சமஸ்கிருதத்திலும் பி.எச்.டி பெற்றவர். பக்திமான். சிறந்த பேச்சாளர்.

கடந்த வருடத்தில் ஒருநாள் அவரிடமிருந்து எனக்கு தொலைப்பேசி வந்தது. அவருடைய கடைசி மகளுக்கு - அவரும் நானும் ஒரே ஊரில் இருந்த சமயத்தில் பிறந்தவர் - திருமணம் என்றும் என்னுடைய வீட்டு விலாசத்தை அளித்தால் நேரில் வந்து அழைப்பிதழைக் கொடுப்பதாகவும் கூறினார்.

நான், ‘எதுக்கு சார். உங்களுக்கு இருக்கற வேலையில வீடுவரைக்கும் வந்துக்கிட்டு.. சும்மா தபால் அனுப்புங்க. தம்பதி சமேதரா வந்துடறோம்.’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அது நல்லாருக்காது. நீங்க உள்ளூர்ல இல்லேன்னா தபால்ல அனுப்பிருப்பேன். இங்கதான கோடம்பாக்கம்? நேரிலயே வரேன்.’ என்று பிடிவாதமாய் விலாசத்தைப் பெற்றுக்கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் வந்திருந்தார்.

அவர் அளித்த அழைப்பிதழைப் பிரித்து படித்தேன். தலைப்பிலேயே காஞ்சி பெரியவருடைய படம். அதன் கீழ் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் ஆசீர்வாதத்துடன் என்று அழைப்பிதழ் துவங்கியிருந்தது..

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இரு மத குருமார்களுமே சர்ச்சையில் சிக்கிக்கொண்டு சிறையில் இருந்த சமயம் அது.

என்னுடைய நண்பர் ஒரு பக்திமான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவருடைய மனம் புண்படாதபடி, ‘சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கலாமா?’ என்றேன்.

அவர் என்னை வியப்புடன் பார்த்துவிட்டு, ‘கேளுங்க ஜோசப், என்ன விஷயம், இவ்வளவு பீடிகையோட ஆரம்பிக்கிறீங்க?’ என்றார்.

நான் தயக்கத்துடன், ‘இந்த இரண்டு பேரோட ஆசீரோடன்னு அழைப்பிதழை அடிச்சிருக்கீங்களே. இவங்களப்பத்தி இப்ப பத்திரிகைகள்ல வர்றது ஒன்னும் அவ்வளவு விரும்பத்தக்கதா இல்லையே?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் பதிலளிக்காமல் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். என் அருகில் நின்றுக்கொண்டிருந்த என் மனைவி என்னைப் பார்த்து முறைத்தார். ‘ஏங்க உங்களுக்கு ஏதாச்சும் அறிவு இருக்கா? இத்தனை வருஷம் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கறவர்கிட்ட போயி..’ என்று கிசுகிசுத்தார்.

எனக்கும் ஏண்டா இப்படி கேட்டோம் என்றிருந்தது.

சிறிது நேரங்கழித்து கண்களைத் திறந்தவர், ‘ஜோசப் உங்கள மாதிரி நிறைய பேர் என்கிட்ட இதப்பத்தி கேட்டுருக்காங்க. இவ்வளவு ஏன், எங்க சேர்மனப் பத்தி உங்களுக்கு தெரியுமில்லே? அவரேகூட கேட்டிருக்கார். அவங்கக்கிட்டல்லாம் நா சொன்னதையே இப்பவும் சொல்றேன். பொறுமையா கேட்டுட்டுச் சொல்லுங்க.’ என்று ஆரம்பித்தார்.

நான் என் மனைவியைப் பார்த்தேன். அவர் என் நண்பரைப் பார்த்தவாறு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்க தயாரானார்.

என்னுடைய நண்பர் ஒரு சிறு புன்னகையுடன் தொடர்ந்தார். அவர் பேசப் பேச நான் நினைத்திருந்தது எத்தனை அடிமுட்டாள்தனம் என்று உணர்ந்துக்கொண்டேன்.

அதன் சாராம்சத்தை இங்கு சுருக்கமாக தருகிறேன்.

‘ஜோசப், நான் இவங்களுக்கு முன்னாலிருந்த காஞ்சி பெரியவரின் பரம சிஷ்யன். நா மட்டுமில்ல இன்னைக்கி இந்தியாவிலருக்கற பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பலரும் அவருடைய சிஷ்யர்கள், நம்முடைய முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் உட்பட. அவரை நாங்கள் ஒரு மனுஷ அவதாரத்துலருக்கற தெய்வமா மதிச்சோம். இப்பவும் அப்படித்தான். அந்த அவதாரபுருஷன் தெரிந்தெடுத்தவர்கள்தான் இப்போதிருக்கும் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும். முக்கியமா இளையவர்.

அப்படிப்பட்ட மகான் தப்பு செஞ்சிருக்க முடியுங்கறத எங்களால ஜீரணிக்கமுடியலை ஜோசப். ஆனா ஒன்னு. நம்மளப் போலவே இவங்களும் மனுஷங்கதானே. நமக்கு இருக்கற எல்லா ஆசாபாசங்களுக்கும் அவங்களும் அடிமைங்கதானே ஜோசப். இன்னைக்கி பேப்பர்ல வந்திக்கிட்டிருக்கறதெல்லாம் சரின்னோ தப்புன்னோ நா சொல்ல வரலே. அதுல சிலதும் உண்மையும் இருக்கலாம். ஆனா அத வச்சி மாத்திரம் நானும் என்னப் போன்ற பலரும் காஞ்சி பெரியவர்மேலருக்கற பக்தியில, மரியாதையில நம்பிக்கையை இழந்துர தயாராயில்லீங்க.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ.. இன்னைக்கி காஞ்சி மடத்தோட கட்டுப்பாட்டுல பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பொது சேவையில ஈடுபட்டிருக்கு.. அத்தோட பள்ளிகள், கல்லூரிகள்னு எத்தனையோ வகையில பொது மக்கள்கிட்டருந்து கிடைக்கிற பணத்துல சேவை பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க. அவங்கள கடவுள்களா நினைக்க வேண்டாம். அட்லீஸ்ட மனுஷங்கள்னாவது மதிக்கலாம் இல்லே? அவங்க செஞ்சதா சொல்ற குற்றங்கள அவங்க செஞ்சாங்களா இல்லையாங்கறத கோர்ட்ல நிரூபிக்கறதுக்கு முன்னாலயே அவங்கள குத்தவாளிங்களா தீர்மானிச்சி இந்த பத்திரிகைள் ஒரு பப்ளிக் ப்ரொசீடிங்ஸ் நடத்தறது சரியா ஜோசப்?

இன்னொன்னு ஜோசப். நாங்க இவங்க ரெண்டு பேரையுமே காஞ்சி சங்கராச்சாரியாரோட பிரதிநிதிகளாத்தான் இப்பவும் பாக்கறோம். அவங்க தனிப்பட்ட முறையில அவங்களுக்கு தகுதியிருக்கோ இல்ல¨யோ காஞ்சி பீடாதிபதியோட ஸ்தானம் மிகவும் புனிதமானது. அதை என்னை போன்றவங்க இப்பவும் மதிக்கறோம். இவங்க ரெண்டு பேர் வழியா நாங்க மரியாதை செய்றது அந்த கடவுளைங்க.. இவங்கள இல்ல.. இவங்களோட ஆசிர்வாதத்தோடன்னு நான் போட்டிருக்கறது இந்த ரெண்டு மனுஷங்க வழியா கடவுள் கொடுக்கற ஆசீர்வாதத்தோடன்னு அர்த்தம் பண்ணிக்கணும். இவங்க ரெண்டு பேரும் கடவுள் கையிலருக்கற ஆயுதம் மாதிரி. இவங்க வழியா கடவுள்கிட்டருந்து வர்ற ஆசீர்வாதம் இவங்க கெட்டவங்கங்கறதுனால வராம போயிராதுங்க.’ என்றவர் சட்டென்று, ‘நீங்க புட்டபர்த்திக்கு போயிருக்கீங்களா?’ என்றார்.

நான் ‘இல்லை, சார்’ என்றேன்.

அவர் புன்னகையுடன், ‘சாரி, நீங்க கிறிஸ்துவர்ங்கறத மறந்துட்டேன்.’ என்றார்.

நான் உடனே, ‘சேச்சே அதுக்காக இல்ல சார். நான் பாண்டியிலருக்கற அம்மையார் மடத்துக்கு போயிருக்கேன். தத்துவ மேதை கிருஷ்ணமூர்த்தியோட லெக்சர கேட்டிருக்கேன். இப்பவும் அவரோட நிறுவனங்கள்லருந்து எனக்கு மாசா மாசம் புல்லட்டீன் வந்துக்கிட்டிருக்கு. ரஜ்னீஷ் எழுதிய பல புத்தகங்களை படிச்சிருக்கேன்.  ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் இருக்கறப்போ என்னோட ஃப்ரெண்டோட ஒருதடவை போயிருக்கேன்.  அந்த ஒரு சந்திப்பிலேயே எனக்கும் அவர் மேல ஒருவிதமான மதிப்பு வந்துது சார்.' என்று பட்டியலிட்டேன்.

‘சாரி. நான் சொன்னது தப்பாருந்தா மன்னிச்சிருங்க. உங்களுக்கும் இதுலெல்லாம் ஈடுபாடு இருக்கும்னு தெரியாம போயிருச்சி. சரி.. சாயிபாபாவ பத்தி என்னவெல்லாம் ஒரு காலத்துல சொன்னாங்க? ஆனா நீங்க ஒரேயொரு தரம் புட்டபர்த்தி போய் பார்த்தீங்கன்னா தெரியும். அவரோட நிறுவனங்கள் ஆந்திர மக்களுக்கு செய்திருக்கிற சேவைகளின் தாக்கம். ஏன் ஜோசப்..? நமக்கு குடிநீர் வரணுங்கறதுக்காக சமீபத்துல அவரே முன்வந்து அந்த சானல சரிபண்றதுக்கு எத்தனை கோடி கொடுத்தார்னு உங்களுக்கு தெரியுமே.. ஏன் உங்களுக்கு ரொம்பவும் பழக்கமான கேரளத்துல.. மாதா அமிர்தமாயி அம்மா..’

ஆமாம்.. கொச்சியிலிருந்த சமயத்தில் அந்த அம்மையாருடைய கூட்டங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதைப்பற்றி நாளை..

அடுத்த பதிவுடன் நிறைவுறும்.

பி.கு: இந்த குறுந்தொடர் யாருடைய பதிவுக்கும் அதில் நான் வாசித்த எந்த பின்னூட்டங்களுக்கும் எதிர் பதிவல்ல. ஆனால் சமீபத்தில் நான் படித்த பதிவும் அதிலிருந்த சில பின்னூட்டங்களும் என்னை இக்கட்டுரையை எழுதத்தூண்டியது என்பது மட்டும் உண்மை. ஆனால் இது யாருடைய நம்பிக்கையையும், கருத்தையும் குறை கூறவோ, எள்ளி நகையாடவோ எழுதப்பட்டது அல்ல. இது முழுக்க முழுக்க என்னுடைய நம்பிக்கையைப் பற்றியது. எதில் நான் ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருக்கிறோனோ அதைப் பற்றியது.

8 comments:

G.Ragavan said...

ஜோசப் சார். இப்போதைக்கு ஒன்னும் சொல்லலை. நீங்க என்ன சொல்ல வர்ரீங்கன்னு முதல்ல புரிஞ்சக்கனும். அதுனால கொஞ்ச நாளைக்கு நான் நீங்க சொல்றதப் படிச்சிப் புரிஞ்சிக்க முயற்சி பண்றேன்.

ஜோ / Joe said...

படித்தேன்..கருத்துண்டு..சொல்ல மனமில்லை.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உங்களுடைய கருத்துக்கு எப்போதுமே மதிப்புண்டு ராகவன்.

நிதானமாகவே சொல்லுங்கள்.

நான் இன்றிரவு கொச்சிக்கு சென்றுவிட்டு திரும்பிவர வியாழக்கிழமை ஆகிவிடும். அடுத்தப்பதிவை இடையில் இடமுடியுமா என்று தெரியவில்லை.

tbr.joseph said...

வாங்க ஜோ,

நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். எந்த கருத்துக்கும் மாற்றுண்டு என்று. நீங்கள் கூறவந்ததை தயங்காமல் கூறுங்கள்.

நிதானமாக, உணர்ச்சிவசப்படாமல்..

ஒருவேளை உங்களுடைய கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லாமல் போகலாம். நிச்சயம் உங்களுடைய கருத்தை மதிப்பேன்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
மாற்று மத நம்பிக்கைகள் குறித்து நான் பொதுவில் விவாதிப்பதில்லை.நான் ஒரு மதத்தை சார்ந்தவனாக இருந்தாலும் மதத்தில் அவ்வளவு பிடிப்பு கிடையாது .எனது மதத்தைப்பற்றி நான் விமரிசித்திருக்கிறேன் .ஆனால் வேறு மத நம்பிக்கை குறித்து நான் நேர்மையான கருத்து சொன்னாலும் ,என் பெயரோடு சேர்த்து அது சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது .எனவே நான் தவிர்க்கிறேன் .வேறொன்றுமில்லை.

tbr.joseph said...

ஆனால் வேறு மத நம்பிக்கை குறித்து நான் நேர்மையான கருத்து சொன்னாலும் ,என் பெயரோடு சேர்த்து அது சரியான கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளப்படாது//

ஓரளவுக்கு உண்மைதான் ஜோ. என்ன செய்வது? அதுதான் நம் நாட்டின் துரதிர்ஷ்டமே. இங்கு தரமான விமர்சனத்துக்குக்கூட சாயம் பூசிவிடுவதுண்டு. இருப்பினும் உங்களுடைய விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன்.

முத்து(தமிழினி) said...

ஒரு வகையில் நீங்கள் சொல்வது சரிதான்

tbr.joseph said...

வாங்க முத்து,

இந்த கட்டுரையின் அடுத்த பகுதியையும் படிச்சிட்டு சொல்லுங்க.

Post a Comment