Saturday, February 18, 2006

கிறீஸ்துவப் பாடல்கள்

கிறீஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது பாடல்கள். பாடல்கள் என்பதை விட கீதங்கள் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

CSI தேவாலயங்களில் பாடும் கீதங்கள் எல்லோரும் கரங்களைத் தட்டி பாடும் வகையில் ரிதமிக்கான மேற்கத்திய இசையில் அமைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்தில் கூடியிருக்கும் அனைவரும் லீட் பாடகர்கள் எனப்படும் இருவர் அல்லது மூவர் அடங்கிய பாடகர் குழுவினர் மற்றும் இசைக்குழுவினருடன் சேர்ந்து கரங்களைத் தட்டி உற்சாகத்துடன் பங்கேற்று பாடுவார்கள். இசைக்கருவிகளும் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் கிட்டார், வயலின், பியானோ ஆர்கன் போன்றவையாயிருக்கும். ஆகவே இக்கீதங்கள் பாடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் கேட்பவருக்கும் தனியொரு உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும்..

ஆனால் கத்தோலிக்க கிறீஸ்துவ தேவாலயங்களில் பாடப்படும் கீதங்கள் பெரும்பாலும் நம்முடைய கர்நாடக இசையைச் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கும். இகீதங்களைப் பாடுவதற்கென்றே தேர்ச்சிப்பெற்ற பாடகர் குழுவும், இந்திய இசைக்கருவிகளான ஆர்மோனியம் (இப்போதெல்லாம் காசியோ, சோனி கீபோர்டுகள் பிரபலமாகி வருகின்றன), தபேலா போன்றவற்றை இயக்கக்கூடிய இசைக்குழுவும் ஒவ்வோரு தேவாலயத்திலும் இருப்பார்கள். இவர்கள் பாடும் கீதங்களில் தேவாலயத்தில் வழிபாட்டுக்கென வருபவர்கள் கலந்துக்கொள்வது அபூர்வம். இதற்குக் காரணம் பாடல்களின் இசையமைப்பும் ஒரு காரணமாயிருக்கும். எந்தவொரு கீதத்தையும் முன் அனுபவம் இல்லாமல் பாடிவிட முடியாது. தினந்தோறும் அல்லது வாரத்திற்கொருமுறையாவது தேவாலய வழிபாடுகளில் பங்குகொள்பவர்களால் மட்டுமே பாடகர் குழுவினருடன் சேர்ந்து தாளம் தப்பாமல் பாடமுடியும்.

CSI தேவாலயங்களில் பாடப்படும் கீதங்களில் உற்சாகம் சற்றே தூக்கி நிற்கும் என்றால் கத்தோலிக்க தேவாலயங்களில் பாடப்படும் கீதங்களில் உருக்கம் நிறைந்திருக்கும். சில கீதங்களை¨ உணர்ந்து பாடும் நேரத்தில் மனம் உருகி நெகிழ்ந்து போகவும் முடியும். இத்தகைய பாடல்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளோரை வழிபாட்டின் நாயகனான இறைவனை நோக்கி  தங்களுடைய அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன என்றால் மிகையாகாது.

CSI தேவாலயங்களில், பெரும்பாலும் அவர்கள் பாடும் கீதங்கள் கிறீஸ்துவை புகழும் வகையில் இயற்றப்பட்டிருக்கும். ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களில் கிறீஸ்துவின் அன்னையான கன்னி மேரி(St.Mary), அவருடைய வளர்ப்புத்தந்தை சூசை (St.Joseph) மற்றும் கத்தோலிக்க திருச்சபையால் புனிதர்கள் (Saints) என அங்கீகரிக்கப்பட்டுள்ள பலரையும் புகழ்ந்து இயற்றப்பட்டிருக்கும்.

இனிவரும் எல்லா சனிக்கிழமைகளிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் பாடப்பட்டு வரும் எனக்குப் பிடித்த சில கீதங்களைப் பற்றி எழுதுவேன்.

இனி இன்றைய கீதத்திற்கு செல்வோம்:

செவிசாய்க்கும் இறைவன் நம் அருகில் இருக்கின்றார்
துயர் என்றால் போதுமே அதை தகர்த்திட வருவார்
சிறு துயர் என்றால் போதுமே நம்மைத் தாங்கிட வருவார்
செவிசாய்க்கும் இறைவன் இறைவன் இறைவன்

கூட்டினுள் பதுங்கிடும் நத்தையைப் போல்
துயர் கண்டு அச்சம் தேவையில்லை
அஞ்சாதே அஞ்சாதே எனத் தேற்றும்
ண்டவர் துணையை நிதம் நினைத்தால்
நெஞ்சினில் துணிவினை தினம் சுமந்து
எதிர்வரும் சோதனை முறியடிப்போம்
இறைவனின் அருட்கரம் தொடர்கின்ற வேளையில்
நன்மைகள் வாழ்வினில் பெருகிடுமே

செவிசாய்க்கும் இறைவன்...

விழிகளில் தேங்கிடும் நீர் கண்டால்
அன்பினால் தாய் அதை துடைத்திடுவாள்
தான் பெற்ற சேய் வாழ தனை முழுதும்
ஒளிதரும் மெழுகாய் உருக்கிடுவாள்
கிளைகள் பல திசை விரிந்தாலும்
வேர்கள் அதனை மறப்பதில்லை
தாயினும் மேலான இறையன்பு
ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை..

செவிசாய்க்கும் இறைவன்...

இப்பாடல் என்னை ராகத்தில் அமைந்திருக்கிறதென எனக்கு கூற தெரியவில்லை..

ஆனால், கிளைகள் பல திசை விரிந்தாலும்..' என்ற வரிகளைப் இசையுடன் சேர்ந்து பாடும்போது கண்களில் கண்ணீர் நிறைந்து போனதை நான் உணர்ந்திருக்கிறேன்.. உள்ளத்தில் ஏதோ ஒன்று இனம்புரியாத ஒரு சந்தோஷம், மகிழ்ச்சி, அமைதி பாடல் முடிந்த பிறகும் நெடுநேரம் தேவாலய வழிபாடு முடிந்து வீடு திரும்பும் வரை இவ்வரிகள் உதடுகளில் தவழ்ந்திருக்கும் என்பது உண்மை..

***


12 comments:

ஜோ / Joe said...

//ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களில் கிறீஸ்துவின் அன்னையான கன்னி மேரி(St.Mary), அவருடைய வளர்ப்புத்தந்தை சூசை (St.Joseph) மற்றும் கத்தோலிக்க திருச்சபையால் புனிதர்கள் (Saints) என அங்கீகரிக்கப்பட்டுள்ள பலரையும் புகழ்ந்து இயற்றப்பட்டிருக்கும்.//

ஜோசப் சார்,
எனக்கு தெரிந்த வரை ,திருப்பலியின் வருகைப்பாடல், விவிலிய வாசகத்துக்கிடையே பாடல் ,காணிக்கை பாடல் ,நற்கருணைப்பாடல் அனைத்தும் இறைவனை மையமாக வைத்தே இருக்கும் .மாதா,சூசையப்பர் மற்றும் புனிதர்களை மையமாக வைத்து அவை இருக்காது ..திருப்பலியின் முடிவில் பாடப்படும் பாடல் மட்டுமே மாதா,சூசையப்பர் மற்றும் புனிதர்கள் குறித்த பாடலாக இருக்கலாம்.

Agent 8860336 ஞான்ஸ் said...

நானும் கூட கேட்டும்/பாடியும் இருக்கிறேன்... இப்படி

சந்தோஷம் பொங்குதே... சந்தோஷம் பொங்குதே...
சந்தோஷம் என்னில் பொங்குதே... அல்லேலுயா
இயேசு என்னை ரட்சித்தார்... முற்றும் என்னை மாற்றினார்...
சந்தோஷம் என்னில் பொங்குதே...

வழிதப்பி நான் நடந்தேன்... பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்...
ஆனால் இயேசு கைவிடார்.. தானய் வந்து ரட்சித்தார்...
அந்த இன்ப நாளில் எந்தன் பாவம் நீங்கிற்றே.. அல்லேலுயா...

(சந்தோஷம் பொங்குதே...)

நிலா said...

நல்ல பதிவு. பாடல்களைக் கேட்க முடிந்தான் நன்றாக இருக்கும்

tbr.joseph said...

வாங்க ஜோ,

திருப்பலியின் முடிவில் பாடப்படும் பாடல் மட்டுமே மாதா,சூசையப்பர் மற்றும் புனிதர்கள் குறித்த பாடலாக இருக்கலாம்.//

நீங்க சொன்னது சரிதான். நான் அதனால்தான் தேவாலயங்களில் என்றுமட்டும் குறிப்பிட்டேன். எப்போது எந்த வகை கீதங்கள் பாடப்படுகின்றன என்பதை குறிப்பிடவில்லை.

tbr.joseph said...

வாங்க ஞான்ஸ்,

வழிதப்பி நான் நடந்தேன்... பாவப் பழியதைச் சுமந்தலைந்தேன்//

எத்தனை அருமையான வார்த்தைகள்!

tbr.joseph said...

வாங்க நிலா,

கேக்க முடிஞ்சா நல்லாத்தானிருக்கும். ஆனா எப்படி கேக்கவைக்கறதுன்னுதான் தெரியலை..

G.Ragavan said...

நல்லதொரு அறிமுகம். கீதங்கள் என்று நீங்கள் சொல்வது carols-ஐயா?

பொதுவாக இந்த மாதிரி ஆலயங்களில் கேட்கும் கீதங்கள் உள்ளத்தை உருக்கும் என்பதில் ஐயமில்லை.

நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலின் பொருள் அற்புதம். குறிப்பாக கீழ்க்கண்ட இந்த வரிகள்.
//கிளைகள் பல திசை விரிந்தாலும்
வேர்கள் அதனை மறப்பதில்லை
தாயினும் மேலான இறையன்பு
ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை..
//

ஜோ / Joe said...

ஜோசப் சார்,
புரொட்டஸ்டாண்டு தேவாலயங்களில் பாடல்கள் பெரும்பாலும் கிறிஸ்துவை புகழுவதாக குறிப்பிட்டு ,தொடர்ந்த வாக்கியத்தில் கத்தோலிக்க தேவாலயங்களில் மாதா,சூசையப்பர் புனிதர்கள் பற்றிய பாடல்கள் பாடப்படுவதாக நீங்கள் குறிப்பிட்டுள்ளது ,கத்தோலிக்க தேவாலயங்களில் புனிதர்களுக்கான பாடல்களே பெரும்பாலும் பாடப்படுவதாக ஒரு தோற்றத்தை கொடுக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.

இது தவறான தகவல் .பிற சபை சகோதரர்கள் தெரியாமல் கூறுவதை ஒப்புக்கொள்வது போல் (நடைமுறையில் அப்படி இல்லையென்றாலும்)இருக்கிறது.

கத்தோலிக்க தேவாலயங்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களில் வேண்டுமென்றால் புனிதர்கள் பற்றிய பாடல் அதிகமாக இருக்கலாம் .ஆனால் வழிபாட்டில் அப்படி இருக்க முடியாது.திருப்பலியின் நடுவே புனிதர்களைப்பற்றியுள்ள பாடல்கள் பாடப்படாது என்பது என் தாழ்மையான கருத்து.

இதை உங்களை மறுத்து எழுத வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை .மற்றவர்களின் புரிந்துணர்வுக்காக சொல்கிறேன்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சாதாரணமாக carols என்பது கிறீஸ்து பிறப்பை அறிவித்து எழுதப்பட்டுள்ள பாடல்களை பாடுவதாகும்.

கீதங்கள் என்பது தேவாலயங்களில் வழிபாடு துவக்கதில், நடக்கும்போது மற்றும் அதன் முடிவிலும் பாடப்படுபவையாகும்.

Dharumi said...

ஒரு நேயர் விருப்பம்:

உன் புகழைப் பாடுவது
என் வாழ்வின் இன்பமையா;

உன் அருளைப் போற்றுவது
என் வாழ்வின் செல்வமையா..

ஒரு கேள்வியும், suggestion-ம்:
கிறீஸ்து என்பதைவிடவும் கிறிஸ்து என்பது நன்றாக (சரியாகவும்) இல்லையா?

tbr.joseph said...

வாங்க தருமி அண்ணா,

இப்பத்தான் உங்க பின்னூட்டத்த பார்த்தேன்.

உன் புகழைப் பாடுவது
என் வாழ்வின் இன்பமையா;

உன் அருளைப் போற்றுவது
என் வாழ்வின் செல்வமையா..//

மிகவும் உருக்கமான பாட்டு.. பலமுறை இப்பாட்டைப் பாடும்போது மனம் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அதன் ராகம் அத்தனை உருக்கமானது..

கிறீஸ்து அல்ல.. இனி கிறிஸ்துதான். தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி.

tbr.joseph said...

வாங்க ஜோ,

கத்தோலிக்க தேவாலயங்களில் புனிதர்களுக்கான பாடல்களே பெரும்பாலும் பாடப்படுவதாக ஒரு தோற்றத்தை கொடுக்கிறது //

அப்படியா? சரி.. அப்படியானால் நான் எழுதிய முறையில்தான் ஏதோ தவறு இருக்கிறது..

I stand corrected. Thanks.

கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் வழிபாடு முடிவில் மட்டுமே மாதா மற்றும் புனிதர்களைப் பற்றிய கீதங்கள் இசைக்கப்படுகின்றன..

Post a Comment