Saturday, April 22, 2006

மதமும் மதகுருமார்களும் 2

நான் கொச்சியில் இருந்த சமயத்தில் மாதா அமிர்தமயி அவர்களின் பிறந்தநாள் விழா கோலாகலமாக நடந்தது.

உலகெங்கும் உள்ள அவர்களுடைய சீடர்கள் திரண்டு வந்திருந்தனர். நானும் எங்களுடைய வங்கிக்கு வந்திருந்த கார்ப்பரேட் அழைப்பிதழை ஏற்று சென்றிருந்தேன்.

அதற்கு முன்பே அவர்களுடைய சபையினர் கொச்சியை அடுத்த நகரில் அவருடைய பெயரில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வந்த மருத்துவமனைக்கு சென்றிருக்கிறேன். அங்கு செல்வந்தர்களிடமிருந்து சற்றே அதிகப்படியான தொகை வசூலிக்கப்பட்டாலும் ஏழை எளியவர்களுக்கு தரமான ஆனால் அதே சமயம் மலிவு கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

அத்துடன் மலையாள தொலைக்காட்சிகளில் அவர்களைப் பற்றி மேலை நாட்டினர் உணர்ச்சி பொங்க வாழ்த்தியதையும் கேட்டிருந்தேன். ஆகவே அவர்களைப் பற்றி என் மனதில் ஒரு நல்ல எண்ணம் இருந்தது.

அவர்கள் நடத்திய கூட்டத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு நடைபெற்ற சில நிகழ்ச்சிகளைத் (அதை விவரிப்பதால் எந்த பயனும் இல்லையென்பதால் அவற்றை தவிர்த்துவிடலாம் என்று நினைக்கிறேன்) தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருடைய இந்திய மற்றும் வெளிநாட்டு சீடர்கள் அவரை எந்த அளவுக்கு அன்பு செய்கிறார்கள் என்பதைக் கண்கூடாகவே காண முடிந்தது.

அவ்விழாவுக்கு கடல் கடந்து வந்திருந்த நடுத்தர வர்க்கத்தினர் சிலருடன் அளவளாவ வாய்ப்பும் கிடைத்தது. அவர்களில் ஒருவர் ஜப்பானில் இருந்து வந்திருந்தார். அவருக்கு ஒரு கால் போலியோ நோயால் இளம் வயதிலேயே பாதிக்கப்பட்டிருந்தது. நல்ல உத்தியோகத்தில் இருந்தவர். திருமணமாகி இரு குழந்தைகளும் இருந்தது. திடீரென்று ஒரு நாள் மாதா அமிர்தமயியைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை ஜப்பான் தொலைக்காட்சியில் கண்டாராம். அவருடைய பேச்சால் கவரப்பட்டு (மாதாவுக்கு மலையாளத்தைத் தவிர வேறெந்த மொழியும் தெரியாது) அடுத்த சில நாட்களிலேயே தன்னுடைய தாம்பத்திய வாழ்க்கையை விட்டுவிட்டு முழுநேர சேவையில் இறங்கிவிட்டாராம்.

நானும் மாதாவை சுமார் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். கறுத்த நிறம், வெள்ளை வெளேர் என்ற சேலையும், முழுக்கை சட்டையும்.... எப்போதும் சிரித்துக்கொண்டே இருந்த முகம். நிதானமான, பதற்றமில்லாத, மிகச்சாதாரணமான பேச்சு.. தன்னை நெருங்கி வந்தவரையெல்லாம் அரவணைப்பது..

ஆனால் அதில் மயங்கிப்போய் உலகெங்கும் அவருக்கு சீடர்கள்...

எனக்கொன்றும் அவரிடம் அப்படி விசேஷமாக ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் அவரிடம் இருந்த ஏதோ ஒன்றினால் கவரப்பட்டுத்தானே இத்தனை சீடர்கள்? அந்த வளாகத்தில் குழுமியிருந்த பலரும் பேசுவதைக் கேட்டால் ஏதோ அவரைப் போன்று இவ்வுலகில் யாருமே இல்லை என்பதுமட்டுமல்ல இனியும் பிறந்து வரமுடியாது என்பதுபோல் தோன்றும்.

அப்படி ஒரு கண்மூடித்தனமான அன்பு. தாய்-மழலை உறவுக்கு இணையான அன்பு!

உலகெங்கும் உள்ள சமூக சேவை மையங்கள் அனுப்பும் கோடி, கோடியான பணம். அந்த பணத்தை நிர்வாகம் செய்ய முறைப்படியான நிறுவனங்கள். அவற்றை திறம்பட நடத்திச் செல்ல உலகெங்குமிருந்து அமர்த்தப்பட்டிருந்த படித்த, திறம்படைத்த, எந்த ஒரு ஊதியத்தையும் எதிர்பார்க்காத உள்நாட்டு மற்றும் மேலை நாட்டு நிர்வாகிகள்!

சுநாமியால் பாதிக்கப்பட்ட கேரள மற்றும் தமிழக மீனவர்களுடைய மறுவாழ்வுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட தொகை மட்டும் ரூ.100 கோடி!

அவருடைய பெயரில் எத்தனை, எத்தனை நிறுவனங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள்..

அவரைச் சுற்றியிருந்த சிலர் மெர்சனரிகளைப் போல நடந்துக்கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழத்தான் செய்கின்றன.

ஆனாலும் அவருடைய சேவை பெரும்பாலும் குறிப்பிட்டதொரு மதத்தினருக்குத்தான் என்றில்லை என்பதைக் கேள்விப்படும்போது இந்த குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிடுவதில் தவறேயில்லை என்றுதான் நினைக்கிறேன்.

அதேபோல்தான் மற்ற மதக்குருமார்களைப் பற்றியும் நான் கூறவிழைவது.

அவர்களைத் தெய்வங்களாக பார்ப்பது அவரவருடைய மத நம்பிக்கையைப் பொறுத்தது.

ஆனால் அவர்களும் நம்மைப் போன்ற சதையும் ரத்தமும் கொண்ட மனிதர்கள்தான். நம்மைப் போலவே எல்லாவித ஆசாபாசங்களுக்கும் உட்பட்டவர்கள்தான்.

எவ்வித அப்பழுக்குமில்லாமல் இருக்க அவர்கள் ஒன்று அவதாரப் புருஷர்கள் இல்லை. ஆனால் நம்மில் பலரைவிட சில விஷயங்களிலாவது அவர்கள் மேன்மையானவர்கள்..

இல்லையென்றால் படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள், பொது சேவையில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லோரும் ஒருசேர முட்டாள்தனமாக அல்லது கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்ற மாட்டார்கள்.

அவர்களிடம் நம்மிடம் இல்லாத ஏதோ ஒன்று இருக்கிறது. அதை அவர்களுடைய சீடர்கள் பார்க்கிறார்கள், நம்புகிறார்கள், அவர்கள்மேல் அன்பு செய்கிறார்கள், அவர்களுக்காக தங்களுடைய வாழ்க்கையிலிருக்கும் அனைத்தையும் விட்டுவிட்டு வந்துவிடுகிறார்கள்..

எந்தவொரு மதத்தையும் பாகுபடுத்திப் பார்க்காமல் எல்லா மத குருமார்களையும் தெய்வத்தின் பிரதிநிதியாக, தெய்வத்தை சென்றடையும் வாயிலாக, அவரிடம் இட்டுச் செல்லும் காவலாளியாக மட்டுமே நான் பார்க்கிறேன்.

தெய்வம் குறையில்லாதது. அவரை சென்றடையும் வாயிலில் சிறு குறைகள் இருக்கலாம், ஆனால் தெய்வத்தின் சன்னதியில் நாள்தோறும் வசிக்கும் அவர்களுக்கு தெய்வத்தின் கருணை நிச்சயம் இருக்கும், அவருடைய நிழலில் வசிக்கும் அவர்களிடம் தெய்வத்தின் பாதிப்பும் நிச்சயம் இருக்கும்.

ஆகவே அவர்களுடைய மனித குறைகளை மறந்துவிடுவோம்.

விமர்சிப்பதை விட்டுவிடுவோம்.

‘தீர்ப்பிடாதீர்கள். நீங்கள் எந்த அளவையாள் அளக்கிறீர்களோ அதே அளவையால்தான் நீங்களும் அளக்கப்படுவீர்கள்.’

இது என்னுடைய கருத்து அல்ல. யேசுபிரானின் பொன்மொழிகளுள் ஒன்று..

*****

மதமும் மதகுருமார்களும்

சென்னையில் தலைமை அலுவலகங்களைக் கொண்ட வங்கிகளில் ஒன்றில் பணியாற்றி முதன்மைப் பொதுமேலாளாராக ஓய்வுபெற்ற ஒருவருடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது.

நான் தமிழகத்தில் மேலாளராக பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் அதாவது எண்பதுகளில், இருந்து அவருடன் ஏற்பட்ட நட்பு இது. கடந்த ஆண்டுதான் அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

நன்கு படித்தவர். பொருளாதாரத்திலும் வங்கி அலுவலுக்கு முற்றிலும் தொடர்பில்லாத சமஸ்கிருதத்திலும் பி.எச்.டி பெற்றவர். பக்திமான். சிறந்த பேச்சாளர்.

கடந்த வருடத்தில் ஒருநாள் அவரிடமிருந்து எனக்கு தொலைப்பேசி வந்தது. அவருடைய கடைசி மகளுக்கு - அவரும் நானும் ஒரே ஊரில் இருந்த சமயத்தில் பிறந்தவர் - திருமணம் என்றும் என்னுடைய வீட்டு விலாசத்தை அளித்தால் நேரில் வந்து அழைப்பிதழைக் கொடுப்பதாகவும் கூறினார்.

நான், ‘எதுக்கு சார். உங்களுக்கு இருக்கற வேலையில வீடுவரைக்கும் வந்துக்கிட்டு.. சும்மா தபால் அனுப்புங்க. தம்பதி சமேதரா வந்துடறோம்.’ என்றேன்.

அவர் சிரித்துக்கொண்டே, ‘சேச்சே.. அது நல்லாருக்காது. நீங்க உள்ளூர்ல இல்லேன்னா தபால்ல அனுப்பிருப்பேன். இங்கதான கோடம்பாக்கம்? நேரிலயே வரேன்.’ என்று பிடிவாதமாய் விலாசத்தைப் பெற்றுக்கொண்டு அடுத்த இரண்டு நாட்களில் வந்திருந்தார்.

அவர் அளித்த அழைப்பிதழைப் பிரித்து படித்தேன். தலைப்பிலேயே காஞ்சி பெரியவருடைய படம். அதன் கீழ் ஜெயேந்திர சரஸ்வதி மற்றும் விஜயேந்திர சரஸ்வதி சாமிகளின் ஆசீர்வாதத்துடன் என்று அழைப்பிதழ் துவங்கியிருந்தது..

அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்த இரு மத குருமார்களுமே சர்ச்சையில் சிக்கிக்கொண்டு சிறையில் இருந்த சமயம் அது.

என்னுடைய நண்பர் ஒரு பக்திமான் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். ஆகவே அவருடைய மனம் புண்படாதபடி, ‘சார் நீங்க தப்பா நினைக்கலேன்னா ஒன்னு கேக்கலாமா?’ என்றேன்.

அவர் என்னை வியப்புடன் பார்த்துவிட்டு, ‘கேளுங்க ஜோசப், என்ன விஷயம், இவ்வளவு பீடிகையோட ஆரம்பிக்கிறீங்க?’ என்றார்.

நான் தயக்கத்துடன், ‘இந்த இரண்டு பேரோட ஆசீரோடன்னு அழைப்பிதழை அடிச்சிருக்கீங்களே. இவங்களப்பத்தி இப்ப பத்திரிகைகள்ல வர்றது ஒன்னும் அவ்வளவு விரும்பத்தக்கதா இல்லையே?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் பதிலளிக்காமல் கண்களை மூடியவாறு அமர்ந்திருந்தார். என் அருகில் நின்றுக்கொண்டிருந்த என் மனைவி என்னைப் பார்த்து முறைத்தார். ‘ஏங்க உங்களுக்கு ஏதாச்சும் அறிவு இருக்கா? இத்தனை வருஷம் கழிச்சி வீட்டுக்கு வந்திருக்கறவர்கிட்ட போயி..’ என்று கிசுகிசுத்தார்.

எனக்கும் ஏண்டா இப்படி கேட்டோம் என்றிருந்தது.

சிறிது நேரங்கழித்து கண்களைத் திறந்தவர், ‘ஜோசப் உங்கள மாதிரி நிறைய பேர் என்கிட்ட இதப்பத்தி கேட்டுருக்காங்க. இவ்வளவு ஏன், எங்க சேர்மனப் பத்தி உங்களுக்கு தெரியுமில்லே? அவரேகூட கேட்டிருக்கார். அவங்கக்கிட்டல்லாம் நா சொன்னதையே இப்பவும் சொல்றேன். பொறுமையா கேட்டுட்டுச் சொல்லுங்க.’ என்று ஆரம்பித்தார்.

நான் என் மனைவியைப் பார்த்தேன். அவர் என் நண்பரைப் பார்த்தவாறு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து அவர் கூறுவதைக் கேட்க தயாரானார்.

என்னுடைய நண்பர் ஒரு சிறு புன்னகையுடன் தொடர்ந்தார். அவர் பேசப் பேச நான் நினைத்திருந்தது எத்தனை அடிமுட்டாள்தனம் என்று உணர்ந்துக்கொண்டேன்.

அதன் சாராம்சத்தை இங்கு சுருக்கமாக தருகிறேன்.

‘ஜோசப், நான் இவங்களுக்கு முன்னாலிருந்த காஞ்சி பெரியவரின் பரம சிஷ்யன். நா மட்டுமில்ல இன்னைக்கி இந்தியாவிலருக்கற பெரிய பெரிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பலரும் அவருடைய சிஷ்யர்கள், நம்முடைய முன்னாள் ஜனாதிபதி வெங்கட்ராமன் உட்பட. அவரை நாங்கள் ஒரு மனுஷ அவதாரத்துலருக்கற தெய்வமா மதிச்சோம். இப்பவும் அப்படித்தான். அந்த அவதாரபுருஷன் தெரிந்தெடுத்தவர்கள்தான் இப்போதிருக்கும் ஜெயேந்திரரும் விஜயேந்திரரும். முக்கியமா இளையவர்.

அப்படிப்பட்ட மகான் தப்பு செஞ்சிருக்க முடியுங்கறத எங்களால ஜீரணிக்கமுடியலை ஜோசப். ஆனா ஒன்னு. நம்மளப் போலவே இவங்களும் மனுஷங்கதானே. நமக்கு இருக்கற எல்லா ஆசாபாசங்களுக்கும் அவங்களும் அடிமைங்கதானே ஜோசப். இன்னைக்கி பேப்பர்ல வந்திக்கிட்டிருக்கறதெல்லாம் சரின்னோ தப்புன்னோ நா சொல்ல வரலே. அதுல சிலதும் உண்மையும் இருக்கலாம். ஆனா அத வச்சி மாத்திரம் நானும் என்னப் போன்ற பலரும் காஞ்சி பெரியவர்மேலருக்கற பக்தியில, மரியாதையில நம்பிக்கையை இழந்துர தயாராயில்லீங்க.

உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ.. இன்னைக்கி காஞ்சி மடத்தோட கட்டுப்பாட்டுல பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பொது சேவையில ஈடுபட்டிருக்கு.. அத்தோட பள்ளிகள், கல்லூரிகள்னு எத்தனையோ வகையில பொது மக்கள்கிட்டருந்து கிடைக்கிற பணத்துல சேவை பண்ணிக்கிட்டுத்தான் இருக்காங்க. அவங்கள கடவுள்களா நினைக்க வேண்டாம். அட்லீஸ்ட மனுஷங்கள்னாவது மதிக்கலாம் இல்லே? அவங்க செஞ்சதா சொல்ற குற்றங்கள அவங்க செஞ்சாங்களா இல்லையாங்கறத கோர்ட்ல நிரூபிக்கறதுக்கு முன்னாலயே அவங்கள குத்தவாளிங்களா தீர்மானிச்சி இந்த பத்திரிகைள் ஒரு பப்ளிக் ப்ரொசீடிங்ஸ் நடத்தறது சரியா ஜோசப்?

இன்னொன்னு ஜோசப். நாங்க இவங்க ரெண்டு பேரையுமே காஞ்சி சங்கராச்சாரியாரோட பிரதிநிதிகளாத்தான் இப்பவும் பாக்கறோம். அவங்க தனிப்பட்ட முறையில அவங்களுக்கு தகுதியிருக்கோ இல்ல¨யோ காஞ்சி பீடாதிபதியோட ஸ்தானம் மிகவும் புனிதமானது. அதை என்னை போன்றவங்க இப்பவும் மதிக்கறோம். இவங்க ரெண்டு பேர் வழியா நாங்க மரியாதை செய்றது அந்த கடவுளைங்க.. இவங்கள இல்ல.. இவங்களோட ஆசிர்வாதத்தோடன்னு நான் போட்டிருக்கறது இந்த ரெண்டு மனுஷங்க வழியா கடவுள் கொடுக்கற ஆசீர்வாதத்தோடன்னு அர்த்தம் பண்ணிக்கணும். இவங்க ரெண்டு பேரும் கடவுள் கையிலருக்கற ஆயுதம் மாதிரி. இவங்க வழியா கடவுள்கிட்டருந்து வர்ற ஆசீர்வாதம் இவங்க கெட்டவங்கங்கறதுனால வராம போயிராதுங்க.’ என்றவர் சட்டென்று, ‘நீங்க புட்டபர்த்திக்கு போயிருக்கீங்களா?’ என்றார்.

நான் ‘இல்லை, சார்’ என்றேன்.

அவர் புன்னகையுடன், ‘சாரி, நீங்க கிறிஸ்துவர்ங்கறத மறந்துட்டேன்.’ என்றார்.

நான் உடனே, ‘சேச்சே அதுக்காக இல்ல சார். நான் பாண்டியிலருக்கற அம்மையார் மடத்துக்கு போயிருக்கேன். தத்துவ மேதை கிருஷ்ணமூர்த்தியோட லெக்சர கேட்டிருக்கேன். இப்பவும் அவரோட நிறுவனங்கள்லருந்து எனக்கு மாசா மாசம் புல்லட்டீன் வந்துக்கிட்டிருக்கு. ரஜ்னீஷ் எழுதிய பல புத்தகங்களை படிச்சிருக்கேன்.  ஏன் காஞ்சி சங்கராச்சாரியார் இருக்கறப்போ என்னோட ஃப்ரெண்டோட ஒருதடவை போயிருக்கேன்.  அந்த ஒரு சந்திப்பிலேயே எனக்கும் அவர் மேல ஒருவிதமான மதிப்பு வந்துது சார்.' என்று பட்டியலிட்டேன்.

‘சாரி. நான் சொன்னது தப்பாருந்தா மன்னிச்சிருங்க. உங்களுக்கும் இதுலெல்லாம் ஈடுபாடு இருக்கும்னு தெரியாம போயிருச்சி. சரி.. சாயிபாபாவ பத்தி என்னவெல்லாம் ஒரு காலத்துல சொன்னாங்க? ஆனா நீங்க ஒரேயொரு தரம் புட்டபர்த்தி போய் பார்த்தீங்கன்னா தெரியும். அவரோட நிறுவனங்கள் ஆந்திர மக்களுக்கு செய்திருக்கிற சேவைகளின் தாக்கம். ஏன் ஜோசப்..? நமக்கு குடிநீர் வரணுங்கறதுக்காக சமீபத்துல அவரே முன்வந்து அந்த சானல சரிபண்றதுக்கு எத்தனை கோடி கொடுத்தார்னு உங்களுக்கு தெரியுமே.. ஏன் உங்களுக்கு ரொம்பவும் பழக்கமான கேரளத்துல.. மாதா அமிர்தமாயி அம்மா..’

ஆமாம்.. கொச்சியிலிருந்த சமயத்தில் அந்த அம்மையாருடைய கூட்டங்களுக்கு பலமுறை சென்றிருக்கிறேன். அதைப்பற்றி நாளை..

அடுத்த பதிவுடன் நிறைவுறும்.

பி.கு: இந்த குறுந்தொடர் யாருடைய பதிவுக்கும் அதில் நான் வாசித்த எந்த பின்னூட்டங்களுக்கும் எதிர் பதிவல்ல. ஆனால் சமீபத்தில் நான் படித்த பதிவும் அதிலிருந்த சில பின்னூட்டங்களும் என்னை இக்கட்டுரையை எழுதத்தூண்டியது என்பது மட்டும் உண்மை. ஆனால் இது யாருடைய நம்பிக்கையையும், கருத்தையும் குறை கூறவோ, எள்ளி நகையாடவோ எழுதப்பட்டது அல்ல. இது முழுக்க முழுக்க என்னுடைய நம்பிக்கையைப் பற்றியது. எதில் நான் ஆணித்தரமான நம்பிக்கை வைத்திருக்கிறோனோ அதைப் பற்றியது.

கிறிஸ்துவ கீதங்கள் 10காணிக்கைப் பாடல் – 2

காணிக்கைப் பாடல்கள் வரிசையில் நாம் இன்று காணப்போகும் பாடல் இறைவன் நமக்கென படைத்தவற்றையெல்லாம் திருப்பி அவருக்கே அன்பு காணிக்கையாக, நம்முடைய நன்றியை பறைசாற்றும் விதமாக அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

நாம் எம்மதத்தைச் சார்ந்தவர்களாயினும் இறைவன் நமக்கு அளித்த நன்கொடைகளுக்கு நாம் நன்றியாக நம்மால் முடிந்தவற்றை அளிப்பது வழக்கம்தானே..

நம்மில் எத்தனையோ பேர் நாம்  பெரிதும் விரும்பும் தலை முடியையே காணிக்கையாக அளிக்க முன்வருகிறோமே. அதுவும் பெண்கள் ஆசையோடு வருடக்கணக்காய் பேணி காத்து வந்த நீண்ட அழகிய தலைமுடியை இழப்பதென்பது எத்தனை பெரிய தியாகம்?

அதன் பின்னணியில் வேறொன்றும் உள்ளது. கூந்தல் இல்லாத முகம் பொலிவிழந்து பார்ப்பவர் கண்களுக்கு ஒரு காட்சிப் பொருளாக மாறிவிடுகிறதல்லவா? மற்றவர்களுடைய கேலிப் பார்வையையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறோமே அதுவே ஒரு பெரிய தியாகம்தானே..?

இனி இன்றைய பாடலைப் பார்ப்போம்..

படைத்ததெல்லாம் தர வந்தோம்
பரம் பொருளே உம் திருவடியில்
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும்
என் வாழ்வினிலே ஒளி வீசும்..

உழைப்பினில் கிடைத்திட்ட பொருளெல்லாம்
உன்னதரே உந்தன் மகிமைக்கே
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய்
தந்தையே பணிந்து தருகின்றோம்
தருகின்றோம் தருகின்றோம்.

வாழ்வினில் வருகின்ற புகழெல்லாம்
வல்லவரே உந்தன் மகிமைக்கே
கருணையின் தலைவா ஏற்றிடுவாய்
கனிவாய் உவந்து தருகின்றோம்
தருகின்றோம் தருகின்றோம்.

***

இறைவா இவற்றையெல்லாம் நீர்தான் படைத்தீர். எமக்காக, எங்களுடைய நலனுக்காக நீர் படைத்த இந்த பழம், பூ, காய் கணிகள் எல்லாவற்றையும் உமக்கே நன்றி காணிக்கையாக இதோ எம் கைகளில் ஏந்தி வந்திருக்கிறோம் தயவாய் ஏற்றுக்கொள்வாய்..

நாம் ஆணவத்துடன் அல்ல மாறாக, இறைவனின் முன்னிலையில் முழந்தாள் படியிட்டு காணிக்கைகளைத் தரவேண்டும்.

நாம் நம்முடைய தலைவர்களாக, முன் மாதிரியாக வரித்திருப்பவர்களுக்கு பரிசளிக்கவோ அல்லது பொன்னாடையோ போர்த்தவோ செல்லும்போது எப்படி நடந்துக்கொள்கிறோம்? மார்பை நிமிர்த்தியா? இல்லையே..!

நம்மைப் போன்ற மனிதனுக்கு மரியாதை செய்யவே தோளில் கிடக்கும் துண்டையெடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, கால்களில் அணிந்திருக்கும் காலணியை அவிழ்த்துவிட்டு பணிவுடன் அளிக்கும்போது நம்மைப் படைத்த இறைவனுக்கு காணிக்கையளிக்கும்போது முன்பு எப்படி நடந்துக்கொள்ள வேண்டும். பணிவுடன் மட்டுமல்ல, அன்புடன், நன்றியுணர்வு நிறைந்த முகத்துடன் அளிக்க வேண்டாமா?

இத்தகைய காணிக்கை அளிக்க வரும்போதும் நம்முடைய மன நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை யேசுவே கூறுகிறார். (மத்தேயு சுவிசேஷம்:5:23-24) “நீ பலிபீடத்தினிடத்தில் காணிக்கை செலுத்த வந்து உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று நினைவுகூர்ந்தால் உன் காணிக்கையை அங்கேயே வைத்துவிட்டு போய் உன் சகோதரனுடன் சமாதானம் செய்துக்கொள். பிறகு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.”

உள்ளத்தில் மண்டிக்கிடக்கும் பொறாமை, ஆணவம் இவைகளை எல்லாம் களைந்துவிட்டு மனசுத்தியுடன் நாம் செலுத்தும் காணிக்கையைத்தான் இறைவன் ஏற்றுக்கொள்வார்.

நம்மால்தான் உலகமே சுழலுகின்றது,  நாம் இல்லையென்றால் நம் வீடு, நம் அலுவலகம், நம் நாடு ஏன் இவ்வுலகமே இல்லையென்று நம்மில் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

நம்முடைய வெற்றிக்கு நம்முடைய திறமையும் உழைப்பும் மட்டுமே போதும் என்றும் இறுமாந்திருக்கிறோம்.

நம்முடைய வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பலரையும் ஏன் இறைவனையுமே, நம்முடைய வெற்றியின் களிப்பில் மறந்துபோகிறோம்.

நம்முடைய வெற்றியையும் அதன் பயனாக கிடைக்கும் புகழையும் இறைவனுக்கே காணிக்கையாக அளிப்போம். அதில் கிடைக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் முழுமையாக அனுபவிப்போம்.

Friday, April 21, 2006

ஆதிமனிதனின் சாபம்!


பைபிள் கதைகள் - 1

பழைய வேதாகமம் (துவக்க நூலில்) இவ்வுலகம் படைக்கப்பட்ட நிகழ்வுகளை விவரிக்கின்றன.

மண்ணுலகையும் விண்ணுலகையும் உண்டாக்கிய இறைவன் விண்ணில் பறக்கும் பறவையினங்களையும் மண்ணுலகில் வாழும் ஊர்வன, நடப்பன என எல்லா விலங்கினங்களையும் படைத்தார். அத்துடன் செடி, மரம், கொடி, பூ மற்றும் பழங்கள், ஆறு, கடல், மலை என எல்லாவற்றையும் படைத்து முடித்த போது அவற்றையெல்லாம் ஆண்டு அனுபவிக்க ஒரு மனித உயிர் தேவை என்பதை உணர்ந்தார்.

ஆகவே தன் கையால் ஒரு பிடி களிமண்ணை எடுத்து தன்னுடைய சாயலில் ஒரு மனிதனை உருவாக்கி அவனுடைய நாசிகளில் தன்னுடைய ஆவியை ஊத மனிதன் உயிர் பெற்றான்.

தான் படைத்த உலகிலேயே மிகவும் அழகான ஒரு நந்தவனத்தில் அவனை இருக்கச் செய்தார். அவன் உண்பதற்குத் தேவையான முக்கனிகளையும் அங்கு விளைவிக்கச் செய்தார். அவன் தாகமடையும்போது குடிப்பதற்கு தெளிந்த சுவையானதொரு நீரோடையையும் படைத்தார்.

இறைவன் தான் உருவாக்கிய மனிதனைப் பார்த்து, ‘நீ இங்குள்ள எல்லாவற்றையும் ஆண்டு அனுபவிக்கலாம். இங்கு இருக்கும் எல்லா மரங்களிலிருந்தும் கனிகளைப் பறித்து உண்ணலாம் ஒரேயொரு மரத்தைத் தவிர. அதை உண்டால் நீ உடனே சாவாய்’ என்று எச்சரித்தார்.

அதுதான் இறைவன் செய்த முதல் தவறு. ஒருவேளை அந்த மரத்திலுள்ள கனியை நீ உண்ண வேண்டாம் என்று சொல்லாமலிருந்தாலும் அதை மனிதம் இனம் கண்டுகொண்டிருக்க மாட்டான். ஆனால் மனிதனைப் படைத்த இறைவன் அவனுடைய குணத்தை அறியாமல் போனதுதான் துரதிர்ஷ்டம். மனித மனம் ஒரு விசித்திரமானதல்லவா?

எதை செய்யாதே என்று எச்சரிக்கப்படுகிறானோ அதை செய்துதான் பார்ப்போமே என்று நினைப்பவன்தானே மனிதன்!

இருப்பினும் நம்முடைய ஆதி மனிதன் தாம் தனியாக இருந்தவரை அப்படியொரு எண்ணம் அவனுக்கு ஏற்படவில்லை.

இறைவன் அவனை அப்படியே விட்டிருக்கலாம். விடவில்லை.

அவன் தனியாக இருப்பதைக் கண்ட இறைவன் அவனுக்கு ஒரு துணையை அளிக்க வேண்டும் என்று எண்ணினார்.

ஒரு நாள், அவனை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தி அவன் விலா எலும்புகளில் உன்றை எடுத்துக்கொண்டு எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார் (இது இப்போதும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயம்தான்.). பிறகு ஆதி மனிதனைப் படைத்ததைப் போலவே அவனுடைய விலா எலும்பைக் கொண்டே ஒரு பெண்ணையும் படைத்து இவள் ஆணிடமிருந்து எடுக்கப்பட்டவள் என்று பொருளில் பெண் என்று பெயரிட்டு ஆணிடம் ஒப்படைத்தார்.

ஆதி மனிதனும் பெண்ணும் ஆடையில்லாமல் இருந்தனர். அதாவது அவர்கள் அதுவரை ஆடையின் அவசியத்தை உணர்ந்திருக்கவில்லை. சந்தோஷமாக தங்களுடைய நாட்களைக் கழித்தனர்.

இறைவன் படைத்த விலங்குகளிலேயே பாம்பு மிகவும் சூழ்ச்சி மிகுந்ததாக இருந்தது (இப்போது மட்டும் என்ன?). அது தன்னுடைய சூழ்ச்சிக்கு இலகுவாக பலியாகக் கூடியது பெண்தான் என்பதை அறிந்திருந்தது.

ஆகவே அது அந்தப் பெண் தனியாக இருந்த சமயம் பார்த்து, ‘இறைவன் உங்களை ஏன் அந்த மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்று பணித்திருக்கிறார் தெரியுமா?’ என்று வினவியது.

வியப்புடன்  தன்னைப் பார்த்த பெண்ணிடம், ‘இக் கனியை நீங்கள் உண்டால் உங்களுடைய அகக்கண்கள் திறக்கப்பட்டு நீங்கள் தேவர்களைப் போல இவ்வுலகில் நன்மை தீமைகளை அறிந்துக்கொள்வீர்கள். உங்களுக்கு சாவும் இராது.’ என்றது.

அட, அப்படியா! என்று வியந்த பெண் உடனே தாமதம் செய்யாமல் அம்மரத்தின் கனியைப் பறித்து உண்டாள். அது சுவையுள்ளதாய் இருக்கவே தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் தன்னுடைய கணவன் ஆதாமுக்கும் கொடுத்தாள்.

பாம்பு கூறியதுபோலவே அவர்களுடைய அகக்கண்கள் திறக்கப்பட தங்களுடைய நிர்வாணத்தை முதன் முதலாக உணர்ந்து நந்தவனத்திலிருந்த அத்தி மர இலைகளைப் பறித்து தங்களுக்கு ஆடைகளைத் தயாரித்துக்கொண்டனர்..

இறைவன் தங்களுக்கு அளித்திருந்த எச்சரிக்கை நினைவுக்கு வரவே அவரைப் பார்ப்பதற்கு அஞ்சி மரங்களுக்கிடையே ஒளிந்துக்கொண்டனர்.

ஆனால் அவர்களால் இறைவனின் பார்வையிலிருந்து தப்ப இயலவில்லை.

தான் பிறப்பித்த கட்டளையை மீறிய ஆணையும் பெண்ணையும் தன் சாயலாக படைக்கப்பட்டவர்களாயிற்றே என்றும் பாராமல் தண்டித்து நந்தவனத்தைவிட்டு விரட்டியடித்தார் இறைவன்..

தன்னுடைய அன்றாட உணவுக்கு நெற்றி வேர்வை நிலத்தில் விழ உழைத்துத்தான் பிழைக்க வேண்டும் என்ற இறைவனின் சாபத்திற்கு உள்ளானான் உலகின் முதல் மனிதன் ஆதாம்..

பைபிள் கதைகள் தொடரும்..

Saturday, April 15, 2006

அன்பே கல்வாரி அன்பே - கி. கீதங்கள் 9

யேசு சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கப்பட்டாகிவிட்டது.

இவ்வேளையில் அவருடைய உரோமை வீரர்கள் கையில் அனுபவித்த கொடுமைகளும், வேதனைகளும், அவமானங்களும் நம் கண் முன்னே வருகின்றன.

அத்தகைய வேளையிலும் அவர் அவர்களுக்காக தன் தந்தையிடம் மன்னிப்பு கோருகிறார்.

தன் சிலுவையடியில் நின்றுக்கொண்டிருந்த தன் தாய்க்கு ஒரு மகனை தேடித் தருகிறார். தான் மிகவும் அன்பு செய்த சீடரின் பாதுகாப்பில் அவரை விட்டுச் செல்கிறார்.

ஆகவே, அவருடைய தாயன்பையும் பிறரன்பையும் போற்றி இயற்றப்பட்ட பாடலைப் பற்றி இன்று எழுதலாம் என்று இப்பாடலை தெரிந்தெடுத்தேன்.

அன்பே கல்வாரி அன்பே
உம்மைப் பார்க்கையிலே
என் உள்ளம் உடையுதப்பா

தாகம் தாகம் என்றீர்
எனக்காய் எங்கி நின்றீர்
பாவங்கள் சுமந்தீர் - எங்கள்
பரிகாரப் பலியானீர்

காயங்கள் பார்க்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்
தூய திரு இரத்தமே
துடிக்கும் தாயுள்ளமே

அணைக்கும் கரங்களிலே
ஆணிகளா சுவாமி
நினைத்துப் பார்க்கையிலே
நெஞ்சம் உருகுதய்யா

நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே - எல்லா
மறுரூபம் ஆகணுமே

*****


அவர் சிலுவையின் உச்சியிலிருந்து தாகமாயிருக்கிறது என்றபோது அவருக்குக் கிடைத்ததென்ன? கசப்பான காடியில் தோய்த்தெடுக்கப்பட்ட கடற் காளான்!

நம் உடம்பில் பட்ட காயங்களைப் பார்த்ததுமே கண்ணீர் வடிப்பது நம்முடைய கண்கள்தானே.. வலியின் வேதனையில் கதறுவது நம் வாய்தானே..

யேசுவின் கரங்களிலும் கால்களிலும் ஆணிகொண்டு அறைந்தது உரோமை வீரர்கள்தான். அவர்கள் செய்தது அறியாமையால் . அவர் இறைவனின் பரிசுத்த தூதர், இறைமகன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவரை வெறும் யூதர் குலத்தில் தோன்றிய மற்றுமொரு கலகக்காரன் என்று மட்டுமே அறிந்திருந்தனர்.

அவரை சிலுவை மரணத்திற்கு அவர்களுடைய தலைவன் பிலாத்து தீர்ப்பிட்டதும் அவரை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களுடைய பணியாய் இருந்தது. மேலும் யூத மத குருக்கள் அவர்மேல் சாற்றிய குற்றச்சாட்டில் முக்கியமானது அவர் தன்னை கடவுளின் மகன் என்று பறைசாற்றிக்கொண்டார் என்பது. அவர்களைப் பொறுத்தவரை அது அவர்களுடைய ஈடில்லா மன்னன் சீசருக்கு எதிரானது.

ஆகவே அவர்களைப் பொறுத்தவரை அவரை எள்ளி நகையாடி, பிரம்பால் அடித்து, முள் மூடி சூட்டி யூதர்களின் அரசே வாழி என்று கேவலப்படுத்தியதில் தவறொன்றும் இல்லை.

அதனால்தானே யேசு அவர்கள் செய்வது இன்னதென தெரியாமல் தெரியாமல் செய்கிறார்கள் தந்தையே அவர்களை மன்னியும் என்று வேண்டினார்.

ஆனால் நானும் என்னைப் போன்ற கிறிஸ்த்துவர்களும் தினம் தினம் நாங்கள் செய்யும் பாவச் செயல்களால், தீய சிந்தனைகளால், கடுஞ்சொற்களால் அவருடைய கரங்களிலும் கால்களிலும் ஆணியால் துளைக்கிறோமே..

உரோமை வீரர்களால் அறையப்பட்ட ஆணிகளோ அவருடைய உடலை மட்டுமே கிழித்தன. ஆனால் நான் செய்யும் பாவங்களோ அவருடைய கனிந்த இதயத்தையல்லவா கிழிக்கின்றனவே.

அதை எப்படி நான் சரிசெய்யப் போகிறேன்?

நான் செய்வது தவறென தெரிந்தும் அதை நான் செய்கிறேனே, எனக்கு மன்னிப்பு உண்டா?

நெஞ்சிலே ஓர் ஊற்று
நதியாய் பாயுதய்யா
மனிதர்கள் மூழ்கணுமே - எல்லா
மறுரூபம் கணுமே


ஆம் ஐயா, என்னுடைய பாவங்களின் சுமையால் அமுங்கிப்போய் என்னுடைய மனதுக்குள் ஒரு பச்சாதாப, பாவ மன்னிப்பு ஊற்று நதியாய் பாயுதய்யா..

அதில் நானும் என்னைப் போன்ற மனிதர்களும் மூழ்கி தூய்மைப் பெறவேண்டும் ஐயா.. தூய்மைப் பெறவேண்டும்..

**********

Friday, April 14, 2006

புனித வெள்ளி!யேசு கிறிஸ்து சிலைவியில் அறையப்பட்டு மரித்த இன்றைய நாளை புனித வெள்ளி என்று உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் கொண்டாடுகிறார்கள். இது கொண்டாட்டத்தின் நாள் அல்ல. துக்கத்தின் நாள்.

ஆங்கிலத்தில் இது Good Friday எனப்படுகிறது. இது ஆரம்ப காலத்தில் God’s Friday அதாவது கடவுளின் தினம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

ஜெர்மானிய மொழியில் Charfreitag என அழைத்தார்கள். இதில் Char என்ற சொல் ஆங்கிலத்திலுள்ள Care என்பதிலிருந்து மறுவி வந்தது. Care என்ற வார்த்தைக்கு துக்கம் என்றும் பொருள் உள்ளது. ஆகவே இத்தினத்தை துக்கத்தின் நாள் என்று ஜெர்மானியர்கள் அழைத்தனர்.

சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படுவது ஒருவர் செய்த குற்றத்திற்கு அளிக்கப்படும் வெறும் மரண தண்டனை மட்டுமல்ல. அத்தகைய சாவு ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதற்கு மட்டுமல்லாமல் அக்குற்றவாளியை மரணத்திலும் அவமானப்படுத்தவேண்டும் என்பதற்காகத்தான்.

இத்தகைய கொடூரமான மரண தண்டனை உரோமை பேரரசில் துவங்கி சுமார் எண்ணூறு ஆண்டுகள் வரை கொடிய குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்தது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மாவீரன் அலெக்ஸாண்டர் தீர் நாட்டை முற்றுகையிட்டபோது அந்த போரில் பிடிபட்டவர்களில் சுமார் இரண்டாயிரம் பேரை இத்தகைய தண்டனைக்கு உள்ளாக்கியிருக்கிறான்.

கி.பி. 37 - 41 ஆண்டுகளில் பெரும்பாலான யூதர்கள் துன்புறுத்தப்பட்டு திறந்தவெளி மேடையில் சிலுவை மரணத்துக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

சாதாரணமாக சிலுவைச் சாவுக்கு தீர்ப்பிடப்பட்டவருடைய சிலுவையின் குறுக்குச் சட்டத்தை (Cross arm or patibulum) அவருடயை தோள்களில் சுமத்தி சுமக்கச் செய்வது வழக்கம். தண்டனை நிறைவேற்றப்படும் இடத்தை அடைந்ததும் சிலுவையின் நேர் சட்டத்தில் (Upright portion or stipes) இணைத்து கயிற்றால் கட்டப்படுவர். அத்தகைய தண்டனைக்குள்ளாப்படுபவர்களின் உடல்கள் அன்றைய இரவு முழுவதும் சிலுவையிலேயே மரணமடையும்வரை விட்டுவைக்கப்படும். ஏனென்றால் அக்காலத்தில் சிலுவைச்சாவு என்பது கடவுளின் சாபம் என்று கருதப்பட்டது. அத்தகைய தண்டனைக்குள்ளாக்கப்பட்டவரின் உடலைக் காண்பவர்களுக்கு அது ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதால் அந்த ஏற்பாடு.

அத்துடன் சிலுவையில் கயிற்றால் கட்டப்படுபவர்கள் அத்தனை எளிதில் மரித்துவிடமாட்டார்கள். யேசுவோடு அவருக்கு வலப்பக்கம் மற்றும் இடப்பக்கத்தில் சிலுவையில் அறையப்பட்ட கள்வர்களும் அப்படித்தான். ஆனால் அன்றைய தினத்திற்கு மறுநாள் யூதர்களின் பாஸ்கா திருவிழாவாகவிருந்ததால் சிலுவையில் பிணங்கள் இருக்கலாகாது என்று யூத வீரர்கள் அக்கள்வர்களுடைய கால்களை முறித்து மரணமடையச் செய்தார்கள்.

ஆனால் சிலுவையில் அறையப்படுவதற்குமுன் கசைகளாலும் பிரம்பாலும் அடிக்கப்பட்டு, முற்களால் ஆன முள்முடி சூட்டப்பட்டு, வலுவான ஆட்களாலும் கூட சுமக்கமுடியாத ஒரு பாரமான சிலுவையை சுமக்கச்செய்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் கூடுதலான பாதையில் அழைத்துச்செல்லப்பட்டு.. சிலுவையில் கட்டப்படாமல் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் துளையிட்டு சிலுவை மரத்தோடு சேர்த்து அறையப்பட்டதால் அவர் எதிர்பார்த்ததற்கும் முன்னதாகவே அவர் மரணமடைகிறார்.

யேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றி புதிய வேதாகம சிரியர்கள் நால்வருமே (St.Mark, St.Mathew, St.Luke and St.John) தங்களுடைய சுவிசேஷங்களில் எழுதியுள்ளார்கள்.

அவற்றுள் யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிலையில் மொழிந்த முக்கியமான ஏழு அருள் வாக்குகளை கீழே காணலாம்:

1. தன்னை அடித்து துன்புறுத்தி சிலுவையில் அறைந்தவர்களுக்காக (St.Luke:23:34):

‘தந்தையே இவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய்கிறது இன்னதென்று இவர்களுக்குத் தெரியவில்லை.’

2. தன்னுடைய வலது பக்கத்தில் சிலுவையில் அறையுண்டிருந்த கள்வனைப் பார்த்து (St. Luke:23:43)

‘இன்றே நீ என்னோடு வான்வீட்டில் இருப்பாய் என்று நான் உறுதியாக உனக்கு சொல்கிறேன்.”

3.தன்னுடைய தாய் மரியாளையும் தன் அன்புச் சீடர் அருளப்பரையும் (St.John) பார்த்து (St.John:19:26)

‘அம்மா இதோ உம் மகன்! இதோ உன் தாய்’

4.தன்னுடைய தந்தையை நோக்கி (St.Mark:15:34)
‘என் கடவுளே, என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டீர்?’

5.மரணத்தின் தறுவாயில் தாகம் எடுத்தபோது (St.John:19:28)
‘நான் தாகமாயிருக்கிறேன்’

6. மரணம் நெருங்கியபோது (St.John:19:30)

‘எல்லாம் நிறைவேறிற்று!’

7. மரணத் தருவாயில் தன் தந்தையை நோக்கி(St.Luke:23:46)

‘தந்தையே உமது கையில் என் வியை ஒப்படைக்கிறேன்.’

சிந்தனை: யேசு தன்னைக் காட்டிக் கொடுத்த தன்னுடைய சீடனான யூதாசை, தன்னை எனக்குத் தெரியவே தெரியாது என்று ஒரு முறையல்ல, மும்முறை மறுதலித்த சீமோனை (St.Peter), தன்னை விட்டு விட்டு ஓடிப்போன மற்ற சீடர்களை, தன்னை ஏளனம் செய்து, கசையால் அடித்து பிலாத்துவின் தீர்ப்புக்குள்ளாக்கிய அன்னாஸ், கைப்பாஸ் என்ற யூத குருமார்களை, அவரை விடுவிக்க தைரியமில்லாமல் கைகளைக் கழுவி சிலுவைச் சாவுக்கு தீர்ப்பிட்ட பிலாத்துவை, அவர் மேல் பாரமான சிலுவையைச் சுமத்தி இழுத்துச் சென்று சிலுவையில் அறைந்த யூத,உரோமைய வீரர்களை, அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேரத்திலே நீர் இறைவனின் மகனாயிருந்தால் சிலுவையிலிருந்து இறங்கி வா. நாங்கள் உன்னை நம்புகிறோம் என்று எள்ளி நகையாடிய யூதர்களையெல்லாம் ஒரு சேர 'தந்தையே இவர்களை மன்னியும். ஏனெனில் இவர்கள் செய்வது என்னதென்று இவர்களுக்கு தெரியவில்லை' என்று மன்றாடிய யேசு எங்கே...

என்னை ஒரேயொரு முறை கேலி செய்தான், அவமானப் படுத்தினான், என்னை மற்றவர்கள் முன் கேவலப்படுத்தினான், இவன் எனக்கெதிராக சாட்சியம் கூறினான் என்பதற்காக நான் என் நண்பர்கள் எத்தனை பேரை என்னுடைய நிரந்தர எதிரியாக இப்போதும் நினைத்துக்கொண்டிருக்கிறேன்?

உன்னை மன்னித்துவிட்டேன் ஆனால் நீ எனக்குச் செய்த எதையும் மறக்கமாட்டேன்.. நேரம் வரும்போது பழி தீர்க்காமல் விடமாட்டேன் என்று மனதில் அவனை கறுவிக்கொண்டிருக்கிறேன்..

ஏன் இந்த வஞ்சக நெஞ்சம்? இதில் இருந்து நான் எப்போது விடுபடப் போகிறேன்?

இன்றா? அல்லது நாளையா? அல்லது என்னுடைய மரணப்படுக்கையில் நான் என்னுடைய வாழ்நாளில் செய்த பாவங்களுக்கெல்லாம் இறைவனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வேன் என்ற எண்ணத்தில் இவற்றையெல்லாம் சுமந்துக்கொண்டிருக்கிறேனா?

சிந்திப்பேன்.. செயலாற்றுவேன்.

Thursday, April 13, 2006

இன்று பெரிய வியாழன்ஆங்கிலத்தில் இதை மாண்டி தர்ஸ்டே என்பர்.

லத்தீன் மொழியில் ‘Mandatum’ என்றால் கட்டளை என்று பொருள். இதிலிருந்து திரிந்து வந்ததுதான் மாண்டி என்ற வார்த்தை.

யேசு கிறிஸ்து காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முந்தைய தினம் அதாவது பெரிய வியாழன் அன்று இரவு தன்னுடைய சீடர்களுடன் கடைசி இரவு (Last Supper) உணவை உண்பதற்கு கூடியிருந்த நேரத்தில் அவர்களுக்கு ஒரு அன்புக் கட்டளையைக் கொடுத்தார். அச்செயலை நினைவுகூறும் விதமாகத்தான் அத்தினத்திற்கு ‘மாண்டி தர்ஸ்டே’ என்று பெயர் வந்தது.

யேசு கிறிஸ்துவின் இந்த இறுதி இராவுணவைப் பற்றி புதிய வேதாகம ஆசிரியர்கள் அனைவருமே குறிப்பிட்டுள்ளனர் என்றாலும் அவர்களுள் அருளப்பர் எனப்படும் யோவான்தான் (St.John) மிகவும் தெளிவாக, விரிவாக எழுதியுள்ளார் (அரு:13 – 18)

அதற்கு முன்பு லூக்காஸ் நற்செய்தியாளர் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம். (St.Luke:22)

பாஸ்கா எனப்படும் புளியாத அப்பத் திருவிழா (இது யூதர்களின் மிக முக்கியமான திருவிழாக்களுள் ஒன்று) அடுத்திருந்தது. இவ்விழாவின் போது பாஸ்கா செம்மறியை பலியிடுவது வழக்கம். அதற்குப் பிறகு அதை புளியாத அப்பங்களுடன் சேர்த்து உண்பதும் வழக்கம்.

யேசு ‘நாம் பாஸ்காப் பலியுணவை உண்பதற்கு நீங்கள் போய் ஏற்பாடு செய்யுங்கள் என்று இராயப்பரையும் (St.Peter) அருளப்பரையும் (St.John) அனுப்பினார். அவர்கள் ‘நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறீர்?’ என்றனர்.

அவர் மறுமொழியாக, ‘நீங்கள் நகருக்குள் செல்லும்போது ஒருவன் தண்ணீர்க்குடம் சுமந்து உங்களுக்கு எதிரே வருவான். அவன் நுழையும் வீட்டுத் தலைவனிடம் ‘நான் என் சீடருடன் பாஸ்கா உணவை உண்பதற்கான அறை எங்கே என்று போதகர் உம்மைக் கேட்கிறார்’ எனக் கூறுங்கள். அவர் இருக்கை முதலியன அமைந்துள்ள ஒரு பெரிய மாடி அறையை உங்களுக்கு காட்டுவார். அங்கே ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார்.

அவர்களும் சென்று அவர் கூறியவாறே நிகழ்ந்ததைக் கண்டு ஏற்பாடு செய்தனர்.

இனி அருளப்பருடைய வேதாகமம்..

யேசுவும் சீடர்களும் அறையிலிருந்த நீள்வடிவ மேசையில் பந்தியமர்ந்தனர்.

யேசு பந்தியிலிருந்து எழுந்து தன்னுடைய மேலாடையைக் களைகிறார். ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொள்கிறார். பின்னர் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி தன்னுடைய சீடர்களுடைய பாதங்களைக் கழுவி தன் இடுப்பில் இருந்த துண்டால் துடைக்கிறார்.

அவருடைய செய்கையின் பொருள் விளங்காமல் சீடர்கள் பதறிப் போகின்றனர். ஆயினும் எதிர்த்துப் பேச துணிவில்லாமல் பேச்சற்றுப் போய் அமர்ந்திருக்கின்றனர்.

யேசு சீமோன் இராயப்பரிடம் (St.Peter) வருகிறார். அவர் விடவில்லை. ‘ஆண்டவரே, போதகரே, நீரா என்னுடைய பாதங்களைக் கழுவுவது?’ என்கிறார்.

யேசு அமைதியாக அவரை ஏறெடுத்து பார்க்கிறார். ‘இராயப்பா, நான் செய்வதன் பொருள் இப்போது உனக்கு விளங்காது, பின்னரே விளங்கும்.’ என்கிறார்.

ஆனால் இராயப்பரோ ‘நீர் என் பாதங்களை கழுவ நான் ஒருபோதும் சம்மதியேன்.’ என்கிறார்.

யேசு மறுமொழியாக, நான் உன்னைக் கழுவாவிடில் உனக்கு என்னோடு பங்கில்லை.’ என்கிறார் உறுதியுடன்.

சீமோன் இராயப்பர் சரணடைகிறார். ‘அப்படியென்றால் ஆண்டவரே, என்னுடைய பாதங்களை மட்டுமல்ல. என்னுடைய கைகளையும் தலையையும் கூட கழுவும்.’

யேசு புன்முறுவலுடன், ‘குளித்துவிட்டவன் தன் பாதங்களை மட்டும் கழுவினால் போதும். மற்றபடி அவன் முழுவதும் தூய்மையாயிருக்கிறான். நீங்களும் தூய்மையாயிருக்கிறீர்கள். ஆனாலும் எல்லோரும் தூய்மையாயில்லை.’ என்கிறார்.

அவர் கூறிய இறுதி வாக்கியத்தின் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லை. தன்னைக் காட்டிக்கொடுப்பவன் யார் என்று அவருக்கு முன்பே தெரிந்திருந்தது. அவனை மனதில் வைத்துத்தான், ‘எல்லோரும் தூய்மையாயில்லை.’ என்கிறார்.

எல்லோருடைய பாதங்களையும் கழுவி துடைத்து முடித்து அவர்களை நோக்கி கூறுகிறார். ‘நான் உங்களுக்குச் செய்ததன் பொருள் விளங்கிற்றா? நீங்கள் என்னை போதகரே என்றும் ஆண்டவரே என்றும் அழைக்கிறீர்கள். அத்தகைய நானே உங்களுடைய பாதங்களைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் ஒருவருடைய பாதங்களைக் கழுவ வேண்டும் அல்லவா?’

யேசு அன்று கூறியதன் பொருள் என்ன?

அக்காலத்தில் விருந்துண்ண அழைக்கப்படும் ஒவ்வொரு விருந்தினருடைய கால்களையும் அவ்வீட்டு பணியாளன் கழுவி மரியாதை செய்வது வழக்கமாயிருந்தது.

அதைத்தான் தான் செய்ததாக யேசு தன்னுடைய சீடர்களிடம் கூறினார்.

அதாவது நாம் ஒவ்வொருவரும் நம்முடைய நண்பர்களுக்கு, நம்முடைய உறவினர்களுக்கு ஏன் நம்முடைய எதிரிகளுக்கும் கூட பணிவிடை செய்ய நாம் தயங்கலாகாது, என்பதை எடுத்துரைக்கத்தான் யேசு அன்று தன்னைத் தானே தாழ்த்திக்கொண்டு தன்னுடைய சீடர்களுக்கு பணிவிடை செய்தார்.

அவர் தொடர்ந்து கூறுகிறார்.

‘ஊழியன் தலைவனுக்கு மேற்பட்டவன் அல்லன், அப்போஸ்தலனும் தன்னை அனுப்பியவருக்கு மேற்பட்டவன் அல்லன்.’

யேசு இதை தன்னை முன்நிறுத்தியே கூறுகிறார். தன்னை இவ்வுலகிற்கு அனுப்பிய தன் தந்தையைக் காட்டிலும் தான் மேற்பட்டவன் அல்ல என்பதைத்தான் இவ்வாறு கோடிட்டு காட்டுகிறார்.

தன்னுடைய சீடர்களைப் பார்த்து, ‘உங்களுள் பெரியவன் சிறியவன்போலவும், தலைவன் பணிவிடை புரிபவன்போலவும் இருக்கட்டும். யார் பெரியவன்? பந்தியில் அமர்பவனா, பணிவிடை செய்பவனா? பந்தியில் அமர்பவன் அன்றோ? நானோ உங்கள் நடுவே பணிவிடை புரிபவனைப்போல் இருக்கிறேன்’ என்கிறார்.


தன்னைத் தாழ்த்திக்கொள்பவன் எவனும் உயர்த்தப்படுவான். தன்னை உயர்த்திக்கொள்பவன் எவனும் தாழ்த்தப்படுவான் என்றும் வேறொரு சமயத்தில் அறிவுறுத்துகிறார்.

சிந்தனை: ஆம் நண்பர்களே.. நான்தான் பெரியவன், தலைவன். என்னை நீங்கள் எல்லோரும் வணங்கி நிற்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும்.. என்றெல்லாம் நம்மில் எத்தனை பேர் இறுமாப்புடன் பேசுகிறோம்? நடந்துக்கொள்கிறோம்? நமக்கு உண்மையிலேயே அதற்கு அருகதை இருக்கிறதா என்று ஒருகணம் சிந்தித்துப் பார்த்ததுண்டா?

*****

இன்று உலகெங்கிலும் உள்ள தேவாலயங்களில் யேசு அன்று செய்த நிகழ்ச்சியை நினைவுகூறும் விதமாக இன்றைய திருப்பலியின் இடையே திருப்பலி நடத்தும் தலைமைப் பாதிரியார் கீறிஸ்துவின் ஸ்தானத்தில் இருந்து பன்னிரண்டு வயதானவர்களுடைய பாதங்களைக் கழுவி துடைப்பார்.

யேசு தன்னுடைய சீடர்களுடன் உண்ட இறுதி இராவுணவைச் சித்தரிக்கும் விதமாக புகழ் பெற்ற ஓவியர் லியனோர்டா டாவின்சி வரைந்த அற்புதமான ஓவியம்உலகப் புகழ் பெற்றது (மேலே கொடுக்கப்பட்டுள்ளது அதனுடைய நகல்).

நாளை புனித வெள்ளியின் சரித்திரத்தைப் பார்ப்போம்.

********

Sunday, April 09, 2006

இன்று குருத்து ஞாயிறு!கிறிஸ்து பிறந்த முதலாம் நூற்றாண்டிலிருந்தே குருத்து ஞாயிறு (Palm Sunday) அன்றைய கிறிஸ்துவர்களால் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள்.

இது வருடந்தோறும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமை (Easter Sunday)க்கு முந்தைய ஞாயிற்றுக் கிழமை உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் கொண்டாடப்படுகிறது.

கிரேக்க மொழியில் balon அதாவது palm எனப்படும் (இந்தியாவில் தென்னங்கீற்று) கிளைகள் திருப்பலிக்கு முன்னதாக பாதிரியாரால் புனித நீரால் மந்திரிக்கப்பட்டு பக்தர்கள் கையிலேந்தி ஊர்வலமாக சென்று ஆலயத்திற்குள் நுழைவது வழக்கமாக இருந்து வருகிறது.

இதை ஐரோப்பாவில் Willow Sunday என்றும் Flower Sunday என்றும் அழைக்கிறார்கள். அந்த நாடுகளில் தென்னங்கிற்றுகளோ அல்லது ஒலிவ மரக் கிளைகளோ கிடைக்காது என்பதால் லில்லி மலர்களை கையிலேந்தி செல்வார்களாம். Willow எனப்படும் ஒரு வகை புற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

இதன் பின்னணி என்ன?

அக்காலத்தில் ரோமையர்கள் வீர விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்களை பாராட்டி ஒலிவ மரக் கிளைகளை அசைத்து வரவேற்கும் பழக்கம் இருந்தது. இதைத்தான் யூதர்களும் திருவிழாக் கொண்டாட்ட சமயங்களில் ஒலிவ மரக் கிளைகள், ஈச்ச மரக் கிளைகள் அல்லது லில்லி மலர்கள் போன்றவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.

புதிய வேதாகம காலக் கட்டத்தில் ஒலிவ மரக்கிளைகள் வேதத்திற்காக மரணத்தை உவந்து ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கும், அதாவது வெற்றியின் சின்னமாகவும் (Symbol of Victory) கருதப்பட்டு வந்தன.

யேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் அவருக்கு மிகவும் நெருங்கிய நண்பராகவிருந்த லாசர் (யோவான் நற்செய்தி 11:1-44) என்பவரை மரணத்திலிருந்து உயிர்ப்பித்ததத நேரில் கண்ட யூதர்கள் பலரும் அவர் மேல் விசுவாசம் கொண்டு அவரை தங்களை மீட்க வந்த மெசியா (இரட்சகர்) என்று கருதினர்.

யேசு கிறிஸ்து தான் பிடிபடுவதற்கு முன்பு Passover என்ற திருவிழாவைக் கொண்டாடுவதற்காக ஜெருசலேம் நகருக்கு சென்றார். அவர் வருவதைக் கண்ட யூத மக்கள் அவரை ஒரு வெற்றி வீரராக கருதி ஒலிவ மரக்கிளைகளுடனும், ஈச்சமரக் கிளைகளுடனும் உற்சாகத்துடன் வரவேற்றனர். மக்களின் உற்சாகத்தைக் கண்ட அவருடைய சீடர்கள் வழியில் சென்ற ஒரு கழுதைக் குட்டியின் மேல் தங்களுடைய ஆடைகளை விரித்து அவரை அதில் உட்கார வைத்து, ‘தாவீதின் மகனே (யேசு தாவீதின் பரம்பரையில் வந்தவர்) ஒசான்னா. உன்னதங்களில் மகிமை உண்டாகுக. கடவுளின் பெயரால் வருபவர் ஆசிபெற்றவர்' என்ற ஆரவார கோஷத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

இதைக் கண்டு ஆத்திரமடைந்த யூத மதக்குருக்கள் அவரை தடுத்து நிறுத்த பலவகையிலும் முயற்சி செய்தனர். ஆனால் மக்களுடைய ஏகோபித்த ஆரவாரத்தைக் கண்டு அஞ்சி பின்வாங்கினார் என்று வேதாகமம் கூறுகிறது.

இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாகத்தான் வருடந்தோறும் யூதர்கள் அதிகம் வாழ்ந்த ஜெருசலேம் நகரில் கொண்டாடப்பட்டு வந்த இவ்விழா நாளடைவில் அங்கிருந்து எகிப்து, சிறியா மற்றும் ஆசியா போன்ற நாடுகளிலும் பரவியது. எகிப்தில் ஒலிவ கிளை, ஈச்ச மரக்கிளைகளுடன், லில்லி மலர்களையும் கையிலேந்தி செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.

ஆறாவது மற்றும் ஏழாவது நூற்றாண்டு காலத்தில்தான் காலை நேரத்தில் கிளைகள், மலர்கள் போன்றவற்றை கையிலேதி ஊர்வலமாக சென்று தேவாலயத்தை அடையும் பழக்கம் துவங்கியது. அந்த காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளிலும் இப்பழக்கம் பரவி இன்று உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்களால் வெகு விமர்சையாக இது கொண்டாடப்படுகிறது.

நம் நாட்டில் உள்ள எல்லா கிறிஸ்துவ தேவாலயங்களிலும் இன்று காலை நடைபெற்ற வழிபாடுகளுக்கு முன்பு புதிதாகப் பறிக்கப்பட்ட தென்னங்கீற்றுகள் புனித நீரால் மந்திரிக்கப்பட்டு தேவாலய வாயிலுக்கு முன்பாக குழுமியிருக்கும் பக்தர்களுக்கு வழங்கபட்டன. பிறகு பக்தர்கள் அவற்றை கையிலேந்தி தேவாலய வளாகத்திற்குள மற்றும் அடுத்திருந்த சாலைகளில் ஊர்வலமாகச் சென்று தேவாலயத்திற்கு திரும்பிச் சென்றனர்.

இந்த ஊர்வலம் ரோமாபுரியில் கத்தோலிக்க கிறிஸ்துவர்களுக்கு தலைவரான போப்பாண்டவர் தலைமையில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து வரும் வாரம் புனித வாரம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாரத்தில்தான் பெரிய வியாழன், புனித வெள்ளி போன்ற புனித நாட்கள் வருகின்றன.

பெரிய வியாழன், புனித வெள்ளி கிய நாட்களின் புனிததத்துவத்தை குறிப்பிட்ட நாட்களில் எழுதுகிறேன்.

**********

Saturday, April 08, 2006

கிறிஸ்துவ கீதங்கள் 8


திருப்பலியில் பாடப்படும் பாடல்கள் வரிசையில் இன்று காணிக்கைப் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

தியானப் பாடலுக்குப் பிறகு திருப்பலியை நடத்தும் பாதிரியார் நற்செய்தியை வாசிப்பார். அதன் பிறகு, அன்று வாசிக்கப்பட்ட வாசகங்கள் மற்றும் நற்செய்தியில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைக் குறித்து பாதிரியார் சுருக்கமாக ஒரு பிரசங்கம் (சொற்பொழிவு) செய்வார்.

அதன் பிறகு இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக காணிக்கைப் பவனி (ஞாயிற்றுக் கிழமை மற்றும் திருவிழா நாட்களில்) இருக்கும். இப்பவனியில் யார் வேண்டுமானாலும் தங்களால் இயன்ற காணிக்கைப் பொருட்களை - பெரும்பாலும் பழங்கள், மலர்கள், ரொட்டி, மாணவர்களுக்கு பயன்படும் நோட்டுப் புத்தகங்கள், பேனா, பென்சில் - ஒரு சிறு பவனியாக பீடத்தை நோக்கிச் சென்று அளிப்பார்கள். பாதிரியார் அவற்றைப் பெற்று திருப்பலிப் பீடத்தின் அடியில் வைத்துவிட்டு திருப்பலையைத் தொடர்ந்து நடத்துவார்.

இந்த சமயத்தில் பாடகர் குழு பாடும் பாடல்தான் காணிக்கைப் பாடல்.

இச்சமயத்தில் பாடப்படும் பாடல்கள் பெரும்பாலும் நம்மையே இறைவனுக்கு காணிக்கையாக அளிப்போம் என்ற ரீதியில் இருப்பது வழக்கம்.

கீழே தரப்பட்டுள்ள பாடலும் அந்த வகையைச் சார்ந்ததுதான்.

தருவேன் காணிக்கை
என்னை முழுமையாகவே - மனம்
தருவேன் காணிக்கை
என்னை முழுமையாகவே
இங்கு மலராய் மலர்ந்து
உன்னில் உயிராய் கலந்து
வருவேன் உன் அன்பில் இணைந்து

குறைகளால் நிறைந்த என்
உள்ளக் கறை நீக்குமே
இறைவா வருவாய்
என் உள்ளம் உன் இல்லம் அறிந்தேன்
உள்ளத்திலே உள்ளதெல்லாம்
உமக்காய் தினம் கொடுப்பேன் -          தருவேன் காணிக்கை      

இரசத்துடன் நீர்த் துளிபோல்
எனை சேர்த்து உம் இரத்தமாக்கும்
அப்பத்தில் எழுவாய்
மாறிடும் நல் திரு உணவாய்
என்னிடத்தில் ஏதுமில்லை
உன்னிடம் என்னை அளித்தேன் -           தருவேன் காணிக்கை

***

நாம் இறைவனிடம் இருந்து பெறும் கொடைகள் கோடானு கோடி. அவற்றிற்கெல்லாம் நம்மால் நன்றி தெரிவிப்பதானால் நம்முடைய ஜென்மம் முழுவதும் போறாது.

நாம் நன்றியுடன் அளிக்கும் காணிக்கைகள், அதாவது மலர்கள், கனிகள், எல்லாமே இறைவனால் நமக்கு அளிக்கப்பட்டவை. அதை நாம் திரும்பி இறைவனுக்கு அளிப்பதற்கு மேலானது ஒன்று உள்ளது.

அது எது தெரியுமா?

நம்முடைய உள்ளம்.

நான் என்னையே இறைவனுக்கு தருவதாய் நான் கூறுவது இதைத்தான். இறைவனை என் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளும்போது நான் இதைத்தான் செய்கிறேன்.

இங்கு மலராய் மலர்ந்து
உன்னில் உயிராய் கலந்து
வருவேன் உன் அன்பில் இணைந்து.

ஆம், நான் உன் முன் மலராய் தினமும் பூக்கிறேன். உன்னோடு உன்னில் கலந்து வருவேனய்யா உம்முடைய எல்லையில்லா அன்பில் இணைந்து..

நாம் யாருக்கு என்ன கொடுத்தாலும் நாம் கொடுக்கும் பொருள் நல்லதாக இருக்க வேண்டும் என்று நினைப்போம் இல்லையா?

நாம் அளிக்கும் மலர் அன்று பூத்த மலராக இருக்க வேண்டும். வாடி, வதங்கி பொலிவிழந்து காணப்படும் எதையும் நாம் அளிக்க விரும்ப மாட்டோம். அதே போல அழுகிய பழங்களை ஒருபோதும் பரிசாய், அன்பளிப்பாய் கொடுக்க விரும்பமாட்டோம்தானே.

மனிதர்களுக்கே அப்படியென்றால் இறைவனுக்கு நாம் அளிக்கும் பொருட்கள் எத்தகையனவாய் இருக்க வேண்டும்!

அதுபோலவே என்னை, என்னுடைய உள்ளத்தை இறைவனுடைய வாசஸ்தலமாய் நான் அளிக்க விரும்போது அதில் பாவக்கறைகள் இருக்கலாமா? கூடாதல்லவா?

அதற்காகத்தான் இந்த வேண்டுகோள்.

குறைகளால் நிறைந்த என்
உள்ளக் கறை நீக்குமே..

பாத்திரத்தில் அழுக்கு இருந்தால் நம்மால் நீர் விட்டு கழுகிவிட முடியும். ஆனால் நம் உள்ளத்தில் உள்ள கறையை என்னால் மட்டும் நீக்கிவிட முடியுமா? அதற்கு இறைவனின் துணை வேண்டும்.  

என்னிடம் உள்ளதையெல்லாம் நான் இறைவனுக்கு அர்ப்பணித்தாலும் என்னையே நான் காணிக்கையாக அளிக்காதவரை, அதாவது இறைவன் வந்து வாசம் செய்யும் அளவுக்கு என்னுடைய உள்ளத்தை தூய்மையாக்கி அவருக்கு அளிக்கவில்லையென்றால் நான் தருவதாய் கூறும் காணிக்கைகள் எல்லாமே வீண்.

நம்மிடமுள்ள பொருட்களை இறைவனுக்கு கொடுப்பதைவிட நம்மையே இறைவனுக்கு கொடுப்பதுதான் மிகவும் சிறந்தது என்பதைத்தான் வலியுறுத்துகிறது இந்த இறுதி வாக்கியம்..

உன்னிடம் என்னை அளித்தேன்.

ஆம் இறைவா, நீர் படைத்த என்னையே காணிக்கையாய் உன் முன் சமர்ப்பிக்கிறேன்.

என்னை ஏற்றுக்கொள்ளும்.

********

தேவாலயங்களில் பாடப்படும் கீதங்களை இப்பதிவில் MP3 file வடிவத்தில் upload செய்ய  தனியாக மென்பொருள் ஏதும் உள்ளதா?

யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

Friday, April 07, 2006

சிலுவைப் பாதை - நிறைவுப் பகுதி

பதிமூன்றாம் ஸ்தலம்: யேசுவின் உடலை அவருடைய தாயின் மடியில் கிடத்துகின்றனர்.சொல்லொண்ணா வேதனைக்கு உட்படுத்தப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த யேசுவின் திருவுடலை சிலுவையிலிருந்து இறக்கி அருகில் நின்றுக்கொண்டிருந்த அவருடைய தாய் மரியாளின் மடியில் கிடத்தினர்.

சிந்தனை: நாம் எத்தனை வேதனையிலிருந்தாலும் நமக்கு ஆறுதல் தருவது நம்முடைய அன்னைதான். நம்முடைய இறுதி மூச்சு நம்மை விட்டு அகலும்போது நாம் நம்முடைய அன்னையின் அருகிலிருந்தால் நம்மை தன் மடியில் கிடத்தி ஆறுதல் அளிப்பார் அல்லவா? ஒரு தாய்க்கு ஈடான அரவணைப்பை, அவர் அளிக்கும் ஆறுதலை நம்மால் ஒருபோதும் பிறருக்கு அளிக்க இயலாது என்பதை நாம் அறிவோம். ஆனாலும் நம்மை சுற்றியுள்ளோர், அவர்கள் நமக்கு தீங்கிழைத்தவராயினும், அவர்கள் துன்புற்றிருக்கும் வேளையில் நம்மால் இயன்றவரை நாம் அவர்களுக்கு ஆறுதலாக இரண்டொரு வார்த்தகளாவது பேசியிருக்கிறோமா? அல்லது நீ எனக்கு தீங்கிழைத்தவன் தானே? உனக்கு இவ்வேதனை தேவைதான், நன்றாக அனுபவி என்று சபித்துவிட்டு சென்றிருக்கிறோமா? அல்லது அவர்களுடைய மரணத்திற்குப் பிறகும் அவர்களுடைய குறைகளை நினைவுகூர்ந்து அவர்களைப் பழித்து பேசியிருக்கிறோமா?

என் அன்பு இறைவா, என்னைச் சுற்றிலுமுள்ளவர்களை கண்ணோக்கும் பரந்த மனப்பான்மையை எனக்குத் தாரும். நான் அவர்களுடைய துக்கத்திலும், வேதனையிலும், தோல்வியிலும் பங்கு கொண்டு அவர்களுக்கு ஆறுதலாகவும், தேறுதலாகவும் இருக்கும் மனப்பக்குவத்தை எனக்குத் தாரும் இறைவா, தாரும்..

பதிநான்காம் ஸ்தலம்: யேசு
கல்லறையில் அடக்கப்படுகிறார்.யேசு அடக்கம் செய்யப்பட்ட கல்லறை முதல் நூற்றாண்டில் (First Century A.D.) கண்டுபிடிக்கப்பட்டது. யேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்திலிருந்து சில நூறு அடிகள் தொலைவிலிருந்த அக்கல்லறை பதிமூன்று அடி நீளமும், இரண்டு அடி அகலமும் உடையதாக இருந்தது என சரித்திர ய்வாளர்கள் கூறியுள்ளனர். வேதாகமத்தில் கூறியுள்ளபடி அக்கல்லறை அரிமத்தேயா என்ற ஊரைச் சார்ந்த
ஜோசஃப் என்பவருக்கு சொந்தமாயிருந்தது. அவர் யேசுவின் போதனைகளில் நம்பிக்கைக் கொண்டிருந்தவராயினும் அவர் வாழ்ந்த காலத்தில் ரோமையர்களுக்கும் யூத மதகுருக்களுக்கும் அஞ்சி வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் இருந்தவர். ஆனால் யேசு மரித்ததை அறிந்த அவர் துணிவுடன் பிலாத்துவிடம் சென்று யேசுவின் உடலை அடக்கம் செய்யக் கேட்டுப் பெற்றார். பின்னர், முன்னாளில் யேசுவால் மனந்திரும்பிய நிக்கோதேமுஸ் என்பவர் கொண்டுவந்திருந்த நறுமணப் பொருட்களுடன் யேசுவின் உடலை தான் கொண்டுவந்திருந்த சுத்தமான துணியில் போர்த்தி அவரை தனக்கென தயாரித்து வைத்திருந்த கற்களால் குடையப்பட்டிருந்த குகையில் வைத்து வாயிலில் ஒரு பெருங்கல்லை புரட்டி வைத்துவிட்டுச் சென்றார். தான் மரித்த மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று யேசு முன்பே கூறியிருந்த்தை நினைவுகூர்ந்த யூத மதக் குருக்கள் எங்கே அவருடைய சீடர்கள் இரவில் வந்து அவருடைய உடலை கொண்டு சென்றுவிட்டு அவர் உயிர்த்தெழுந்தார் என்று கூறிவிடுவார்களோ என்று அஞ்சி பிலாத்துவிடம் கூறி அவருடைய கல்லறைக்கு சீல் வைத்தனர்.


பாறையில் குடையப்பட்ட கல்லறையின் வெளிப்புறம்

கல்லறையின் உட்புறம்


கல்லறை வெளிப்புறத்தில் ரோம வீரர்களால் சீல் வைக்கப்பட்டது

சிந்தனை: அரிமத்தேயா சூசை யூதர்களால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்பதை உணர்ந்தும் அஞ்சாமல் யேசுவின் உடலை பிலாத்துவிடம் கேட்டுப் பெற்றார். ஆனால் நான்? யேசுவின் அன்பை உணராமல் அவர் எனக்காக செய்த உயிர்த்தியாகத்தை மறந்துவிட்டு அவரை பிறர் முன்னிலையில் என் சுயநலத்திற்காக எத்தனை முறை புறக்கணித்திருக்கிறேன்?

அதுமட்டுமா? அவர் தனக்கென வைத்திருந்த கல்லறையை யேசுவுக்காக மனமுவந்து கொடுத்தாரே. ஆனால் நான்? எத்தனை சுயநலத்துடன் பல சமயங்களில் நடந்துக்கொண்டிருக்கிறேன்? எனக்கிருப்பவையெல்லாம் என்னுடையவை. ஆகவே நான் அதை யாருடனும் பகிர்ந்துக்கொள்ள மாட்டேன் என்றேனே. பிறருடைய பொருளுக்காக ஏங்கும் நான் என்னுடையவற்றை பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை தாரும் இறைவா தாரும்..

நிறைவு

Saturday, April 01, 2006

கிறிஸ்துவ கீதங்கள் - 7

கிறிஸ்துவ கீதங்கள் - 7

இன்றும் தியானப் பாடல்கள் வரிசையில் எனக்குப் பிடித்த இன்னுமொரு பாடலைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இறைவன் மனிதர்கள் மேல் வைத்திருக்கும் அன்புக்கு ஈடு இணையே இல்லை. நம் பெற்றோர் நம் மேல் வைத்திருக்கும் அன்புகூட சில நேரங்களில் குறையலாம். ஆனால் இறைவன் நம் மேல் வைத்திருக்கும் அன்பு என்றும் மாறாதது.

நாம் நம்முடைய சரீர இச்சைக்கு உட்பட்டு பாவத்தை நாடி, இறைவனை விட்டு வெகுதொலைவில் செல்ல நேர்ந்தாலும் இறைவன் நம்மை ஒருபோதும் மறப்பதில்லை. என்றாவது என் மகன்/மகள் மனந்திரும்பி வருவான்/ள் என்று தன் கருணைக் கண்களை நம்மீது வைத்து காத்திருக்கிறார்.

இக்கருத்துக்களை மையமாக வைத்து இயற்றப் பாடல் இது.

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம்
நான் மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம் நீயே நிரந்தரம்..

தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம்..

செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
நிரந்தரம் நிரந்தரம்..

Change is the only permanent thing in this world என்பார்கள்..

மாறாதது உலகில் எதுவும் இல்லை.. ஏழை பணக்காரன் ஆவதும், பணக்காரன் ஏழையாவதும், பாவி மனந்திரும்பி புண்ணியவான் ஆவதும், புண்ணியவான் சீர்கெட்டு பாவியாவதும் இயற்கை..

ஆனால் இவ்வுலகிலும் மறுவுலகிலும் என்றும் மாறாமல் நிரந்தரமாய் இருப்பது இறையன்பு ஒன்றே. அதுவே நிரந்தரம், நிரந்தரம், நிரந்தரம்.

நாம் இவ்வுலக வாழ்க்கையில் பெறும் பதவி, பொருள், புகழ் எல்லோமே நம்முடைய மரணத்திற்குப்பிறகு செல்லாக்காசாகிப் போகிறது.

ஆனால் நாம் இவ்வுலக வாழ்க்கையில் செய்யும் நற்செயல்கள், தானதர்மங்கள், நாம் அனுபவிக்கும் அவமானங்கள் யாவும் நம் மறுவுலக வாழ்விற்கு நாம் செய்யும் முதலீடு என்பதை உணரவேண்டும். மறுவுலக வாழ்வில் அது வட்டியோடு சேர்ந்து நம்மை வந்து சேரும்.

அவ்வுலக வாழ்வின் நாயகன் தான் இறைவன். இறைவனடியில் நாம் காணும் இன்பமே, அமைதியே நிரந்தரம், நிரந்தரம், நிரந்தரம்.

********