Thursday, March 16, 2006

கடவுளும் மதமும் நம்பிக்கையும்



இப்போதெல்லாம் 'நான் கடவுளை நம்பாதவன்' என்று கூறிக்கொள்வது ஒருவித Fashion ஆகிவிட்டது..

கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று ஒரு அரசியல் தலைவர் ஒரு காலத்தில் கூறிக்கொண்டிருந்தார். அவரை சீர்திருத்தவாதி என்றார்கள். அவரைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை..

இன்று அல்லது சமீப காலமாக, கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுடைய வாதத் திறமை அதைப் படிப்பவர்களையும் அந்நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..

சரி.. என்னுடைய பார்வையில் மதம் என்றால் என்ன கடவுள் நம்பிக்கை என்ன என்பதை மட்டும் பார்ப்போம்..

கடவுள் நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அந்தரங்க உணர்வு.. அது என்னுடைய தனிப்பட்ட உணர்வும் கூட..

அதை யாருக்கும் நியாயப்படுத்த தேவையில்லை. அதை யாரும் கொச்சைப்படுத்தவோ அல்லது எள்ளி நகையாடவோ நான் உரிமையளிக்கவில்லை..

இறை நம்பிக்கை எனக்கு ஒரு சந்தோஷத்தை, என் வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளிக்கிறது என்று நினைக்கிறேன், நம்புகிறேன். அதுமட்டும் போதும் எனக்கு.

ஆனால் மதம் என்பது முற்றிலும் வேறானது..

எந்த ஒரு மதமானாலும் அதற்கு சில சட்டத்திட்டங்கள், வரைமுறைகள் எல்லாம் உண்டு. அம்மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பர்வகளுக்கு மட்டுமே அச்சட்டங்களின் அர்த்தமும், நியாயமும் புரியும். அவற்றை மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி ஒழுக தயாராக இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவருமே மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை..

ஆனால் மதத்தை நம்புகிறவர்கள், அல்லது நான் இந்த மதத்தைச் சார்ந்தவன்தான் என்பவர்கள்  கடவுள் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை என்று சொல்லும்போது....

இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்.

கடவுள் இல்லை. மதங்கள் ஒரு மூட நம்பிக்கை என்று அடித்துக் கூறும் ஒரு கட்சித் தலைவர் எப்போதும் தோளில் அணிந்திருக்கும் மஞ்சள் துண்டுக்கு என்ன பொருள் என்று கேட்டாராம் ஒரு பத்திரிகை நிரூபர்.

அதுபோல் இருக்கிறது இந்த அறிவுஜீவிகளின் வாதமும்.

காந்திஜி அவர்கள் ஒருமுறை கூறினார். நான் கிறிஸ்துவத்தை நேசிக்கிறேன். அதற்கு நான் கிறிஸ்துவர்களை நேசிக்கிறேன் என்று பொருள் அல்ல என்று. கிறிஸ்துவம் மட்டுமல்ல அவர் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

ஆம், கடவுளை நம்புகிறேன்.. ஆனால் கடவுளை முன் வைத்து மதவாதிகள் செய்யும் அக்கிரமத்தை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுங்கள். என்னைப் போன்றவர்கள் நம்பத் தயாராய் இருக்கிறோம்..

ஆனால் நான் கிறிஸ்துவன், நான் இந்து, நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், ஆனால் கடவுளை நம்பவில்லை என்று கூறாதீர்கள்..

அது ஒரு hypocrite ன் வாதமாகத்தான் கருதப்படும்..

சிந்தனைகள் தொடரும்..


  

27 comments:

முத்து(தமிழினி) said...

//இப்போதெல்லாம் 'நான் கடவுளை நம்பாதவன்' என்று கூறிக்கொள்வது ஒருவித Fashion ஆகிவிட்டது..//


கடவுளே கடவுளே...

tbr.joseph said...

அட! அப்போ கடவுள் இல்லைங்கற க்ரூப்ல நீங்க இல்லை..

கடவுளே, கடவுளேன்னுட்டீங்களே.

குட். One person is converted!

ramachandranusha said...

தெய்வமே :-)

tbr.joseph said...

என்ன உஷா நீங்களுமா?

Ok. Conversion No.2 :-)

ஜோ / Joe said...

என்ன ஜோசப் சார்! ஏன் இவ்வளவு கோபம் !

சார்! எனக்கு கடவுள் நம்பிக்கை கண்டிப்பா இருக்கு .ஆனா அந்த அளவுக்கு மதத்துல நம்பிக்கை இல்லை .ஆனாலும் நான் ஒரு மதத்தை பின்பற்றும் குடுப்பத்தில் பிறந்ததால் ,அதில் என் மனதுக்கு ஒப்புதல் உள்ள நடைமுறைகளை மட்டும் பின்பற்றுகிறேன் .பலவற்றை பின்பற்றுவதில்லை ..இது தவறா?

tbr.joseph said...

இது தவறா?

நிச்சயமாக இல்லை ஜோ.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
எப்படி சிலருக்கு 'கடவுளை நம்பாதவன் பாவி'-ன்னு சொல்ல உரிமை இருக்கோ ,அதுபோல சிலருக்கு 'கடவுளை நம்புகிறவன் முட்டாள்' -ன்னு சொல்லவும் உரிமை இருக்கு தானே?

tbr.joseph said...

உரிமை இருக்கு தானே?//

ஒத்துக்கறேன் ஜோ..

ramachandranusha said...

அட தேவுடா :-) சார், ஒரு நிமிஷம் நான் சொன்னதை வைத்து இந்த பதிவுன்னு ஏமாந்துவிட்டேன். பார்க்க நேற்றுப் போட்ட " நாலே நாலுதானா & ஊருக்கு கிளம்பிக்கிட்டு இருக்கேன்"

tbr.joseph said...

உங்க பதிவை இப்பத்தான் படிச்சேன்..

என்னுடைய பதிவு அதுக்கு எதிர் பதிவுன்னு நினைச்சீங்களா?

ஆனா அத படிச்சதும்.. நீங்க நினைச்சாலும் அதுல தப்பில்லைன்னு நினைக்கிறேன்..

கடவுளை வேண்டுவது தப்பே இல்லைங்க.. அதுல நீங்க பெருமை படறதுக்கு என்ன இருக்குன்னுதான் எனக்கு இப்பவும் புரியலை..

எனிவே.. அது உங்களுடைய கருத்து.. அதுக்கு உங்களுக்கு எல்லா ரைட்சும் இருக்கு.. நம்ம ஜோ சொல்றா மாதிரி..

God Bless you! ஓ! சாரி..

Dharumi said...

ஜோசஃப்,

"...அதுபோல் இருக்கிறது இந்த அறிவுஜீவிகளின் வாதமும் " - அவர்களை நீங்களே அறிவுஜீவிகள் என்று எதற்காக அழைக்கிறீர்கள் - அடிமன காம்ப்ளக்ஸ்..?

"இப்போதெல்லாம் 'நான் கடவுளை நம்பாதவன்' என்று கூறிக்கொள்வது ஒருவித Fashion ஆகிவிட்டது.."//
- முத்து, உஷா சொன்னது மாதிரி நானும் ஒண்ணு போட்டுக்கிறேன்: 'கர்த்தாவே...கர்த்தாவே!!


ஏன் சார், கடவுள் மறுப்புன்னாலே உங்களுக்கெல்லாம் இப்படி ஆகுது? உங்களை கைய பிடிச்சி வெளியே வாங்கன்னா சொல்றோம். இதுவரை இருந்த இடம் எனக்குப் பிடிக்கலைன்னு காரணங்கள் சொல்லி வெளியே போனா, ஏன் மறுபடி கையைப் பிடிச்சி உள்ள இழுக்குறீங்க. உனக்கு நரகந்தாண்டா அப்டின்னிட்டு போகலாமே..?

"அம்மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பர்வகளுக்கு மட்டுமே அச்சட்டங்களின் அர்த்தமும், நியாயமும் புரியும்" - இல்லைன்னு சொல்லலையே. ஆதாமின் விலா எலும்பில் இருந்து ஏவாள் உருவாக்கப்பட்டதால், இப்போதும் எல்லா ஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு கம்மி என்ற உங்கள் பதிவில் வந்த ஓர் அபத்தம் அது மாதிரியானதுதான். ஒரு முறை அதை உங்களுக்கு விளக்கினாலும், அதை நீங்கள் ஏற்காத போது, நான் உங்களை விரட்டி விரட்டி வந்தேனா, என்ன? இது ஓரே ஒரு உதாரணம் - நீங்கள் சொல்லும் நம்பிக்கைகளுக்கும், அர்த்த-நியாய புரிதல்களுக்கும்.

"இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்" //
- ஜோசஃப், உங்களுக்கே இது கொஞ்சம் ஓவராகப் படவில்லை?? ஏன் சார், நான் பொறந்து 30 நாளைக்குள் எனக்குத் தலையில தண்ணிய ஊத்திட்டா நான் சாகுற வரைக்கும் அதையே பிடிச்சிக்கிட்டு இருக்கணும்னு என்ன விதி/ கட்டளை/ கட்டாயம்..? சொல்லுங்க. ஏதோ ஒரு வயசில, வாழ்க்கையின் எதோ ஒரு கட்டத்தில ஒருத்தனுக்குக் கண்ணு தொறந்திச்சினா அதில உங்களுக்கு என்ன கஷ்டம்?

என் தாத்தா காலத்தில் - முத்தையா சாமுவேல் ஆனாராம் - கிறித்துவத்திற்கு வந்தாராம் - படிக்கப் போன இடத்தில். உங்கள் மூதாதையர் ஒருவரும் இதேபோலத்தான் மாறியிருப்பார். அவர்கள் எல்லாம் "இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை" என்று சொன்னதாகச் சொல்லுகிறீர்களா?

இதில் எதுக்கு பாவம், பெரியாரையும், கருணநிதியையும் இழுக்கிறீர்கள். அதிலும் மஞ்சக் கலரை சொன்னவர் 'பச்சைக் கலரை' விட்டு விட்டீர்களே; ஏன்?

இதில் அந்த முதல் மனிதர் இல்லாவிட்டால் நானும் நீங்களும் இப்படி ஆகியிருப்போமா, என்ன? எனக்கு அந்த நம்பிக்கையில்லை. ஒருவேளை பல கிறித்துவர்கள், மிஷனரிகள் மூலமாக முன்னேறியவர்களாதலால் அவரின் முக்கியத்துவம் தெரியாதிருக்கலாம். நீங்கள் அப்படியும் இருக்கலாம்; தெரிந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதிருக்கவும் செய்யலாம்.
தவறில்லை.

நாங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள் - பதில்கள் இருந்தால். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வழமையான ஒரு statement: "கடவுள் நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அந்தரங்க உணர்வு.. அது என்னுடைய தனிப்பட்ட உணர்வும் கூட.."

முடிஞ்சி போச்சே அதோட எல்லாமே.

அடைக்கல ராசா said...

என்னைப் பொறுத்தவரை எல்லாருமே நாத்திகர்கள்தான். அன்பே சிவம், அன்பே கடவுள் என்று சொல்லி தன்னைத் தானே அன்பு செய்கிறோம். பிறரை துச்சமாக எண்ணுகிறோம். பிற உயிர்களை அன்பு செய்ய வேண்டாம். குறைந்த பட்சம் துன்புறுத்தாமல் இருந்தாலே போதுமே. கடவுளை நம்பாதவன் பாவி என்றழைக்க எந்த கடவுள் உரிமை தந்தது. நான் அந்தக் கடவுளை நம்பவில்லை.
என்னைப் பொறுத்தவரை எல்லாருமே ஆத்திகர்கள்தான். (என்னங்க குழப்புறேனா! அதுதானே நம்ப வேலையே) பணத்தை நம்புகிறோம் ( கர்நாடக மாநிலத்தில் ஐந்து போலிசாரின் மதிப்பு அறுபது கோடி (சரியான கேடி) – நன்றி “த இந்து”, 15-03-06 ) பதவியை நம்புகிறோம், சுகங்களை நம்புகிறோம், இராசிக் கல்லை நம்புகிறோம், ஏன் கடவுளையும் பிற மனிதர்களையும் தவிர எல்லாவற்றையும் நம்புகிறோமே, நாம் ஆத்திகர்கள்தானே.

பட்டணத்து ராசா said...

இதையும் பாருங்க
http://pakkam5.blogspot.com/2006/03/patterns.html

Dharumi said...

" ...என் மனதுக்கு ஒப்புதல் உள்ள நடைமுறைகளை மட்டும் பின்பற்றுகிறேன் .பலவற்றை பின்பற்றுவதில்லை ..இது தவறா? " - கேட்டது ஜோ.

"நிச்சயமாக இல்லை ஜோ. "- எப்படி கொடுக்கிறீர்கள் இந்த தீர்ப்பு.

ஜோ (ஜோ, நீங்க கொஞ்சம் மன்னிச்சிக்கிங்க..சும்மா விவாதத்துக்கு) உங்களைப்போல ஒரு கத்தோலிக்கர்; சரியா? "யெகோவாதான் கடவுள்; ஏசு கடவுள் அல்ல" (Jehovites)என்றாலோ, "ஏசுவை நம்புகிறேன்; ஆனால், மரியின் மகனாக சாதாரணமாகத்தான் பிறந்தார்"(protestants * muslims) என்று சொன்னாலோ, இல்லை, 'ஏசுவை நம்புகிறேன்; ஆனால் அவர் சிலுவையில் அறையப்படவில்லை (இஸ்லாமியர் சொல்வது போல) என்றாலோ, இல்லை, " அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நம்பவில்லை" (islam) என்று partical faith உள்ளவர் என்றாலும் உங்களின் தீர்ப்பு அதுவாகத்தான் இருக்குமா?

tbr.joseph said...

வாங்க தருமி அண்ணா,

"...அதுபோல் இருக்கிறது இந்த அறிவுஜீவிகளின் வாதமும் " - அவர்களை நீங்களே அறிவுஜீவிகள் என்று எதற்காக அழைக்கிறீர்கள் - அடிமன காம்ப்ளக்ஸ்..?//

யாருக்கு காம்ப்ளக்ஸ்? எனக்கா? Never!

முத்து, உஷா சொன்னது மாதிரி நானும் ஒண்ணு போட்டுக்கிறேன்: 'கர்த்தாவே...கர்த்தாவே!!//

இந்த கர்த்தாவே, கர்த்தாவே.. உங்க கிட்டருந்து வரக்கூடாதே..

இப்போதும் எல்லா ஆண்களுக்கும் ஒரு விலா எலும்பு கம்மி என்ற உங்கள் பதிவில் வந்த ஓர் அபத்தம் அது மாதிரியானதுதான்.//

அபத்தாம்தான். ஒத்துக்கறேன்.. அறியாமை.. இல்லன்னா.. நீங்க அன்னைக்கே சொன்னா மாதிரி பல்பிட்லருந்து வந்தத அப்படியே ஏத்துக்கற அடிமைத்தனம்.. எப்படி வேணும்னாலும் வச்சிக்கலாம்..


ஏன் சார், கடவுள் மறுப்புன்னாலே உங்களுக்கெல்லாம் இப்படி ஆகுது? //

இப்படி ஆகுதுங்கறது என்ன அர்த்தம்? கோபம் வருதுன்னா? இல்ல பைத்தியம் புடிக்குதுன்னா இல்ல வேற ஏதாச்சுமா?

உங்களை கைய பிடிச்சி வெளியே வாங்கன்னா சொல்றோம்?//

யார் சொன்னா அப்படி? நானா? என்ன அண்ணா?

ஒரு கட்டத்தில ஒருத்தனுக்குக் கண்ணு தொறந்திச்சினா அதில உங்களுக்கு என்ன கஷ்டம்?//

ஒரு கஷ்டமும் இல்லை..

உங்கள் மூதாதையர் ஒருவரும் இதேபோலத்தான் மாறியிருப்பார். //

இருக்கலாம். இந்திய கிறிஸ்துவர்கள் எல்லோருமே அப்படித்தானே..

அவர்கள் எல்லாம் "இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லைஎன்று சொன்னதாகச் சொல்லுகிறீர்களா? //

நிச்சயம் இல்லை.. அதுவல்ல என் நோக்கம்.. நீங்களாக எதுவும் கற்பனை செய்துக்கொண்டு ஏன்..?

ஒருவேளை பல கிறித்துவர்கள், மிஷனரிகள் மூலமாக முன்னேறியவர்களாதலால் அவரின் முக்கியத்துவம் தெரியாதிருக்கலாம். நீங்கள் அப்படியும் இருக்கலாம்; தெரிந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதிருக்கவும் செய்யலாம்.
தவறில்லை.//

நான் எப்போதுமே என்னுடைய பதிவில் யாரையும் குறிப்பிட்டு கூறுவதில்லை.. ஆனால் உங்களிடமிருந்து இம்மாதிரியான ஒருவரை சுட்டிக்காட்டி எழுதும் விதத்தை நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை.. கோபத்தில் நிதானம் தவறாதீர்கள். அது உங்களைப் போன்ற பெரியவர்களுக்கு அழகில்லை..

நாங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள் - பதில்கள் இருந்தால். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது வழமையான ஒரு statement: //

நாங்களா? யார் சார் இந்த 'நாங்கள்' கூட்டம்? இல்லை அந்த கூட்டத்தின் தலைவரா நீங்கள்?

நாத்திக கூட்டத்தை நீங்கள் குறிப்பிட்டிருந்தால் சாரி.. எனக்கு வேறு வேலை இருக்கிறது.. I am not for it..

உங்கள் வாதத்தை வேறு எங்காவது எடுத்து வையுங்கள்..

அதாவது அறிவுஜீவிகளின் மத்தியில்..

நான் ஒரு அறிவிலி..

நேற்று நீங்கள் பரிந்துரைத்த தளத்தில் நான் இட்ட கருத்தின் பிரதிபலிப்புதான் உங்களுடைய இந்த அபிரிமித கோபம் என்று நினைக்கிறேன்.

மன்னியுங்கள் தருமி அண்ணா.. உங்களிடம் இப்போதும் மதிப்பும், அன்பும் வைத்திருக்கிறேன்..

உங்களுடைய கருத்துக்களில் அல்ல..

tbr.joseph said...

"யெகோவாதான் கடவுள்; ஏசு கடவுள் அல்ல" (Jehovites)என்றாலோ, "ஏசுவை நம்புகிறேன்; ஆனால், மரியின் மகனாக சாதாரணமாகத்தான் பிறந்தார்"(protestants * muslims) என்று சொன்னாலோ, இல்லை, 'ஏசுவை நம்புகிறேன்; ஆனால் அவர் சிலுவையில் அறையப்படவில்லை (இஸ்லாமியர் சொல்வது போல) என்றாலோ, இல்லை, " அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததை நம்பவில்லை" (islam) என்று partical faith உள்ளவர் என்றாலும் உங்களின் தீர்ப்பு அதுவாகத்தான் இருக்குமா? //

அடடே.. என்னாச்சி தருமி அண்ணா?

கடந்த ரெண்டு மூனு மணி நேரமா இதையே நினைச்சி, நினைச்சி எழுதறீங்க போலருக்கு?

ஜோ முதல் வரியில என்ன சொல்லியிருக்கார்னு பாருங்க?

என் மனதுக்கு ஒப்புதல் உள்ள //

அதாவது அவருக்கு எது சரின்னு தோனுதோ அதை பின்பற்றுவேன் மற்றதை விட்டுவிடுவேன்..

அதுல எனக்கென்ன வருத்தம்?

இங்க பாருங்க தருமி அண்ணா?

கடவுள் நம்பிக்கை என்பதும் மத நம்பிக்கை என்பதும் மனிதருக்கு மனிதர் வேறுபடும்..

இதுல யாரும் மத்தவங்க கருத்தை எள்ளி நகையாடத் தேவையில்லை என்பது என் தாழ்வான கருத்து..

இதைக் குறித்து நான் மேலும் எழுத தயாராக இல்லை..

Dharumi said...

ஒன்றே ஒன்று: "நேற்று நீங்கள் பரிந்துரைத்த தளத்தில் நான் இட்ட கருத்தின் பிரதிபலிப்புதான் உங்களுடைய இந்த அபிரிமித கோபம் என்று நினைக்கிறேன்."

நம்பினால் நம்புங்கள்.

நீங்கள் பின்னூட்டம் இட்ட பிறகு இதுவரை நான் அந்தத் தளத்திற்குப் போகவில்லை; உங்கள் பின்னூட்டத்தை இந்த நிமிடம் வரைக்கும் பார்க்கவில்லை.

இதோ போய் பார்த்து விடுகிறேன்.

tbr.joseph said...

நம்பினால் நம்புங்கள். //

நீங்க சொல்லி நான் நம்பாம இருப்பேனா?

நான் சொன்னத சீரியசா எடுத்துக்காதீங்க..

tbr.joseph said...

வாங்க அடைக்கல ராசா,

கடவுளை நம்பாதவன் பாவி என்றழைக்க எந்த கடவுள் உரிமை தந்தது. நான் அந்தக் கடவுளை நம்பவில்லை. //

எந்த கடவுள் இப்படி ஒரு உரிமையைத் தரப்போகிறது அதை நீங்கள் நம்பாமல் இருப்பதற்கு?

இதெல்லாம் நம்மைப் போன்றவர்கள் கூறுவதுதானே..

விட்டுத்தள்ளுங்கள்..

என்னங்க குழப்புறேனா! அதுதானே நம்ப வேலையே) பணத்தை நம்புகிறோம் //

நீங்களே இப்படி சொன்னா எப்படி?

இதற்கு தனி மெய்ல் அனுப்பியிருக்கிறேன்.

முத்து(தமிழினி) said...

அது என்ன தளம்? என்ன பின்னூட்டம்? எனக்கும் சொல்லுங்க..நானும் இன்ட்ரெஸ்டட் பார்ட்டிதான்...:))))))

tbr.joseph said...

அது என்ன தளம்? என்ன பின்னூட்டம்? எனக்கும் சொல்லுங்க..//

முத்து.. அது அண்ணா எனக்கு தனி மெய்ல அனுப்புனது.. அத எப்படி இங்க போடறது..

நீங்க அவர்கிட்டவே கேளுங்க..:-(

tbr.joseph said...

பட்டிணத்து ராசா,

மன்னிச்சிருங்க சாமி.. எனக்கு ஒன்னுமே புரியலை..

விளக்கமா எனக்கு ஒரு மெய்ல் அனுப்புங்களேன்.. முடிந்தால்..

முத்து(தமிழினி) said...

தருமி அண்ணா,

சபைல வைங்க உங்க சுட்டிய..அல்லது எனக்கு தனிமயில் அனுப்புங்க...:)))

ramachandranusha said...

ஜோசப் சார், பெருமை என்னைக் கண்டே நான் பட்டுக் கொள்ளவில்லை. :-) என் பிள்ளைகளின் சுயசிந்தனையை குறித்து பதிவில் சொல்லியிருக்கிறேன். மதங்களைக் குறித்து நிறைய விவாதிப்போம். இன்று உலகில் நடக்கும் பல கொடுமைகளுக்கு மதங்களே காரணம் என்னும் பொழுது மதங்கள் தோற்றுதானே விட்டன?

ஒரு ஆண் சொல்லும் கடவுள் மறுப்பு கொள்கைக்கும் குடும்பத்தில் உழலும் பெண் சொல்வதற்கும் வித்தியாசம் அதிகம். கடவுளை நம்பாத பாவி என்று எத்தனை பேச்சுக்கள்! என் கணவர் சில வருடங்களுக்கு முன்பு திருப்பதி பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்கிறேன் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறார். அது தம்பதி சமேதராய் செய்ய வேண்டுமாம். சொன்னதும் இது என்ன அபத்தம் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு இன்றுவரை என் கணவருக்கு இது குறித்து பயங்கர கோபம். பிறகு பல முறை திருப்பதி வருகிறேன் (வந்து தொலைகிறேன்) என்று சொன்னாலும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் நம்பிக்கையுடன் வேண்டுபவர்களை ஒரு நாளும் முட்டாள்தனம் என்றுச் சொல்ல என் மனம் இடம் கொடுக்கவில்லை. இதையே தருமி அவர்களின் பதிவில் சொல்லியிருக்கிறேன்.

tbr.joseph said...

வாங்க உஷா,

மதங்களைப் பற்றி நீங்க எழுதுனத என்னால முழுசுமா ஒத்துக்க முடியலைன்னாலும் ஆனாலும் நீங்க அப்படி நினைக்கறாமாதிரி சில விஷமிகளுடைய, தீவிரவாதிகளுடைய, குறுகிய நோக்குடைய மதபோதகர்களுடைய செயல்கள் இருந்திருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சிலருடைய செயல்கள் அக்கிரமங்களுக்கு காரணமாயிருந்ததென்றால் எத்தனையோ இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய இயக்கங்கள் மக்களுக்கு தன்னலமில்லா சேவை புரிகின்றனவே.. அதை மறந்துவிட்டீர்களா? எதிலும் நல்லதும் இருக்கிறது தீயதும் இருக்கிறது. நான் எழுதியது கடவுளைப் பற்றியும் மத நம்பிக்கையைப் பற்றி மட்டும்தான்..

ஆனால் அதே சமயம் என்னுடைய கருத்துக்கு எல்லோரும் ஒத்துப்போக வேண்டும் என்று நிச்சயம் நான் எதிர்பார்க்கவில்லை..

எதிர்வாதங்கள் நிச்சயம் வரும் நான் எதிர்பார்த்ததுதான்.

முத்து(தமிழினி) said...

உஷா,
//இது என்ன அபத்தம் என்று சொன்ன ஒரு வார்த்தைக்கு இன்றுவரை என் கணவருக்கு இது குறித்து பயங்கர கோபம்//

நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? இது கடுமையான வார்த்தை.என் கட்சிகாரர் மனம் மிகவும் புண்பட்டிருக்கும் யுவர் ஆனர் ( அடி மனசில நானும் ஆணாதிக்கவாதிதான் :)))))))

tbr.joseph said...

என் கட்சிகாரர் மனம் மிகவும் புண்பட்டிருக்கும் யுவர் ஆனர் //

எப்பத்திலருந்து நீங்க வக்கீல் ஆனீங்க முத்து..?

போட்டும் விடுங்க..

ரெண்டு நாளைக்கு முன்னால சந்திரவதனா ஒரு பதிவு போட்டுருந்தாங்களே பாக்கலை?

பெண் வலைப்பதிவாளர்களுக்கு இப்பல்லாம் ஆண்களை சாடுவது ஒரு ஃபாஷனாயிருச்சி.. நம்ம துளசியை தவிர..

இந்த கருத்தும் ஒருவேளை கலகத்த தூண்டுமோ?

Post a Comment