Friday, March 24, 2006

சிலுவைப் பாதை 3

ஏழாம் ஸ்தலம்: யேசு இரண்டாம் முறையாக தரையில் விழுகிறார்.சிலுவையை சுமக்க சீரேனே ஊரைச் சார்ந்த சீமோனை படைவீரர்கள் பணித்தனரே பிறகு எப்படி யேசு சிலுவையின் பாரத்தால் மீண்டும் விழுந்தார் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சரித்திர ஆய்வாளர்களிடமிருந்து இதற்கு சரியான பதில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இதைப் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ள சில படங்களைப் பார்த்தால் சிலுவையின் தலைபாகம் யேசுவின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கின்றது. சீரேனே சீமோன் சிலுவையின் கீழ் புறத்தை சுமந்து செல்கிறார். அவருடைய செயல் யேசுவின் பாரத்தை சற்றே குறைக்க மட்டுமே உதவியிருக்கிறது.

சிந்தனை:

நான் சிறுவனயாருந்த சமயத்தில் பலமுறை தடுக்கி விழுந்தாலும் உடனே எழுந்துவிட்டிருக்கிறேன். ஆனால் அது வெறும் உடல் சம்பந்தப்பட்ட விழுதல்களாயிருந்தன.. அச்சமயங்களில் என் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளும், காயங்களும் வெகு சீக்கிரமே ஆறிப்போயிருக்கின்றன.
ஆனால் இப்போதோ? என்னுடைய ஒவ்வொரு வீழ்ச்சியும் என் உள்ளத்திலும் இருக்கும் தீய எண்ணங்கள், அகங்காரம், தற்பெருமை, சுயநலம், பொறாமை போன்றவைகளால்தான் என்று உணர்கிறேன். இத்தீயச் செயல்களிலிருந்து நான் எப்போது முற்றிலுமாக விடுபடுகிறேனோ அப்போதுதான் என்னுடைய உண்மையான எழுதலும் இருக்கும் என்பதத நான் புரிந்துக்கொண்டிருக்கிறேனா? இவைகளிலிருந்து விடுபட்டு மீண்டும் எழுந்து நிற்க எனக்கு வலிமைதாரும் இறைவா, வலிமை தாரும்..

எட்டாம் ஸ்தலம்: யேசு யெருசலேம் மகளிரைச் சந்திக்கிறார்.யேசு சிலுவையில் அறையப்பட அழைத்துச் செல்வதைப் பார்த்த ஜெருசலேம் நகரைச் சார்ந்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளுடன் அழுதுக்கொண்டே அவரைப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். அவர்களுள் ஒருவராயிருந்த வெரோனிக்காளின் துணிச்சலான செயல் அவர்களுடைய மனதுக்கு சிறிது ஆறுதளையளித்திருக்கலாம். ஆனாலும் அவருக்கு பின்னால் அழுதவாறு தொடர்ந்து செல்கின்றனர். அவர்களுடைய அழுகுரல் யேசுவின் கனிந்த மனத்தை உருக்குகிறது. தன்னுடைய வேதனையையும் பொருட்படுத்தாமல் நின்று அவர்களைத் திரும்பிப் பார்க்கிறார். நீங்கள் ஏன் எனக்காக அழுகிறீர்கள்.. பாவத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உங்களுக்காகவும், உங்களுடைய கணவர்களுக்காகவும்.. துன்புறும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று கூறுகிறார்.

சிந்தனை: நான் சிறுவனாய் இருந்தபோது நான் அழுததெல்லாம் எனக்காக, என்னுடைய தேவைகளுக்காக. அப்போதெல்லாம் என்னுடைய அழுகுரலைக் கேட்டதுமே ஓடிவந்து என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய, எனக்கு றுதலளிக்க என் தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என எத்தனையோ பேர் இருந்தனர்.

இப்போதும் என்னுடைய தேவைகளுக்காக, நான் என்னுடைய முயற்சிகளில் தோல்வியடையும் சமயங்களில் மட்டும்தானே அழுகிறேன். என்னுடைய தோல்விகளும், துன்பங்களும் மட்டும்தானே எனக்கு பெரிதாய் தெரிகின்றன. என்னைச் சுற்றியுள்ள என்னுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் ஓடிவந்து என்னை தேற்றவேண்டும், என்னுடைய தேவைகளை உடனே பூர்த்தி செய்துவிடவேண்டும் என்றுதானே நினைக்கிறேனே. ஆனால் நான் மற்றவர்களுடைய தேவைகளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறேனா. அவர்களுக்கு றுதலளிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேனா..
என்னை மட்டுமே நினைத்துக்கொண்டிராமல் என்னை சுற்றியுள்ள மற்றவர்களையும் நினைத்து அவர்களுடைய வேதனையில் பங்குகொள்ளும் மனதை எனக்குத் தாரும் இறைவா, தாரும்.

ஒன்பதாம் ஸ்தலம்: யேசு மூன்றாம் முறையும் தரையில் விழுகிறார்.இந்த படத்தைப் பார்த்தால் ஏன் யேசு மீண்டும், மீண்டும் விழுந்தார் என்பது புரிகிறதல்லவா? சிலுவையின் தலைபாகம் யேசுவின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருந்தது. சீமோன் சிலுவையின் அடிபாகத்தை பிடித்து அவருடைய சுமையை குறைக்க மட்டுமே உதவியிருக்கிறார். உடல் முழுவதும் ஏற்பட்டிருந்த காயங்களால் உடல் சோர்ந்து போயிருந்த யேசு மூன்றாம் முறையாக கீழே விழுந்ததன் மூலம் தானும் ஒரு சராசரி மனிதந்தான் என்று எண்பிக்கிறார்.

சிந்தனை: யேசுவின் விழுதல்கள் எனக்கு கூறுவது என்ன? எந்தவொரு சராசரி மனிதனும் ஆசாபாசங்களுக்கு உட்பட்டு பாவம் செய்வது இயற்கை. என்னுடைய வெற்றியில் நான் ஆணவம் கொள்வதும், பிறருடைய வெற்றியில் பொறாமைகொள்வதும், என்னுடைய தோல்வியில் பிறரை நிந்திப்பதும் பிறருடைய தோல்வியில் சந்தோஷம்கொள்வதும் மனித இயற்கையே.. ஆனால் அதிலிருந்து விடுபட நான் முயற்சி செய்கிறேனா. அல்லது அது ஒரு மனித பலவீனம் என்று எனக்கு நானே நியாயம் கற்பிக்கிறேனா?

சிந்திப்போம்..

அடுத்த மூன்று ஸ்தலங்கள் அடுத்த வாரத்தில்

0 comments:

Post a Comment