Saturday, February 25, 2006

கிறிஸ்துவ கீதங்கள் – 2


யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் தன்னுடைய சீடர்களுடன் இரா உணவுக்காக (Last Supper) ஒரு இடத்தில் கூடினார்.

அப்போது ஒரு கிண்ணத்தில் இருந்த திராட்சை ரசத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி கூறி தன் சீடர்களுக்கு அளித்து கூறினார். ‘இதை எல்லோரும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கடவுளின் ராச்சியம் மீண்டும் வரும்வரை இதை நான் குடிக்க மாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.’

பிறகு ஒரு அப்பத்தை (Bread) எடுத்து, பிட்டு இறைவனுக்கு நன்றி கூறி எல்லோருக்கும் அளித்து கூறினார், ‘இது உங்களுக்காக கையளிக்கப்படும் என்னுடைய உடல்.  இதை என் நினைவாக செய்யுங்கள்.’

அவருடைய கட்டளையின்படி இவ்விரு நிகழ்ச்சியையும்  மையமாகக் கொண்டு நடத்தப்படும் திருப்பலிதான் இன்று உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் பிரதானமானதாகும்.

இத்திருப்பலி நடத்தப்படுவதற்குமுன் ஆலயத்தில் பாடப்படும் கீதம் வருகைக் கீதம் என்று அழைக்கப்படுகிறது.

யேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக உள்ள பாதிரியாரையும் அவருக்கு இவ்வழிபாட்டின்போது உதவி செய்வதற்காக அவருடன் வரும் மாணவப் பருவத்திலுள்ள சிறுவர்களையும் ஆலயத்தில் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் பலிப்பீடத்திற்கு வரவேற்று பாடகர் குழுவும் தேவாலயத்தில் குழுமியுள்ள பக்தர்களும் எழுந்து நின்று பாடும் கீதம் இது.

அன்பை கொண்டாடுவோம் – இறை
அன்பில் ஒன்றாகுவோம் – இந்த
உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் - நிறை
வாழ்வை நாம் காணுவோம்.

பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு
ஒற்றுமையுடனே பழகுவோம்
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்ந்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்.

பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம்
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு
பிறரையும் நேசிக்க துவங்குவோம்
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்.

நம் மனதில் உள்ள பாகுபாடுகளை மறந்து எல்லோரும் ஓர் குலம், நாம் எல்லோரும் இறைமக்கள், உள்ளத்திலிருக்கும் கறைகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு இப்பலியில் பங்கு பெறுங்கள் என்று எல்லோரையும் அழைக்கும் கீதமாக இது அமைந்துள்ளது..

“பகைமை உணர்வுகளை நாம் களைந்து...”

“பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு..”

இவ்விரண்டு வரிகள்தான் இப்பாடலின் மையக் கருத்து..

இதையே தான் வேதாகமும் கூறுகிறது..

யேசு ஒரு முறை மக்களுக்கு போதிக்கையில் கூறியதாவது. ‘நீ இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் எண்ணத்துடன் பலிபீடத்தின்முன் நிற்கும் நேரத்தில் உன் மேல் உன் சகோதரனுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டென்று உன் நினைவுக்கு வருமானால் காணிக்கையை அப்படியே பலிபீடத்தில் விட்டுவிட்டு போய் உன் சகோதரனுடம் சமாதானம் செய்துக்கொள். பிறகு திரும்பி வந்து உன் காணிக்கையைச் செலுத்து.’ (Mathew 5:23-24).

இன்றைய உலகில் நாம் யாருடன் விரோதம் இல்லாதிருந்தால்தான் இறை வழிபாடுகளில் பங்குகொள்ள முடியும் என்ற ஒரு நியதி வந்தால் நம்மில் யாராலுமே வழிபாடுகளில் பங்குகொள்ள இயலாது.

அத்தகைய மனநிலையை அடைய நம்மைப் போன்ற சராசரி மனிதர்களால் நிச்சயம் முடியாது..

ஆயினும் அந்நிலையை அடைய சிறிதளவாவது முயற்சி செய்ய வேண்டும் என்பதைத்தான் இக்கீதம் நமக்கு நினைவுறுத்துகிறது..

***

6 comments:

மாயவரத்தான்... said...

About ur blog in today's dinamalar...

http://www.dinamalar.com/2006Feb26/flash.asp

In Thenkoodu...

http://www.thenkoodu.com

tbr.joseph said...

வாங்க மாயவரத்தான்,

உங்களுடைய தகவலுக்கு மிக்க நன்றிங்க..

முத்து(தமிழினி) said...

2nd innings in dinamalar..congrats

tbr.joseph said...

வாங்க முத்து,

உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி..

G.Ragavan said...

வாழ்த்துகள் சார். நீங்கள் இந்த வலைப்பூவில் பதிவுகள் போடுவதே தெரியவில்லை. எப்படியோ கண்ணில் இருந்து தப்பிக் கொண்டன. பாருங்கள். இன்று வெளிவந்திருப்பதை....பலாப்பழத்தை எவ்வளவுதான் மூடி வைக்க முடியும். இனிமேல் தொடர்ந்து படிக்க முயல்கிறேன். மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

ஆன்மீகத்தைப் பற்றி எழுதும்போது மிகவும் ஆலோசித்து எழுதவேண்டியிருப்பதால் வாரம் ஒன்றோ இரண்டோ இடுகைகள்தான் இட முடிகிறது..

அதுவும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளாகிவிடுவதால் பலருடைய பார்வையிலிருந்தும் இவைகள் தப்பிவிடுகின்றன..

அதெப்படியோ தினமலர் கண்டுபிடித்து சரியாக ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டு பலருடைய கவனத்தையும் கவர்ந்துவிட்டது..

தேன்கூடு திரட்டியிலும் ஒரே நாளில் வரவே பல தனி மெய்ல்களும் பாராட்டி வந்தன.

இறைவனுக்குத்தான் முதலில் நன்றி சொல்லவேண்டும்.

Post a Comment