Tuesday, March 07, 2006

தவக்கால சிந்தனைகள் 4தவக்காலத்தில் நம்மில் (கிறிஸ்துவர்கள்) பெரும்பாலோனோர் ஒரு சந்தி (உண்ணா நோன்பு) இருப்பது வழக்கம்.

திருச்சபை நியமத்தின்படி பதினெட்டு வயதுக்கு மேற்பட்டு அறுபது வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் தவக்காலத்தில் வாரத்தில் ஒரு நாளாவது சுத்தபோசனம் மற்றும் ஒரு சந்தி இருக்க வேண்டும்.

இத்தகைய உண்ணா நோன்பு இருப்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

பழைய வேதாகமத்தில் இறைவன் மோயீசனை நோக்கி தனக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் இடையில் ஏற்படவிருக்கும் உடன்படிக்கை வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளும்படி பணித்தார்.

அப்போது மோயீசன் இறைவன் குறிப்பிட்ட இடத்திலேயே நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் அவரோடு தங்கி உண்ணாமலும் குடியாமலும் இருக்க இறைவனும் உடன்படிக்கையின் பத்து வாக்கியங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார் என்று கூறப்பட்டுள்ளது (யாத்திராகமம் – Exodus 34:27-28).

யேசு கிறிஸ்துவும் தன்னுடைய பொது வாழ்வைத் துவக்குவதற்கு முன் பாலைவனத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும் உண்ணா நோன்பிருந்தார் என்று புதிய வேதாகமம் கூறுகிறது (மத்தேயு 4:2).

அவர் நாற்பது நாட்களின் முடிவில் பசியுற்றிருக்கும்போது சோதிப்பவன் (சாத்தான் என்று கொள்ளவேண்டும்) அவரை அணுகி ‘நீர் கடவுளின் மகனானால் இந்த கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்’ என்றான்.

அதற்கு யேசு மறுமொழியாக, ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று எழுதியிருக்கிறதே’ என்றார்.

தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் நோன்பிருப்பதன் பின்புலம் இதுதான். உயிர்வாழ இறைவனின் வாக்கு எத்தனை முக்கியம் என்பதை நமக்கு நாமே நிரூபணம் செய்துக்கொள்ளவுமே நாம் நோன்பு இருத்தல் அவசியம்.

ஆனால் நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னை சுற்றியுள்ளவர் அனைவருக்கும் அறிக்கையிட வேண்டும் என்பதில்லை..

இதைக் குறித்து சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவையான தகவலைத் தருகிறார்கள்:

யூதர்களுள் பரிசேயர்கள் (Pharisees) எனப்படுவோர் வாரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாட்களில்தான் நோன்பிருப்பார்களாம்.

ஏனென்று கேட்டால் மோயீசன் இறைவன் கட்டளைகளைப் பெற சீனாய் மலைமேல் ஒரு வாரத்தின் ஐந்தாம் நாள் ஏறிச் சென்று வேறொரு வாரத்தின் இரண்டாம் நாள்தான் திரும்பி வந்தார். அதன் நினைவாகவே நாங்கள் இங்ஙனம் நோன்பிருக்கிறோம் என்பார்களாம்!

ஆனால் ராய்ச்சியாளர்களின் கூற்றுபடி ஜெருசலேமில் ஒவ்வொரு வாரத்தின் இரண்டாம் மற்றும் ஐந்தாம் நாளில் சந்தை கூடுவது வழக்கம். அந்நாட்களில் ஜெருசலேமை சுற்றியிருந்த நாட்டுப்புறங்களிலிருந்து நகருக்கு வந்து பெருந்திரளான மக்கள் கூடுவர்.

அவர்களைக் கவரும் விதமாக பரிசேயர்கள் தங்களுடைய தலைமுடியை ஒழுங்குபடுத்தாமல், சோர்ந்த முகத்துடன் அலைந்து தாங்கள் நோன்பிருப்பதை எல்லோருக்கும் காட்டிக்கொள்வார்கள்!

நம்மில் பலரும் இவர்களைப் போல்தான்..

நம்முடைய இச்செயலை கண்டித்துத்தான் யேசுவும் இவ்வாறு கூறுகிறார்:

‘நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளி வேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர்... நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு. அப்போது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள உன் தந்தைக்கு (இறைவனுக்கு) மட்டும் தெரியும். அவரும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார். மத்தேயு:6:16).

உண்ணா நோன்பு என்பது நம்மை நாமே வறுத்திக்கொள்வது என்பது ஒருபுறம். ஆனால் அது நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப் படுத்துவதாக அமைந்தால் நல்லது..

சிந்திப்போம்..

சிந்தனைகள் தொடரும்
0 comments:

Post a Comment