Friday, April 07, 2006

சிலுவைப் பாதை - நிறைவுப் பகுதி

பதிமூன்றாம் ஸ்தலம்: யேசுவின் உடலை அவருடைய தாயின் மடியில் கிடத்துகின்றனர்.சொல்லொண்ணா வேதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த யேசுவின் திருவுடலை சிலுவையிலிருந்து இறக்கி அருகில் நின்றுக்கொண்டிருந்த அவருடைய தாய் மரியாளின் மடியில் கிடத்தினர்.

சிந்தனை: நாம் எத்தனை வேதனையிலிருந்தாலும் நமக்கு ஆறுதல் தருவது நம்முடைய அன்னைதான். நம்முடைய இறுதி மூச்சு நம்மை விட்டு அகலும்போது நாம் நம்முடைய அன்னையின் அருகிலிருந்தால் நம்மை தன் மடியில் கிடத்தி ஆறுதல் அளிப்பார் அல்லவா? ஒரு தாய்க்கு ஈடான அரவணைப்பை, அவர் அளிக்கும் ஆறுதலை நம்மால் ஒருபோதும் பிறருக்கு அளிக்க இயலாது என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நம்மை சுற்றியுள்ளோர், அவர்கள் நமக்கு தீங்கிழைத்தவராயினும், அவர்கள் துன்புற்றிருக்கும் வேளையில் நம்மால் இயன்றவரை நாம் அவர்களுக்கு ஆறுதலாக இரண்டொரு வார்த்தகளாவது பேசியிருக்கிறோமா? அல்லது நீ எனக்கு தீங்கிழைத்தவன் தானே? உனக்கு இவ்வேதனை தேவைதான், நன்றாக அனுபவி என்று சபித்துவிட்டு சென்றிருக்கிறோமா? அல்லது அவர்களுடைய மரணத்திற்குப் பிறகும் அவர்களுடைய குறைகளை நினைவுகூர்ந்து அவர்களைப் பழித்து பேசியிருக்கிறோமா?

என் அன்பு இறைவா, என்னைச் சுற்றிலுமுள்ளவர்களை கண்ணோக்கும் பரந்த மனப்பான்மையை எனக்குத் தாரும். நான் அவர்களுடைய துக்கத்திலும், வேதனையிலும், தோல்வியிலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருக்கும் மனப்பக்குவத்தை எனக்குத் தாரும் இறைவா, தாரும்..

பதிநான்காம் ஸ்தலம்: யேசு
கல்லறையில் அடக்கப்படுகிறார்.யேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை முதல் நூற்றாண்டில் (First Century A.D.) கண்டுபிடிக்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில நூறு அடிகள் தொலைவிலிருந்த அக்கல்லறை பதிமூன்று அடி நீளமும், இரண்டு அடி அகலமும் உடையதாக இருந்தது என சரித்திர ய்வாளர்கள் கூறியுள்ளனர். வேதாகமத்தில் கூறியுள்ளபடி அக்கல்லறை அரிமத்தேயா என்ற ஊரைச் சார்ந்த
ஜோசஃப் என்பவருக்கு சொந்தமாயிருந்தது. அவர் யேசுவின் போதனைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தவராயினும் அவர் வாழ்ந்த காலத்தில் ரோமையர்களுக்கும் யூத மதகுருக்களுக்கும் அஞ்சி வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் இருந்தவர். ஆனால் யேசு மரித்ததை அறிந்த அவர் துணிவுடன் பிலாத்துவிடம் சென்று யேசுவின் உடலை அடக்கம் செய்யக் கேட்டுப் பெற்றார். பின்னர், முன்னாளில் யேசுவால் மனந்திரும்பிய நிக்கோதேமுஸ் என்பவர் கொண்டுவந்திருந்த நறுமணப் பொருட்களுடன் யேசுவின் உடலை தான் கொண்டுவந்திருந்த சுத்தமான துணியில் போர்த்தி அவரை தனக்கென தயாரித்து வைத்திருந்த கற்களால் குடையப்பட்டிருந்த குகையில் வைத்து வாயிலில் ஒரு பெருங்கல்லை புரட்டி வைத்துவிட்டுச் சென்றார். தான் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று யேசு முன்பே கூறியிருந்த்தை நினைவுகூர்ந்த யூத மதக் குருக்கள் எங்கே அவருடைய சீடர்கள் இரவில் வந்து அவருடைய உடலை கொண்டு சென்றுவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று கூறிவிடுவார்களோ என்று அஞ்சி பிலாத்துவிடம் கூறி அவருடைய கல்லறைக்கு சீல் வைத்தனர்.


பாறையில் குடையப்பட்ட கல்லறையின் வெளிப்புறம்

கல்லறையின் உட்புறம்


கல்லறை வெளிப்புறத்தில் ரோம வீரர்களால் சீல் வைக்கப்பட்டது

சிந்தனை: அரிமத்தேயா சூசை யூதர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தும் அஞ்சாமல் யேசுவின் உடலை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றார். ஆனால் நான்? யேசுவின் அன்பை உணராமல் அவர் எனக்காக செய்த உயிர்த்தியாகத்தை மறந்துவிட்டு அவரை பிறர் முன்னிலையில் என் சுயநலத்திற்காக எத்தனை முறை புறக்கணித்திருக்கிறேன்?

அதுமட்டுமா? அவர் தனக்கென வைத்திருந்த கல்லறையை யேசுவுக்காக மனமுவந்து கொடுத்தாரே. ஆனால் நான்? எத்தனை சுயநலத்துடன் பல சமயங்களில் நடந்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கிருப்பவையெல்லாம் என்னுடையவை. ஆகவே நான் அதை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன் என்றேனே. பிறருடைய பொருளுக்காக ஏங்கும் நான் என்னுடையவற்றை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை தாரும் இறைவா தாரும்..

நிறைவு

4 comments:

மணியன் said...

வீடு வரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை, கடைசிவரை யாரோ ? என பட்டினத்தாரும் கண்ணதாசனும் பாடியும் எல்லாம் எனக்காக என இருக்கிறோம்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சிலுவைப்பாதையின் போது கோவிலில் வாசிக்கப்படுவது போலவே சிந்தனைகளோடு எழுதியிருக்கிறீர்கள் ..ஏதாவது கோவிலில் இதை வாசிக்கிறார்களா?

tbr.joseph said...

வாங்க மணியன்,

எல்லாம் எனக்காக என இருக்கிறோம்.//

அதுமட்டுமா? எல்லாம் என்னால்தான் என்றும் பேசுகிறோமே.

tbr.joseph said...

வாங்க ஜோ,

ஏதாவது கோவிலில் இதை வாசிக்கிறார்களா?

இல்லீங்க. ஆனா என்னுடைய மலேஷிய நண்பர் ஒருவர் அவருடைய கோவில் வெளியிடும் மாத பத்திரிகையில் இதை மீண்டும் பிரசுரிக்கலாமா என்று கேட்டார். செய்துக்கொள்ளுங்கள் என்றேன். மற்றபடி அடைக்கலராசா என்ற ஒரு பாதிரியார் எனக்கு ஒவ்வொரு எப்பிசோடும் இட்டவுடன் தனி மெய்லில் நன்றாக இருக்கிறது ஜோசஃப் என்று எழுதுவார்.

Post a Comment