Friday, February 10, 2006

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்!

அபிரிதமான அறிவியல் வளர்ச்சியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இன்றைய உலகை நம் உள்ளங்கை அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கணினி, மற்றும் இணையதளங்களின் அசுர முன்னேற்றம் உலகின் ஒரு கோடியில் எழுதுவதை அடுத்த நிமிடமே மறு கோடியில் உள்ளவர் படித்து பதிலும் அனுப்பிவிட முடிகிறது!

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் வேலிகள் அதிகமாகி சிறு சிறு கிராமங்கள், நகரங்களையே கூறு போட்டு சின்னாபின்னமாக்கி விடுகின்றன.

எவை அந்த வேலிகள்?

மொழி, மதம், இனம், சாதி, அரசியல்..

இவைகள் முள்வேலிகளாக மனித இனைத்தை இன்று பிரித்து வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

இவைகளைக் கடந்து நாமெல்லாரும் ஓர் இனம், இறைவனின் பிள்ளைகள். ஆகவே நாம் எல்லோரும் சமம் என்ற நிலை வரவேண்டும்.

இதைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறதென்று சுருக்கமாக இன்று பார்ப்போம்..

யேசு கிறீஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன் சீடர்களுக்கு பல முறை காட்சியளித்து நாற்பதாம  நாள் தன் உடலோடும் ஆன்மாவோடும் (Body & Soul) விண்ணகம் ஏறிச் சென்றார் என்பது கிறீஸ்துவர்களின் நம்பிக்கை.

அவர் விண்ணகம் சென்ற பிறகு அவருடைய சீடர்கள் பல குழுக்களாகப் பிரிந்து உலகெங்கும் அவர் விட்டுச் சென்ற போதனைகளை கிறீஸ்துவரல்லாத மக்களுக்கும் எடுத்துரைக்கச் சென்றனர்.

அதில் ஒருவர் யேசு கிறீஸ்துவால் அவருடைய சீடர்களுக்குத் தலைவராக அமர்த்தப்பட்ட சீமோன் இராயப்பர் (St. Peter). இவர்தான் கத்தோலிக்க கிறீஸ்துவர்களின் முதல் போப்பாண்டவர் (Pope)என்ற ஐதீகமும் உண்டு.

அவர் ஒருநாள் உச்சி வேளையில் செபிப்பதற்காக அவர் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். அப்போது அவருக்குப் பசித்தது. அப்போது அவர் திடீரென்று பரவசமாகி ஒரு காட்சி கண்டார் (கனவு என்றும் வைத்துக்கொள்ளலாம்).

அக்காட்சியில், வானம் திறந்திருப்பதையும், கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி, தரை நோக்கி இறக்கப்படுவதையும் கண்டார். அதில் தரையில் ஊர்வன, நடப்பன, வானில் பறப்பன யாவும் இருக்கக் கண்டார்.

அப்போது வானிலிருந்து ‘இராயப்பா எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு.’ என்ற குரல் கேட்டது.

அதைக் கேட்ட இராயப்பர் ‘வேண்டாம் ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் உண்டதே இல்லை.’ என்றார்.

அதற்கு மறுமொழியாக, ‘சுத்தம் என்றதை கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே.’ என்ற அக்குரல் மீண்டும் கேட்டது.

இப்படி மூன்று முறை நடந்தது. எல்லா முறையும் இராயப்பர் மறுத்துப் பேச அந்த விரிப்பு வானத்திற்கு எடுக்கப்பட்டது.

தான் கண்ட காட்சியின் பொருள் விளங்காது இராயப்பர் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் செசரியாவைச்  (Caesarea) சேர்ந்த கொர்நேலியுஸ் (Corelius) என்ற நூற்றுவர் தலைவன் (Centurian – i.e. a Captain of a Roman regiment containing hundred soldiers) அனுப்பியதாகக் கூறியவாறு வீட்டிற்குள் நுழைந்த மூவர் கதவைத் தட்டி ‘சீமோன் இராயப்பர் என்பவர் இங்கு தங்கியிருக்கிறாரா’ என்று வினவியதைக் கேட்டு இறங்கி வந்தார்.

‘நீங்கள் தேடுவது நாந்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?’ என்று வினவினார். அப்போது அவர்கள் ‘எங்களை அனுப்பிய கொர்நேலியுஸ் என்றவருக்கு நேற்று கனவில் ஒரு தேவதூதர் தோன்றி நீர் கூறும் போதனைக்குச் செவிமடுக்க வேண்டுமென கற்ப்பித்தார். ஆகவே தங்களை அழைத்துவர எங்களை அவர் அனுப்பியுள்ளார். தாங்கள் தயவு கூர்ந்து எங்களோடு வரவேண்டும்’ என்றனர்.

அவரும் ஏற்கனவே இறைவனால் அவர்களுடன் செல்லுமாறு கனவில் கட்டளை இடப்பட்டிருந்ததால் தயங்காமல் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

கொர்நேலியுஸ் வீட்டையடைந்ததும் அங்கு குழுமியிருந்த ரோமர்களைக் கண்ட இராயப்பர், ‘ யூதக் குலத்தை சார்ந்தவ எவரும்  அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ கூடாது என்பது பொது நியதி என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?. ஆனால் கடவுளால் படைக்கப்பட யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ கூறலாகாது எனக் கடவுள் எனக்கு நேற்று ஒரு காட்சியின் மூலம் எண்பித்தார். எனவேதான் நீர் அனுப்பியவர்கள் என்னை நீர் அழைப்பதாகக் கூறியதும் தயங்காமல் புறப்பட்டு வந்தேன்.’ என்று கூறிவிட்டு யேசு கிறீஸ்த்துவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும் விரிவாக அக்கூட்டத்தாரிடம் எடுத்துரைத்தார்.

ஆம் நண்பர்களே..

இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் ஒருவரே..

ஒரு தாய் மக்களே..

ஒரு தாய் எப்படி தன் மக்களையும் ஒன்றுபோல் அன்பு செய்வாளோ இறைவனும் அவருடைய அன்புக்கு பாத்திரமான நம் அனைவரையும் எந்தவித பாகுபாடும் இன்றி வழிநடத்துகிறார்.

சாதி, சமயம், இனம் என மனிதர்களைக் கூறு போடுவது மனிதனின் செயலே தவிர இறைவனின் செயல் அல்ல.

நம்மால், நம் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் இவ்வேலிகள்.

இவைகளை நம்மால் மட்டுமே அறுத்தெறிய முடியும்..

செய்வோமா?

3 comments:

Dubukku said...

அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ஜோசப் சார் !!
முழுஆதரவு உங்களுக்கு...

இந்த புரிதல் இல்லாவிட்டால் தமிழ் ப்ளாக் இனி மெல்லச் சாகும் காலம் தொலைவில் இல்லை...

tbr.joseph said...

வாங்க டுபுக்கு..

இந்த புரிதல் இல்லாவிட்டால் தமிழ் ப்ளாக் இனி மெல்லச் சாகும் காலம் தொலைவில் இல்லை... //


நான் சொல்லாமல் விட்டதை பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள்

நன்றி..

oliyinile said...

//சாதி, சமயம், இனம் என மனிதர்களைக் கூறு போடுவது மனிதனின் செயலே//

முற்றிலும் உண்மை..

Post a Comment