Wednesday, March 15, 2006

இறைவனின் செயல் - நமக்கு வியப்பே..
கடவுளுடைய செயல்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டவை..

நான் என்னுடைய 'என்னுலகம்' பதிவிலிட்ட இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு நிகழ்வுகளுக்கு பாதிரியார் என்ன விளக்கம் அளித்தார் என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்த இடுகையின் நோக்கம் அதுதான்.

பாதிரியார் அளித்த விளக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்..

ஆனால் இறைவனுடைய செயல்கள் மனிதனுக்கு வியப்பே, அது அவனுடைய மூளைக்கு எட்டாத விஷயம் என்ற ரீதியில் அவர் பேசியதில் தவறேதும் இல்லை என்று நினைக்கிறேன்.

அதை விளக்குவதற்கு முன் தான் கேள்விப்பட்ட ஒரு நிகழ்ச்சியையும் அவர் கூறினார்.

இரு நண்பர்கள். ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். இருவரும் இறை பக்தி உள்ளவர்கள். கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அவர்களுடைய பங்கு தேவாலயத்தில் நடைபெறும் மரியன்னயின் நவநாள் பக்தி முயற்சியில் தவறாமல் பங்குகொள்பவர்கள்.

ஒரு வாரம் சனிக்கிழமை. அவர்களுடைய அலுவலகத்திலிருந்து உல்லாசப் பயணம் செல்வதாய் இருந்தது. நண்பர்களுள் ஒருவருக்கு அன்றைய தினம் நடைபெறவிருந்த மரியன்னை பக்தி முயற்சியில் பங்குபெறுவதை விட மனமில்லை. மற்றவருக்கு உல்லாச பயணம் செல்ல வேண்டும்.

அவர் தன் நண்பனைப் பார்த்து, ‘டேய் பக்தி முயற்சிதான் எல்லா வாரமும் நடக்குதே. ஒரு வாரம் வரலைன்னா மரியன்னை ஒன்னும் கோச்சிக்க மாட்டாங்க. வா ஜாலியா டூர் போய்ட்டு வரலாம். அடுத்த வாரம் ரெண்டு தரம் ஜெபம் பண்ணிக்கலாம்.’ என்கிறார்.

நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘நீ போய்ட்டு வாடா. என்னால நவநாள மிஸ் பண்ண முடியாது.’ என்று மறுத்துவிடுகிறார்.

இருவரும் அவரவர் நினைத்தபடியே செய்கின்றனர். உல்லாச பயணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக நவநாளில் பங்கு கொண்டிருந்த நேரத்தில் நண்பருக்கு செய்தி வருகிறது..

‘என்னைக் காப்பாற்றியது மரியன்னைதான்.’ என்று நினைக்கிறார். காயம்பட்டவரோ, ‘தான் நவநாளில் கலந்துக்கொள்ளாமல் டூர் வந்ததினால்தான் தனக்கு இந்த தண்டனை’ என்கிறார்.

பாதிரியார் இதை கூறி முடித்துவிட்டு கூறுகிறார்.

இறைவனின் செயலை அவரவர் கண்ணோட்டதிலிருந்து பார்க்கின்றனர். எது சரி, எது தவறு?

இரக்கத்தின் ஊற்று என வர்ணிக்கப்படுபவர் இறைவன். நமக்காக அவரிடம் பரிந்து பேசுபவர் மரியன்னை என்று நாம் நம்புகிறோம்.

அவ்வாறிருக்க வாரா வாரம் தவறாமல் தன்னுடைய பக்தி முயற்சிகளில் பங்கு பெறும் ஒருவர் ஒரேயொரு வாரம் அதில் கலந்துக்கொள்ளாமல் உல்லாசப் பயணம் சென்று விட்டார் என்பதற்காக அவரைத் தண்டிப்பாரா?

சரி, அப்படியானால் அவருடன் விபத்தில் சிக்குண்டவர்களோ? அவர்கள் என்ன பாவம் செய்திருந்தனர்.. தண்டிக்கப்பட?

ஆம்..

இறைவனின் செயல்களை ஆராய்ந்து அறியும் மனப்பக்குவம், ஆற்றல் நமக்கில்லை..

இறைவனின் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள், ஒரு அர்த்தம் இருக்கிறது. அதன் மூலம் அவர் நமக்கு ஒரு செய்தியைக் கூறுகிறார். அதை புரிந்துக்கொள்ளும் மனப்பக்குவம், மனமுதிர்ச்சி நமக்கு இல்லை என்பதுதான் உண்மை.

நாம் நமக்கு தேவையானவற்றை, சில சமயங்களில் தேவையில்லாதவைகளும் கூட, பெரும்போது அது நம்மால், நம்முடைய திறமையால், கிடைத்தது என்று பெருமிதம் கொள்கிறோம். அந்நேரத்தில் அது எனக்கு இறைவன் அளித்த பரிசு, வரப்பிரசாதம் என்று எண்ணுவதில்லை.. ஏன் சொல்லப்போனால் நம்முடைய சந்தோஷத்தில் இறைவனை, அவருடைய ஆற்றலை மறந்தேபோகிறோம்.

அதையடுத்து, ஒரு சிறு துன்பம் வந்தாலும், ஏன் என்னை கைவிட்டாய் இறைவா.. நான் அன்றாடம் உன்னை தொழுகிறேனே.. கேளுங்கள் கொடுக்கப்படும் என்றீரே இறைவா.. இதோ நான் நாள்தோறும் கேட்டுக்கொண்டே இருந்தேனே.. நான் கேட்டதை கொடுக்கவில்லை என்பதோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டாயே இறைவா.. என்று அங்கலாய்க்கிறோம்..

இவ்வளவு ஏன், ஏசு பிரானே ஜெத்சமெனி தோட்டத்தில் தான் அனுபவிக்கப் போகும் வேதனைகளின் நினைவு எழ 'பிதாவே உமக்கு சித்தமானால் இந்த துன்பக்கலம் என்னை விட்டு அகலக்கடவது..’ என்று பிதாவாகிய கடவுளிடம் மன்றாடினார் என்று வாசிக்கிறோம்.

ஆனால் அவருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம், அவர் தொடர்ந்து, ‘ஆயினும் என் விருப்பப்படியல்ல, உம் சித்தப்படியே ஆகட்டும்.’ என்றதுதான்.

ஆம்..

நாம் விரும்புவது எதுவாயினும் அதை இறைவனின் சித்தப்படியே, விருப்பப்படியே ஆகட்டும்.. என்று இறைச்சித்தத்திற்கே விட்டுவிடுவோம்.

நம் மனித மூளைக்கு எட்டாத விஷயங்களை ஆராய்வது வீணே..

இறைச்சித்தத்திற்கு பணிவோம்.. என்று முடித்தார் பாதிரியார்..

ஆலயத்தை விட்டு வெளியே வந்து வெகு நேரமாகியும் என் படித்த, அறிவார்ந்த(!) மூளை அதை ஏற்க மறுத்து வாதிட்டுக்கொண்டே இருந்தது..

ஆனால் என்  மனதோ..

என்றோ படித்த சங்கீதங்களை நினைத்துக்கொண்டது..

சண்டையிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே..
சண்டையிட என் கைகளுக்குப் பலமளிப்பவர் அவரே..
எனக்கு இரக்கம் காட்டுபவர்..
என் அடைக்கலக்கோட்டை அவரே..
எனக்குப் பாதுகாப்பும் விடுதலையும் அளிப்பவர் அவரே..
என் கேடயமும் புகலிடமும் அவரே..

ஆண்டவரே நீர் மனிதனைப்பற்றிக் கவலைப்பட அவன் யார்?
அவன் ஒரு மூச்சுக்கு ஒப்பானவன்..
அவன் வாழ்நாள் மறைந்துபோகும் நிழலை ஒத்தது..

ஆம் தேவனே..

என் நாசியில் புகுந்து வெளியேறும் காற்றை நம்பி வாழ்பவன் நான்..

என் வாழ்நாள் என் நிழலைப் போன்று சடுதியில் மறையக் கூடியது..

அப்படிப்பட்ட நானா இறை மகிமையை, இறை ஆட்சிசையை, இறைச் செயலை கேள்வி கேட்பது?

சிந்தனைகள் தொடரும்..

8 comments:

tbr.joseph said...

என்னுடைய 'ஏன், ஏன், ஏன்' பதிவை படிக்காதவர்களுக்கு
ஏன்?

டி ராஜ்/ DRaj said...

பாதிரியாரின் உரையும் அதை தொடர்ந்து உங்களின் எண்ணங்களும் சூப்பர் சார். :)

tbr.joseph said...

வாங்க ராஜ்,

உங்களுடைய கருத்துக்கு நன்றி.

Akilan said...

First time I am reading ur blog. Its interesting to see the Tamil Christian Blog.

I had the same feeling what u have.

Hats off! for ur efforts

-Akilan

G.Ragavan said...

சிறப்பாகச் சொல்லியிருக்கின்றீர்கள் ஜோசப் சார்.

கிட்டத்தட்ட இதே போன்ற கருத்தைச் சொல்லும் போது வள்ளுவரும் பட்டும் படாமலும் சொல்கிறார். ஏனென்றால் மனித அறிவு அங்கு முடிந்து விடுகிறது.

செவ்வியான் கேட்டும் அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் நினைக்கப்படும்.

G.Ragavan said...

மாத்திச் சொல்லீட்டேன்...

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப்படும் -னு நினைக்கிறேன்.

tbr.joseph said...

நன்றி அகிலன்..

அடிக்கடி வாங்க..

tbr.joseph said...

வாங்க ராகவன்,

வள்ளுவர நம்முடைய வாழ்க்கையின் எந்த பகுதியைப் பற்றித்தான் கூறாமல் விட்டிருக்கிறார்.

அதனால்தானே அவரைத் தெய்வப் புலவர் என்கிறோம்.

Post a Comment