Friday, March 31, 2006

சிலுவைப் பாதை 4

பத்தாம் ஸ்தலம்: யேசுவின் ஆடைகளை களைகிறார்கள்.


யூத வீரர்கள் யேசுவை சிலுவையில் அறைவதற்கு முன்னர் அவருடைய மேலாடையை உரித்தெடுத்தனர். அது மேலிருந்து ஒரே நூலால் நெய்யப்பட்டிருந்ததால் அதை கிழிக்க மனமில்லாமல் அது தங்களுக்குள் யாருக்குக் கிடைக்குமென்று தீர்மானிக்க சீட்டுப்போட்டு பார்த்தனர். இச்சம்பவத்தைப் பற்றி எல்லா சுவிசேஷர்களுமே (Gospel writers) தங்களுடைய சுவிசேஷங்களில் குறிப்பிட்டிருக்கின்றனர்- St. Mathew:27-35 – St.Mark:15-25 – St.Luke:23-34 – St.John:19-24.

சிந்தனை: இறைவா, நீர் அன்று உம்முடைய ஆடைகளை இழந்து எல்லோர் முன்னிலும் அவமானப்படுத்தப்பட்டதைப் போலவே நானும் என்னுடைய நண்பர்களைப் பற்றி தவறான, கீழ்த்தரமான வதந்திகைகளைப் பரப்புவதன்மூலமாக அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறேன். என்னுடைய தவறான நடத்தையால் பிறரால் இகழப்பட்டு அவமானப்பட்டும் நின்றிருக்கிறேன்.

என்னுடைய இத்தகைய தீய எண்ணங்களிலிருந்தும், செய்கைகளிலிருந்தும் விடுதலைத் தாரும் தேவனே. என்னுடைய நண்பர்கள் மட்டுமல்ல என்னுடைய விரோதிகளைக் குறித்தும் நான் நல்லதையே பேச எனக்கு வரம் தாரும் தேவனே, வரம் தாரும்.

பதினோராம் ஸ்தலம்: யேசு சிலுவையில் அறையப்படுகிறார்.கல்வாரி மலையின் உச்சியை அடைந்ததுமே யேசுவின் ஆடைகளை களைந்துவிட்டு இடுப்பிலிருந்த ஒரு சிறு துணியுடன் அவரை சிலுவையில் கிடத்தி கை, கால்களில் ஆணியால் அறைந்து சிலுவையுடன் பிணைக்கின்றனர். சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி யேசுவை சிலைவையில் அறைய நான்கு ஆணிகளைப் பயன்படுத்தினர்.

சிந்தனை: யூதர்கள் முறைப்படி சிலுவை என்பது ஒரு அவமானச் சின்னம். நாம் நம்முடைய நண்பர்களை மற்றவர்கள் முன்னால் அவமானப்படுத்தும்போதும் நாமும் இதைத்தான் செய்கிறோம். ஒரு பாவமும் செய்யாத யேசு சிலுவையில் அறையப்பட்டதைப் போலத்தான் நாமும் நம் நண்பர்களை நம்முடைய தகாத வார்த்தைகளால் சிலுவையில் அறைகிறோம். நாம் மற்றவர்களை தீர்ப்பிடும்போதும், அவர்களுடைய குலம், கோத்திரம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஒதுக்கும்போதும், ஏளனப்படுத்தும்போதும் இதைத்தான் செய்கிறோம்.

என்னுடைய நண்பர்கள் ஏன் என்னுடைய எதிரிகளைக் குறித்தும் நல்லவற்றையே சிந்திக்கவும், பேசவும் எனக்கு வரம் தாரும் தேவனே, வரம் தாரும்.

பன்னிரெண்டாம் ஸ்தலம்: யேசு சிலுவையில் மரணம் அடைகிறார்.
ஆய்வாளர்களின் கூற்றுப்படி காலையில் சுமார் ஒன்பது மணிக்கு சிலுவையில் அறையப்பட்ட யேசு பிற்பகல் மூன்று மணி வரை சுமார் ஆறு மணி நேரம் சொல்லொண்ணா வேதனைகளை அனுபவித்து மரணமடைந்தார்.

சிந்தனை: யூதர்களின் பார்வையில் அவமானச் சின்னமாய் தென்பட்ட சிலுவை கிறிஸ்துவர்களின் பார்வையில் வெற்றியின் அடையாளமாய் தென்படுகிறது. புனித சின்னப்பர் (St.Paul) கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் 6:14ல் இவ்வாறு குறிப்பிடுகிறார். ‘நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையிலன்றி வேறெதிலும் ஒருகாலும் பெருமை பாராட்ட மாட்டேன். ..’

யேசு சிலுவையில் வேதனையுடன் தொங்கிக்கொண்டிருந்த போதும் தன்னை சிலுவையிலறைந்த யூதர்கள் ‘தாங்கள் செய்வது இன்னதென தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்’ என்று மன்றாடினாரே.. நான் என்னை அவமானப்படுத்தி மனவேதனையுறச் செய்யும் என் நண்பர்களுக்காகவும், விரோதிகளுக்காகவும் இறைவனிடம் மன்றாடும் நற்குணத்தை எனக்குத் தாரும் தேவனே, தாரும்..

சிலுவைப் பாதை அடுத்த வாரம் நிறைவுறும்.

Saturday, March 25, 2006

கிறிஸ்துவ கீதங்கள் 6திருப்பலியின் மத்தியில் பாடப்படும் தியானப் பாடல்களின் வரிசையில் எனக்குப் பிடித்தமான மற்றொரு பாடலை இன்று உங்கள் முன் வைக்கிறேன்..

இறைவன் நம்மைப் படைத்தார். அவர் படைப்புகள் யாவுமே அவருடைய சாயலையே கொண்டிருந்தன.. அதாவது நமக்குப் பிறக்கும் குழந்தைகள் நம்முடைய சாயலைத்தானே கொண்டிருக்கின்றன.. அது போல..

நாம் நம்முடைய பிள்ளைகளுக்காகவே வாழ்வதுபோல நம்முடைய குழந்தைகளும் நமக்காகவும் வாழவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில்லையா..

அதுபோல்தான் இறைவனும் எதிர்பார்க்கிறார்..

நம்முடைய பிள்ளைகள் நம்முடைய எதிர்பார்ப்பை, நம்முடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யவேண்டும் நாம் எதிர்ப்பார்ப்பதில்லையா?

அதுபோல்தான் இறைவனும் எதிர்பார்க்கிறார்..

இப்பாடலின் துவக்க வரிகள் நான் இறைவனுக்காகத்தான் வாழ்கிறேன் என்பதை அறிவிக்கும் விதமாக அமைந்துள்ளன..

உமக்காகத்தானே ஐயா..

**

உமக்காகத்தானே ஐயா - நான்
உயிர் வாழ்கிறேன் - ஐயா
என் உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
உமக்காகத்தானே ஐயா

பண்படுத்தும் உம் சித்தம் போல
பயன்படுத்தும் உம் விருப்பம் போல
உம் கரத்தில் நான் புல்லாங்குழல்
ஒவ்வொரு நாளும் இசைத்திடுமே

எத்தனை இடர்கள் வந்தாலும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
மகிழ்வுடன் தொடர்ந்து ஓடுகிறேன்
மன நிறைவோடு பணி செய்வேன்

கோதுமை மணி போல் மடிந்திடுவேன்
உமக்காய்த் தினமும் பலன் கொடுப்பேன்
அவமான நிந்தை சிலுவைகளை
அனுதினமும் நான் சுமந்திடுவேன்
எனது ஜீவனை மதிக்கவில்லை
ஒரு பொருட்டாய் நான் எண்ணவில்லை
எல்லோருக்கும் நான் எல்லாமானேன்
அனைவருக்கும் நான் அடிமையானேன்

எனது பேச்செல்லாம் உமக்காக
எனது செயல் எல்லாம் உமக்காக
எழுந்தாலும் நடந்தாலும் உமக்காக
அமர்ந்தாலும் படுத்தாலும் உமக்காக..

உமக்காகத்தானே ஐயா..

*******

ஒரு மகன் தன் தந்தையைப் பார்த்து கூறுவது போலவே அமைந்துள்ளன இப்பாடலின் வரிகள்..

நான் என்னுடைய வாழ்வில் வரும் துன்பங்கள் யாவற்றையும் எதிர்கொள்ள தயாராயிருக்கிறேன்..

என் தோல்விகள், என் சோகங்கள் எதுவும் என்னை உம்மிடமிருந்து பிரிப்பதில்லை..

மகிழ்வுடன் உம்மிடம் ஓடி வருகிறேன். நீர் இடும் கட்டளைகளை நிறைவேற்றுகிறேன்..

கோதுமை மணிகள் மண்ணில் விழுந்து மடிந்தாலொழிய பலன் தருவதில்லை என்று மொழிந்தீரே ஐயா..

நானும் அதுபோல் மடிந்துபோகத் தயாராயிருக்கிறேன்..

எதற்காக?

உமக்கு பலனாய் இருந்திடத்தான்..

நீர் எமக்காக சுமந்த சிலுவையைப் போலவே

என்னை நோக்கி வீசப்படும் அவமானங்களை, நிந்தைகளை நானும் சுமக்க தயாராயிருக்கிறேன்..

எத்தனை சோதனை வந்தாலும், எத்தனை தோல்விகளை நான் சந்திக்க நேர்ந்தாலும் உம் நிழலைவிட்டு ஒரு நாளும் விலகாதிருப்பேனே..

எனது சொல்லும், செயலும், சிந்தனையும் எல்லாமே உமக்காகத்தான் தேவனே.. உமக்காகத்தான்..

இப்பாடலின் வரிகளை இசையோடு கலந்து உணர்ந்து பாடும் நேரத்தில் மனம் நெகிழ்ந்து போகாமல் இருப்பது மிகவும் கடினம்..


என் உடலும் உள்ளமெல்லாம் - அன்பர்
உமக்காகத்தானே ஐயா

ஆம் ஐயா.. நான் உமக்காகத்தான் உயிர் வாழ்கிறேன்..

******

Friday, March 24, 2006

சிலுவைப் பாதை 3

ஏழாம் ஸ்தலம்: யேசு இரண்டாம் முறையாக தரையில் விழுகிறார்.சிலுவையை சுமக்க சீரேனே ஊரைச் சார்ந்த சீமோனை படைவீரர்கள் பணித்தனரே பிறகு எப்படி யேசு சிலுவையின் பாரத்தால் மீண்டும் விழுந்தார் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? சரித்திர ஆய்வாளர்களிடமிருந்து இதற்கு சரியான பதில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் இதைப் பற்றி சித்தரிக்கப்பட்டுள்ள சில படங்களைப் பார்த்தால் சிலுவையின் தலைபாகம் யேசுவின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருக்கின்றது. சீரேனே சீமோன் சிலுவையின் கீழ் புறத்தை சுமந்து செல்கிறார். அவருடைய செயல் யேசுவின் பாரத்தை சற்றே குறைக்க மட்டுமே உதவியிருக்கிறது.

சிந்தனை:

நான் சிறுவனயாருந்த சமயத்தில் பலமுறை தடுக்கி விழுந்தாலும் உடனே எழுந்துவிட்டிருக்கிறேன். ஆனால் அது வெறும் உடல் சம்பந்தப்பட்ட விழுதல்களாயிருந்தன.. அச்சமயங்களில் என் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளும், காயங்களும் வெகு சீக்கிரமே ஆறிப்போயிருக்கின்றன.
ஆனால் இப்போதோ? என்னுடைய ஒவ்வொரு வீழ்ச்சியும் என் உள்ளத்திலும் இருக்கும் தீய எண்ணங்கள், அகங்காரம், தற்பெருமை, சுயநலம், பொறாமை போன்றவைகளால்தான் என்று உணர்கிறேன். இத்தீயச் செயல்களிலிருந்து நான் எப்போது முற்றிலுமாக விடுபடுகிறேனோ அப்போதுதான் என்னுடைய உண்மையான எழுதலும் இருக்கும் என்பதத நான் புரிந்துக்கொண்டிருக்கிறேனா? இவைகளிலிருந்து விடுபட்டு மீண்டும் எழுந்து நிற்க எனக்கு வலிமைதாரும் இறைவா, வலிமை தாரும்..

எட்டாம் ஸ்தலம்: யேசு யெருசலேம் மகளிரைச் சந்திக்கிறார்.யேசு சிலுவையில் அறையப்பட அழைத்துச் செல்வதைப் பார்த்த ஜெருசலேம் நகரைச் சார்ந்த பெண்கள் தங்களுடைய குழந்தைகளுடன் அழுதுக்கொண்டே அவரைப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். அவர்களுள் ஒருவராயிருந்த வெரோனிக்காளின் துணிச்சலான செயல் அவர்களுடைய மனதுக்கு சிறிது ஆறுதளையளித்திருக்கலாம். ஆனாலும் அவருக்கு பின்னால் அழுதவாறு தொடர்ந்து செல்கின்றனர். அவர்களுடைய அழுகுரல் யேசுவின் கனிந்த மனத்தை உருக்குகிறது. தன்னுடைய வேதனையையும் பொருட்படுத்தாமல் நின்று அவர்களைத் திரும்பிப் பார்க்கிறார். நீங்கள் ஏன் எனக்காக அழுகிறீர்கள்.. பாவத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் உங்களுக்காகவும், உங்களுடைய கணவர்களுக்காகவும்.. துன்புறும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும் என்று கூறுகிறார்.

சிந்தனை: நான் சிறுவனாய் இருந்தபோது நான் அழுததெல்லாம் எனக்காக, என்னுடைய தேவைகளுக்காக. அப்போதெல்லாம் என்னுடைய அழுகுரலைக் கேட்டதுமே ஓடிவந்து என்னுடைய தேவைகளை பூர்த்தி செய்ய, எனக்கு றுதலளிக்க என் தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என எத்தனையோ பேர் இருந்தனர்.

இப்போதும் என்னுடைய தேவைகளுக்காக, நான் என்னுடைய முயற்சிகளில் தோல்வியடையும் சமயங்களில் மட்டும்தானே அழுகிறேன். என்னுடைய தோல்விகளும், துன்பங்களும் மட்டும்தானே எனக்கு பெரிதாய் தெரிகின்றன. என்னைச் சுற்றியுள்ள என்னுடைய மனைவி, குழந்தைகள் எல்லோரும் ஓடிவந்து என்னை தேற்றவேண்டும், என்னுடைய தேவைகளை உடனே பூர்த்தி செய்துவிடவேண்டும் என்றுதானே நினைக்கிறேனே. ஆனால் நான் மற்றவர்களுடைய தேவைகளை என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறேனா. அவர்களுக்கு றுதலளிக்க வேண்டுமென்று நினைத்திருக்கிறேனா..
என்னை மட்டுமே நினைத்துக்கொண்டிராமல் என்னை சுற்றியுள்ள மற்றவர்களையும் நினைத்து அவர்களுடைய வேதனையில் பங்குகொள்ளும் மனதை எனக்குத் தாரும் இறைவா, தாரும்.

ஒன்பதாம் ஸ்தலம்: யேசு மூன்றாம் முறையும் தரையில் விழுகிறார்.இந்த படத்தைப் பார்த்தால் ஏன் யேசு மீண்டும், மீண்டும் விழுந்தார் என்பது புரிகிறதல்லவா? சிலுவையின் தலைபாகம் யேசுவின் தோள்கள் மீதுதான் சுமத்தப்பட்டிருந்தது. சீமோன் சிலுவையின் அடிபாகத்தை பிடித்து அவருடைய சுமையை குறைக்க மட்டுமே உதவியிருக்கிறார். உடல் முழுவதும் ஏற்பட்டிருந்த காயங்களால் உடல் சோர்ந்து போயிருந்த யேசு மூன்றாம் முறையாக கீழே விழுந்ததன் மூலம் தானும் ஒரு சராசரி மனிதந்தான் என்று எண்பிக்கிறார்.

சிந்தனை: யேசுவின் விழுதல்கள் எனக்கு கூறுவது என்ன? எந்தவொரு சராசரி மனிதனும் ஆசாபாசங்களுக்கு உட்பட்டு பாவம் செய்வது இயற்கை. என்னுடைய வெற்றியில் நான் ஆணவம் கொள்வதும், பிறருடைய வெற்றியில் பொறாமைகொள்வதும், என்னுடைய தோல்வியில் பிறரை நிந்திப்பதும் பிறருடைய தோல்வியில் சந்தோஷம்கொள்வதும் மனித இயற்கையே.. ஆனால் அதிலிருந்து விடுபட நான் முயற்சி செய்கிறேனா. அல்லது அது ஒரு மனித பலவீனம் என்று எனக்கு நானே நியாயம் கற்பிக்கிறேனா?

சிந்திப்போம்..

அடுத்த மூன்று ஸ்தலங்கள் அடுத்த வாரத்தில்

Saturday, March 18, 2006

கிறிஸ்துவ கீதங்கள்


கிறிஸ்துவ தேவாலயங்களில் திருப்பலி நேரத்தில் பாடப்படும் கீதங்கள் வரிசையில் இன்றும் தியானப் பாடல்களில் ஒன்றைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன்.

ஏன் மூன்றாம் வாரமாக தியானப் பாடலையே அளிக்கிறீர்கள் என கேட்பவர்களுக்கு.

திருப்பலியில் இறைப்பிரச்சன்னத்தை பக்தர்கள் வேண்டுவது இத் தியானப் பாடல்கள் வழியாகத்தான்.

திருப்பலி நேரத்தில் பாடப்படும் பாடல்களில் தியானப் பாடல்கள்தான் மிகச் சிறப்பாக இயற்றவும், இசையமைக்கவும் பட்டுள்ளன என்றால் மிகையாகாது.

இறைவனை கெஞ்சி, யாசித்து அழைத்து 'ஐயா நீர்தானய்யா எம் தெய்வம், நீரில்லாமல் வாடும் பயிர்களைப் போல தினம் உம்மை நாடி நாங்கள் வரவேண்டும், நீரில்லையேல் நாங்களில்லை' என்று மனம் உருகி பாடும் வகையில் பல பாடல்களும் இப்பகுதியில் உள்ளன.

இனிவரும் வாரங்களிலும் தொடர்ந்து எழுதும் அளவுக்கு எண்ணிலடங்கா அருமையான பாடல்கள் தியானப் பாடல்கள் வரிசையில் இருக்கின்றன..

இனி இவ்வார பாடலுக்கு செல்வோம்.என் தேடல் நீ என் தெய்வமே
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உன்னை மனம் தேடுதே நீர் வழிகாட்டுமே
இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைகாக்க நீ வேண்டுமே

உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனை காக்க நீ வேண்டுமே..

என் தேடல் நீ என் தெய்வமே..

சிரமங்களும், சோதனைகளும் நிறைந்த இவ்வுலக வாழ்வில் நாம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் கரை சேரவேண்டுமெனில் நமக்கு இறைவனின் துணை அவசியம் வேண்டும்.

சோதனைகளைக் கடந்து சாதனைகள் படைக்க நினைக்கும் எவரும் இறைவனை தேடிச் செல்ல வேண்டும் என்பதை உணர்த்துவதாக இப்பாடல் துவங்குகிறது..

என் தேடல் நீ என் தெய்வமே

எனக்கு ஆறுதல் தரவேண்டுமென்று உன்னை தேடுகிறேன்..

நீர் வரவில்லையென்றால் என் வாழ்க்கையின் நிறம் மாறிவிடும். இதில் நிறம் என்பது நம்முடைய வாழ்வின் லட்சியம், வாழ்வின் பாதை என்பதை குறிக்கின்றது..

நம் வாழ்வில் இறைபிரசன்னம் இல்லையென்றால் நாம் எத்தனை திறம்படைத்தவர்களாக இருந்தாலும் நம் வாழ்வின் திசை மாறிவிடும்.. நம் வாழ்வின் வழிகாட்டி இறைவன் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது..

இதைத்தான்

உன்னை (என்) மனம் தேடுதே நீர் வழிகாட்டுமே என்ற வரி நமக்கு உணர்த்துகிறது..


உன்னோடு (இறைவனோடு) நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்..

நமக்கும் இறைவனுக்கும் இடையில் ஏற்படுகின்ற புனித உறவானது நம் பாவ இச்சைகள் நிறைந்த உள்ளத்தை மாற்றி இறைவனுடையதைப் போலாக்கிவிடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை..

வீணையின் கம்பிகளை கலைஞன் மீட்டும்போது அதிலிருந்து எழும் இனிய நாதம் போல இறைவன் என்னுள் கலந்து என்னுடைய நாடி, நரம்புகளில் எல்லாம் நிறைந்துவிட்டால்..

என் உடலிலும் உள்ளத்திலும் ஏற்படும் அற்புத மாற்றங்கள், என்னுடைய ஆற்றலை (திறமையை) பலமடங்காக்கிவிடும் என்பதில் என்ன சந்தேகம்!

உன் வழி தேடி ஓடிவரும் என் போன்ற பக்தர்களை நீர் காத்திட வேண்டுமைய்யா.. காத்திட வேண்டும்..

இதைத்தான் உணர்த்துகிறது இப்பாடலின் இறுதி வரி..

வழி தேடும் எனை காக்க நீ வேண்டுமே..

பாடல்கள் தொடரும்

Friday, March 17, 2006

சிலுவைப் பாதை 2

நான்காம் ஸ்தலம்: யேசு தன் தாயை சந்திக்கிறார்.

யேசு யூத வீரர்களால் கைது செய்யப்பட்டவுடனே அவருடைய சீடர்கள் அனைவரும் அவரை விட்டு சிதறியோடினர். சீடர்களுடைய தலைவராகக் கருதப்பட்ட சீமோன் இராயப்பர் (St.Peter) மட்டும் அவரை மறைவாகத் தொடர்ந்து சென்றாலும் 'டேய் நீயும் அவர்களுடைய சீடர்களுள் ஒருவந்தானே?' என்று சில படை வீரர்களால் கேட்கப்பட்டதும் 'இல்லவே இல்லை நீங்கள் கூறும் ஆளை எனக்கு தெரியவே தெரியாது' என்று மூன்றுமுறை மறுத்துவிட்டு ஓடிவிடுகிறார்.

யேசுவின் அன்னை இச்சமயத்தில் எங்கிருந்தார் என்பதை விவிலிய சிரியர்கள் எவரும் எழுதவில்லை. ஆனாலும் அவர் சிலுவையைச் சுமந்துக்கொண்டு கல்வாரி என்னும் மலைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியில் தன் மகனைச் சந்தித்தார் என்று கூறியுள்ளனர்..

சிந்தனை: சோதனை, தோல்வி, இழப்பு.. இவை யாவும் நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் துன்பங்கள். இவை நம்மைத் தாக்கும்போது நாம் நம்மைச் சுற்றிலும் உள்ளவர்கள் நமக்கு ஆறுதலாகவும் தேறுதலாகவும் வரமாட்டார்களா என்று ஏங்குகிறோம். நம்முடைய வெற்றியில் பங்குகொள்ள போட்டி போட்டுக்கொண்டு வரும் நம்மை சுற்றியுள்ளோர் நம்முடை வேதனை நேரத்தில் ஏனோ நம்மை உதாசீனப்படுத்துகின்றனர்..நம் சொந்த தாயைத் தவிர.. எந்த ஒரு தாயும் வேதனைப் படும் தன் மக்களை விட்டு அகலுவதே இல்லை. அன்று, யேசுவுக்கும் அப்படித்தான் நேர்ந்தது..

என் தாயும், தந்தையுமான இறைவா நான் துன்பத்தில் வீழும்போது உம்மை நோக்கி வர எனக்கு அனுமதி தாரும்.. உம்மை விட்டால் எனக்கு வேறு யார் துணை இறைவா?

ஐந்தாம் ஸ்தலம்: சீரேனே ஊரைச் சேர்ந்த சீமோன் யேசுவின் சிலுவையை சுமக்க உதவி செய்கிறார்.

யார் இந்த சீமோன்?

சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி இந்த சீமோன் ஜெருசலேம் நகரத்தை சேராதவர்.. அவருடைய சொந்த ஊரான சீரேனே என்ற நகரம் இப்போதைய லிபியாவின் ஒரு பகுதியென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அவர் ஒரு கறுப்பு நிற யூதர் என்ற ஹேஷ்யமும் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அவருக்கும் யேசுவுக்கும் அதுவரை எந்த சம்பந்தமும் இருக்கவில்லை.. வழியில் தன் போக்கில் சென்றுகொண்டிருந்தவர் யேசு சிலுவை சுமந்துக்கொண்டு செல்வதை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து நின்று என்ன நடக்கிறதென எட்டிப் பார்த்திருக்கலாம். அவருடைய திடகாத்திரமான தோற்றம் ஒருவேளை யேசுவின் பின்னே சென்றுக் கொண்டிருந்த வீரர்களை கவர்ந்திருக்கலாம். ஆனால் ஒன்று. யேசுவின் மீதிருந்த கருணையால் அவருடைய சிலுவையை சீமோன் மீது சுமத்தியிருக்க மாட்டார்கள். எங்கே அவர் கல்வாரி மலைக்கு போகின்ற பாதையிலேயே மரித்துவிடுவாரோ அவரை சிலுவையில் அறைந்து கொல்லும் பாக்கியம் நமக்கு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் யூதர்கள் அவரைப் பிடித்து கட்டாயப்படுத்தி யேசுவின் சிலுவையை அவர் சுமந்துவர செய்திருப்பார்கள்..

காரணம் எதுவாயினும் சீமோனுக்கு கிடைத்த அந்த வாய்ப்பு இன்றும் அவருடைய பெயர் உலகெங்கும் உள்ள கிறிஸ்துவர்கள் மத்தியில் பேசப்படுகிறதென்பது உண்மை!

சிந்தனை: என்னை சுற்றிலும் உள்ள எத்தனையோ பேர் வேதனைக்குள்ளாகி சிரமப்படுகிறார்கள்.. நான் எப்போதாவது மனமுவந்து அவர்களுக்கு உதவ முயன்றிருக்கிறேனா? எனக்கென்ன வந்தது என்னுடைய வேதனைகளை சுமக்கவே எனக்கு நேரமில்லையே மற்றவர் சுமைகளை நான் எங்கே சுமப்பது என்றுதானே என் பாதையில் நான் சென்றிருக்கிறேன்..

இனியாவது என்னை மாற்றுமே இறைவா, மாற்றுமே..

ஆறாம் ஸ்தலம்: யேசுவின் முகத்தை வெரோனிக்கா துடைக்கிறார்


யார் இந்த வெரோனிக்கா?
யேசுவின் சிலுவையை சுமக்க உதவிய சீமோனைப் போலவே வெரோனிக்காவின் இந்த சிறிய செயல் அவளையும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்துவர்களால் தவக்காலத்தின் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் சிலுவைப்பாதை நேரத்தில் நினைவு கூர்கிறார்கள் என்றால் மிகையாகாது.

சிந்தனை: யேசு களைப்பாய் இருக்கிறார் என்பதை குறிப்பால் உணர்ந்து அவருக்கு முகம் கழுவ தண்ணீரும் துடைக்க ஒரு துவாலையையும் நீட்டிய வெரோனிக்காளைப் போல நானும் என் குடும்பத்தாரும், ஏன், என்னுடைய நண்பர்களும் கூட, வேதனையில் களைப்புற்று, சோர்வடைந்து இருக்கும் நேரத்தில் அவர்கள் கேட்காமலே நான் அவர்களுக்கு உதவி செய்ய, ஆறுதல் அளிக்க முனைந்திருக்கிறேனா? என் வேதனையில் மற்றவர் பங்குக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் நான் அவர்கள் படும் வேதனையைக் கண்டும் காணாததுபோல் இருந்திருக்கிறேனா?

சிந்திப்போம்.. செயலாற்றுவோம்.. அதற்குத் தேவையான மனதைத் தாரும் இறைவா என்று வேண்டுவோம்..

அடுத்த மூன்று ஸ்தலங்களை வரும் வெள்ளியன்று பார்ப்போம்..

சிலுவைப் பாதை தொடரும்..

Thursday, March 16, 2006

கடவுளும் மதமும் நம்பிக்கையும்இப்போதெல்லாம் 'நான் கடவுளை நம்பாதவன்' என்று கூறிக்கொள்வது ஒருவித Fashion ஆகிவிட்டது..

கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி என்று ஒரு அரசியல் தலைவர் ஒரு காலத்தில் கூறிக்கொண்டிருந்தார். அவரை சீர்திருத்தவாதி என்றார்கள். அவரைப் பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை..

இன்று அல்லது சமீப காலமாக, கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுபவர்களுடைய வாதத் திறமை அதைப் படிப்பவர்களையும் அந்நம்பிக்கைக்கு இட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..

சரி.. என்னுடைய பார்வையில் மதம் என்றால் என்ன கடவுள் நம்பிக்கை என்ன என்பதை மட்டும் பார்ப்போம்..

கடவுள் நம்பிக்கை என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு அந்தரங்க உணர்வு.. அது என்னுடைய தனிப்பட்ட உணர்வும் கூட..

அதை யாருக்கும் நியாயப்படுத்த தேவையில்லை. அதை யாரும் கொச்சைப்படுத்தவோ அல்லது எள்ளி நகையாடவோ நான் உரிமையளிக்கவில்லை..

இறை நம்பிக்கை எனக்கு ஒரு சந்தோஷத்தை, என் வாழ்வில் ஒரு அர்த்தத்தை அளிக்கிறது என்று நினைக்கிறேன், நம்புகிறேன். அதுமட்டும் போதும் எனக்கு.

ஆனால் மதம் என்பது முற்றிலும் வேறானது..

எந்த ஒரு மதமானாலும் அதற்கு சில சட்டத்திட்டங்கள், வரைமுறைகள் எல்லாம் உண்டு. அம்மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பர்வகளுக்கு மட்டுமே அச்சட்டங்களின் அர்த்தமும், நியாயமும் புரியும். அவற்றை மனதார ஏற்றுக்கொண்டு அதன்படி ஒழுக தயாராக இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவருமே மத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை..

ஆனால் மதத்தை நம்புகிறவர்கள், அல்லது நான் இந்த மதத்தைச் சார்ந்தவன்தான் என்பவர்கள்  கடவுள் இருக்கிறார் என்று நான் நம்பவில்லை என்று சொல்லும்போது....

இத்தகைய பேச்சு, நான் இன்னாருடைய குடும்பத்தைச் சார்ந்தவன் ஆனால் இன்னார் என்னுடைய தந்தை என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்குச் சமம் என்றுதான் நினைக்கிறேன்.

கடவுள் இல்லை. மதங்கள் ஒரு மூட நம்பிக்கை என்று அடித்துக் கூறும் ஒரு கட்சித் தலைவர் எப்போதும் தோளில் அணிந்திருக்கும் மஞ்சள் துண்டுக்கு என்ன பொருள் என்று கேட்டாராம் ஒரு பத்திரிகை நிரூபர்.

அதுபோல் இருக்கிறது இந்த அறிவுஜீவிகளின் வாதமும்.

காந்திஜி அவர்கள் ஒருமுறை கூறினார். நான் கிறிஸ்துவத்தை நேசிக்கிறேன். அதற்கு நான் கிறிஸ்துவர்களை நேசிக்கிறேன் என்று பொருள் அல்ல என்று. கிறிஸ்துவம் மட்டுமல்ல அவர் கூறியது எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

ஆம், கடவுளை நம்புகிறேன்.. ஆனால் கடவுளை முன் வைத்து மதவாதிகள் செய்யும் அக்கிரமத்தை நம்பவில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுங்கள். என்னைப் போன்றவர்கள் நம்பத் தயாராய் இருக்கிறோம்..

ஆனால் நான் கிறிஸ்துவன், நான் இந்து, நான் இந்த மதத்தைச் சார்ந்தவன், ஆனால் கடவுளை நம்பவில்லை என்று கூறாதீர்கள்..

அது ஒரு hypocrite ன் வாதமாகத்தான் கருதப்படும்..

சிந்தனைகள் தொடரும்..


  

Wednesday, March 15, 2006

இறைவனின் செயல் - நமக்கு வியப்பே..
கடவுளுடைய செயல்கள் மனித மூளைக்கு அப்பாற்பட்டவை..

நான் என்னுடைய 'என்னுலகம்' பதிவிலிட்ட இடுகைக்கு வந்த பின்னூட்டங்கள் ஒன்றில் நான் குறிப்பிட்டிருந்த இரண்டு நிகழ்வுகளுக்கு பாதிரியார் என்ன விளக்கம் அளித்தார் என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்த இடுகையின் நோக்கம் அதுதான்.

பாதிரியார் அளித்த விளக்கத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்..

ஆனால் இறைவனுடைய செயல்கள் மனிதனுக்கு வியப்பே, அது அவனுடைய மூளைக்கு எட்டாத விஷயம் என்ற ரீதியில் அவர் பேசியதில் தவறேதும் இல்லை என்று நினைக்கிறேன்.

அதை விளக்குவதற்கு முன் தான் கேள்விப்பட்ட ஒரு நிகழ்ச்சியையும் அவர் கூறினார்.

இரு நண்பர்கள். ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள். இருவரும் இறை பக்தி உள்ளவர்கள். கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அவர்களுடைய பங்கு தேவாலயத்தில் நடைபெறும் மரியன்னயின் நவநாள் பக்தி முயற்சியில் தவறாமல் பங்குகொள்பவர்கள்.

ஒரு வாரம் சனிக்கிழமை. அவர்களுடைய அலுவலகத்திலிருந்து உல்லாசப் பயணம் செல்வதாய் இருந்தது. நண்பர்களுள் ஒருவருக்கு அன்றைய தினம் நடைபெறவிருந்த மரியன்னை பக்தி முயற்சியில் பங்குபெறுவதை விட மனமில்லை. மற்றவருக்கு உல்லாச பயணம் செல்ல வேண்டும்.

அவர் தன் நண்பனைப் பார்த்து, ‘டேய் பக்தி முயற்சிதான் எல்லா வாரமும் நடக்குதே. ஒரு வாரம் வரலைன்னா மரியன்னை ஒன்னும் கோச்சிக்க மாட்டாங்க. வா ஜாலியா டூர் போய்ட்டு வரலாம். அடுத்த வாரம் ரெண்டு தரம் ஜெபம் பண்ணிக்கலாம்.’ என்கிறார்.

நண்பர் ஒத்துக்கொள்ளவில்லை. ‘நீ போய்ட்டு வாடா. என்னால நவநாள மிஸ் பண்ண முடியாது.’ என்று மறுத்துவிடுகிறார்.

இருவரும் அவரவர் நினைத்தபடியே செய்கின்றனர். உல்லாச பயணம் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக நவநாளில் பங்கு கொண்டிருந்த நேரத்தில் நண்பருக்கு செய்தி வருகிறது..

‘என்னைக் காப்பாற்றியது மரியன்னைதான்.’ என்று நினைக்கிறார். காயம்பட்டவரோ, ‘தான் நவநாளில் கலந்துக்கொள்ளாமல் டூர் வந்ததினால்தான் தனக்கு இந்த தண்டனை’ என்கிறார்.

பாதிரியார் இதை கூறி முடித்துவிட்டு கூறுகிறார்.

இறைவனின் செயலை அவரவர் கண்ணோட்டதிலிருந்து பார்க்கின்றனர். எது சரி, எது தவறு?

இரக்கத்தின் ஊற்று என வர்ணிக்கப்படுபவர் இறைவன். நமக்காக அவரிடம் பரிந்து பேசுபவர் மரியன்னை என்று நாம் நம்புகிறோம்.

அவ்வாறிருக்க வாரா வாரம் தவறாமல் தன்னுடைய பக்தி முயற்சிகளில் பங்கு பெறும் ஒருவர் ஒரேயொரு வாரம் அதில் கலந்துக்கொள்ளாமல் உல்லாசப் பயணம் சென்று விட்டார் என்பதற்காக அவரைத் தண்டிப்பாரா?

சரி, அப்படியானால் அவருடன் விபத்தில் சிக்குண்டவர்களோ? அவர்கள் என்ன பாவம் செய்திருந்தனர்.. தண்டிக்கப்பட?

ஆம்..

இறைவனின் செயல்களை ஆராய்ந்து அறியும் மனப்பக்குவம், ஆற்றல் நமக்கில்லை..

இறைவனின் செயல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பொருள், ஒரு அர்த்தம் இருக்கிறது. அதன் மூலம் அவர் நமக்கு ஒரு செய்தியைக் கூறுகிறார். அதை புரிந்துக்கொள்ளும் மனப்பக்குவம், மனமுதிர்ச்சி நமக்கு இல்லை என்பதுதான் உண்மை.

நாம் நமக்கு தேவையானவற்றை, சில சமயங்களில் தேவையில்லாதவைகளும் கூட, பெரும்போது அது நம்மால், நம்முடைய திறமையால், கிடைத்தது என்று பெருமிதம் கொள்கிறோம். அந்நேரத்தில் அது எனக்கு இறைவன் அளித்த பரிசு, வரப்பிரசாதம் என்று எண்ணுவதில்லை.. ஏன் சொல்லப்போனால் நம்முடைய சந்தோஷத்தில் இறைவனை, அவருடைய ஆற்றலை மறந்தேபோகிறோம்.

அதையடுத்து, ஒரு சிறு துன்பம் வந்தாலும், ஏன் என்னை கைவிட்டாய் இறைவா.. நான் அன்றாடம் உன்னை தொழுகிறேனே.. கேளுங்கள் கொடுக்கப்படும் என்றீரே இறைவா.. இதோ நான் நாள்தோறும் கேட்டுக்கொண்டே இருந்தேனே.. நான் கேட்டதை கொடுக்கவில்லை என்பதோடு இருந்ததையும் எடுத்துக்கொண்டாயே இறைவா.. என்று அங்கலாய்க்கிறோம்..

இவ்வளவு ஏன், ஏசு பிரானே ஜெத்சமெனி தோட்டத்தில் தான் அனுபவிக்கப் போகும் வேதனைகளின் நினைவு எழ 'பிதாவே உமக்கு சித்தமானால் இந்த துன்பக்கலம் என்னை விட்டு அகலக்கடவது..’ என்று பிதாவாகிய கடவுளிடம் மன்றாடினார் என்று வாசிக்கிறோம்.

ஆனால் அவருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம், அவர் தொடர்ந்து, ‘ஆயினும் என் விருப்பப்படியல்ல, உம் சித்தப்படியே ஆகட்டும்.’ என்றதுதான்.

ஆம்..

நாம் விரும்புவது எதுவாயினும் அதை இறைவனின் சித்தப்படியே, விருப்பப்படியே ஆகட்டும்.. என்று இறைச்சித்தத்திற்கே விட்டுவிடுவோம்.

நம் மனித மூளைக்கு எட்டாத விஷயங்களை ஆராய்வது வீணே..

இறைச்சித்தத்திற்கு பணிவோம்.. என்று முடித்தார் பாதிரியார்..

ஆலயத்தை விட்டு வெளியே வந்து வெகு நேரமாகியும் என் படித்த, அறிவார்ந்த(!) மூளை அதை ஏற்க மறுத்து வாதிட்டுக்கொண்டே இருந்தது..

ஆனால் என்  மனதோ..

என்றோ படித்த சங்கீதங்களை நினைத்துக்கொண்டது..

சண்டையிட என் கைகளுக்குப் பயிற்சி அளிப்பவர் அவரே..
சண்டையிட என் கைகளுக்குப் பலமளிப்பவர் அவரே..
எனக்கு இரக்கம் காட்டுபவர்..
என் அடைக்கலக்கோட்டை அவரே..
எனக்குப் பாதுகாப்பும் விடுதலையும் அளிப்பவர் அவரே..
என் கேடயமும் புகலிடமும் அவரே..

ஆண்டவரே நீர் மனிதனைப்பற்றிக் கவலைப்பட அவன் யார்?
அவன் ஒரு மூச்சுக்கு ஒப்பானவன்..
அவன் வாழ்நாள் மறைந்துபோகும் நிழலை ஒத்தது..

ஆம் தேவனே..

என் நாசியில் புகுந்து வெளியேறும் காற்றை நம்பி வாழ்பவன் நான்..

என் வாழ்நாள் என் நிழலைப் போன்று சடுதியில் மறையக் கூடியது..

அப்படிப்பட்ட நானா இறை மகிமையை, இறை ஆட்சிசையை, இறைச் செயலை கேள்வி கேட்பது?

சிந்தனைகள் தொடரும்..

Tuesday, March 14, 2006

தவக்கால சிந்தனைகள் 7

தவக்காலத்தில் நாம் மிகவும் விரும்பும் எதையாவது விட்டுவிட வேண்டும் என்று சொல்வார்கள்.

அதாவது, புகைப்பிடிப்பது, வெற்றிலை மற்றும் புகையிலை சுவைப்பது, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, அசைவத்தைத் தவிர்ப்பது, தொலைக்காட்சி மற்றும் சினிமா பார்ப்பதைக் குறைப்பது, என்று பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்.

நம் இந்து மத சகோதரர்கள் சபரி மலைக்கு செல்வதற்கு தங்களைத் தாங்களே வருத்திக்கொள்வதைப் போல எனக்குத் தெரிந்த கேரளத்தைச் சார்ந்த நண்பர்கள் சிலர் தவக்காலத்தில் தலைமுடியை வெட்ட மாட்டார்கள். ஏன், தினந்தோறும் சவரம் செய்து பழகிப்போனவர்கள் கூட விபூதித் தினம் துவங்கி நாற்பது நாட்களுக்கு சவரம் செய்வதைத் தவிர்த்து தாடி, மீசையுடன் அலுவலகத்திற்கு வருவதைப் பார்த்திருக்கிறேன்...

என்னப்பா இது என்றால்.. நோய்ம்பு சார் என்பார்கள்..

கேரளவாசிகளின் staple diet எனப்படும் மீன், பெரியாட்டு மாமிசம், மிக முக்கியமாக மது அருந்துததலையும் கூட சுத்தமாக விலக்கிவிடுவதைப் பார்த்திருக்கிறேன்.

இதன் உட்பொருளை உணர்ந்துதான் இத்தவச் செயல்களை இவர்கள் செய்கிறார்களா என்று பலமுறை நான் சிந்தித்ததுண்டு..

நாம் இது போன்ற சிற்றின்ப ஆசைகளை தவக்காலத்தில் விட்டுவிட வேண்டும் என்று ஏன் திருச்சபை பரிந்துரைக்கிறது என்றும் சிந்தித்ததுண்டு.

நமக்கு விருப்பமானவற்றை விட்டுவிட நினைப்பதென்பதே ஒரு தியாகச் செயலாகும். அதாவது இத்தகைய சின்ன சின்ன ஆசைகளுக்கு, சந்தோஷங்களுக்கு, நான் அடிமையல்ல என்பதை எனக்கு நானே நிரூபித்துக்கொள்வது.

நான் விரும்பி உண்ணும் உணவை வருடத்தில் ஒரு நாற்பது நாட்களுக்கு வேண்டாம் என்று ஒதுக்கி வைக்கும் செயல் என்னுடைய உடலுக்கு மட்டுமல்ல என் உள்ளத்திற்கும் நல்லது என்று உணர்ந்து நான் இதைச் செய்யும்போது என்னுடைய சந்தோஷம் இன்னும் பன்மடங்காகிறது.

என்னுடைய உடல் விருப்பத்திற்கு அடிபணிய மறுக்கும் என்னுடைய இந்த சுயமறுப்புச் செயல் நாளடைவில் என் உள்ள விருப்பத்திற்கு, அதாவது மாசுபட்ட எண்ணங்களை நாடும் என் உள்ளத்திற்கு அடிபணிய மறுக்கவும் வழிகோலுகிறதல்லவா?

நம்முடைய வாழ்வின் முக்கிய தேவைகளை மட்டும்  தேர்ந்துக்கொண்டு தேவையில்லாதவைகளை ஒதுக்கிவிட ஆண்டிற்கு ஒருமுறையாகிலும் நாம் மேற்கொள்ளும் இத்தகைய சுயமறுப்பு முயற்சிகளைவிட (self denial) மேலானது எதுவும் இல்லை.

ஆனால் இத்தகைய சுயமறுப்பு செயல்கள் மட்டுமே நம்முடைய நம் ஆன்ம வாழ்வை வளம்படுத்துமா?

இல்லைதான்..

ஆனால் தவக்காலத்தில் இத்தகைய முயற்சிகளில் நாம் அடையும் வெற்றி அவ்வருடம் முழுவதும் பாவச் சிந்தனைகளிலிருந்து, பாவச் சோதனைகளிலிருந்து விடுபடவும் உதவியாயிருக்கிறதென்பது மட்டும் உண்மை!

சிந்தனைகள் தொடரும்...

Saturday, March 11, 2006

கிறிஸ்துவப் பாடல்கள் 4


நான் கடந்த சனியன்று கத்தோலிக்க தேவாலயங்களில் திருப்பலி நேரத்தில் பாடப்படும் தியானப் பாடல் ஒன்றைப் பற்றி கூறியிருந்தேன்.

இன்று எனக்கு மிகவும் பிடித்த வேறொரு தியானப் பாடலை கீழே தந்திருக்கிறேன்.


ஒரு போதும் உனைபிரியா நிலையான
உறவொன்று வேண்டும்.
என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம்
நான் சொல்ல வேண்டும்.
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா.

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய்.
என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் - உன்
மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன்.

நீர் தோடும் மான்போல தேடி வந்தேன்.
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என் உள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என் உள்ளம் நின்றாய் - நிதம்
என்பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்.

****

இப்பாடலுக்கென அமைக்கப்பட்டுள்ள ராகவும் மிகவும் அழகானது. இப்பாடலைப் பாடகர் குழுவினரோடு பாடும் எவரும் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியாது..

அத்தனை அருமையானப் பாடல்..

ஒவ்வொரு வரிகளிலும் இறைவனுடனான நம் உறவின் மகத்துவத்தை எடுத்தியம்புவதுபோல் இயற்றப்பட்டிருப்பதுதான் இப்பாடலின் மகத்துவம்!

நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா..

இதில் 'நிழலாக' என்பது குளிர்ச்சியாக என்றும் பொருள்கொள்ளலாம். என் உருவத்தின் நிழலாக, அதாவது எனக்கு துணையாக என் நிழலைப்போலவே வா என்று இறைவனை அழைப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்..

உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய்
உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்

என்றும் மாறாத, அதாவது குறையாத இறைவனின் அன்பு தாயைத் தேடி ஓடும் குழந்தைக்கு கிடைக்கும் அன்புக்கு ஒப்பிட்டு எழுதப்பட்டுள்ளது இவ்வரிகள்..

ஆம். அன்புக்கு ஏங்கி தன் தாயைத் தேடிச் செல்லும் ஒரு மழலையைப் போலத்தான் நாமும் இறையன்பைத் தேடிச் செல்ல வேண்டும்..

என் உள்ளே வாழும் தெய்வம்
என்னை நீ ஆளும் தெய்வம்

ஆம். நாம் எம்மதத்தைச் சார்ந்தவராயினும் நம் உள்ளத்தில் குடியிருப்பது நாம் அன்றாடம் வணங்கும்  இறைவனாயிருக்க வேண்டும்..

அவர்தான் நம்மை வழிநடத்தும், ஆட்கொண்டு, ஆளும் அரசர்..

என்னை ஆள்வது தெய்வமானால் எனக்கென்ன குறை..

என்பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன்.

ஆம் இறைவா!

என் முன்னே நீ செல்லும்போது..

நான் உன்னோடல்லாமல் வேறு யாருடன் வாழ்வேன்..

ஒரு போதும் உனைபிரியா நிலையான
உறவொன்று வேண்டும்.
என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம்
நான் சொல்ல வேண்டும்.

இதுதான் என் வாழ்வின் அர்த்தம்..


****

Friday, March 10, 2006

சிலுவைப் பாதை 1

அவர்கள் யேசுவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாததால் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த கையளித்து அவரைக்கொண்டே யேசுவுக்கு மரண தண்டனைப் பெற்றுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்துடன் அவரிடம் கொண்டு சென்றனர்.

இதிலிருந்துதான் யேசுவின் சிலுவைப் பாதைத் துவங்குகிறது..

முதலாம் ஸ்தலம் (First Station)

யேசு பிலாத்துவிடம் கையளிக்கப்படுகிறார்.சரித்திர ஆராய்ச்சியாளர்களின் பார்வையில் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த பிலாத்து (Potinus Pliate) ஒரு நியாயமான மனிதன். தான் செய்வது எதுவும் சரியாகத்தான் இருக்க வேண்டும் அவன் நினைத்திருந்ததால் யூதர்கள் யேசுவைப் பொறாமையால்தான் தன்னிடம் கையளித்திருக்கிறார்கள் என்று அவரிடம் பேசிய சில நொடிகளிலேயே புரிந்துக்கொண்டான். ஆகவே அவரை எப்படியாவது விடுவித்து விடுவதிலேயே குறியாயிருந்தான்.

ஆனால் அவனுடைய நேர்மையையும் கண்டிப்புமிக்க ஆளுமையையும் விரும்பாத யூதர்கள் அவனையும் அவனை ஆளுநராக நியமித்த ரோமையர்களையும் அடியோடு வெறுத்தனர்.

ஆகவேதான் அவன் யேசுவுக்கு சிறு தண்டனையளித்து விடுதலை செய்வேன் என்றதும் யேசு தன்னை ரோமை பேரரசர் சீசருக்கு இணையாகக் கூறிக்கொள்கிறார் எனவும் பொய்யாய் ஒரு குற்றச்சாட்டையும் அவர் மேல் சுமத்தி.. நீர் அவரை விடுதலை செய்தால் நீர் சீசருக்கு எதிரானவர் என்று பொருள்கொள்வோம் என்று பிலாத்துவையே மிரட்டி பணியவைத்தனர்.

அவர்களுடைய மிரட்டலுக்கு பணிவதைத் தவிர வேறுவழியறியாத பிலாத்து இப் புனிதரின் ரத்தத்தில் எனக்கு பங்கு இல்லை எனக் கூறி தன் கைகளை கழுவி அவரை யூதர்களுடைய விருப்பத்திற்கேற்ப சிலுவையில் அறைய அவர்களிடமே கையளித்தான்.

சிந்தனை: அன்று யேசு தன்னுடைய சீடர்களாலேயே கைவிடப்பட்டு ஒரு குற்றவாளியாய் நிறுத்தப்பட்டதைப் போலவே நாமும் நம் வாழ்வில் பலமுறை உணர்கிறோம். நாம், நண்பர்கள் என்று நினைத்திருந்த சிலராலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு செய்யாத தவற்றுக்கு குற்றவாளியாக்கப்பட்டு அவமானப்பட்டு தலைகுனிந்து நிற்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டதுண்டு அல்லவா?

அப்போதெல்லாம் எங்களுக்கெதிராய் திரும்பியவர்மேல் விரோதம் கொள்ளாத நல்ல குணத்தை எங்களுக்கு தர வேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

இரண்டாம் ஸ்தலம்: யேசுவின் மேல் சிலுவையை சுமத்துகின்றனர்.சிலுவை ஒரு அவமானத்தின் சின்னம் என்று யூதர்களால் கருதப்பட்டு வந்தது. யூதர்களுடைய சடங்குகளின்படி மரண தண்டனை என்பது கல்லெறிந்து கொல்வதுதான். ஆனால் மரண தண்டனைக் குற்றவாளியாகக் கருதப்பட்ட யேசுவை அத்தகையச் சாவுக்கு கையளிக்க அவர்கள் விரும்பவில்லை. அவரை அவமானப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவரை சிலுவையில் அறைந்து கொல்ல தீர்மானித்தனர்.

சரித்திர ஆய்வாளர்களின் கூற்றுப்படி யேசுவின் மேல் சுமத்தப்பட்ட சிலுவை 4.80 மீட்டர் நீளமும் 2.30 மீட்டர் அகலமும் இருந்ததாம்! அத்தகைய சிலுவை எத்தனை கனம் இருந்திருக்கும்? கசையடிப் பட்டு உடல் நலிந்திருக்கும் வேளையில் அச்சிலுவை அவருக்கு எத்தனை பாரமாய் இருந்திருக்கும்?

சிந்தனை: நாமும் நம்முடைய வாழ்விலே எத்தனையோ சுமைகளை, சில சமயங்களில் நமக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாத, சுமக்க வேண்டிய தருணங்களைச் சந்தித்திருக்கிறோம். அப்போதெல்லாம் நமக்கு தோன்றியதென்ன? எப்படி இச்சுமையை நான் சுமக்கப் போகிறேன்? ஏன் எனக்கு மட்டும் இந்த தலையெழுத்து? எனக்கு உதவ யாருமே இல்லையே.. என்ற அங்கலாய்ப்பு தானே?

இனியாவது, இத்தகைய சுமைகள் நம்மேல் சுமத்தப்படும்போது இறைவனை துணைக்கு அழைப்போம். நம் சுமைகளை நம்மோடு சேர்ந்து சுமக்க நாம் அழைக்க வேண்டும் என்று மட்டும்தான் அவர் எதிர்பார்க்கிறார்.

மூன்றாம் ஸ்தலம்: சிலுவையின் பாரத்தால் முதல் முறையாய் யேசு தரையில் விழுகிறார்இறைமகன் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் யேசுவும் தான் ஒரு சாதாரண மனிதர்தான் என்பதை நிருபிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடந்ததாக சுவிசேஷங்களில் எழுதப்பட்டுள்ளன.

சிந்தனை: நாமும் இப்படித்தான். நம்முடைய முயற்சிகளில் தோல்வியடையும்போதெல்லாம் உணர்கிறோம். நான் விழுந்துவிட்டேனே, இனி எப்படி மீண்டும் எழுந்து நிற்கப்போகிறேன்? என்னுடைய எதிர்காலம் இருளடைந்து போய்விட்டதே.. என்றெல்லாம் கலக்கமடைகிறோம்.

தோல்வி என்பதே வெற்றியின் முதற்படி என்பதை நாம் உணர வேண்டும். நம்முடைய விழுதல் வெறும் தற்காலிகமானதுதான் என்பதை நாம் உணர்ந்தால் போதும். மீண்டும் எழுந்து நம்முடைய முயற்சியை மேலும் தீவிரமாக்க முயல்வோம்..

அடுத்த மூன்று ஸ்தலங்களை அடுத்த வெள்ளியன்று பார்ப்போம்..

சிலுவைப் பாதை தொடரும்..

Thursday, March 09, 2006

தவக்கால சிந்தனைகள் 6

அன்பு என்ற உணர்வு நம் எல்லோரும் அறிந்ததே..

மனித இணம் மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் பொதுவான உணர்வு அன்பு!

கணவன் - மனைவி, தாய்-பிள்ளைகள், சகோதர-சகோதரி என எல்லா உறவுகளுக்கும் அடிப்படை இந்த அன்புதான்!

புனித சின்னப்பர் (St.Paul) உரோமையருக்கு (Romans) எழுதிய திருமுகத்தில் (Letter) இதைத்தான் அழுத்தந்திருத்தமாய் கூறுகிறார்:

உங்கள் அன்பு கள்ளமற்றதாய் இருப்பதாக...
ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள்,
பிறர் உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள். (Romans 12:9,10)

அத்தோடு நின்றுவிடாமல் மேலும் கூறுகிறார்..

உங்களை துன்புறுத்துவோருக்கு சி கூறுங்கள்,
ஆம்,
ஆசி கூறுங்கள்,
சபிக்க வேண்டாம்..
மகிழ்வாரோடு மகிழுங்கள்;
அழுவாரோடு அழுங்கள்...
உயர்வு மனப்பான்மை கொள்ளாமல் தாழ்ந்தவர்களோடு அன்பாய் பழகுங்கள்..
பழிக்குப் பழி வாங்காதீர்கள்.. (Romans:12:14,16-19).

அவர் கொரிந்தியர்களுக்கு (Corinthians) எழுதிய கடிதத்தில் அன்பின் சிறப்பைப் பற்றி மிக அருமையாக இவ்வாறு கூறுகிறார்:

மண்ணோர் மொழிகளிலும் விண்ணோர் மொழிகளிலும் நான் பேசினும்,
அன்பு எனக்கு இல்லையேல் ஒலிக்கும் வெண்கலமும்,
ஓசையிடும் தாளமும் போலாவேன்.
இறைவாக்கு வரம் எனக்கு இருப்பினும்
மறைபொருள் யாவும் எனக்குத் தெரிந்தாலும்
அறிவு அனைத்தும் எனக்கு இருந்தாலும்,
மலைகளைப் பெயர்த்தகற்றும் அளவுக்கு விசுவாசம் என்னிடம் நிறைந்திருப்பினும்
அன்பு எனக்கு இல்லையேல் எனக்கு பயன் ஒன்றுமில்லை..
எனக்குள்ளதெல்லாம் நான் வாரி வழங்கினும்
எரிப்பதற்கு என் உடலைக் கையளித்தாலும்
அன்பு எனக்கு இல்லையேல்,
எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அதுமட்டுமல்ல.. மேலும் அவர் கூறுகிறார்

அன்பு பொறுமையுள்ளது,
பரிவுள்ளது.
அன்பு அழுக்காறுகொள்ளாது.
பெருமை பேசாது,
இறுமாப்பு அடையாது,
இழிவானதை செய்யாது,
தன்னலத்தைத் தேடாது,
சீற்றத்திற்கு இடந்தராது,
வர்மம் வைக்காது.
அநீதியைக் கண்டு மகிழ்வுறாது;
உண்மையைக் கண்டு உளம் மகிழும்.
அனைத்தையும் தாங்கிக்கொள்ளும்;
பிறர் மீது நல்லெண்ணம் இழப்பதில்லை;
நம்பிக்கையில் தளர்வதில்லை;
அனைத்தையும் பொறுத்துக்கொள்ளும்..
அன்புக்கு என்றும் முடிவு இராது.

ஆம் நண்பர்களே..

நாம் ஒருவரொருவர் மேல் வைக்கும் அன்பு அத்தனை சிறந்தது, உகந்தது..

இதைத்தான் யேசுவும் கூறுகிறார்: நான் உங்கள்மேல் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் (அருளப்பர்:13.34).

அன்பு செய்வோமா?

சிந்தனைகள் தொடரும்..
Wednesday, March 08, 2006

தவக்கால சிந்தனைகள் 5

தவக்காலம்..

இக்காலம் ஒவ்வொரு கிறிஸ்துவனின் வாழ்க்கையிலும் சாதாரணமாக ஒவ்வொரு ஆண்டு வந்து செல்லும் காலமல்ல..

எல்லா வருடமும் வரும் நாற்பது நாட்கள்தானே என்று நாம் நினைத்தால் அது அப்படித்தான் அமையும்.

அப்படியல்லாமல் நான் கடந்த ஈஸ்தர் பெருநாளிலிருந்து சென்று மறைந்த மாதங்களில் நான் கடவுளிடம் ஒன்றித்திருந்திருக்கிறேனா அல்லது அவரை விட்டு வெகுதூரம் சென்றுவிட்டேனா என்பதை சிந்தித்துப் பார்த்து தேவைப்பட்டால் அதற்காக மனம் வருந்த ஏதுவான காலம் இத்தவக்காலம் என்று நினைத்தால்..

பழைய வேதாகமத்தில் யோவேல் ஆகமம் 2.12ல் ஆண்டவர் கூறுகிறார்: ‘இப்போதாவது நோன்பிருந்து அழுது புலம்பிக்கொண்டு உங்களு முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வாருங்கள்.. உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள். ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர். நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர்.’

ஆம் நண்பர்களே..

இறைவன் அளவில்லா இரக்கமும் கருணையும் உள்ளவர்..

நம்முடைய மனித இயல்பின் காரணமாக நாம் அவரை விட்டு பிரிந்து செல்கிறோம். அதில் தவறொன்றுமில்லை.. அது நம்முடைய மனித இயல்பு..

நம்முடைய அன்றாட வாழ்வில் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு தவறிவிடுகிறோம்..

இறைவனுடைய வார்த்தைகளை செவிமடுக்க மறுத்து சிற்றின்பத்தில் திளைத்துப் போகிறோம்..

இறைவனுடைய வார்த்தைகள் எத்தகையது என்று சற்று நேரம் பார்ப்போமா?

யேசு கிறிஸ்துவை, கிறிஸ்துவ மதத்தை அழித்துவிட்டுத்தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தார் புனித சின்னப்பர் (St.Paual)  என்பது நமக்குத் தெரியும்.

அவரையும் ஆட்கொண்டு தன்னைப் பற்றி யூதர்களுக்கு மட்டுமல்லாமல் புறவினத்தாருக்கும் போதிக்க தேர்ந்தெடுத்தார் இறைவன் என்பதும் நமக்குத் தெரியும்.

அவர் எபிரேயருக்கு (Hebrews) எழுதிய மடல் 4:12-13ல் இவ்வாறு கூறுகிறார்:

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் மிக்கது, இரு பக்கமும் கருக்கு வாய்ந்த எந்த வாளினும் கூர்மையானது. ஆன்மாவின் உள்ளாழத்தையும் ஆவியின் உள்ளாழத்தையும் ஊடுருவுகிறது. மூட்டு, முளைவரை எட்டுகிறது; உள்ளத்தின் கருத்துக்களையும் எண்ணங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. அவரது பார்வைக்கு மறைந்திருக்கும் படைப்பெதுவும் இல்லை!’

ஆம்!

இறைவனின் வார்த்தகைள் நம்முடைய உள்ளத்தில் கடந்த ஒரு வருடமாய் மண்டிக்கிடக்கும் துவேஷங்களை, கோபதாபங்களை, ஆணவங்களை, கோபத்தை, பிணக்குகளை போக்கி நம் உள்ளத்தை தூய்மையானதாக, இறைவனை மீண்டும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக மாற்றும் வல்லமையுண்டு என்பதை நாம் உணரவேண்டும்..

இதுதான் இன்றைய சிந்தனை..


சிந்தனைகள் தொடரும்..

Tuesday, March 07, 2006

தவக்கால சிந்தனைகள் 4தவக்காலத்தில் நம்மில் (கிறிஸ்துவர்கள்) பெரும்பாலோனோர் ஒரு சந்தி (உண்ணா நோன்பு) இருப்பது வழக்கம்.

திருச்சபை நியமத்தின்படி பதினெட்டு வயதுக்கு மேற்பட்டு அறுபது வயதுக்கு உட்பட்டோர் அனைவரும் தவக்காலத்தில் வாரத்தில் ஒரு நாளாவது சுத்தபோசனம் மற்றும் ஒரு சந்தி இருக்க வேண்டும்.

இத்தகைய உண்ணா நோன்பு இருப்பது காலங்காலமாக நடந்து வரும் ஒன்றுதான்.

பழைய வேதாகமத்தில் இறைவன் மோயீசனை நோக்கி தனக்கும் இஸ்ராயேல் மக்களுக்கும் இடையில் ஏற்படவிருக்கும் உடன்படிக்கை வார்த்தைகளை எழுதி வைத்துக்கொள்ளும்படி பணித்தார்.

அப்போது மோயீசன் இறைவன் குறிப்பிட்ட இடத்திலேயே நாற்பது பகலும் நாற்பது இரவுமாய் அவரோடு தங்கி உண்ணாமலும் குடியாமலும் இருக்க இறைவனும் உடன்படிக்கையின் பத்து வாக்கியங்களையும் கற்பலகைகளில் எழுதியருளினார் என்று கூறப்பட்டுள்ளது (யாத்திராகமம் – Exodus 34:27-28).

யேசு கிறிஸ்துவும் தன்னுடைய பொது வாழ்வைத் துவக்குவதற்கு முன் பாலைவனத்தில் நாற்பது பகலும் நாற்பது இரவும் உண்ணா நோன்பிருந்தார் என்று புதிய வேதாகமம் கூறுகிறது (மத்தேயு 4:2).

அவர் நாற்பது நாட்களின் முடிவில் பசியுற்றிருக்கும்போது சோதிப்பவன் (சாத்தான் என்று கொள்ளவேண்டும்) அவரை அணுகி ‘நீர் கடவுளின் மகனானால் இந்த கற்கள் அப்பம் ஆகும்படி கட்டளையிடும்’ என்றான்.

அதற்கு யேசு மறுமொழியாக, ‘மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர் வாழ்கிறான் என்று எழுதியிருக்கிறதே’ என்றார்.

தவக்காலத்தில் கிறிஸ்துவர்கள் நோன்பிருப்பதன் பின்புலம் இதுதான். உயிர்வாழ இறைவனின் வாக்கு எத்தனை முக்கியம் என்பதை நமக்கு நாமே நிரூபணம் செய்துக்கொள்ளவுமே நாம் நோன்பு இருத்தல் அவசியம்.

ஆனால் நான் நோன்பு இருக்கிறேன் என்று என்னை சுற்றியுள்ளவர் அனைவருக்கும் அறிக்கையிட வேண்டும் என்பதில்லை..

இதைக் குறித்து சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒரு சுவையான தகவலைத் தருகிறார்கள்:

யூதர்களுள் பரிசேயர்கள் (Pharisees) எனப்படுவோர் வாரத்தில் இரண்டாவது மற்றும் ஐந்தாவது நாட்களில்தான் நோன்பிருப்பார்களாம்.

ஏனென்று கேட்டால் மோயீசன் இறைவன் கட்டளைகளைப் பெற சீனாய் மலைமேல் ஒரு வாரத்தின் ஐந்தாம் நாள் ஏறிச் சென்று வேறொரு வாரத்தின் இரண்டாம் நாள்தான் திரும்பி வந்தார். அதன் நினைவாகவே நாங்கள் இங்ஙனம் நோன்பிருக்கிறோம் என்பார்களாம்!

ஆனால் ராய்ச்சியாளர்களின் கூற்றுபடி ஜெருசலேமில் ஒவ்வொரு வாரத்தின் இரண்டாம் மற்றும் ஐந்தாம் நாளில் சந்தை கூடுவது வழக்கம். அந்நாட்களில் ஜெருசலேமை சுற்றியிருந்த நாட்டுப்புறங்களிலிருந்து நகருக்கு வந்து பெருந்திரளான மக்கள் கூடுவர்.

அவர்களைக் கவரும் விதமாக பரிசேயர்கள் தங்களுடைய தலைமுடியை ஒழுங்குபடுத்தாமல், சோர்ந்த முகத்துடன் அலைந்து தாங்கள் நோன்பிருப்பதை எல்லோருக்கும் காட்டிக்கொள்வார்கள்!

நம்மில் பலரும் இவர்களைப் போல்தான்..

நம்முடைய இச்செயலை கண்டித்துத்தான் யேசுவும் இவ்வாறு கூறுகிறார்:

‘நீங்கள் நோன்பு இருக்கும்போது வெளி வேடக்காரரைப்போல முகவாட்டமாய் இருக்க வேண்டாம். அவர்கள் நோன்பு இருப்பதை மனிதர் பார்க்கும்பொருட்டுத் தங்கள் முகத்தை விகாரப்படுத்திக் கொள்கின்றனர்... நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு. அப்போது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல் மறைவாயுள்ள உன் தந்தைக்கு (இறைவனுக்கு) மட்டும் தெரியும். அவரும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார். மத்தேயு:6:16).

உண்ணா நோன்பு என்பது நம்மை நாமே வறுத்திக்கொள்வது என்பது ஒருபுறம். ஆனால் அது நம் உடலை மட்டுமல்ல உள்ளத்தையும் தூய்மைப் படுத்துவதாக அமைந்தால் நல்லது..

சிந்திப்போம்..

சிந்தனைகள் தொடரும்
Monday, March 06, 2006

தவக்கால சிந்தனைகள் - 3


இறைவன் நம் உள்ளத்தில் வசிக்கிறார் என்பதை விசுவசிப்பது அவரவர் கண்ணோட்டத்தைப் பொறுத்தது.

உள்ளம் என்பதே மனித உடலில் எங்கிருக்கிறது என்பதை வரையறுக்க முடியாமலிருக்கும்போது அதில் இறைவன் வசிக்கிறார் என்பதை எப்படி நம்புவது என கேட்பவர்களுக்கு..

நாம் எந்த தீச்சயெலை சிந்திக்கும்போதும், அல்லது அதை செயல்படுத்த முனையும்போது நம் உள்ளிருந்து, ‘ஏய் நீ நினைப்பது சரியில்லை, வேண்டாம்.’ ஒரு குரல் கேட்கிறதே..

‘அதெல்லாம் பரவாயில்லை..நீ சும்மாயிரு.’ என்று நம்மில் பலரும் அதை அடக்கிவிட்டு நம் வழியில் செல்கிறோமே..

அதை செய்து முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் வீட்டிலிருப்பவரிடமிருந்து அதை மறைக்க வேண்டுமென்று தீர்மானித்து, பிறகு ஒரு குற்ற உணர்வால் தாக்கப்பட்டு மனம் அலைபாய நிம்மதியிழந்து தவிக்கிறோமே...

‘சொல்லிவிடு..’ என்ற குரல் ஒரு புறமும்.. ‘ஏய் வேணாம். சொல்லிட்டு அப்புறம் வம்புல மாட்டிக்காதே..’ என்று வேறொரு புறமும் நம்முள்ளிருந்தே இரு வேறு குரல்கள் மாறி, மாறி ஒலிக்கிறதே...

அதை நீங்கள் மனசாட்சி என்று சொல்வீர்களோ இல்லை வேறென்னவென்று சொல்வீர்களோ தெரியவில்லை...

ஆனால் அதுதான் நம் உள்ளம்..

அங்கு அமர்ந்திருப்பவரைப் பொருத்துதான் நாம் அவ்வப்போது கேட்கும் குரலும் அமைந்திருக்கும்..

அதில் இருப்பது இறைவனாயிருந்தால்..

நம்மை தவறு செய்ய அனுமதிக்க மாட்டார்..

ஆனால், இறைவன் ஒரு காவல்துறை அதிகாரியல்ல..

நாம் தவறு செய்தவுடனே பிடித்து, சிறையிலடைப்பதற்கு..

அவர் ஒரு அன்பான வழிகாட்டி, அறிவுரையாளர், ஆசிரியர், நம் தந்தையும் தாயுமாய் இருப்பவர்..

நாம் தவறான பாதையில் செல்ல விழையும்போது நமக்கு அறிவுரை கூறி அதிலிருந்து நம்மை நேரான பாதைக்கு திரும்பி வந்துவிடு என்று அன்புடன் அழைப்பவர்.

நாம் அதை கேட்காமல் நம்முடைய பாதையிலேயே செல்வோம் என்று பிடிவாதம் பிடிக்கும் சமயங்களில் அதையும் பொறுமையுடன் பார்த்துக்கொண்டு.. ‘போ.. இருபுறமும் இருக்கும் நந்தவனத்தைப் பார்த்துக்கொண்டு நீ செல்லும் பாதையின் இறுதியில் நீ விழப்போகும் அதளபாதாளத்தில் விழுந்துவிடாமல் எச்சரிக்கையுடன் போ மகனே, மகளே..’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறவர்.

வழியில் கிடைக்கும் அற்ப இன்பத்திற்காக நாம் செல்லும் பாதை எங்கே நம்மை இட்டுச் செல்கிறதென்பதை அறியாமல் திரும்பி வர இயலாத தூரத்தை அடைந்தப் பிறகுதான் நம்முடைய அறிவீனம் நமக்கு புரிகிறது.. ‘இறைவா, இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று அரற்றுகிறோம்..

‘என்னுடைய கைகளை உதறி விட்டுவிட்டு சென்றாயே.. இப்போது ஏன் என்னை உதவிக்கு அழைக்கிறாய்? நான் வரமாட்டேன் போ..’ என்று என்றாவது நம் அரற்றலை, கூக்குரலை கேட்காமல் இருந்திருக்கிறாரா இறைவன்?

நீ எந்த இறைவனைக் கூப்பிடுகிறாய்? நீ எம்மதத்தைச் சார்ந்தவன், நீ அவரை வழிபடுகிறவனாயிற்றே, இவரை கும்பிடுகிறவனாயிற்றே? என்று என்றாவது, நம்மை கைவிட்டிருக்கிறாரா?

இறைவன் ஒருவரே.. அவரே நம் தந்தை, ஆசான், குரு, வழிகாட்டி..

இதுதான் இன்றைய சிந்தனை..

சிந்திப்போம்..

சிந்தனைகள் தொடரும்..

Sunday, March 05, 2006

சிலுவைப் பாதை - அறிமுகம்


விபூதிப் புதன் (Ash Wednesday) துவங்கி புனித வெள்ளி (Good Friday) வரை வருகின்ற ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் யேசு கிறிஸ்து யூதர்களால் பிலாத்துவிடம் (Pilate) கையளிக்கப்பட்டு, சிலுவை சுமத்தப்பட்டு, கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டு மரித்ததை தியானிக்கும் வழிபாடு உலகெங்கிலுமுள்ள எல்லா கத்தோலிக்க தேவாலயங்களிலும் நடத்தப்படுகின்றது.

யேசு கிறிஸ்துவின் பாடுகளை (Passion) பதினைந்து ஸ்தலங்களாக (Stations) பிரித்து சிலுவைப் பாதை என்று அழைக்கப்படுகிறது.

இவ்வழிபாட்டின் தலைவரான குருவும் மூன்று சிஷ்யப் பிள்ளைகளும் (மாணவப் பருவத்திலிருக்கும் சிறுவர்கள்) ஒவ்வொரு ஸ்தலத்திற்கு முன்பும் சென்று நிற்க குழுமியிருக்கும் விசுவாசிகள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று குரு சொல்லும் பிரார்த்தனைகளுக்கு மறுமொழி கூறுவர்.
ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒரு குறிப்பிட்ட பிரார்த்தனையும், குருவின் சிறு பிரசங்கமும் (Speech) இறுதியில் இரு வரி பாடலும் இருக்கும்.
இனி வரும் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் (மார்ச் 10 முதல் ஏப்ரல் 7 வரை) இச் சிலுவைப் பாதையின் ஸ்தலங்களைப் பற்றி சுருக்கமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

இன்று இப்பாதையின் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்.
யேசு கிறிஸ்து இப்பாடுகளை அனுபவிப்பதற்கு முந்தைய தினம் இரவில் தன்னுடைய பன்னிரு சீடர்களுள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத் (Judas Iscariot – இவருக்கு Judas the Traitor என்ற பட்டப் பெயரும் இருந்தது (St.John 18:2)) என்பவரால் முத்தமிட்டு காட்டிக்கொடுக்கப்பட்டார்.

தான் தன்னுடைய சீடர்களுள் ஒருவராலேயே காட்டிக் கொடுக்கப்படுவேன் என்பதை யேசு கிறிஸ்து இந்நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பே தீர்க்கதரிசனமாக தன்னுடைய சீடர்களுக்கு அறிவித்தார் என்று நான்கு சுவிசேஷகர்களுமே தங்களுடைய சுவிசேஷங்களில் (Gospels) கூறியுள்ளனர் (St.John 13:21-30 – St.Mathew:26:20-25; St.Mark 14:17-21 & St.Luke:22:21-23).

யேசு கிறிஸ்து அவர் வாழ்ந்த காலத்தில் வெளிப்படையாகவே யெருசலேம் தேவாலயங்களிலும், செபக்கூடங்களிலும் போதித்திருந்த சூழலில் அவரை ஏன் வேறொருவர் காட்டிக் கொடுக்க வேண்டும் என்றம் எண்ணம் எழலாம்.
யூத பொதுமக்கள் யேசுவின் போதனைகளை நம்பி அவரை விசுவசிக்க ஆரம்பித்தனர். ஆகவே அதுவரை தாங்கள் வகுத்திருந்த சட்டதிட்டங்களை அனுசரித்து தாங்கள் கூறியதற்கேற்ப வாழ்க்கை நடந்துக்கொண்டிருந்த யூத மக்கள் இனி எங்கே யேசுவின் பின்னால் சென்றுவிடுவார்களோ என்று அஞ்சிய பரிசேயர், சதுசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்கள் யேசுவை அவர் போதித்துக்கொண்டிருந்த சமயங்களில் நேரடியாக கைது செய்து விசாரனைக்குட்படுத்த அஞ்சினார்கள்.

ஆகவே அவர்கள் முற்றிலும் எதிர்பார்க்காத சமயத்தில் யேசுவின் சீடர்களுள் ஒருவரான யூதாஸ் இஸ்காரியோத்தே முன்வந்து அவரை நான் உங்களுக்குக் காட்டிக் கொடுக்கிறேன் எனக்கு என்ன தருவீர்கள் என்று கேட்டபோது அவர்கள் மகிழ்ந்து முப்பது வெள்ளிக் காசுகளை அவனுக்கு பரிசாகக் கொடுப்பதாக வாக்களித்தார்கள்.

ஆகவேதான் பொதுமக்கள் யாரும் இல்லாத இரவு நேரத்தில் யேசுவை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று யூதாசுக்குக் கட்டளையிட்டிருக்கலாம்.
யேசு காட்டிக்கொடுக்கப்பட்டதும் யூதாசுடன் சென்ற போர் வீரர்கள் அவரைக் கைது செய்து அப்போது தலமைக் குருவாகவிருந்த
அன்னாஸ் மற்றும் கைப்பாஸ் என்பவர்களிடம் விசாரனைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் யேசுவிடம் குற்றம் ஒன்றும் கண்டுபிடிக்க முடியாததால் அப்போது ஜெருசலேமின் ஆளுநராகவிருந்த
பிலாத்துவிடம் கையளித்து அவரைக்கொண்டே யேசுவுக்கு மரண தண்டனையை அளிக்கும் எண்ணத்துடன் அவரிடம் யேசுவை அழைத்துச் சென்றனர்.

இதிலிருந்துதான் யேசுவின் சிலுவைப் பாதைத் துவங்குகிறது..

முதல் மூன்று ஸ்தலங்களை வரும் வெள்ளிக்கிழமை பார்ப்போம்.
***

Saturday, March 04, 2006

கிறிஸ்துவ கீதங்கள் – 3


திருப்பலி வழிபாட்டில் பாடப்படும் வருகை கீதங்களில் ஒன்றைக் குறித்து கடந்த வார பதிவில் விளக்கியிருந்தேன்.

ஆலயத்தில் குழுமியிருக்கும் விசுவாசிகள் திருப்பலியில் தகுந்த முறையில் பங்குபெற தங்களுடைய குற்றம் குறைகளை நினைத்து திருச்சபையின் சகல புனிதர்களையும் ஆலயத்தில் தங்களோடு குழுமியிருக்கும் சகோதர, சகோதரிகளையும் தங்களுடைய குற்றங்களுக்காக இறைவனிடம் மன்னிப்பு வேண்டி மன்றாடும்படி கேட்டுக்கொள்வார்கள்.

அதற்குப் பிறகு, வழிபாட்டின் இடையில், அதாவது இறைவனின் நற்செய்தியை (Gospel) படிப்பதற்கு சற்று முன்னால் தியானப் பாடல் என்ற கீதம் பாடப்படும்.

இது இறைவனுடைய மகிமையையும் அவர் நமக்கு அளித்த நற்கொடைகளையும் நினைத்து அவரைப் போற்றி, புகழ்ந்து பாடுவதாக அமையும்.

நாம் அன்றாடம் செய்த தவறுகளை, குற்றங்களை மனதில் நினைத்துக் கொண்டு அதற்காக இறைவனிடம் ‘என்னுடைய குற்றங்குறைகளைப் பாராமல் எங்களை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்று மனம் உருகி கெஞ்சுவதைப்போலவே இப்பாடல்கள் இயற்றப்பட்டிருக்கும்.

இப்பாடல்களுக்கென அமைக்கப்பட்டிருக்கும் இசையும் நாம் மனமுருகி பாடுவதற்கு ஏற்ப அமைந்திருக்கும்.

இனி இவற்றில் எனக்கு மிகவும் பிடித்த கீதத்தைப் பார்ப்போம்.


நெஞ்சில் ஒரு சங்கீதமே இறைவா
நித்தம் அது உனதாகுமே
நேசம் உன்னில் நான் காண்பதால்
உன்னோடு உறவாட என் ஜீவன் ஏங்குமே.

உன்னை காணாமலே உடன் பேசாமலே
நான் தவித்திடுவேன்
எந்தன் நிலை மாறியே வழி தடுமாறியே
நான் கலங்கிடுவேன்
நீ இல்லாமல் உயிர்வாடுதே
என் உணர்வோடு போராடுதே
உயிராக வா உறவாக வா
அழைத்தேன் தொழுதேன் உயிரே நீ வா வா

என் கோயில் தெய்வம் அது நீயானதால்
உன்னை வணங்கிடுவேன்
உயிர் தாரமே நெஞ்சில் நீயானதால்
உன்னில் மயங்கிடுவேன்
நீ இல்லாமல் நானில்லையே
உந்தன் நினைவின்றி வாழ்வில்லையே
நிழலாக வா நீங்காமல் வா
அழைத்தேன் தொழுதேன் அன்பே நீ வா வா..

இக்கீதத்தை ஆலயப் பாடகர் குழுவோடு சேர்ந்து நான் பாடிய சமயங்களில்...

என் இதயத்திலிருந்தவர் யார்?

இறைவனா?

சாத்தானை விட்டுவிடுகிறாயா?

அதன் ஆரவாரத்தை விட்டுவிடுகிறாயா?

விட்டுவிடுகிறேன்.. விட்டுவிடுகிறேன் என்று என் குழந்தைப் பருவத்தில் நான் முதன்முதலாய் திருச்சபையின் அங்கத்தினராக ஏற்றுக்கொள்ளப்பட்டபோது எனக்கு பதிலாக என் ஞானப் பெற்றோர் அறிவித்தனரே..

அதை நானும் வழிமொழிகிறேனா...?

இல்லை...

நீ இல்லாமல் நானில்லையே
உந்தன் நினைவின்றி வாழ்வில்லையே..

என்பதை வெறும் வாய் வார்த்தையாய் மட்டும் சொல்கிறேனா?

என்னை நானே கேட்டுப் பார்க்கிறேன்..

உயிராக வா உறவாக வா
அழைத்தேன் தொழுதேன் உயிரே நீ வா வா

ஆம் தேவனே..

என் உள்ளத்தில் இப்போதிருப்பது யாரானாலும் இனி இருக்க வேண்டியது நீதானய்யா..

வாரும்.. உயிராக, உறவாக வாரும்..

என்று நான் மட்டுமல்ல ஆலயத்தில் குழுமியிருக்கும் விசுவாசிகள் அனைவரும் இறைவனை நோக்கி அழைக்கும் கீதம் இது..

*******

Friday, March 03, 2006

தவக்கால சிந்தனைகள் –2


தவக்காலம் துவங்கிவிட்டது..

இத்தவக்காலத்தில் நான் என்ன செய்யவேண்டும்?

நான் இறைவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டேன். அவர் காட்டிய அன்புப் பாதையிலிருந்து தடம் மாறி என் பாதை எங்கோ என்னை அழைத்துச் செல்கிறது..

இறைவனுடன் ஒன்றித்திருக்கும்போது என் மனதிலிருந்த அமைதி, சந்தோஷம், என் குடும்பத்திலிருந்த ஒற்றுமை, நிம்மதி இப்போது இல்லை என்பதை நான் உணர்கிறேன்..

நான் இறைவனுடைய பாதைக்குத் திரும்பி வரவேண்டும்..

நான் செய்த பாவச் செயல்கள் இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன என்று நான் அஞ்சுகிறேன்.

நான் திரும்பிவரும்போது இறைவன் என்னை ஏற்றுக்கொள்வாரா?

சரி, அவர் என்னை ஏற்றுக் கொண்டாலும் நான் இதுவரை செய்த பாவங்களின் சுமை என்னை விட்டு நீங்குமா? என் மனதிலிருக்கும் குற்ற உணர்வுகள் என்னை மன நிம்மதியுடன் இருக்க அனுமதிக்குமா?

இவைதான் நம் பலருடைய மனதிலும் கிடந்து நம்மை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன..

நான் எம்மதத்தைச் சார்ந்தவனாயிருந்தாலும் நான் இறைவன் உண்டு என்று நம்புகிறவனாயிருந்தால் என்னை நிச்சயம் இத்தகைய உணர்வுகள் ஆட்டுவிக்கும் என்பதில் சந்தேகமில்லை..

ஏனெனில் நான் ஒரு சராசரி மனிதன். உடல் இச்சைகளால் ஆட்கொள்ளப்பட்டு நொடிக்கொருமுறை இறைவனுடைய கட்டளைகளுக்கு எதிராக நடப்பவன்..

பாவம் என்பது ஏதோ கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்பவைதான் என்றல்ல..

என்னுடைய தேவைகளுக்கு மேல் ஆசைப்படுவதும் ஒரு பாவம்தான்..

என்னுடைய தேவைகளுக்கு மேல் ஆசைப்படும்போது அதற்குத் தேவையான பணம் மற்றும் பொருட்களின்மேல் ஆசை ஏற்படுகிறது.

அது எனக்கு போதுமானதாக இல்லாதபோது அல்லது என்னால் அடைய முடியாமல் போகும்போது நான் தவறான வழிகளில் அவற்றைத் தேட முயல்கிறேன்..

இறைவன் நான் செய்த தவறுகளை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் நான் ஏதாவது வகையில் அதற்கு முயற்சி செய்ய வேண்டாமா?

இன்று முதல், இத்தவக்காலத்தில், நான் அதைத்தான் செய்யப் போகிறேன்..

என்னைப் பாவத்திற்கு இட்டுச் செல்லும் தவறுகள் பலவற்றிற்கும் முதன்மைக் காரணமாக இருப்பது என்னுடைய பேராசைதான்..

அதை நான் விட்டுவிட முயற்சி செய்யப் போகிறேன்..

சிந்தனைகள் தொடரும்..

Thursday, March 02, 2006

தவக்கால சிந்தனைகள்


இன்று (1/3/2006) விபூதிப் புதன்!

‘மண்ணிலிருந்து வந்த நீ மண்ணுக்கே போவாய்’ என்று கூறி குருவானவர் (பாதிரியார்) வழிபாட்டில் கலந்துக்கொண்ட ஒவ்வொரு கத்தோலிக்க விசுவாசியினுடைய நெற்றியிலும் சாம்பலைப் பூசி வர இருக்கும் நாற்பது தவ நாட்களைத் துவக்கி வைக்கும் நாள்.

விபூதிப் புனத்தன்று குருவானவர் விசுவாசிகளின் நெற்றியில் சிலுவைக் குறியிட்டு பூசப்படும் சாம்பல் கடந்த வருடத்தில் குருத்து ஞாயிறு (Palm Sunday) அன்று உபயோகப்படுத்த தென்னங்கீற்றுகளை எரித்து உண்டாக்கப்பட்டதாக இருக்கும். இது காலங்காலமாக கத்தோலிக்கத் திருச்சபைக் கடைபிடித்துவரும் சடங்காகும்.

இதை எதை குறிக்கிறது?

பழைய வேதாகம காலக்கட்டத்தில் மன்னர்கள் வழிதவறி கடவுளுக்கெதிராக பாவம் செய்தபோதெல்லாம் இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் அவர்களை எச்சரித்து மனந்திரும்புங்கள் என்று அறிவுறுத்தினார். பாவம் செய்த மன்னர்கள் அரச உடைகளைக் களைந்து சாமான்யராய் சாக்கால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்து, தரையில் சாம்பலைப் பரப்பி அதன் மேல் அமர்ந்து ஒரு குறிப்பிட்ட நாட்கள் உண்ணா நோன்பிருந்து கடவுளின் மன்னிப்பைக் கோருவது வழக்கமாயிருந்தது..

விபூதிப் புதன் துவங்கி யேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஈஸ்டர் பெருநாள்வரை நாற்பது நாட்கள் தவமுயற்சிகளில் ஈடுபட்டு இறைவனின்பால் திரும்புங்கள் என்பதை அறிவுறுத்துகிறது இச்சடங்கு.

யேசு கிறிஸ்துவின் போதகப் பணி துவங்கப்படவிருந்த காலத்திற்கு சற்று முன்பு ஸ்நாக அருளப்பர் (St.John the Baptist) பாலைவனங்களில் தோன்றி இஸ்ராயேல் மக்களை பாவமன்னிப்படைய மனந்திரும்புங்கள் என்று யோர்தான் (Jordan) ஆற்றை அடுத்த நாடுகளிலெல்லாம் போதனை செய்தார்.

இதைப்பற்றி இசையாஸ் என்னும் தீர்க்கதரிசி  கூறியதாவது:

“பாலைவனத்தில் ஒருவன் கூக்குரல் ஒலிக்கிறது
ஆண்டவர் வழியை யத்தப்படுத்துங்கள்
அவர்தம் பாதைகளைச் செம்மைப்படுத்துங்கள்
பள்ளத்தாக்குகளெல்லாம் நிரவப்படுக
மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படுக
கோணலானவை நேராகவும்
கருடுமுரடானவை சமமான வழிகளாகவும் ஆக்கப்படுக
மனிதரெல்லாரும் கடவுளின் மீட்பைக் காண்பர்.” (லூக்காஸ் 3:4-6)

இஸ்லாம் சகோதரர்கள் ஈத் பெருநாளுக்கு முன்வரும் நாற்பது நாட்களில் உண்ணா நோன்பிருப்பதுபோல் அத்தனைக் கடினமான நோண்பைக் கத்தோலிக்கத் திருச்சபை தன் விசுவாசிகளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை..

முடிந்தவரை சுத்தபோசனத்தை (மரக்கறி உணவு) கடைபிடித்தல், தேவையற்ற பழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றைத் தவிர்த்தல், முடிந்தால் ஒருசந்தி இருத்தல் அதாவது, குறைந்தபட்சம் வாரத்தில் ஒருநாள், யேசு மரித்த வெள்ளிக்கிழமைகளில், காலை உணவைத் தவிர்த்தல் போன்ற சிறு சிறு தவ முயற்சிகளைக் கடைப்பிடியுங்கள் என்று அழைக்கிறது.

அத்துடன் நின்றுவிடாமல் இந்நற்செயல்கள் மூலம் மிச்சமாகும் பணத்தை சேமித்து தவக்கால இறுதியில் ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யவும் தன் விசுவாசிகளைத் திருச்சபை அழைக்கிறது..

****