Thursday, March 02, 2006

தவக்கால சிந்தனைகள்


இன்று (1/3/2006) விபூதிப் புதன்!

‘மண்ணிலிருந்து வந்த நீ மண்ணுக்கே போவாய்’ என்று கூறி குருவானவர் (பாதிரியார்) வழிபாட்டில் கலந்துக்கொண்ட ஒவ்வொரு கத்தோலிக்க விசுவாசியினுடைய நெற்றியிலும் சாம்பலைப் பூசி வர இருக்கும் நாற்பது தவ நாட்களைத் துவக்கி வைக்கும் நாள்.

விபூதிப் புனத்தன்று குருவானவர் விசுவாசிகளின் நெற்றியில் சிலுவைக் குறியிட்டு பூசப்படும் சாம்பல் கடந்த வருடத்தில் குருத்து ஞாயிறு (Palm Sunday) அன்று உபயோகப்படுத்த தென்னங்கீற்றுகளை எரித்து உண்டாக்கப்பட்டதாக இருக்கும். இது காலங்காலமாக கத்தோலிக்கத் திருச்சபைக் கடைபிடித்துவரும் சடங்காகும்.

இதை எதை குறிக்கிறது?

பழைய வேதாகம காலக்கட்டத்தில் மன்னர்கள் வழிதவறி கடவுளுக்கெதிராக பாவம் செய்தபோதெல்லாம் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் அவர்களை எச்சரித்து மனந்திரும்புங்கள் என்று அறிவுறுத்தினார். பாவம் செய்த மன்னர்கள் அரச உடைகளைக் களைந்து சாமான்யராய் சாக்கால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து, தரையில் சாம்பலைப் பரப்பி அதன் மேல் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட நாட்கள் உண்ணா நோன்பிருந்து கடவுளின் மன்னிப்பைக் கோருவது வழக்கமாயிருந்தது..

விபூதிப் புதன் துவங்கி யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருநாள்வரை நாற்பது நாட்கள் தவமுயற்சிகளில் ஈடுபட்டு இறைவனின்பால் திரும்புங்கள் என்பதை அறிவுறுத்துகிறது இச்சடங்கு.

யேசு கிறிஸ்துவின் போதகப் பணி துவங்கப்படவிருந்த காலத்திற்கு சற்று முன்பு ஸ்நாக அருளப்பர் (St.John the Baptist) பாலைவனங்களில் தோன்றி இஸ்ராயேல் மக்களை பாவமன்னிப்படைய மனந்திரும்புங்கள் என்று யோர்தான் (Jordan) ஆற்றை அடுத்த நாடுகளிலெல்லாம் போதனை செய்தார்.

இதைப்பற்றி இசையாஸ் என்னும் தீர்க்கதரிசி  கூறியதாவது:

“பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது
ஆண்டவர் வழியை யத்தப்படுத்துங்கள்
அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்
பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக
மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக
கோணலானவை நேராகவும்
கருடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக
மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர்.” (லூக்காஸ் 3:4-6)

இஸ்லாம் சகோதரர்கள் ஈத் பெருநாளுக்கு முன்வரும் நாற்பது நாட்களில் உண்ணா நோன்பிருப்பதுபோல் அத்தனைக் கடினமான நோண்பைக் கத்தோலிக்கத் திருச்சபை தன் விசுவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..

முடிந்தவரை சுத்தபோசனத்தை (மரக்கறி உணவு) கடைபிடித்தல், தேவையற்ற பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்த்தல், முடிந்தால் ஒருசந்தி இருத்தல் அதாவது, குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாள், யேசு மரித்த வெள்ளிக்கிழமைகளில், காலை உணவைத் தவிர்த்தல் போன்ற சிறு சிறு தவ முயற்சிகளைக் கடைப்பிடியுங்கள் என்று அழைக்கிறது.

அத்துடன் நின்றுவிடாமல் இந்நற்செயல்கள் மூலம் மிச்சமாகும் பணத்தை சேமித்து தவக்கால இறுதியில் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும் தன் விசுவாசிகளைத் திருச்சபை அழைக்கிறது..

****

12 comments:

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சுருக்கமா,அழகா சொல்லியிருக்கீங்க

tbr.joseph said...

நன்றி ஜோ,

அங்க எப்படி? பக்கத்துல சர்ச் இருக்கா? கே.எல். ல என் மகள் வசிக்கற இடத்துலருக்கற சர்ச்ல வாரம் ஒரு தமிழ் பூசையே இருக்குமாம்.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
சிங்கைல சர்ச்-க்கு பஞ்சம் இல்ல.தமிழ்-ல வேணும்னா ஒரு சர்ச்-ல எப்பவுமே தமிழ் ,மற்றபடி இன்னும் 4 சர்ச்-ல மாதத்துல ஒரு வாரம் சுழற்சி முறையில

tbr.joseph said...

அப்படியா ஜோ. கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு. அப்படீன்னா அவ்வளவு தமிழர்கள் சிங்கையில இருக்காங்கன்னு அர்த்தம்.

அங்கெல்லாம் ஒரு ட்ரிப் வரணும்னு ஆசைதான். ITல வந்து மாட்டிக்கிட்டு சேர்ந்தாப்ல ஒரு வாரம் லீவ் எடுக்கறதுங்கறது வெறும் ஒரு கனவாவே போச்சி.

ஜோ / Joe said...

//அப்படீன்னா அவ்வளவு தமிழர்கள் சிங்கையில இருக்காங்கன்னு அர்த்தம்.//
என்ன சார் இப்படி கேட்டுடீங்க .தமிழ் சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரியாதா? சிங்கையில் இந்திய வம்சாவழியினரின் சதவீதம் 9 என நினைக்கிறேன் .அதில் மிகப்பெரும்பான்மை தமிழர்கள் .இது போக தற்காலிகமாக இங்கிருந்து பணியாற்றும் தமிழர்களும் மிக அதிகம்.

ஜோ / Joe said...

//அங்கெல்லாம் ஒரு ட்ரிப் வரணும்னு ஆசைதான்.//
வாங்க சார்..நம்ம வீடு இருக்கு தங்குறதுக்கு.

tbr.joseph said...

வாங்க சார்..நம்ம வீடு இருக்கு தங்குறதுக்கு. //

அடடா இப்படி அருமையான தம்பிங்க இருக்கும்போது நமக்கென்ன கவலை..

தமிழ் மணம் ஏற்படுத்திக் கொடுத்த உறவுகள் இது. த.ம.வுக்கு தான் முதல்ல நன்றி சொல்லணும்.

tbr.joseph said...

சிங்கப்பூரின் 4 அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்று என்பது உங்களுக்கு தெரியாதா? //

நமக்கு உலகறிவு கொஞ்சம் கம்மி ஜோ. அரசல்புரசலா கேட்டதுதான். என் மருமகன் வேலை விஷயமாக என் மகளுடன் மாசம் ஒரு முறை சிங்கை வந்து செல்வதால் அவள் கூறித்தான் சிங்கையில் தமிழர்களின் ஆதிக்கத்தைப்பற்றி அறிய முடிந்தது.

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
நான் என்ன நினைக்குறேன்னா ,இவ்வளவு நேரம் நாம அன்பை பறிமாறிகிட்டோமே அதுதான் நல்லதொரு 'தவக்கால சிந்தனை'

tbr.joseph said...

இவ்வளவு நேரம் நாம அன்பை பறிமாறிகிட்டோமே அதுதான் நல்லதொரு 'தவக்கால சிந்தனை'//


ரொம்ப அழகா சொல்லிட்டீங்க ஜோ.

G.Ragavan said...

ஜோசப் சார். சிறிலும் இன்றைக்கு இது பற்றிய பதிவு போட்டிருந்தார். நீங்களும் போட்டிருக்கின்றீர்கள். இது ஒவ்வொரு வருடமும் வரக்கூடியதா? இல்லை...குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடியதா?

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சிறிலும் இன்றைக்கு இது பற்றிய பதிவு போட்டிருந்தார்.//

அப்படியா? நான் இன்னும் பார்க்கவில்லை.

இது ஒவ்வொரு வருடமும் வரக்கூடியதா? இல்லை...குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை வரக்கூடியதா?//

இது எல்லா வருடமும் வருகிறது. சாதாரணமாக பிப்ரவரி இரண்டு அல்லது மூன்றாவது வாரத்தில் வரும்.. இவ்வருடம் சற்று தள்ளி மார்ச் முதல் புதன் அன்று வந்திருக்கிறது..

Post a Comment