Wednesday, February 08, 2006

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் உள்ளத்திலிருந்தே வருகின்றன.

நம்முடைய பேச்சை வைத்துத்தான் நம்முடைய குணத்தையும் மற்றவர்கள் எடை போடுகின்றனர் என்றால் மிகையாகாது.

இதைப் பற்றி  பழைய வேதாகமத்தில் சீராக் ஆகமம் 14ம் அதிகாரம் 1ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்:

‘தன் வாயினின்று வரும் வார்த்தையில் தவறாத மனிதன் பேறு பெற்றவன்.’ என்று.

இயேசு கிறீஸ்து ஒருமுறை மக்கட் கூட்டத்தைப் பார்த்து, ‘வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுபடுத்தும்.’ என்று கூறினார்.

அவருடைய சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டம் கலைந்துச் சென்றபின் அவர்கள் அவரிடம் விளக்கம் கேட்க அவர், ‘நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனெனில் அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது.’ என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து, ‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் மனித உள்ளத்திலிருந்து வந்து மனிதரை தீட்டுப்படுத்துகின்றனர்.’ என்றார்.(New Testament Mark:7:14-23)

எத்தனை உண்மை!

உள்ளம் என்பது மனித உடலில் எங்கிருக்கிறது என்று (பிடி) வாதம் செய்பவர்களை விட்டுத் தள்ளுங்கள்..

மனிதன் ஒரு புரியா புதிர்!

அவனைப் புரிந்துக் கொள்வது அத்தனை எளிதல்ல.

அதிலும் அவனுடைய மனதில் எழுகின்ற சிந்தனைகளை, தீய எண்ணங்களை, பகையுணர்வை நம்மில் எவராலும் கண்டுக்கொள்ள முடிவதில்லையே?

இவைதான் வாய் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்கிறார் இயேசு. அவை வெளிவரும் சமயத்தில் அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுவதைத்தான் தீட்டு என்கிறார்..

உடலிலும், உடையிலும் ஏற்படும் தீட்டு (கறை) கழுவினால் போய்விடும். மனிதனின் வாயிலிருந்து வெளிவரும் தீய சொற்களால் ஏற்படும் தீட்டு (வடு) மறையவே மறையாது..

ஒரு மனிதனை நல்லவனாக வாழச் செய்வதும், தீயவனாக மாற்றுமவதும் அவனுடைய சிந்தனைகள்தானே.

சிந்தனைகளில் தூய்மையைக் கடைப்பிடிப்பவனுடைய சொல்லும், செயலும் தூய்மையாகவே இருக்கின்றன.

மாறாக, ஒருவன் உண்ணுகின்ற உணவும், உடுத்துகின்ற உடையும் அவனை நல்லவனா, கெட்டவனா என்பதைக் காட்டாது.

நல்ல மனிதர்களுடைய உள்ளத்திலிருந்தே நல்ல சிந்தனைகள் எழுகின்றன.. அதன் பயனாக அத்தகையோர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வருகின்றன.

நம்முடய சிந்தனைகள் தூய்மையாக இருக்க நாமும் அதற்காக உழைக்க வேண்டியது மிக மிக அவசியம். நம்முடைய குழந்தைகளையும் அவர்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல சிந்தனைகளை ஊட்டி வளர்த்தல் வேண்டும்.

நல்ல சிந்தனைகளை உள்ளத்தில் இருத்தி வளர்பவர்களால் மட்டுமே சமுதாயத்திற்கு பயனுள்ள நல்ல மனிதர்களாய், நல்ல தலைவர்களாய், நல்ல தொண்டர்களாய் இருக்க முடியும்..

நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்.

நம்முடைய உள்ளத்தில் எத்தகைய சிந்தனைகள் உள்ளன..?

அதன் பயனாக நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் எத்தகையனவாய் இருக்கின்றன?

***

3 comments:

J.S.ஞானசேகர் said...

//மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் மனித உள்ளத்திலிருந்து வந்து மனிதரை தீட்டுப்படுத்துகின்றனர்//

"பிறந்த குழந்தை மேற்சொல்லப்பட்ட குணங்களுடன் பிறப்பதில்லை. வெளியில்லிருந்து இக்குணங்கள் உள்ளே சென்று தீட்டுப்படுத்துகின்றன" - இப்புடின்னு நான்மட்டும் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.

இனிக்கப் பேசி பல சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த காதலன்கள், ஆசிரியர்கள், மேயர்களும் உண்டு. கடுமை வார்த்தைகள் பேசி பெண்களைப் பேணிய சர்வாதிகாரிகளும் உண்டு. இதுவே வரலாறு நமக்கு சொல்லும் நிஷம். இது எல்லாக் குற்றங்களுக்கும் பொருந்தும்.

மனோதத்துவ ரீதியில், "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்பதே உண்மை கிடையாது. வாய் பேசும் வார்த்தைகள் எம்மாத்திரம். அரசியல்வாதி, தவறும் வாழ்க்கைத்துணை, ஊதாரி பிள்ளை, நெருங்கிய பகையாளி, கலப்பட விற்பனையாளன் இவர்கள் உள்ளத்து வார்த்தைகளை நாம் நம்பத் தயாரா?

-ஞானசேகர்

tbr.joseph said...

வாங்க ஞானசேகர்,

"பிறந்த குழந்தை மேற்சொல்லப்பட்ட குணங்களுடன் பிறப்பதில்லை. வெளியில்லிருந்து இக்குணங்கள் உள்ளே சென்று தீட்டுப்படுத்துகின்றன" - இப்புடின்னு நான்மட்டும் சொல்லவில்லை. உலகமே சொல்கிறது.//

இங்க நீங்க சொல்ல வர்றதும் நான் சொல்ல வந்ததும் சுத்தமா வேற, வேற.

இப்ப கீழ்காணும் வரிகளை மறுபடியும் படிங்க.

வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனெனில் அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது.’ //

இயேசு இங்க குறிப்பிடுறது உணவு வகைகளை.அதாவது நாம் இதைத்தான் சாப்பிடணும், இத சாப்பிடக் கூடாதுன்னு சொல்றோமே அதைத்தான் அவருடைய வார்த்தைகள் குறிக்கின்றன.

நீங்களு கூறுவது பிறர் வழியாக குழந்தைகள் கற்றுக் கொள்ளும் தீய நடத்தை, தீய சிந்தனை வாய் வழியாக அல்ல செவிகள் வழியாக..

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்ற செய்யுளை நீங்கள் கேட்டதில்லையா?

அதைத்தான் நயவஞ்சகம் என்கிறார் இயேசு. அது அத்தகையோரின் தீய உள்ளத்திலிருந்தே வருகின்றன..

நீங்கள் கூறியிருக்கும் 'சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்த காதலன்கள், ஆசிரியர்கள், மேயர்களும் உண்டு. கடுமை வார்த்தைகள் பேசி பெண்களைப் பேணிய சர்வாதிகாரிகளும் உண்டு.' இவர்கள் எல்லோருடைய உள்ளங்களிலும் உள்ள தீய எண்ணங்களே அவர்களுடைய வாய் வழியாக வருகின்றன என்பதுதான் இயேசுவின் போதனை சொல்கின்றது.

அகத்தின அழகு முகத்தில் தெரியும் என்பதை அப்படியே literal senseல் எடுத்துக் கொள்ளக் கூடாது. அகத்தின் அழகு தெரிகிறதோ இல்லையோ உள்ளத்தின் அசிங்கங்கள் அவருடைய பேச்சிலும், செயலிலும் நிச்சயம் தெரியும்.

அதைத்தான் இயேசு இவ்வார்த்தைகள் மூலம் வலியுறுத்துகிறார்.

களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. //

J.S.ஞானசேகர் said...

//நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் உள்ளத்திலிருந்தே வருகின்றன//

இது நீங்கள் சொன்னது.

//உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும் என்ற செய்யுளை நீங்கள் கேட்டதில்லையா?//

இதுவும் நீங்கள் சொன்னது.

//அதைத்தான் நயவஞ்சகம் என்கிறார் இயேசு. அது அத்தகையோரின் தீய உள்ளத்திலிருந்தே வருகின்றன//

இதுவும் நீங்கள் சொன்னது.

//அகத்தின் அழகு தெரிகிறதோ இல்லையோ உள்ளத்தின் அசிங்கங்கள் அவருடைய பேச்சிலும், செயலிலும் நிச்சயம் தெரியும்//

இப்போது நான் கேட்கிறேன்:

"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நயவஞ்சகனின் பேச்சில் எப்படி அவனின் உள்ளத்து அசிங்கங்கள் வெளிப்படும்? எனவேதான் சொல்கிறேன், நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் உள்ளத்திலிருந்தே வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உள்ளம் உள்ளதைச் சொல்வதில்லை".

-ஞானசேகர்

Post a Comment