Sunday, March 05, 2006

சிலுவைப் பாதை - அறிமுகம்


விபூதிப் புதன் (Ash Wednesday) துவங்கி புனித வெள்ளி (Good Friday) வரை வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் யேசு கிறிஸ்து யூதர்களால் பிலாத்துவிடம் (Pilate) கையளிக்கப்பட்டு, சிலுவை சுமத்தப்பட்டு, கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானிக்கும் வழிபாடு உலகெங்கிலுமுள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களிலும் நடத்தப்படுகின்றது.

யேசு கிறிஸ்துவின் பாடுகளை (Passion) பதினைந்து ஸ்தலங்களாக (Stations) பிரித்து சிலுவைப் பாதை என்று அழைக்கப்படுகிறது.

இவ்வழிபாட்டின் தலைவரான குருவும் மூன்று சிஷ்யப் பிள்ளைகளும் (மாணவப் பருவத்திலிருக்கும் சிறுவர்கள்) ஒவ்வொரு ஸ்தலத்திற்கு முன்பும் சென்று நிற்க குழுமியிருக்கும் விசுவாசிகள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று குரு சொல்லும் பிரார்த்தனைகளுக்கு மறுமொழி கூறுவர்.
ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையும், குருவின் சிறு பிரசங்கமும் (Speech) இறுதியில் இரு வரி பாடலும் இருக்கும்.
இனி வரும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் (மார்ச் 10 முதல் ஏப்ரல் 7 வரை) இச் சிலுவைப் பாதையின் ஸ்தலங்களைப் பற்றி சுருக்கமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இன்று இப்பாதையின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்.
யேசு கிறிஸ்து இப்பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய தினம் இரவில் தன்னுடைய பன்னிரு சீடர்களுள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத் (Judas Iscariot – இவருக்கு Judas the Traitor என்ற பட்டப் பெயரும் இருந்தது (St.John 18:2)) என்பவரால் முத்தமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டார்.

தான் தன்னுடைய சீடர்களுள் ஒருவராலேயே காட்டிக் கொடுக்கப்படுவேன் என்பதை யேசு கிறிஸ்து இந்நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே தீர்க்கதரிசனமாக தன்னுடைய சீடர்களுக்கு அறிவித்தார் என்று நான்கு சுவிசேஷகர்களுமே தங்களுடைய சுவிசேஷங்களில் (Gospels) கூறியுள்ளனர் (St.John 13:21-30 – St.Mathew:26:20-25; St.Mark 14:17-21 & St.Luke:22:21-23).

யேசு கிறிஸ்து அவர் வாழ்ந்த காலத்தில் வெளிப்படையாகவே யெருசலேம் தேவாலயங்களிலும், செபக்கூடங்களிலும் போதித்திருந்த சூழலில் அவரை ஏன் வேறொருவர் காட்டிக் கொடுக்க வேண்டும் என்றம் எண்ணம் எழலாம்.
யூத பொதுமக்கள் யேசுவின் போதனைகளை நம்பி அவரை விசுவசிக்க ஆரம்பித்தனர். ஆகவே அதுவரை தாங்கள் வகுத்திருந்த சட்டதிட்டங்களை அனுசரித்து தாங்கள் கூறியதற்கேற்ப வாழ்க்கை நடந்துக்கொண்டிருந்த யூத மக்கள் இனி எங்கே யேசுவின் பின்னால் சென்றுவிடுவார்களோ என்று அஞ்சிய பரிசேயர், சதுசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள் யேசுவை அவர் போதித்துக்கொண்டிருந்த சமயங்களில் நேரடியாக கைது செய்து விசாரனைக்குட்படுத்த அஞ்சினார்கள்.

ஆகவே அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்காத சமயத்தில் யேசுவின் சீடர்களுள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்தே முன்வந்து அவரை நான் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன் எனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டபோது அவர்கள் மகிழ்ந்து முப்பது வெள்ளிக் காசுகளை அவனுக்கு பரிசாகக் கொடுப்பதாக வாக்களித்தார்கள்.

ஆகவேதான் பொதுமக்கள் யாரும் இல்லாத இரவு நேரத்தில் யேசுவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று யூதாசுக்குக் கட்டளையிட்டிருக்கலாம்.
யேசு காட்டிக்கொடுக்கப்பட்டதும் யூதாசுடன் சென்ற போர் வீரர்கள் அவரைக் கைது செய்து அப்போது தலமைக் குருவாகவிருந்த
அன்னாஸ் மற்றும் கைப்பாஸ் என்பவர்களிடம் விசாரனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் யேசுவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாததால் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த
பிலாத்துவிடம் கையளித்து அவரைக்கொண்டே யேசுவுக்கு மரண தண்டனையை அளிக்கும் எண்ணத்துடன் அவரிடம் யேசுவை அழைத்துச் சென்றனர்.

இதிலிருந்துதான் யேசுவின் சிலுவைப் பாதைத் துவங்குகிறது..

முதல் மூன்று ஸ்தலங்களை வரும் வெள்ளிக்கிழமை பார்ப்போம்.
***

2 comments:

G.Ragavan said...

சார்...நல்ல தொடக்கம். பல தெரியாத விசயங்களைத் தெரிந்து கொள்ள இந்தப் பகுதி வகை செய்யும்.

யூதாஸ் நிலை என்னவாயிற்று? வெறும் முப்பது காசுகளுக்காகவா காட்டிக் கொடுத்தான்? வேறு எதுவும் எண்ணங்கள் அவனுக்கு இருந்ததா? அச்சத்தால் காட்டிக் கொடுத்தானா?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

யூதாசைப் பற்றி பலவிதமான கருத்துக்கள், கணிப்புகள் உள்ளன.
அவன் இயல்பாகவே பேராசைக் கொண்டவன், கள்வன் என்றெல்லாம். அவனைப் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இங்கே செல்லுங்கள்.
யூதாஸ்

Post a Comment