Friday, March 10, 2006

சிலுவைப் பாதை 1

அவர்கள் யேசுவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாததால் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த கையளித்து அவரைக்கொண்டே யேசுவுக்கு மரண தண்டனைப் பெற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அவரிடம் கொண்டு சென்றனர்.

இதிலிருந்துதான் யேசுவின் சிலுவைப் பாதைத் துவங்குகிறது..

முதலாம் ஸ்தலம் (First Station)

யேசு பிலாத்துவிடம் கையளிக்கப்படுகிறார்.சரித்திர ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த பிலாத்து (Potinus Pliate) ஒரு நியாயமான மனிதன். தான் செய்வது எதுவும் சரியாகத்தான் இருக்க வேண்டும் அவன் நினைத்திருந்ததால் யூதர்கள் யேசுவைப் பொறாமையால்தான் தன்னிடம் கையளித்திருக்கிறார்கள் என்று அவரிடம் பேசிய சில நொடிகளிலேயே புரிந்துக்கொண்டான். ஆகவே அவரை எப்படியாவது விடுவித்து விடுவதிலேயே குறியாயிருந்தான்.

ஆனால் அவனுடைய நேர்மையையும் கண்டிப்புமிக்க ஆளுமையையும் விரும்பாத யூதர்கள் அவனையும் அவனை ஆளுநராக நியமித்த ரோமையர்களையும் அடியோடு வெறுத்தனர்.

ஆகவேதான் அவன் யேசுவுக்கு சிறு தண்டனையளித்து விடுதலை செய்வேன் என்றதும் யேசு தன்னை ரோமை பேரரசர் சீசருக்கு இணையாகக் கூறிக்கொள்கிறார் எனவும் பொய்யாய் ஒரு குற்றச்சாட்டையும் அவர் மேல் சுமத்தி.. நீர் அவரை விடுதலை செய்தால் நீர் சீசருக்கு எதிரானவர் என்று பொருள்கொள்வோம் என்று பிலாத்துவையே மிரட்டி பணியவைத்தனர்.

அவர்களுடைய மிரட்டலுக்கு பணிவதைத் தவிர வேறுவழியறியாத பிலாத்து இப் புனிதரின் ரத்தத்தில் எனக்கு பங்கு இல்லை எனக் கூறி தன் கைகளை கழுவி அவரை யூதர்களுடைய விருப்பத்திற்கேற்ப சிலுவையில் அறைய அவர்களிடமே கையளித்தான்.

சிந்தனை: அன்று யேசு தன்னுடைய சீடர்களாலேயே கைவிடப்பட்டு ஒரு குற்றவாளியாய் நிறுத்தப்பட்டதைப் போலவே நாமும் நம் வாழ்வில் பலமுறை உணர்கிறோம். நாம், நண்பர்கள் என்று நினைத்திருந்த சிலராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு செய்யாத தவற்றுக்கு குற்றவாளியாக்கப்பட்டு அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு அல்லவா?

அப்போதெல்லாம் எங்களுக்கெதிராய் திரும்பியவர்மேல் விரோதம் கொள்ளாத நல்ல குணத்தை எங்களுக்கு தர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

இரண்டாம் ஸ்தலம்: யேசுவின் மேல் சிலுவையை சுமத்துகின்றனர்.சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம் என்று யூதர்களால் கருதப்பட்டு வந்தது. யூதர்களுடைய சடங்குகளின்படி மரண தண்டனை என்பது கல்லெறிந்து கொல்வதுதான். ஆனால் மரண தண்டனைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட யேசுவை அத்தகையச் சாவுக்கு கையளிக்க அவர்கள் விரும்பவில்லை. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவரை சிலுவையில் அறைந்து கொல்ல தீர்மானித்தனர்.

சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி யேசுவின் மேல் சுமத்தப்பட்ட சிலுவை 4.80 மீட்டர் நீளமும் 2.30 மீட்டர் அகலமும் இருந்ததாம்! அத்தகைய சிலுவை எத்தனை கனம் இருந்திருக்கும்? கசையடிப் பட்டு உடல் நலிந்திருக்கும் வேளையில் அச்சிலுவை அவருக்கு எத்தனை பாரமாய் இருந்திருக்கும்?

சிந்தனை: நாமும் நம்முடைய வாழ்விலே எத்தனையோ சுமைகளை, சில சமயங்களில் நமக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத, சுமக்க வேண்டிய தருணங்களைச் சந்தித்திருக்கிறோம். அப்போதெல்லாம் நமக்கு தோன்றியதென்ன? எப்படி இச்சுமையை நான் சுமக்கப் போகிறேன்? ஏன் எனக்கு மட்டும் இந்த தலையெழுத்து? எனக்கு உதவ யாருமே இல்லையே.. என்ற அங்கலாய்ப்பு தானே?

இனியாவது, இத்தகைய சுமைகள் நம்மேல் சுமத்தப்படும்போது இறைவனை துணைக்கு அழைப்போம். நம் சுமைகளை நம்மோடு சேர்ந்து சுமக்க நாம் அழைக்க வேண்டும் என்று மட்டும்தான் அவர் எதிர்பார்க்கிறார்.

மூன்றாம் ஸ்தலம்: சிலுவையின் பாரத்தால் முதல் முறையாய் யேசு தரையில் விழுகிறார்இறைமகன் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் யேசுவும் தான் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிருபிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்ததாக சுவிசேஷங்களில் எழுதப்பட்டுள்ளன.

சிந்தனை: நாமும் இப்படித்தான். நம்முடைய முயற்சிகளில் தோல்வியடையும்போதெல்லாம் உணர்கிறோம். நான் விழுந்துவிட்டேனே, இனி எப்படி மீண்டும் எழுந்து நிற்கப்போகிறேன்? என்னுடைய எதிர்காலம் இருளடைந்து போய்விட்டதே.. என்றெல்லாம் கலக்கமடைகிறோம்.

தோல்வி என்பதே வெற்றியின் முதற்படி என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய விழுதல் வெறும் தற்காலிகமானதுதான் என்பதை நாம் உணர்ந்தால் போதும். மீண்டும் எழுந்து நம்முடைய முயற்சியை மேலும் தீவிரமாக்க முயல்வோம்..

அடுத்த மூன்று ஸ்தலங்களை அடுத்த வெள்ளியன்று பார்ப்போம்..

சிலுவைப் பாதை தொடரும்..

2 comments:

Peter Yeronimuse said...

Dear Mr. Joseph
Good job. Please keep it up.
peter
usa

tbr.joseph said...

வாங்க பீட்டர்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

Post a Comment