Friday, April 14, 2006

புனித வெள்ளி!யேசு கிறிஸ்து சிலைவியில் அறையப்பட்டு மரித்த இன்றைய நாளை புனித வெள்ளி என்று உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகிறார்கள். இது கொண்டாட்டத்தின் நாள் அல்ல. துக்கத்தின் நாள்.

ஆங்கிலத்தில் இது Good Friday எனப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில் God’s Friday அதாவது கடவுளின் தினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஜெர்மானிய மொழியில் Charfreitag என அழைத்தார்கள். இதில் Char என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள Care என்பதிலிருந்து மறுவி வந்தது. Care என்ற வார்த்தைக்கு துக்கம் என்றும் பொருள் உள்ளது. ஆகவே இத்தினத்தை துக்கத்தின் நாள் என்று ஜெர்மானியர்கள் அழைத்தனர்.

சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவது ஒருவர் செய்த குற்றத்திற்கு அளிக்கப்படும் வெறும் மரண தண்டனை மட்டுமல்ல. அத்தகைய சாவு ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமல்லாமல் அக்குற்றவாளியை மரணத்திலும் அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான்.

இத்தகைய கொடூரமான மரண தண்டனை உரோமை பேரரசில் துவங்கி சுமார் எண்ணூறு ஆண்டுகள் வரை கொடிய குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாவீரன் அலெக்ஸாண்டர் தீர் நாட்டை முற்றுகையிட்டபோது அந்த போரில் பிடிபட்டவர்களில் சுமார் இரண்டாயிரம் பேரை இத்தகைய தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறான்.

கி.பி. 37 - 41 ஆண்டுகளில் பெரும்பாலான யூதர்கள் துன்புறுத்தப்பட்டு திறந்தவெளி மேடையில் சிலுவை மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

சாதாரணமாக சிலுவைச் சாவுக்கு தீர்ப்பிடப்பட்டவருடைய சிலுவையின் குறுக்குச் சட்டத்தை (Cross arm or patibulum) அவருடயை தோள்களில் சுமத்தி சுமக்கச் செய்வது வழக்கம். தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தை அடைந்ததும் சிலுவையின் நேர் சட்டத்தில் (Upright portion or stipes) இணைத்து கயிற்றால் கட்டப்படுவர். அத்தகைய தண்டனைக்குள்ளாப்படுபவர்களின் உடல்கள் அன்றைய இரவு முழுவதும் சிலுவையிலேயே மரணமடையும்வரை விட்டுவைக்கப்படும். ஏனென்றால் அக்காலத்தில் சிலுவைச்சாவு என்பது கடவுளின் சாபம் என்று கருதப்பட்டது. அத்தகைய தண்டனைக்குள்ளாக்கப்பட்டவரின் உடலைக் காண்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த ஏற்பாடு.

அத்துடன் சிலுவையில் கயிற்றால் கட்டப்படுபவர்கள் அத்தனை எளிதில் மரித்துவிடமாட்டார்கள். யேசுவோடு அவருக்கு வலப்பக்கம் மற்றும் இடப்பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அப்படித்தான். ஆனால் அன்றைய தினத்திற்கு மறுநாள் யூதர்களின் பாஸ்கா திருவிழாவாகவிருந்ததால் சிலுவையில் பிணங்கள் இருக்கலாகாது என்று யூத வீரர்கள் அக்கள்வர்களுடைய கால்களை முறித்து மரணமடையச் செய்தார்கள்.

ஆனால் சிலுவையில் அறையப்படுவதற்குமுன் கசைகளாலும் பிரம்பாலும் அடிக்கப்பட்டு, முற்களால் ஆன முள்முடி சூட்டப்பட்டு, வலுவான ஆட்களாலும் கூட சுமக்கமுடியாத ஒரு பாரமான சிலுவையை சுமக்கச்செய்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கூடுதலான பாதையில் அழைத்துச்செல்லப்பட்டு.. சிலுவையில் கட்டப்படாமல் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் துளையிட்டு சிலுவை மரத்தோடு சேர்த்து அறையப்பட்டதால் அவர் எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே அவர் மரணமடைகிறார்.

யேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றி புதிய வேதாகம சிரியர்கள் நால்வருமே (St.Mark, St.Mathew, St.Luke and St.John) தங்களுடைய சுவிசேஷங்களில் எழுதியுள்ளார்கள்.

அவற்றுள் யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிலையில் மொழிந்த முக்கியமான ஏழு அருள் வாக்குகளை கீழே காணலாம்:

1. தன்னை அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்தவர்களுக்காக (St.Luke:23:34):

‘தந்தையே இவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை.’

2. தன்னுடைய வலது பக்கத்தில் சிலுவையில் அறையுண்டிருந்த கள்வனைப் பார்த்து (St. Luke:23:43)

‘இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக உனக்கு சொல்கிறேன்.”

3.தன்னுடைய தாய் மரியாளையும் தன் அன்புச் சீடர் அருளப்பரையும் (St.John) பார்த்து (St.John:19:26)

‘அம்மா இதோ உம் மகன்! இதோ உன் தாய்’

4.தன்னுடைய தந்தையை நோக்கி (St.Mark:15:34)
‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’

5.மரணத்தின் தறுவாயில் தாகம் எடுத்தபோது (St.John:19:28)
‘நான் தாகமாயிருக்கிறேன்’

6. மரணம் நெருங்கியபோது (St.John:19:30)

‘எல்லாம் நிறைவேறிற்று!’

7. மரணத் தருவாயில் தன் தந்தையை நோக்கி(St.Luke:23:46)

‘தந்தையே உமது கையில் என் வியை ஒப்படைக்கிறேன்.’

சிந்தனை: யேசு தன்னைக் காட்டிக் கொடுத்த தன்னுடைய சீடனான யூதாசை, தன்னை எனக்குத் தெரியவே தெரியாது என்று ஒரு முறையல்ல, மும்முறை மறுதலித்த சீமோனை (St.Peter), தன்னை விட்டு விட்டு ஓடிப்போன மற்ற சீடர்களை, தன்னை ஏளனம் செய்து, கசையால் அடித்து பிலாத்துவின் தீர்ப்புக்குள்ளாக்கிய அன்னாஸ், கைப்பாஸ் என்ற யூத குருமார்களை, அவரை விடுவிக்க தைரியமில்லாமல் கைகளைக் கழுவி சிலுவைச் சாவுக்கு தீர்ப்பிட்ட பிலாத்துவை, அவர் மேல் பாரமான சிலுவையைச் சுமத்தி இழுத்துச் சென்று சிலுவையில் அறைந்த யூத,உரோமைய வீரர்களை, அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்திலே நீர் இறைவனின் மகனாயிருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா. நாங்கள் உன்னை நம்புகிறோம் என்று எள்ளி நகையாடிய யூதர்களையெல்லாம் ஒரு சேர 'தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது என்னதென்று இவர்களுக்கு தெரியவில்லை' என்று மன்றாடிய யேசு எங்கே...

என்னை ஒரேயொரு முறை கேலி செய்தான், அவமானப் படுத்தினான், என்னை மற்றவர்கள் முன் கேவலப்படுத்தினான், இவன் எனக்கெதிராக சாட்சியம் கூறினான் என்பதற்காக நான் என் நண்பர்கள் எத்தனை பேரை என்னுடைய நிரந்தர எதிரியாக இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்?

உன்னை மன்னித்துவிட்டேன் ஆனால் நீ எனக்குச் செய்த எதையும் மறக்கமாட்டேன்.. நேரம் வரும்போது பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்று மனதில் அவனை கறுவிக்கொண்டிருக்கிறேன்..

ஏன் இந்த வஞ்சக நெஞ்சம்? இதில் இருந்து நான் எப்போது விடுபடப் போகிறேன்?

இன்றா? அல்லது நாளையா? அல்லது என்னுடைய மரணப்படுக்கையில் நான் என்னுடைய வாழ்நாளில் செய்த பாவங்களுக்கெல்லாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வேன் என்ற எண்ணத்தில் இவற்றையெல்லாம் சுமந்துக்கொண்டிருக்கிறேனா?

சிந்திப்பேன்.. செயலாற்றுவேன்.

8 comments:

மணியன் said...

இன்று வாழ்த்து சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை. என் இன்றைய இடுகையில் புனித வெள்ளியையும் ஈஸ்டர் ஞாயிறையும் குழப்பிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது. எனவே உயிர்த்தெழுந்த நாளுக்கு நான் வாழ்த்து கூறியதாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

tbr.joseph said...

வாங்க மணியன்

இன்று வாழ்த்து சொல்லலாமா இல்லையா என்று தெரியவில்லை. என் இன்றைய இடுகையில் புனித வெள்ளியையும் ஈஸ்டர் ஞாயிறையும் குழப்பிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிகிறது.//

கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரின் திருவிழாக்களைப் பற்றிய இத்தகைய குழப்பம் நம்மில் பலருக்கும் இருக்கிறது.

அதைக் களையும் விதமாகத்தான் கிறிஸ்துவ மதத்தில் கொண்டாடப்படும் மகிழ்ச்சி மற்றும் துக்ககரமான நாட்களைப் பற்றி எழுதிவருகிறேன்.

இதைப் போலவே இஸ்லாமிய சகோதரர்களும் ஒரு முயற்சியில் இறங்கினால் நல்லதென நினைக்கிறேன்.

முக்கியமாக பக்ரீத், மிலாதுநபி என்ற விழாக்களில் இத்தகைய குழப்பங்கள் இருக்கின்றன, என்னையும் சேர்த்து.

உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். வருகிற ஆண்டு உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியும் முன்னேற்றத்தையும் அளிப்பதாக..

arunagiri said...

உங்களுக்கு என் மனமார்ந்த தமிழ்ப்புத்தாண்டு மற்றும் உயிர்த்தெழுநாள் நல்வாழ்த்துக்கள்.

arunagiri said...

பஸ்ஸில் பேசிய பிரச்சாரகர் குறித்த பதிவையே மொத்தமாக எடுத்து விட்டீர்களோ, எங்கு தேடியும் கிட்டவில்லை. மாங்கு மாங்கென்று பின்னூட்டம் இட்டிருந்தேன், ஹூம்.

tbr.joseph said...

பஸ்ஸில் பேசிய பிரச்சாரகர் குறித்த பதிவையே மொத்தமாக எடுத்து விட்டீர்களோ, எங்கு தேடியும் கிட்டவில்லை. மாங்கு மாங்கென்று பின்னூட்டம் இட்டிருந்தேன்//

இல்லையே அருணகிரி. உங்க பின்னூட்டத்த இன்னைக்கித்தான் பப்ளிஷ் பண்ணேன். It is still there.

உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

Arunagiri,

Please go to http://vedhagamam.blogspot.com and search in the archives.

You must have gone to my புனித வெள்ளி page. That's why you couldn't get the archives link.

G.Ragavan said...

நானும் ஒருமுறை ஒரு நண்பருக்குத் தவறாக வாழ்த்துக் கூறியிருக்கிறேன். அவரும் அதைப் பெருந்தன்மையோ ஏற்றுக் கொண்டு பிறகு புனித வெள்ளியின் காரணத்தை விளக்கினார். நான் நல்ல நாளில் வாழ்த்த வேண்டும் என்ற நல்ல பண்பினாலேயே அவரை வாழ்த்தியதை அவர் உணர்ந்து கொண்டார்.

ஏசுவின் இந்த உபதேசங்கள் மிகவும் உயரியவை. பகைவனுக்கருள்வாய் நெஞ்சே என்று தமிழில் சொல்வோம். அந்தப் போதனைதான் ஏசு குறிப்பிட்டிருப்பதும்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

நான் நல்ல நாளில் வாழ்த்த வேண்டும் என்ற நல்ல பண்பினாலேயே அவரை வாழ்த்தியதை அவர் உணர்ந்து கொண்டார்.//

அந்த உணர்வுதான் மிகவும் முக்கியம் ராகவன்.

உங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள். Better late than never.. is it not?

Post a Comment