Tuesday, January 31, 2006

இந்தியாவில் சலேசியர்கள்-நூறு வருடங்கள்!

இன்று தூய.தொன் போஸ்கோ (St.Don Bosco) பெருவிழா!

இவர்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தொன் போஸ்கோ (Don Bosco) என்ற பெயரில் எண்ணற்ற பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு அனாதை இல்லங்கள், இளைஞர்களின் விளையாட்டு குழுக்கள் என பல நிறுவனங்களைத் துவக்கி திறம்பட நடத்திவரும் சலேசிய குருமார்கள் மற்றும் கன்னியர்களைக் கொண்ட சலேசியர் என்ற ஸ்தாபனத்தை (Congregation) 1854ம் வருடம் இத்தாலியில் துவக்கிய குருவானவர் (பாதிரியார்).

இவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். இவர், இத்தாலியிலுள்ள தூரின் (Turin) நகரிலிருந்த தேவாலயத்துக்கு மாற்றலாகி சென்றார். அவர் அங்கு சென்ற சமயத்தில் இத்தாலியில் தொழிற்புரட்சி உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். கணக்கற்ற இளைஞர்கள் வேலையைத் தேடி தங்களுடைய பெற்றோர், மனைவி, மக்களை விட்டுவிட்டு தூரின் நகருக்குப் படையெடுத்த காலம். இத்தகைய இளைஞர்கள் பணி நேரம் கழிந்ததும் செய்வதறியாது திகைப்பதையும் அதில் சிலர் போதைப் பொருள், சிற்றின்பம் போன்ற தவறான பாதையில் செல்வதைப் பார்த்த போஸ்கோ அடிகளார் அவ்விளைஞர்களுக்கென ஒரு இலவச இல்லத்தை (Hostel) 1841ம் வருடம் தூரின் நகரில் துவக்கினார்.

பிறகு அனாதைகளாய் தூரின் நகரின் சேரிகளில் படிப்பு, வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த சிறுவர்களைக் கண்டார். அவர்களையும் ஒன்று சேர்த்து விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபடச் செய்தார். சில வருடங்களுக்குப் பிறகு இச்சிறுவர்களுக்கென பள்ளிகள், விடுதிகள், விளையாட்டு மையங்கள் (Clubs) ஏற்படுத்தி அவர்களைத் தவறான வழிகளிலிருந்து மீட்டார்.

இங்ஙனம் இளைஞர்கள், இளைஞிகளின் வாழ்க்கைக்கே தன் குருத்துவப் பணியை அற்பனித்தார் போஸ்கோ அடிகளார். தன்னுடைய சேவை தூரின் நகரோடு நின்றுவிடக் கூடாது என்று எண்ணிய போஸ்கோ அடிகளார் குருக்களுக்கென தூய பிரான்சிஸ் டி சலேஸ் (Salesians of Don Bosco) என்ற ஸ்தாபனத்தை 1854லும் கன்னியர்களுக்கென கன்னி மரியாயின் கன்னியர்கள் (Salesian Sisters) 1872 ம் வருடத்திலும் துவக்கினார்.

இவ்விரு சபைகளும் நாளடைவில் இத்தாலியின் மற்ற நகரங்களிலும் பரவின. அத்துடன் இந்தியா போன்ற உலகின் பல நாடுகளிலும் இச்சபை பரவியது. இன்று உலகின் ஐந்து கண்டங்களிலும் சேர்த்து சுமார் 2000க்கும் கூடுதலான இல்லங்கள் (Hostels), அனாதை சிறுவர் இல்லங்கள் (Orphanages), பள்ளிகள், விளையாட்டு குழுக்கள் (Sports Clubs) பொழுதுபோக்கு மையங்கள் (Recreation Centres), விளையாட்டு பயிற்சி மையங்கள் என உலகெங்கும் சலேசியர்களின் ஸ்தாபனங்கள் பரவி இருக்கின்றன!

சலேசியர்கள் இந்தியாவுக்கு வந்து நூறாண்டுகள் ஆகின்றன!

இந்தியாவில் சலேசியர்களின் பணிகளைக் குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள கீழ்காணும் தளத்திற்கு சென்று பாருங்களென அன்புடன் அழைக்கிறேன்.

St.Don Bosco

இத்தருணத்தில் நான் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புவது நானும் ஒரு தூய தொன் போஸ்கோ பள்ளியில் படித்த மாணவன்!

வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற சிறு வயதிலேயே கற்றுக் கொண்டது சலேசிய குருக்களிடத்திலிருந்துதான்!

4 comments:

பரஞ்சோதி said...

தூய தொன் போஸ்கோ பள்ளிகளின் வரலாற்றை நீண்ட நாட்களாக தெரிந்து கொள்ள ஆசை.

சலேசியர்களின் சேவை மகத்தானது.

நன்றி அண்ணா.

tbr.joseph said...

வாங்க பரஞ்சோதி தம்பி!

நன்றி.

சிறில் அலெக்ஸ் said...

I am an ex-salesian myself. Nice post sir.

I am impressed. Salesians do make a lot of difference on the youth.

leep up the great work.

tbr.joseph said...

வாங்க சிறில்,

நீங்களும் சலேசிய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் காட்பாடியிலுள்ள பள்ளியில் படித்தேன். நீங்க?

Post a Comment