Friday, March 17, 2006

சிலுவைப் பாதை 2

நான்காம் ஸ்தலம்: யேசு தன் தாயை சந்திக்கிறார்.

யேசு யூத வீரர்களால் கைது செய்யப்பட்டவுடனே அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டு சிதறியோடினர். சீடர்களுடைய தலைவராகக் கருதப்பட்ட சீமோன் இராயப்பர் (St.Peter) மட்டும் அவரை மறைவாகத் தொடர்ந்து சென்றாலும் 'டேய் நீயும் அவர்களுடைய சீடர்களுள் ஒருவந்தானே?' என்று சில படை வீரர்களால் கேட்கப்பட்டதும் 'இல்லவே இல்லை நீங்கள் கூறும் ஆளை எனக்கு தெரியவே தெரியாது' என்று மூன்றுமுறை மறுத்துவிட்டு ஓடிவிடுகிறார்.

யேசுவின் அன்னை இச்சமயத்தில் எங்கிருந்தார் என்பதை விவிலிய சிரியர்கள் எவரும் எழுதவில்லை. ஆனாலும் அவர் சிலுவையைச் சுமந்துக்கொண்டு கல்வாரி என்னும் மலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தன் மகனைச் சந்தித்தார் என்று கூறியுள்ளனர்..

சிந்தனை: சோதனை, தோல்வி, இழப்பு.. இவை யாவும் நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள். இவை நம்மைத் தாக்கும்போது நாம் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நமக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் வரமாட்டார்களா என்று ஏங்குகிறோம். நம்முடைய வெற்றியில் பங்குகொள்ள போட்டி போட்டுக்கொண்டு வரும் நம்மை சுற்றியுள்ளோர் நம்முடை வேதனை நேரத்தில் ஏனோ நம்மை உதாசீனப்படுத்துகின்றனர்..நம் சொந்த தாயைத் தவிர.. எந்த ஒரு தாயும் வேதனைப் படும் தன் மக்களை விட்டு அகலுவதே இல்லை. அன்று, யேசுவுக்கும் அப்படித்தான் நேர்ந்தது..

என் தாயும், தந்தையுமான இறைவா நான் துன்பத்தில் வீழும்போது உம்மை நோக்கி வர எனக்கு அனுமதி தாரும்.. உம்மை விட்டால் எனக்கு வேறு யார் துணை இறைவா?

ஐந்தாம் ஸ்தலம்: சீரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் யேசுவின் சிலுவையை சுமக்க உதவி செய்கிறார்.

யார் இந்த சீமோன்?

சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த சீமோன் ஜெருசலேம் நகரத்தை சேராதவர்.. அவருடைய சொந்த ஊரான சீரேனே என்ற நகரம் இப்போதைய லிபியாவின் ஒரு பகுதியென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அவர் ஒரு கறுப்பு நிற யூதர் என்ற ஹேஷ்யமும் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அவருக்கும் யேசுவுக்கும் அதுவரை எந்த சம்பந்தமும் இருக்கவில்லை.. வழியில் தன் போக்கில் சென்றுகொண்டிருந்தவர் யேசு சிலுவை சுமந்துக்கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து நின்று என்ன நடக்கிறதென எட்டிப் பார்த்திருக்கலாம். அவருடைய திடகாத்திரமான தோற்றம் ஒருவேளை யேசுவின் பின்னே சென்றுக் கொண்டிருந்த வீரர்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் ஒன்று. யேசுவின் மீதிருந்த கருணையால் அவருடைய சிலுவையை சீமோன் மீது சுமத்தியிருக்க மாட்டார்கள். எங்கே அவர் கல்வாரி மலைக்கு போகின்ற பாதையிலேயே மரித்துவிடுவாரோ அவரை சிலுவையில் அறைந்து கொல்லும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் யூதர்கள் அவரைப் பிடித்து கட்டாயப்படுத்தி யேசுவின் சிலுவையை அவர் சுமந்துவர செய்திருப்பார்கள்..

காரணம் எதுவாயினும் சீமோனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு இன்றும் அவருடைய பெயர் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் மத்தியில் பேசப்படுகிறதென்பது உண்மை!

சிந்தனை: என்னை சுற்றிலும் உள்ள எத்தனையோ பேர் வேதனைக்குள்ளாகி சிரமப்படுகிறார்கள்.. நான் எப்போதாவது மனமுவந்து அவர்களுக்கு உதவ முயன்றிருக்கிறேனா? எனக்கென்ன வந்தது என்னுடைய வேதனைகளை சுமக்கவே எனக்கு நேரமில்லையே மற்றவர் சுமைகளை நான் எங்கே சுமப்பது என்றுதானே என் பாதையில் நான் சென்றிருக்கிறேன்..

இனியாவது என்னை மாற்றுமே இறைவா, மாற்றுமே..

ஆறாம் ஸ்தலம்: யேசுவின் முகத்தை வெரோனிக்கா துடைக்கிறார்


யார் இந்த வெரோனிக்கா?
யேசுவின் சிலுவையை சுமக்க உதவிய சீமோனைப் போலவே வெரோனிக்காவின் இந்த சிறிய செயல் அவளையும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சிலுவைப்பாதை நேரத்தில் நினைவு கூர்கிறார்கள் என்றால் மிகையாகாது.

சிந்தனை: யேசு களைப்பாய் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்ந்து அவருக்கு முகம் கழுவ தண்ணீரும் துடைக்க ஒரு துவாலையையும் நீட்டிய வெரோனிக்காளைப் போல நானும் என் குடும்பத்தாரும், ஏன், என்னுடைய நண்பர்களும் கூட, வேதனையில் களைப்புற்று, சோர்வடைந்து இருக்கும் நேரத்தில் அவர்கள் கேட்காமலே நான் அவர்களுக்கு உதவி செய்ய, ஆறுதல் அளிக்க முனைந்திருக்கிறேனா? என் வேதனையில் மற்றவர் பங்குக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நான் அவர்கள் படும் வேதனையைக் கண்டும் காணாததுபோல் இருந்திருக்கிறேனா?

சிந்திப்போம்.. செயலாற்றுவோம்.. அதற்குத் தேவையான மனதைத் தாரும் இறைவா என்று வேண்டுவோம்..

அடுத்த மூன்று ஸ்தலங்களை வரும் வெள்ளியன்று பார்ப்போம்..

சிலுவைப் பாதை தொடரும்..

0 comments:

Post a Comment