Saturday, March 18, 2006

கிறிஸ்துவ கீதங்கள்


கிறிஸ்துவ தேவாலயங்களில் திருப்பலி நேரத்தில் பாடப்படும் கீதங்கள் வரிசையில் இன்றும் தியானப் பாடல்களில் ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஏன் மூன்றாம் வாரமாக தியானப் பாடலையே அளிக்கிறீர்கள் என கேட்பவர்களுக்கு.

திருப்பலியில் இறைப்பிரச்சன்னத்தை பக்தர்கள் வேண்டுவது இத் தியானப் பாடல்கள் வழியாகத்தான்.

திருப்பலி நேரத்தில் பாடப்படும் பாடல்களில் தியானப் பாடல்கள்தான் மிகச் சிறப்பாக இயற்றவும், இசையமைக்கவும் பட்டுள்ளன என்றால் மிகையாகாது.

இறைவனை கெஞ்சி, யாசித்து அழைத்து 'ஐயா நீர்தானய்யா எம் தெய்வம், நீரில்லாமல் வாடும் பயிர்களைப் போல தினம் உம்மை நாடி நாங்கள் வரவேண்டும், நீரில்லையேல் நாங்களில்லை' என்று மனம் உருகி பாடும் வகையில் பல பாடல்களும் இப்பகுதியில் உள்ளன.

இனிவரும் வாரங்களிலும் தொடர்ந்து எழுதும் அளவுக்கு எண்ணிலடங்கா அருமையான பாடல்கள் தியானப் பாடல்கள் வரிசையில் இருக்கின்றன..

இனி இவ்வார பாடலுக்கு செல்வோம்.என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உன்னை மனம் தேடுதே நீர் வழிகாட்டுமே
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைகாக்க நீ வேண்டுமே

உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே..

என் தேடல் நீ என் தெய்வமே..

சிரமங்களும், சோதனைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் நாம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கரை சேரவேண்டுமெனில் நமக்கு இறைவனின் துணை அவசியம் வேண்டும்.

சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைக்க நினைக்கும் எவரும் இறைவனை தேடிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதாக இப்பாடல் துவங்குகிறது..

என் தேடல் நீ என் தெய்வமே

எனக்கு ஆறுதல் தரவேண்டுமென்று உன்னை தேடுகிறேன்..

நீர் வரவில்லையென்றால் என் வாழ்க்கையின் நிறம் மாறிவிடும். இதில் நிறம் என்பது நம்முடைய வாழ்வின் லட்சியம், வாழ்வின் பாதை என்பதை குறிக்கின்றது..

நம் வாழ்வில் இறைபிரசன்னம் இல்லையென்றால் நாம் எத்தனை திறம்படைத்தவர்களாக இருந்தாலும் நம் வாழ்வின் திசை மாறிவிடும்.. நம் வாழ்வின் வழிகாட்டி இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..

இதைத்தான்

உன்னை (என்) மனம் தேடுதே நீர் வழிகாட்டுமே என்ற வரி நமக்கு உணர்த்துகிறது..


உன்னோடு (இறைவனோடு) நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்..

நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஏற்படுகின்ற புனித உறவானது நம் பாவ இச்சைகள் நிறைந்த உள்ளத்தை மாற்றி இறைவனுடையதைப் போலாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..

வீணையின் கம்பிகளை கலைஞன் மீட்டும்போது அதிலிருந்து எழும் இனிய நாதம் போல இறைவன் என்னுள் கலந்து என்னுடைய நாடி, நரம்புகளில் எல்லாம் நிறைந்துவிட்டால்..

என் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் அற்புத மாற்றங்கள், என்னுடைய ஆற்றலை (திறமையை) பலமடங்காக்கிவிடும் என்பதில் என்ன சந்தேகம்!

உன் வழி தேடி ஓடிவரும் என் போன்ற பக்தர்களை நீர் காத்திட வேண்டுமைய்யா.. காத்திட வேண்டும்..

இதைத்தான் உணர்த்துகிறது இப்பாடலின் இறுதி வரி..

வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே..

பாடல்கள் தொடரும்

2 comments:

Jsri said...

ஜோசப் சார், இந்தப் பாடல்களோட ஒலிக்கோப்பு இருந்து சேர்த்தா இன்னும் நல்லா இருக்கும்.

tbr.joseph said...

வாங்க ஜேஸ்ரீ,

நீங்க சொன்னா மாதிரியே பலரும் கேக்கறாங்க.

என்னுடைய தேவாலய பாடகர் குழுவிடம் பேசி ஏதாவது செய்ய முடிகிறதா என்று பார்க்கிறேன்..

Post a Comment