Saturday, April 22, 2006

மதமும் மதகுருமார்களும் 2

நான் கொச்சியில் இருந்த சமயத்தில் மாதா அமிர்தமயி அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்தது.

உலகெங்கும் உள்ள அவர்களுடைய சீடர்கள் திரண்டு வந்திருந்தனர். நானும் எங்களுடைய வங்கிக்கு வந்திருந்த கார்ப்பரேட் அழைப்பிதழை ஏற்று சென்றிருந்தேன்.

அதற்கு முன்பே அவர்களுடைய சபையினர் கொச்சியை அடுத்த நகரில் அவருடைய பெயரில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். அங்கு செல்வந்தர்களிடமிருந்து சற்றே அதிகப்படியான தொகை வசூலிக்கப்பட்டாலும் ஏழை எளியவர்களுக்கு தரமான ஆனால் அதே சமயம் மலிவு கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அத்துடன் மலையாள தொலைக்காட்சிகளில் அவர்களைப் பற்றி மேலை நாட்டினர் உணர்ச்சி பொங்க வாழ்த்தியதையும் கேட்டிருந்தேன். ஆகவே அவர்களைப் பற்றி என் மனதில் ஒரு நல்ல எண்ணம் இருந்தது.

அவர்கள் நடத்திய கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற சில நிகழ்ச்சிகளைத் (அதை விவரிப்பதால் எந்த பயனும் இல்லையென்பதால் அவற்றை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருடைய இந்திய மற்றும் வெளிநாட்டு சீடர்கள் அவரை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார்கள் என்பதைக் கண்கூடாகவே காண முடிந்தது.

அவ்விழாவுக்கு கடல் கடந்து வந்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் சிலருடன் அளவளாவ வாய்ப்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஜப்பானில் இருந்து வந்திருந்தார். அவருக்கு ஒரு கால் போலியோ நோயால் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். திருமணமாகி இரு குழந்தைகளும் இருந்தது. திடீரென்று ஒரு நாள் மாதா அமிர்தமயியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஜப்பான் தொலைக்காட்சியில் கண்டாராம். அவருடைய பேச்சால் கவரப்பட்டு (மாதாவுக்கு மலையாளத்தைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது) அடுத்த சில நாட்களிலேயே தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையை விட்டுவிட்டு முழுநேர சேவையில் இறங்கிவிட்டாராம்.

நானும் மாதாவை சுமார் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். கறுத்த நிறம், வெள்ளை வெளேர் என்ற சேலையும், முழுக்கை சட்டையும்.... எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த முகம். நிதானமான, பதற்றமில்லாத, மிகச்சாதாரணமான பேச்சு.. தன்னை நெருங்கி வந்தவரையெல்லாம் அரவணைப்பது..

ஆனால் அதில் மயங்கிப்போய் உலகெங்கும் அவருக்கு சீடர்கள்...

எனக்கொன்றும் அவரிடம் அப்படி விசேஷமாக ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் அவரிடம் இருந்த ஏதோ ஒன்றினால் கவரப்பட்டுத்தானே இத்தனை சீடர்கள்? அந்த வளாகத்தில் குழுமியிருந்த பலரும் பேசுவதைக் கேட்டால் ஏதோ அவரைப் போன்று இவ்வுலகில் யாருமே இல்லை என்பதுமட்டுமல்ல இனியும் பிறந்து வரமுடியாது என்பதுபோல் தோன்றும்.

அப்படி ஒரு கண்மூடித்தனமான அன்பு. தாய்-மழலை உறவுக்கு இணையான அன்பு!

உலகெங்கும் உள்ள சமூக சேவை மையங்கள் அனுப்பும் கோடி, கோடியான பணம். அந்த பணத்தை நிர்வாகம் செய்ய முறைப்படியான நிறுவனங்கள். அவற்றை திறம்பட நடத்திச் செல்ல உலகெங்குமிருந்து அமர்த்தப்பட்டிருந்த படித்த, திறம்படைத்த, எந்த ஒரு ஊதியத்தையும் எதிர்பார்க்காத உள்நாட்டு மற்றும் மேலை நாட்டு நிர்வாகிகள்!

சுநாமியால் பாதிக்கப்பட்ட கேரள மற்றும் தமிழக மீனவர்களுடைய மறுவாழ்வுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.100 கோடி!

அவருடைய பெயரில் எத்தனை, எத்தனை நிறுவனங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள்..

அவரைச் சுற்றியிருந்த சிலர் மெர்சனரிகளைப் போல நடந்துக்கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன.

ஆனாலும் அவருடைய சேவை பெரும்பாலும் குறிப்பிட்டதொரு மதத்தினருக்குத்தான் என்றில்லை என்பதைக் கேள்விப்படும்போது இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிடுவதில் தவறேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அதேபோல்தான் மற்ற மதக்குருமார்களைப் பற்றியும் நான் கூறவிழைவது.

அவர்களைத் தெய்வங்களாக பார்ப்பது அவரவருடைய மத நம்பிக்கையைப் பொறுத்தது.

ஆனால் அவர்களும் நம்மைப் போன்ற சதையும் ரத்தமும் கொண்ட மனிதர்கள்தான். நம்மைப் போலவே எல்லாவித ஆசாபாசங்களுக்கும் உட்பட்டவர்கள்தான்.

எவ்வித அப்பழுக்குமில்லாமல் இருக்க அவர்கள் ஒன்று அவதாரப் புருஷர்கள் இல்லை. ஆனால் நம்மில் பலரைவிட சில விஷயங்களிலாவது அவர்கள் மேன்மையானவர்கள்..

இல்லையென்றால் படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோரும் ஒருசேர முட்டாள்தனமாக அல்லது கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்ற மாட்டார்கள்.

அவர்களிடம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அவர்களுடைய சீடர்கள் பார்க்கிறார்கள், நம்புகிறார்கள், அவர்கள்மேல் அன்பு செய்கிறார்கள், அவர்களுக்காக தங்களுடைய வாழ்க்கையிலிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்..

எந்தவொரு மதத்தையும் பாகுபடுத்திப் பார்க்காமல் எல்லா மத குருமார்களையும் தெய்வத்தின் பிரதிநிதியாக, தெய்வத்தை சென்றடையும் வாயிலாக, அவரிடம் இட்டுச் செல்லும் காவலாளியாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

தெய்வம் குறையில்லாதது. அவரை சென்றடையும் வாயிலில் சிறு குறைகள் இருக்கலாம், ஆனால் தெய்வத்தின் சன்னதியில் நாள்தோறும் வசிக்கும் அவர்களுக்கு தெய்வத்தின் கருணை நிச்சயம் இருக்கும், அவருடைய நிழலில் வசிக்கும் அவர்களிடம் தெய்வத்தின் பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.

ஆகவே அவர்களுடைய மனித குறைகளை மறந்துவிடுவோம்.

விமர்சிப்பதை விட்டுவிடுவோம்.

‘தீர்ப்பிடாதீர்கள். நீங்கள் எந்த அளவையாள் அளக்கிறீர்களோ அதே அளவையால்தான் நீங்களும் அளக்கப்படுவீர்கள்.’

இது என்னுடைய கருத்து அல்ல. யேசுபிரானின் பொன்மொழிகளுள் ஒன்று..

*****

15 comments:

மணியன் said...

ஜோசஃப் சார், நன்றாக சொன்னீர்கள்.
இருப்பினும் //இல்லையென்றால் படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோரும் ஒருசேர முட்டாள்தனமாக அல்லது கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்ற மாட்டார்கள்.// மற்றவர்கள் பின்பற்றுவதால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நாமும் சென்று விழ முடியாது. ஒவ்வொருவருக்கும் அவருக்கென தனியான காரணமோ கொள்கையோ இருக்கும்; அது நமதுடன் ஒத்துப் போகாதிருக்கலாம்.

அமிர்தானந்தமயியை பொறுத்தவரை அவரின் ஒரே செய்தி அன்பு, unconditional and unlimited. அதுவே சாதி
ஆட்டம்போடும் இந்தியாவிலும் ஒரு பிற்பட்ட சமுகாயத்தவராயினும் அவருக்கு இத்தனை சிறப்புகள் கொணர காரணமாயமைகின்றது.

tbr.joseph said...

வாங்க மணியன்,

ஒவ்வொருவருக்கும் அவருக்கென தனியான காரணமோ கொள்கையோ இருக்கும்; அது நமதுடன் ஒத்துப் போகாதிருக்கலாம்.//

ஒத்துக்கொள்கிறேன்.

Dharumi said...

தங்களுக்கு வரும் பணத்தை இப்படி மக்கள் நலனுக்குச் செலவழிக்கும் இவர்களைப் பார்த்து பிரமிப்பும் ஏற்படுகிறது.

குமரன் (Kumaran) said...

சார். நல்ல பதிவு.

//எவ்வித அப்பழுக்குமில்லாமல் இருக்க அவர்கள் ஒன்று அவதாரப் புருஷர்கள் இல்லை. //

அவதார புருஷர்களிடமும் ஆயிரம் அப்பழுக்குகளைக் காணலாம். தெய்வமே ஆனாலும் மனித உருவில் வந்துவிட்டால் மனிதனுக்குடைய சில குறைகளையும் தாங்கிக் கொண்டு தான் வருகிறது என்று எண்ணுகிறேன். அப்படி வந்தால் தான் மனிதர்கள் அந்த அவதார புருஷர்களிடம் (இங்கு புருஷர்கள் என்று சொன்னாலும் தெய்வம் ஆணாக மட்டுமின்றி பெண்ணாகவும் வருகிறது என்று நம்புகிறேன்) நெருங்கிப் பழகி பயனுறுவார்கள் போலும்.

தமிழ் பூக்கள் said...

i like the bible stories very much and its useful to me also...... thanks for your interests

tbr.joseph said...

வாங்க தமிழ் பூக்கள்,

I will resume the Bible Stories series shortly..

Thanks for your comments.

Sam said...

//Dr. Jane Goodall, while presenting Amma with the 2002 Gandhi-King Award for Non-violence said,
" She stands here in front of us. God's love in a human body."//

ஜோசப் சார்,

'holy cow'என்ற புத்தகம் கிடைத்தால் படித்துப் பாருங்கள். ஒரு ஆஸ்திரேலியப் பெண்மணி எழுதியது.
இவருடைய எழுத்தில் ஒரு கடுமை இருக்கும். இந்தியர்களைப் பற்றி நல்ல கருத்து கிடையாது.இவர் அம்மாச்சியை சந்தித்தது அதனால் ஏற்பட்ட அனுபவம், படிக்க வேடிக்கையாக இருந்தது. இவர் கேரளா ஆசிரமம் சென்ற போது, அங்கிருந்த நடப்புகளையெல்லாம் கடுமையாக கேலியாக விமர்சிக்கிறார். அம்மாவைச் சந்திக்க இவர் முறை வருகிறது. கூட்ட நெரிசல் இவர் எரிச்சலை அதிகமாக்குகிறது. யாரோ நீ உனக்கு
வேண்டியதைக் கேள், கிடைக்கும் என்று சொல்கிறார். இவரும் எரிச்சலில், எதைக் கேட்பது
என்று தெரியாமல், மனதிற்குள் எனக்கு மார்பகங்கள் பெரிதாக வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார்.என்ன கேட்டோம் என்பதையே மறந்து விடுகிறார். இதற்குப் பின் தங்கியிருந்த தில்லி நகருக்குப் போய்ச் சேருகிறார் என்று நினைக்கிறேன். இவரைக் கவனித்த ஒரு தெரிந்தவர், என்ன உன்
மார்பகம் பெரிதான மாதிரி இருக்கிறதென்று கேட்கிறார். கண்ணாடியில் தன்னை பார்க்கும் போது இது உண்மையென்று
பட்டதும் மருத்துவரைச் சென்று பார்க்க உடனே ஏற்பாடு செய்கிறார். புற்று நோயாக இருக்குமோஎன்ற பயம் வந்து விடுகிறது. இந்திய மருத்துவர் சோதனைக்குப் பிறகு ஒன்றுமில்லை என்று சொன்ன பிறகும், கவலையோடு தாய் நாட்டிற்கு விரைகிறார். எல்லா பரிசோதனைக்கும் பிறகு முடிவுகள்
வருகிறது. மருத்துவர் புற்று நோயெல்லாம் ஒன்றுமில்லை, எதோ அறிவியலால் விளக்கம் சொல்ல
முடியாத காரணங்களால், உடலில் ஹார்மோன்களின் அளவு அதிகமாயிருக்கிறது அதனால் மார்பகம் பெரிதாக்கி விட்டது என்கிறார்.

அறிவியல் பார்வையில் மதத்தை அணுகும் போது எல்லா விடைகளும்
கிடைப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
அம்மாச்சியைப் பார்க்கும் போது தோன்றுவது ஒன்று மட்டுமே. கள்ளமில்லாத மனமுடையவரைப்
பார்க்கும் போது, அவர்கள் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அங்கே
இறைவன் இருக்கிறான். இவர் 1953, அல்லது 1954யில் கேரளாவில் மீனவர் குடும்பத்தில் பிறந்தவர். நாலாவது வகுப்பு வரை மட்டுமே படித்தவர். எல்லா மதங்களுமே இறைவனிடம் அழைத்துச் செல்கிறதென்று உறுதியாகச் சொல்கிறவர். நான் வாழும் காலத்தில் ஒவ்வொரு வருடமும், இவரை ஒரு முறை பார்க்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணும் போது ஒரு சேர மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் வருகிறது.

அம்மாச்சி என்றழைக்கப்படும் இவரை நான் முதல் முறையாக சந்தித்தது 1987யில். மாணவனாக இருந்த காலத்தில், விளக்குத் தூண் ஒன்றில் ஒட்டப்பட்டிருந்த இவர் வருகை குறித்த விளம்பரத்தைப் பார்த்த பின் சும்மா வேடிக்கை பார்க்கப் போனேன். இவருடைய வருகை அமெரிக்காவிற்கு முதல் முறை என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. நான் இவரைச் சந்தித்த போது இவர், தமிழ் என்று தெரிந்தவுடன் தமிழிலேயே பேசினார். முடிந்த வரை ஒவ்வொரு வருடமும் இவரைப் பார்க்கப் போவதுண்டு. இவரைச் சந்தித்தால் என் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பின் ஏன் போகிறேன் என்றால், நான் வாழும் காலத்தில், சாதி, மத, இன,வேறுபாடு பார்க்காத ஒருவரை, அன்பு ஒன்றோடு அனைவரையும் எதிர் கொள்கிற ஒருவரை, பார்க்க முடிகிறதே என்ற பிரமிப்பினால்.
இவரிடம் எந்தக் குறையும் என்னால் காண முடியவில்லை. இவரோ இவரைச் சேர்ந்தவர்களோ என்னிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை, நானும், இன்றோ என்றுமோ இவரிடமும் எதையும் கேட்கப்
போவதில்லை.

உங்கள் பதிவுக்கு நன்றி.

அன்புடன்
சாம்

tbr.joseph said...

வாங்க சாம்,

நீங்கள் கூறியது மிகவும் சரி..

நீங்கள் கூறியபடியே எனக்கும் அவரிடம் அப்படி விசேஷமாக ஒன்றும் தெரியவில்லை ஆனாலும் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது. அதனால் கவரப்பட்டு சிலர் அதாவது அவருடைய சீடர்கள் என்று கருதப்படாதவர்கள், வருடா வருடம் அல்லது சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவரை சந்திக்க செல்கிறார்கள். ஒருவேளை மனசாந்திக்காகவும் இருக்கலாம். நம்பிக்கைதானே வாழ்க்கை..

நம்பிக்கை இல்லாமல் வெறும் வேடிக்கைக்காகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ அவரைக் காண செல்பவர்களுக்கு அவருடைய தனித்துவம் தெரியாமல் போய்விடலாம். ஆகவே அங்கு நடப்பதை கேலியும் செய்யலாம்.

அது அவரவருடைய மனப்பக்குவத்தைப் பொறுத்தது..

உங்களுடைய கருத்தை தெளிவாக கூறியிருக்கிறீர்கள். நன்றி.

G.Ragavan said...

ஏதோ ஒன்றில் கவரப்பட்டுதான் மக்கள் மதகுருமார்களிடம் போகின்றார்கள். உண்மைதான்.

அமிர்தானந்தமயி அவர்களை நான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் கேள்விப் பட்டிருக்கிறேன்.

பணத்தை வைத்துக் கொண்டு நல்லதும் செய்யலாம். கெட்டதும் செய்யலாம். இவர்கள் நல்லது செய்கின்றார்கள் என்பது பெருமகிழ்ச்சி. அதும் சாதிமத வேறுபாடுகள் பாராமல். இப்படி நடப்பது மிகவும் அரிது.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி அமிர்தானந்தமயி அவர்கள் முன்னாள் கேரள முதல்வர் அந்தோணியைச் சந்தித்த பொழுது அணைத்துக் கொண்டது மம்மூட்டியும் ஊர்வசியும் அணைத்துக் கொண்டது போல இருந்தது என்று ஏ.கே.நாயனார் சொன்னதுதான் என்னுடைய மண்டையில் நன்றாக உட்கார்ந்து கொண்டிருக்கிறது. :-)))

tbr.joseph said...

ராகவன்,

சாதாரணமாக கேரள அரசியல்வாதிகள் நாகரீகமில்லாமல் பேசமாட்டார்கள். அதில் நாயனாரைப் போன்றவர்கள் விதிவிலக்கு.

Muse (# 5279076) said...

வாழ்த்துக்கள் ஜோஸப் அவர்களே.

உங்களை போன்று எழுதுபவர்களாலும், பேசுபவர்களாலும்தான் கிருத்துவர்களில் பலரும் நல்லவர்கள்தான் என்பது வெளிப்படுகிறது.

நான் இதுவரை சந்தித்த கிருத்துவ நண்பர்களில் ஒருவர்கூட தங்களை போல நடுநிலமையாகவும், நிதானமாகவும் இருந்ததில்லை. என் மனதை புண்படுத்தியவர்கள்தான் அதிகம். நீங்கள் நம்பிக்கை அளிக்கிறீர்கள். நன்றி.

tbr.joseph said...

வாங்க Muse,

நான் இதுவரை சந்தித்த கிருத்துவ நண்பர்களில் ஒருவர்கூட தங்களை போல நடுநிலமையாகவும், நிதானமாகவும் இருந்ததில்லை. //

அப்படியா? ஆச்சரியம்தான். கிறிஸ்துவர்கள் சிறுவயதுமுதலே நிதானம், பொறுமை, நடுநிலைமை முதலிய குணங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வளர்க்கப்படுகிறார்கள். நீங்கள் சந்தித்த பல கிறிஸ்துவர்களிடத்தில் இக்குணங்கள் இல்லாமல் போனது துரதிர்ஷ்டம்தான்.

முத்து(தமிழினி) said...

சார்,

இதைப்பத்தி இன்னைக்கு ஒரு பதிவு நான் போடறேன்..பதில் பதிவு எல்லாம் இல்லை..என்னுடைய ஆதங்கம்..என்னுடைய கருத்து...அவ்வளவுதான்...

tbr.joseph said...

வாங்க முத்து,

ஜமாய்ங்க.

இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயம்தான்.. உங்க பதிவு என்னென்ன கருத்துக்களை வெளிக்கொணர்கிறது என்று பார்ப்போம்.

முத்து(தமிழினி) said...

here comes...

Post a Comment