Monday, February 27, 2006

தினமலருக்கு நன்றி!

என்னுடைய பதிவுகளில் ஒன்றான 'என் பைபிள்' ஐ தினமலர் நாளிதழ் நேற்றைய இதழில் பரிந்துத்துள்ளது.

பார்க்க:

http://www.dinamalar.com/2006Feb26/flash.asp

தினமலருக்கு நன்றி.

அன்றைய தினமே 'தேன்கூடு' திரட்டியில் 'Blog of the day' என்ற தலைப்பில் இதே பதிவை பரிந்துரைத்திருந்தது இரட்டிப்பு சந்தோஷம்!இச் செய்தியை நேற்று காலையிலேயே (6.45 AM) என் பதிவில் பின்னூட்டத்தின் வழியாக எனக்கு அறிவித்த மாயவரத்தான் அவர்களுக்கு மிக்க நன்றி..

அன்புடன்,
டிபிஆர். ஜோசப்.

Saturday, February 25, 2006

கிறிஸ்துவ கீதங்கள் – 2


யேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தின நாள் தன்னுடைய சீடர்களுடன் இரா உணவுக்காக (Last Supper) ஒரு இடத்தில் கூடினார்.

அப்போது ஒரு கிண்ணத்தில் இருந்த திராட்சை ரசத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி கூறி தன் சீடர்களுக்கு அளித்து கூறினார். ‘இதை எல்லோரும் பகிர்ந்துக்கொள்ளுங்கள். கடவுளின் ராச்சியம் மீண்டும் வரும்வரை இதை நான் குடிக்க மாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்.’

பிறகு ஒரு அப்பத்தை (Bread) எடுத்து, பிட்டு இறைவனுக்கு நன்றி கூறி எல்லோருக்கும் அளித்து கூறினார், ‘இது உங்களுக்காக கையளிக்கப்படும் என்னுடைய உடல்.  இதை என் நினைவாக செய்யுங்கள்.’

அவருடைய கட்டளையின்படி இவ்விரு நிகழ்ச்சியையும்  மையமாகக் கொண்டு நடத்தப்படும் திருப்பலிதான் இன்று உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் பிரதானமானதாகும்.

இத்திருப்பலி நடத்தப்படுவதற்குமுன் ஆலயத்தில் பாடப்படும் கீதம் வருகைக் கீதம் என்று அழைக்கப்படுகிறது.

யேசு கிறிஸ்துவின் பிரதிநிதியாக உள்ள பாதிரியாரையும் அவருக்கு இவ்வழிபாட்டின்போது உதவி செய்வதற்காக அவருடன் வரும் மாணவப் பருவத்திலுள்ள சிறுவர்களையும் ஆலயத்தில் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் பலிப்பீடத்திற்கு வரவேற்று பாடகர் குழுவும் தேவாலயத்தில் குழுமியுள்ள பக்தர்களும் எழுந்து நின்று பாடும் கீதம் இது.

அன்பை கொண்டாடுவோம் – இறை
அன்பில் ஒன்றாகுவோம் – இந்த
உலகில் மனிதநலம் மலர்ந்து மாண்படைய
பண்போடு நாம் வாழுவோம் - நிறை
வாழ்வை நாம் காணுவோம்.

பகைமை உணர்வுகளை நாம் களைந்து
பாசத்தைப் பொழிந்தே வாழுவோம்
வேற்றுமை நிலைகளை மதித்திங்கு
ஒற்றுமையுடனே பழகுவோம்
அன்பிற்கு இலக்கணமாகிடவே
அன்றாடம் உறவுகள் வளர்ந்திடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்.

பாகுபாடுகளை நாம் வெறுத்து
பகிர்விலே சமத்துவம் காணுவோம்
பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு
பிறரையும் நேசிக்க துவங்குவோம்
உள்ளங்கள் ஒன்றாக இணைந்திடவே
உலகெல்லாம் நிறையன்பு துலங்கிடவே
ஒன்று சேர்வோம் உறவில் இணைவோம்
இறைவன் விரும்பும் உலகம் படைப்போம்.

நம் மனதில் உள்ள பாகுபாடுகளை மறந்து எல்லோரும் ஓர் குலம், நாம் எல்லோரும் இறைமக்கள், உள்ளத்திலிருக்கும் கறைகளை நினைத்து மனம் வருந்தி மன்னிப்புக் கேட்டு இப்பலியில் பங்கு பெறுங்கள் என்று எல்லோரையும் அழைக்கும் கீதமாக இது அமைந்துள்ளது..

“பகைமை உணர்வுகளை நாம் களைந்து...”

“பிளவுகள் பிணக்குகள் ஓய்ந்திங்கு..”

இவ்விரண்டு வரிகள்தான் இப்பாடலின் மையக் கருத்து..

இதையே தான் வேதாகமும் கூறுகிறது..

யேசு ஒரு முறை மக்களுக்கு போதிக்கையில் கூறியதாவது. ‘நீ இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் எண்ணத்துடன் பலிபீடத்தின்முன் நிற்கும் நேரத்தில் உன் மேல் உன் சகோதரனுக்கு ஏதேனும் மனவருத்தம் உண்டென்று உன் நினைவுக்கு வருமானால் காணிக்கையை அப்படியே பலிபீடத்தில் விட்டுவிட்டு போய் உன் சகோதரனுடம் சமாதானம் செய்துக்கொள். பிறகு திரும்பி வந்து உன் காணிக்கையைச் செலுத்து.’ (Mathew 5:23-24).

இன்றைய உலகில் நாம் யாருடன் விரோதம் இல்லாதிருந்தால்தான் இறை வழிபாடுகளில் பங்குகொள்ள முடியும் என்ற ஒரு நியதி வந்தால் நம்மில் யாராலுமே வழிபாடுகளில் பங்குகொள்ள இயலாது.

அத்தகைய மனநிலையை அடைய நம்மைப் போன்ற சராசரி மனிதர்களால் நிச்சயம் முடியாது..

ஆயினும் அந்நிலையை அடைய சிறிதளவாவது முயற்சி செய்ய வேண்டும் என்பதைத்தான் இக்கீதம் நமக்கு நினைவுறுத்துகிறது..

***

Saturday, February 18, 2006

கிறீஸ்துவப் பாடல்கள்

கிறீஸ்துவ தேவாலயங்களில் நடைபெறும் வழிபாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது பாடல்கள். பாடல்கள் என்பதை விட கீதங்கள் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

CSI தேவாலயங்களில் பாடும் கீதங்கள் எல்லோரும் கரங்களைத் தட்டி பாடும் வகையில் ரிதமிக்கான மேற்கத்திய இசையில் அமைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்தில் கூடியிருக்கும் அனைவரும் லீட் பாடகர்கள் எனப்படும் இருவர் அல்லது மூவர் அடங்கிய பாடகர் குழுவினர் மற்றும் இசைக்குழுவினருடன் சேர்ந்து கரங்களைத் தட்டி உற்சாகத்துடன் பங்கேற்று பாடுவார்கள். இசைக்கருவிகளும் பெரும்பாலும் மேற்கத்திய பாணியில் கிட்டார், வயலின், பியானோ ஆர்கன் போன்றவையாயிருக்கும். ஆகவே இக்கீதங்கள் பாடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் கேட்பவருக்கும் தனியொரு உற்சாகமும், உத்வேகமும் பிறக்கும்..

ஆனால் கத்தோலிக்க கிறீஸ்துவ தேவாலயங்களில் பாடப்படும் கீதங்கள் பெரும்பாலும் நம்முடைய கர்நாடக இசையைச் சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கும். இகீதங்களைப் பாடுவதற்கென்றே தேர்ச்சிப்பெற்ற பாடகர் குழுவும், இந்திய இசைக்கருவிகளான ஆர்மோனியம் (இப்போதெல்லாம் காசியோ, சோனி கீபோர்டுகள் பிரபலமாகி வருகின்றன), தபேலா போன்றவற்றை இயக்கக்கூடிய இசைக்குழுவும் ஒவ்வோரு தேவாலயத்திலும் இருப்பார்கள். இவர்கள் பாடும் கீதங்களில் தேவாலயத்தில் வழிபாட்டுக்கென வருபவர்கள் கலந்துக்கொள்வது அபூர்வம். இதற்குக் காரணம் பாடல்களின் இசையமைப்பும் ஒரு காரணமாயிருக்கும். எந்தவொரு கீதத்தையும் முன் அனுபவம் இல்லாமல் பாடிவிட முடியாது. தினந்தோறும் அல்லது வாரத்திற்கொருமுறையாவது தேவாலய வழிபாடுகளில் பங்குகொள்பவர்களால் மட்டுமே பாடகர் குழுவினருடன் சேர்ந்து தாளம் தப்பாமல் பாடமுடியும்.

CSI தேவாலயங்களில் பாடப்படும் கீதங்களில் உற்சாகம் சற்றே தூக்கி நிற்கும் என்றால் கத்தோலிக்க தேவாலயங்களில் பாடப்படும் கீதங்களில் உருக்கம் நிறைந்திருக்கும். சில கீதங்களை¨ உணர்ந்து பாடும் நேரத்தில் மனம் உருகி நெகிழ்ந்து போகவும் முடியும். இத்தகைய பாடல்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளோரை வழிபாட்டின் நாயகனான இறைவனை நோக்கி  தங்களுடைய அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த உதவுகின்றன என்றால் மிகையாகாது.

CSI தேவாலயங்களில், பெரும்பாலும் அவர்கள் பாடும் கீதங்கள் கிறீஸ்துவை புகழும் வகையில் இயற்றப்பட்டிருக்கும். ஆனால் கத்தோலிக்க தேவாலயங்களில் கிறீஸ்துவின் அன்னையான கன்னி மேரி(St.Mary), அவருடைய வளர்ப்புத்தந்தை சூசை (St.Joseph) மற்றும் கத்தோலிக்க திருச்சபையால் புனிதர்கள் (Saints) என அங்கீகரிக்கப்பட்டுள்ள பலரையும் புகழ்ந்து இயற்றப்பட்டிருக்கும்.

இனிவரும் எல்லா சனிக்கிழமைகளிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் பாடப்பட்டு வரும் எனக்குப் பிடித்த சில கீதங்களைப் பற்றி எழுதுவேன்.

இனி இன்றைய கீதத்திற்கு செல்வோம்:

செவிசாய்க்கும் இறைவன் நம் அருகில் இருக்கின்றார்
துயர் என்றால் போதுமே அதை தகர்த்திட வருவார்
சிறு துயர் என்றால் போதுமே நம்மைத் தாங்கிட வருவார்
செவிசாய்க்கும் இறைவன் இறைவன் இறைவன்

கூட்டினுள் பதுங்கிடும் நத்தையைப் போல்
துயர் கண்டு அச்சம் தேவையில்லை
அஞ்சாதே அஞ்சாதே எனத் தேற்றும்
ண்டவர் துணையை நிதம் நினைத்தால்
நெஞ்சினில் துணிவினை தினம் சுமந்து
எதிர்வரும் சோதனை முறியடிப்போம்
இறைவனின் அருட்கரம் தொடர்கின்ற வேளையில்
நன்மைகள் வாழ்வினில் பெருகிடுமே

செவிசாய்க்கும் இறைவன்...

விழிகளில் தேங்கிடும் நீர் கண்டால்
அன்பினால் தாய் அதை துடைத்திடுவாள்
தான் பெற்ற சேய் வாழ தனை முழுதும்
ஒளிதரும் மெழுகாய் உருக்கிடுவாள்
கிளைகள் பல திசை விரிந்தாலும்
வேர்கள் அதனை மறப்பதில்லை
தாயினும் மேலான இறையன்பு
ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை..

செவிசாய்க்கும் இறைவன்...

இப்பாடல் என்னை ராகத்தில் அமைந்திருக்கிறதென எனக்கு கூற தெரியவில்லை..

ஆனால், கிளைகள் பல திசை விரிந்தாலும்..' என்ற வரிகளைப் இசையுடன் சேர்ந்து பாடும்போது கண்களில் கண்ணீர் நிறைந்து போனதை நான் உணர்ந்திருக்கிறேன்.. உள்ளத்தில் ஏதோ ஒன்று இனம்புரியாத ஒரு சந்தோஷம், மகிழ்ச்சி, அமைதி பாடல் முடிந்த பிறகும் நெடுநேரம் தேவாலய வழிபாடு முடிந்து வீடு திரும்பும் வரை இவ்வரிகள் உதடுகளில் தவழ்ந்திருக்கும் என்பது உண்மை..

***


Thursday, February 16, 2006

இறைவன் வெறுப்பது என்ன?கடவுள் இரக்கமுள்ளவர், அவருடைய இரக்கத்திற்கு எல்லையே இல்லை என்றெல்லாம் நாம் கேட்டிருக்கிறோம்.

நாம் எம்மதத்தினரானாலும், எக்குலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் நாம் செய்யும் தவுறுகளை, குற்றங்களை மன்னித்து, மறக்கிறார்.

நாம் எப்பெயர் இட்டு அழைத்தாலும் இறைவன் ஒருவரே. நாம் எத்தகைய வழிபாடுகள் செய்தாலும் இறைவன் ஒருவரே.

ஆயினும் அத்தகைய இரக்கத்தின் ஊற்றாகிய இறைவனும் வெறுக்கக் கூடிய குணங்கள் உள்ளன.

அவற்றைப் பற்றி வேதாகமத்தில் என்ன கூறப்பட்டுள்ளது என்று இன்று சுருக்கமாகப் பார்ப்போம்.

பழைய வேதாகமத்தில் பழமொழி ஆகமம் என்ற ஒரு பகுதி உள்ளது.

இதிலுள்ள பல பகுதிகளுக்கும் பழைய எகிப்திய நூற்பகுதிகளுக்கும் இடையே பல வியப்புக்குரிய ஒற்றுமைகள் காணப்படுவதாக சரித்திர ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இந்நூல்களிலும் கடவுள் ஒருவரே எனும் கூற்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

பழமொழியாகமம் நடைமுறையில் பயன்படத்தக்க வழிகளை எழுதுவதில் கருத்தாயிருப்பினும், சாதாரண நற்பண்பாகிய விவேகத்தைவிட மெய்யான ஞானம் எல்லையற்ற அளவு சிறந்தது என்பதை பல இடங்களிலும் வலியுறுத்துகின்றது.

இவ்வாகமத்தில் கடவுள் மனிதர்களிடத்தில் வெறுக்கும் குணங்கள் எவை, எவை என்றும் கூறப்பட்டுள்ளன (அத்தியாயம் 6 வசனங்கள் 16 - 19)

1.     பெருமை கொண்ட கண்கள் - ஆணவம் பிடித்தவன்,
2.     பொய் பகரும் நாவு - பொய்யன், கள்ள சாட்சியம் கூறுபவன்,
3.     நிரபராதியின் குருதியை சிந்தும் கைகள் - கொலைகாரன்,
4.     மிகக் கொடிய சிந்தனைகளைக் கருதுகின்ற இதயம் -சூழ்ச்சிக்காரன்,
5.     தீமையை நோக்கி ஓட விரையும் கால்கள் - தீயவன்,
6.     தன் சகோதரர்களுக்குள்ளேயே பிரிவினையை உண்டாக்கும் குணம் - தன் சகோதரர்களையே நேசிக்காதவன் இறைவனை எப்படி நேசிப்பான்?

இக்குணங்கள் உள்ள எவரும் நான் இறை பக்தியுள்ளவர் என்று பறைசாற்றிக்கொள்வது வீணே.

அது இறைவனை மேலும் புண்படுத்தும் செயலாகத்தான் இருக்கும்..

நம்மில் பலரும் இத்தகையோராய்தான் இருக்கிறோம். இல்லையென்று மறுப்பவர்களை பொய்யர்கள் என்றுதான் இச்சமுதாயம் கூறும்..

நாம் செய்ய வேண்டியது இக்குணங்களை ஒவ்வொன்றாக களைய முயல்வதுதான்.

இறைவனுக்கு ஏற்புடைய மகனாக, மகளாக நான் மாற இன்று முதல் முயற்சி செய்வேன் என்ற உறுதிமொழி எடுப்போம்..

அதுதான் மீட்படைய நாம் எடுத்து வைக்கவேண்டிய முதல் அடி..

செய்வோமா?

Friday, February 10, 2006

நாம் எல்லோரும் ஒரு தாய் மக்கள்!

அபிரிதமான அறிவியல் வளர்ச்சியும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இன்றைய உலகை நம் உள்ளங்கை அளவுக்குச் சுருக்கிவிட்டது.

கணினி, மற்றும் இணையதளங்களின் அசுர முன்னேற்றம் உலகின் ஒரு கோடியில் எழுதுவதை அடுத்த நிமிடமே மறு கோடியில் உள்ளவர் படித்து பதிலும் அனுப்பிவிட முடிகிறது!

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் வேலிகள் அதிகமாகி சிறு சிறு கிராமங்கள், நகரங்களையே கூறு போட்டு சின்னாபின்னமாக்கி விடுகின்றன.

எவை அந்த வேலிகள்?

மொழி, மதம், இனம், சாதி, அரசியல்..

இவைகள் முள்வேலிகளாக மனித இனைத்தை இன்று பிரித்து வைத்திருக்கின்றன என்றால் மிகையாகாது.

இவைகளைக் கடந்து நாமெல்லாரும் ஓர் இனம், இறைவனின் பிள்ளைகள். ஆகவே நாம் எல்லோரும் சமம் என்ற நிலை வரவேண்டும்.

இதைப் பற்றி வேதாகமம் என்ன கூறுகிறதென்று சுருக்கமாக இன்று பார்ப்போம்..

யேசு கிறீஸ்து மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தன் சீடர்களுக்கு பல முறை காட்சியளித்து நாற்பதாம  நாள் தன் உடலோடும் ஆன்மாவோடும் (Body & Soul) விண்ணகம் ஏறிச் சென்றார் என்பது கிறீஸ்துவர்களின் நம்பிக்கை.

அவர் விண்ணகம் சென்ற பிறகு அவருடைய சீடர்கள் பல குழுக்களாகப் பிரிந்து உலகெங்கும் அவர் விட்டுச் சென்ற போதனைகளை கிறீஸ்துவரல்லாத மக்களுக்கும் எடுத்துரைக்கச் சென்றனர்.

அதில் ஒருவர் யேசு கிறீஸ்துவால் அவருடைய சீடர்களுக்குத் தலைவராக அமர்த்தப்பட்ட சீமோன் இராயப்பர் (St. Peter). இவர்தான் கத்தோலிக்க கிறீஸ்துவர்களின் முதல் போப்பாண்டவர் (Pope)என்ற ஐதீகமும் உண்டு.

அவர் ஒருநாள் உச்சி வேளையில் செபிப்பதற்காக அவர் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றார். அப்போது அவருக்குப் பசித்தது. அப்போது அவர் திடீரென்று பரவசமாகி ஒரு காட்சி கண்டார் (கனவு என்றும் வைத்துக்கொள்ளலாம்).

அக்காட்சியில், வானம் திறந்திருப்பதையும், கப்பற்பாயைப் போன்றதொரு விரிப்பு நான்கு மூலைகளிலும் கட்டி, தரை நோக்கி இறக்கப்படுவதையும் கண்டார். அதில் தரையில் ஊர்வன, நடப்பன, வானில் பறப்பன யாவும் இருக்கக் கண்டார்.

அப்போது வானிலிருந்து ‘இராயப்பா எழுந்து இவற்றைக் கொன்று சாப்பிடு.’ என்ற குரல் கேட்டது.

அதைக் கேட்ட இராயப்பர் ‘வேண்டாம் ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமான எதையும் ஒருபோதும் நான் உண்டதே இல்லை.’ என்றார்.

அதற்கு மறுமொழியாக, ‘சுத்தம் என்றதை கடவுள் சொன்னதை, தீட்டு என்று நீ சொல்லாதே.’ என்ற அக்குரல் மீண்டும் கேட்டது.

இப்படி மூன்று முறை நடந்தது. எல்லா முறையும் இராயப்பர் மறுத்துப் பேச அந்த விரிப்பு வானத்திற்கு எடுக்கப்பட்டது.

தான் கண்ட காட்சியின் பொருள் விளங்காது இராயப்பர் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில் செசரியாவைச்  (Caesarea) சேர்ந்த கொர்நேலியுஸ் (Corelius) என்ற நூற்றுவர் தலைவன் (Centurian – i.e. a Captain of a Roman regiment containing hundred soldiers) அனுப்பியதாகக் கூறியவாறு வீட்டிற்குள் நுழைந்த மூவர் கதவைத் தட்டி ‘சீமோன் இராயப்பர் என்பவர் இங்கு தங்கியிருக்கிறாரா’ என்று வினவியதைக் கேட்டு இறங்கி வந்தார்.

‘நீங்கள் தேடுவது நாந்தான். நீங்கள் வந்த காரணம் என்ன?’ என்று வினவினார். அப்போது அவர்கள் ‘எங்களை அனுப்பிய கொர்நேலியுஸ் என்றவருக்கு நேற்று கனவில் ஒரு தேவதூதர் தோன்றி நீர் கூறும் போதனைக்குச் செவிமடுக்க வேண்டுமென கற்ப்பித்தார். ஆகவே தங்களை அழைத்துவர எங்களை அவர் அனுப்பியுள்ளார். தாங்கள் தயவு கூர்ந்து எங்களோடு வரவேண்டும்’ என்றனர்.

அவரும் ஏற்கனவே இறைவனால் அவர்களுடன் செல்லுமாறு கனவில் கட்டளை இடப்பட்டிருந்ததால் தயங்காமல் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

கொர்நேலியுஸ் வீட்டையடைந்ததும் அங்கு குழுமியிருந்த ரோமர்களைக் கண்ட இராயப்பர், ‘ யூதக் குலத்தை சார்ந்தவ எவரும்  அன்னிய குலத்தாருடன் உறவாடுவதோ, அவர்களுடைய வீட்டிற்குச் செல்வதோ கூடாது என்பது பொது நியதி என்று உங்களுக்குத் தெரியுமல்லவா?. ஆனால் கடவுளால் படைக்கப்பட யாரையும் தீட்டு உள்ளவனென்றோ, அசுத்தமானவனென்றோ கூறலாகாது எனக் கடவுள் எனக்கு நேற்று ஒரு காட்சியின் மூலம் எண்பித்தார். எனவேதான் நீர் அனுப்பியவர்கள் என்னை நீர் அழைப்பதாகக் கூறியதும் தயங்காமல் புறப்பட்டு வந்தேன்.’ என்று கூறிவிட்டு யேசு கிறீஸ்த்துவைப் பற்றியும் அவருடைய போதனைகளைப் பற்றியும் விரிவாக அக்கூட்டத்தாரிடம் எடுத்துரைத்தார்.

ஆம் நண்பர்களே..

இறைவனின் படைப்பில் நாம் அனைவரும் ஒருவரே..

ஒரு தாய் மக்களே..

ஒரு தாய் எப்படி தன் மக்களையும் ஒன்றுபோல் அன்பு செய்வாளோ இறைவனும் அவருடைய அன்புக்கு பாத்திரமான நம் அனைவரையும் எந்தவித பாகுபாடும் இன்றி வழிநடத்துகிறார்.

சாதி, சமயம், இனம் என மனிதர்களைக் கூறு போடுவது மனிதனின் செயலே தவிர இறைவனின் செயல் அல்ல.

நம்மால், நம் சுயநலத்திற்காக உருவாக்கப்பட்டவைதான் இவ்வேலிகள்.

இவைகளை நம்மால் மட்டுமே அறுத்தெறிய முடியும்..

செய்வோமா?

Wednesday, February 08, 2006

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள்

நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் நம் உள்ளத்திலிருந்தே வருகின்றன.

நம்முடைய பேச்சை வைத்துத்தான் நம்முடைய குணத்தையும் மற்றவர்கள் எடை போடுகின்றனர் என்றால் மிகையாகாது.

இதைப் பற்றி  பழைய வேதாகமத்தில் சீராக் ஆகமம் 14ம் அதிகாரம் 1ம் வசனத்தில் குறிப்பிடுகிறார்:

‘தன் வாயினின்று வரும் வார்த்தையில் தவறாத மனிதன் பேறு பெற்றவன்.’ என்று.

இயேசு கிறீஸ்து ஒருமுறை மக்கட் கூட்டத்தைப் பார்த்து, ‘வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுபடுத்தும்.’ என்று கூறினார்.

அவருடைய சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. கூட்டம் கலைந்துச் சென்றபின் அவர்கள் அவரிடம் விளக்கம் கேட்க அவர், ‘நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துக் கொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனெனில் அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது.’ என்றார்.

மேலும் அவர் தொடர்ந்து, ‘மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் மனித உள்ளத்திலிருந்து வந்து மனிதரை தீட்டுப்படுத்துகின்றனர்.’ என்றார்.(New Testament Mark:7:14-23)

எத்தனை உண்மை!

உள்ளம் என்பது மனித உடலில் எங்கிருக்கிறது என்று (பிடி) வாதம் செய்பவர்களை விட்டுத் தள்ளுங்கள்..

மனிதன் ஒரு புரியா புதிர்!

அவனைப் புரிந்துக் கொள்வது அத்தனை எளிதல்ல.

அதிலும் அவனுடைய மனதில் எழுகின்ற சிந்தனைகளை, தீய எண்ணங்களை, பகையுணர்வை நம்மில் எவராலும் கண்டுக்கொள்ள முடிவதில்லையே?

இவைதான் வாய் வார்த்தைகளாக வெளிவருகின்றன என்கிறார் இயேசு. அவை வெளிவரும் சமயத்தில் அவன் மட்டுமல்ல அவனைச் சுற்றியுள்ளவர்களும் பாதிக்கப்படுவதைத்தான் தீட்டு என்கிறார்..

உடலிலும், உடையிலும் ஏற்படும் தீட்டு (கறை) கழுவினால் போய்விடும். மனிதனின் வாயிலிருந்து வெளிவரும் தீய சொற்களால் ஏற்படும் தீட்டு (வடு) மறையவே மறையாது..

ஒரு மனிதனை நல்லவனாக வாழச் செய்வதும், தீயவனாக மாற்றுமவதும் அவனுடைய சிந்தனைகள்தானே.

சிந்தனைகளில் தூய்மையைக் கடைப்பிடிப்பவனுடைய சொல்லும், செயலும் தூய்மையாகவே இருக்கின்றன.

மாறாக, ஒருவன் உண்ணுகின்ற உணவும், உடுத்துகின்ற உடையும் அவனை நல்லவனா, கெட்டவனா என்பதைக் காட்டாது.

நல்ல மனிதர்களுடைய உள்ளத்திலிருந்தே நல்ல சிந்தனைகள் எழுகின்றன.. அதன் பயனாக அத்தகையோர் வாயிலிருந்து நல்ல வார்த்தைகளே வருகின்றன.

நம்முடய சிந்தனைகள் தூய்மையாக இருக்க நாமும் அதற்காக உழைக்க வேண்டியது மிக மிக அவசியம். நம்முடைய குழந்தைகளையும் அவர்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே நல்ல சிந்தனைகளை ஊட்டி வளர்த்தல் வேண்டும்.

நல்ல சிந்தனைகளை உள்ளத்தில் இருத்தி வளர்பவர்களால் மட்டுமே சமுதாயத்திற்கு பயனுள்ள நல்ல மனிதர்களாய், நல்ல தலைவர்களாய், நல்ல தொண்டர்களாய் இருக்க முடியும்..

நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்.

நம்முடைய உள்ளத்தில் எத்தகைய சிந்தனைகள் உள்ளன..?

அதன் பயனாக நம் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் எத்தகையனவாய் இருக்கின்றன?

***

Thursday, February 02, 2006

இறைவனைக் காண்போமா?

தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலமடைந்துள்ள ஒரு கிறீஸ்துவ மதபோதகர் (இவர் பாதிரியார் அல்ல. கத்தோலிக்கரும் அல்ல. மதபோதகத்தை தன் குடும்பத் தொழிலாகக் கொண்டுள்ளவர்) தன்னுடைய பொதுக் கூட்டங்களில் துவக்க உரையை இவ்வாறுத் துவங்குவார்.

‘நான் இப்போதுதான் நம் ஆண்டவர் யேசு கிறீஸ்துவிடம் உரையாடிக் கொண்டிருந்துவிட்டு வருகிறேன்.’ குழுமியிருக்கும் மக்கள் அனைவரும் இறைவனுக்கு தோத்திரம் கூறி வாழ்த்த கூட்டம் தொடர்ந்து நடைபெறும்!

இதைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு புதிய வேதாகமத்தில் (New Testament) உள்ள வாசகங்கள் நினைவுக்கு வருவதுண்டு.

மோயீசனின் (Moses) சட்டப்படி தூய்மைப் படுத்தும் (Act of purification) சடங்கை நிறைவேற்ற வேண்டிய நாள் வந்தபோது குழந்தை யேசுவை இறைவனுக்கு அர்ப்பணிக்க எருசலேமுக்குக் (Jerusalem) கொண்டு சென்றனர். இதற்கு வேறொரு காரணமும் உண்டு.

யூதர் குலச் சட்டப்படி தலைச்சன் குழந்தை இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும். ஆனால் அதை வெறும் ஒரு சடங்காக மட்டுமே நடத்துவர். முதலில் குழந்தையை தேவாலயத்தில் இருக்கும் குருக்களின் கரங்கள் வழியாக இறைவனுக்கு அர்ப்பணிப்பர். பிறகு இரு மாடப்புறாக்களை காணிக்கையாக தேவாலயத்தில் கொடுத்துவிட்டு குழந்தையை மீட்டுக் கொள்வர்.

அப்படித்தான் யேசுவின் பெற்றோர்களும் இச்சடங்கை நிறைவேற்ற எருசலேம் தேவாலயத்திற்கு சென்றனர். அங்கு சிமியோன் (Simeon) என்ற வயது முதிர்ந்த ஒருவர் இருந்தார். அவர் இறைவனுக்கு அஞ்சி, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தவர். இஸ்ராயேலருடைய இரட்சகரின் வருகைக்காகக் காத்திருந்தவர்.

‘இறைவன் யூதர்களுக்கு வாக்களித்திருந்த இரட்சகரைக் காணாமல் நீ சாகமாட்டாய்’ என்று இறைவனால் வாக்களிக்கப் பட்டிருந்த சிமியோன் இறைவனுடைய தூண்டுதலால் உந்தப்பட்டு தேவாலயத்திற்குள் நுழைந்து குழந்தை யேசுவைத் தன் கரங்களில் ஏந்தி இறைவனைப் போற்றினார். ‘ஆண்டவரே நீர் வாக்களித்திருந்த இரட்சகரை என் கண்கள் கண்டுக் கொண்டன. இப்போது இவ்வடியானை நிம்மதியாக போகவிடும் (மரணமடைய என்றும் பொருள் கொள்ளலாம்).’ என்றார்.

இறைவன் யூதர்களுக்கு வாக்களித்திருந்த இரட்சகர் பிறந்திருக்கிறார் என்று கேள்வியுற்ற எரோது போன்ற மன்னர்களும், மறை நூல் வல்லுனர்களும் அவரைக் காண துடியாய் துடித்துக் கொண்டிருந்த நேரத்தில் இறைவன் கடுங்குளிரில் நடுங்கியவாறு வயலில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இடையர்களுக்கே முதன் முதலில் தன்னைக் கண்டு வணங்க வாய்ப்பளித்தார்.

மாட மாளிகைகளில் பட்டாடை உடுத்தி உல்லாச வாழ்க்கை வாழும் பணம் படைத்தவர்களுக்கன்று ஏழை எளியவர்களுக்கே; தூயவர்களையன்று பாவிகளை மீட்கவே, நான் இவ்வுலகிற்கு வந்தேனென்று யேசு கிறீஸ்து தன்னுடைய வாழ்நாட்களில் பலமுறை பகிரங்கமாகவே பேசியிருக்கிறார்.

அவர் வாழ்ந்த காலத்திலும் சமூகத்தில் உயர்ந்தவர்களாகக் கருதப்பட்ட பலரும் அவரைக் காண விரும்பினர். ஆயினும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. பாவியெனக் கருதப்பட்ட சக்கேயு(Zacchaeus) (லூக்காஸ் வேதாகமம்: 19ம் அதிகாரம்), வீட்டிற்கு சென்றவர் நான் பாவிகளை இரட்சிக்கவே உலகுக்கு வந்தேன் என்றார்.

ஆம் நண்பர்களே. இறைவன் இப்போதும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார். ஆனால் நம் எல்லோருடைய கண்களுக்கும் அவர் புலப்படுவதில்லை. நல் மனத்தோடு, உள்ள சுத்தியோடு அவரைக் காண வேண்டும் என்று தேடுபவர்கள் அவரைக் கண்டுக் கொள்கிறார்கள்.

எவ்வாறு? நாம் படங்களில் உருவகப்படுத்தி வைத்திருக்கிறோமே, அவ்வாறா?

அல்லவே அல்ல.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தினம் தினம் காணும் நம்முடைய நண்பர்கள், நாம் எதிரிகள் எனக் கருதப்படுபவர்கள், நடைபாதையில் யாசகம் செய்வோர், நோயாளிகள், குழந்தைகள், குழந்தை மனம் படைத்தவர்களென பலருடைய வடிவங்களில் நாம் இறைவனை அன்றாடம் கண்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

சுயநலம், பேராசை, பொருளாசை, பொறாமை, கோபம், அகங்காரம், ஆணவம், மதவெறி, ஜாதிவெறி என்று நம்மை தலைமுதல் கால்வரை மறைத்திருக்கும் போர்வைகளை அகற்றியெறிந்துவிட்டு தேடினால் நம்முடைய கண்களுக்கும் இறைவன் தோன்றுவார்.

புறக் கண்களை மூடுவோம். அகக் கண்களைத் திறப்போம்.

இறைவனைக் காண்போம்.