Thursday, February 02, 2006

இறைவனைக் காண்போமா?

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமடைந்துள்ள ஒரு கிறீஸ்துவ மதபோதகர் (இவர் பாதிரியார் அல்ல. கத்தோலிக்கரும் அல்ல. மதபோதகத்தை தன் குடும்பத் தொழிலாகக் கொண்டுள்ளவர்) தன்னுடைய பொதுக் கூட்டங்களில் துவக்க உரையை இவ்வாறுத் துவங்குவார்.

‘நான் இப்போதுதான் நம் ஆண்டவர் யேசு கிறீஸ்துவிடம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.’ குழுமியிருக்கும் மக்கள் அனைவரும் இறைவனுக்கு தோத்திரம் கூறி வாழ்த்த கூட்டம் தொடர்ந்து நடைபெறும்!

இதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு புதிய வேதாகமத்தில் (New Testament) உள்ள வாசகங்கள் நினைவுக்கு வருவதுண்டு.

மோயீசனின் (Moses) சட்டப்படி தூய்மைப் படுத்தும் (Act of purification) சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தை யேசுவை இறைவனுக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்குக் (Jerusalem) கொண்டு சென்றனர். இதற்கு வேறொரு காரணமும் உண்டு.

யூதர் குலச் சட்டப்படி தலைச்சன் குழந்தை இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். ஆனால் அதை வெறும் ஒரு சடங்காக மட்டுமே நடத்துவர். முதலில் குழந்தையை தேவாலயத்தில் இருக்கும் குருக்களின் கரங்கள் வழியாக இறைவனுக்கு அர்ப்பணிப்பர். பிறகு இரு மாடப்புறாக்களை காணிக்கையாக தேவாலயத்தில் கொடுத்துவிட்டு குழந்தையை மீட்டுக் கொள்வர்.

அப்படித்தான் யேசுவின் பெற்றோர்களும் இச்சடங்கை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு சிமியோன் (Simeon) என்ற வயது முதிர்ந்த ஒருவர் இருந்தார். அவர் இறைவனுக்கு அஞ்சி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தவர். இஸ்ராயேலருடைய இரட்சகரின் வருகைக்காகக் காத்திருந்தவர்.

‘இறைவன் யூதர்களுக்கு வாக்களித்திருந்த இரட்சகரைக் காணாமல் நீ சாகமாட்டாய்’ என்று இறைவனால் வாக்களிக்கப் பட்டிருந்த சிமியோன் இறைவனுடைய தூண்டுதலால் உந்தப்பட்டு தேவாலயத்திற்குள் நுழைந்து குழந்தை யேசுவைத் தன் கரங்களில் ஏந்தி இறைவனைப் போற்றினார். ‘ஆண்டவரே நீர் வாக்களித்திருந்த இரட்சகரை என் கண்கள் கண்டுக் கொண்டன. இப்போது இவ்வடியானை நிம்மதியாக போகவிடும் (மரணமடைய என்றும் பொருள் கொள்ளலாம்).’ என்றார்.

இறைவன் யூதர்களுக்கு வாக்களித்திருந்த இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று கேள்வியுற்ற எரோது போன்ற மன்னர்களும், மறை நூல் வல்லுனர்களும் அவரைக் காண துடியாய் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இறைவன் கடுங்குளிரில் நடுங்கியவாறு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கே முதன் முதலில் தன்னைக் கண்டு வணங்க வாய்ப்பளித்தார்.

மாட மாளிகைகளில் பட்டாடை உடுத்தி உல்லாச வாழ்க்கை வாழும் பணம் படைத்தவர்களுக்கன்று ஏழை எளியவர்களுக்கே; தூயவர்களையன்று பாவிகளை மீட்கவே, நான் இவ்வுலகிற்கு வந்தேனென்று யேசு கிறீஸ்து தன்னுடைய வாழ்நாட்களில் பலமுறை பகிரங்கமாகவே பேசியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலத்திலும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட பலரும் அவரைக் காண விரும்பினர். ஆயினும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பாவியெனக் கருதப்பட்ட சக்கேயு(Zacchaeus) (லூக்காஸ் வேதாகமம்: 19ம் அதிகாரம்), வீட்டிற்கு சென்றவர் நான் பாவிகளை இரட்சிக்கவே உலகுக்கு வந்தேன் என்றார்.

ஆம் நண்பர்களே. இறைவன் இப்போதும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார். ஆனால் நம் எல்லோருடைய கண்களுக்கும் அவர் புலப்படுவதில்லை. நல் மனத்தோடு, உள்ள சுத்தியோடு அவரைக் காண வேண்டும் என்று தேடுபவர்கள் அவரைக் கண்டுக் கொள்கிறார்கள்.

எவ்வாறு? நாம் படங்களில் உருவகப்படுத்தி வைத்திருக்கிறோமே, அவ்வாறா?

அல்லவே அல்ல.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தினம் தினம் காணும் நம்முடைய நண்பர்கள், நாம் எதிரிகள் எனக் கருதப்படுபவர்கள், நடைபாதையில் யாசகம் செய்வோர், நோயாளிகள், குழந்தைகள், குழந்தை மனம் படைத்தவர்களென பலருடைய வடிவங்களில் நாம் இறைவனை அன்றாடம் கண்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சுயநலம், பேராசை, பொருளாசை, பொறாமை, கோபம், அகங்காரம், ஆணவம், மதவெறி, ஜாதிவெறி என்று நம்மை தலைமுதல் கால்வரை மறைத்திருக்கும் போர்வைகளை அகற்றியெறிந்துவிட்டு தேடினால் நம்முடைய கண்களுக்கும் இறைவன் தோன்றுவார்.

புறக் கண்களை மூடுவோம். அகக் கண்களைத் திறப்போம்.

இறைவனைக் காண்போம்.

8 comments:

டி ராஜ்/ DRaj said...

சார்: மதத்திற்கு அப்பாற்ப்பட்டு அனைவருக்கும் உபயோகமான நல்ல செய்தியை தந்ததற்கு நன்றிகள் பல.

ஜோ / Joe said...

சூப்பர்!

G.Ragavan said...

நல்ல கருத்துகள். உண்மையிலேயே அனைவருக்கும் பொதுவான கருத்துகள்.

தமிழில் கூட வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினாராம் வள்ளலார். கண்ணிலே அன்பிருந்தால்தான் கல்லிலே தெய்வம் வரும் என்ற கண்ணதாசன் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது.

இறைவனோட டெலிபோன்ல பேசுறவங்க...எலுமிச்சம்பழத்துல பேசுறவங்க....இவங்க கிட்ட இருந்து தள்ளி இருக்குறது நமக்குதான் நல்லது.

tbr.joseph said...

வாங்க ராஜ்,

இறைவனுக்கும் மதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நினைப்பவன் நான். மதம் இறைவனை அடையும் ஒரு வழி அல்லது வாகனம். அவ்வளவுதான்.

tbr.joseph said...

வாங்க ஜோ,

உங்க ஒரு வார்த்தை வாழ்த்துக்கு என்னுடைய ஒரு வார்த்தை 'நன்றி'.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

கண்ணிலே அன்பிருந்தால்தான் கல்லிலே தெய்வம் வரும் என்ற கண்ணதாசன் வரிகள் எனக்கு நினைவுக்கு வருகிறது.//

சூப்பரா சொல்லிட்டீங்க. அதுதான் நிதர்சனமான உண்மை.. அன்பில்லாத உள்ளத்திலே இறைவன் நிச்சயம் வாசம் செய்ய வர மாட்டார்.

பத்மா அர்விந்த் said...

கவிமணி சொன்ன"உள்ளத்தில் உள்ளானடி அதை நீ உணர வேண்டுமடி உள்ளத்தில் காண்பாயென்றால் கோவில் உள்ளேயும் காண்பாயடி" கூட இதைத்தான் சொல்கிறது

tbr.joseph said...

வாங்க தேன் துளி,

நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. இதை படிக்குகையில் எனக்கு பிரபல கவிஞர் உமர் கயாம் ஒருமுறை கூறியது நினைவுக்கு வருகிறது. அவர் ஒருமுறை மது அருந்திக் கொண்டிருக்குகையில் அவருடைய நண்பர், 'ஐயா நீங்கள் அமர்ந்திருக்கும் திசை புனித மக்காவை நோக்கியிருக்கின்றது. ஆகவே வேறு திசையில் திரும்பி அமருங்கள்' என்றாராம். அதற்கு கவி இறைவன் இல்லாத திசையைக் காட்டுங்கள் நான் அதை நோக்கி அமர்கிறேன் என்றாராம்.

Post a Comment