Monday, January 30, 2006

பேரின்ப ஞானம்!


தாவீது (David) அரசரின் மறைவுக்குப் பிறகு இஸ்ராயேலரின் அரசராக அபிஷேகம் செய்யப்பட்டவர் அவருடைய புதல்வரான சாலமோன். அவர் ஒருநாள் இறைவனுக்கு பல தகனப் பலிகளை செலுத்தினார்.

தகனப் பலிகள் என்பவை என்ன?

அக்காலத்தில் நாட்டை ஆண்டு வந்த அரசர்கள் தங்களுக்கு இறைவன் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவதற்காக தங்களுடைய கால்நடைகளில் மிகச் சிறந்ததும், எந்தவித குறையும் இல்லாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைக் கொன்று அதற்கென நிர்மானிக்கப்பட்டிருந்த பலி பீடத்தில் எரியூட்டி காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.

அப்படித்தான் சாலமோனும் காபாவோன்ற என்ற இடத்திலிருந்த பலிபீடத்தில் காணிக்கையளித்தார்.

அன்றிரவு இறைவன் அவருடைய கனவில் தோன்றி, ‘நீ விரும்புவதைக் கேள்’ என்றார்.

அதற்கு சாலமோன் ‘உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமையைப் பகுத்தறியவும் வேண்டிய ஞானத்தை அடியேனுக்கு அளித்தருளும். ஏனெனில் என் அதிகாரத்திலிருக்கும் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டுமே.’ என்றார்.

அவருடைய விண்ணப்பம் இறைவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவர் சாலமோனை நோக்கி, ‘உனக்கென நீடிய ஆயுளையும் மிகுந்த செல்வத்தையும் உன் எதிரிகளின் உயிர்களையும் கேளாமல், நீ நீதி வழங்குவதற்கு ஏற்ற ஞானத்தை தரவேண்டும் என்று மன்றாடியதால் உன் வேண்டுகோளின்படியே அதை உனக்குத் தருகிறேன்’ என்றார். மேலும் ‘இதில் உனக்கு இணையானவன் இதற்குமுன் இருந்ததுமில்லை; இதற்குப்பின் இருக்கப் போவதுமில்லை. அத்துடன், நீ என்னிடன் கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருகிறேன்.’ என்றார்.

சாலமோன் கண்விழித்தபோது  தான் கண்ட கனவின் பொருளைப் புரிந்து கொண்டார்.

‘சாலமோனின் ஞானம்’ என்று இன்றும் மேற்கோள் காட்டப்படும் அளவுக்கு இருந்தது அவருடைய ஞானமும், விவேகமும்!

அவருடைய ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியை  காண்போம்.

ஒருநாள் விலைமாதர் இருவர் அவரிடம் ஒரு புகாரைக் கொண்டுவந்தனர்.

அவர்களுள் ஒருத்தி அரசரைப் பார்த்து, ‘அரசரே, நானும் இப் பெண்ணும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். நான் படுக்கையறையில் இவளருகில் படுத்திருந்தபோது ஒரு பிள்ளையைப் பெற்றேன். எனக்கு பிள்ளை பிறந்த மூன்றாம் நாள் இவளும் ஒரு பிள்ளையைப் பெற்றாள். ஒரு நாள் இரவுத் தூக்கத்தில் இப் பெண் தன் பிள்ளையின்மேல் புரண்டு அழுத்தியதால் இவளுடைய பிள்ளை நசுங்கி இறந்து போயிற்று. அப்போது நான் உறங்கிக் கொண்டிருந்ததால் இவள் இறந்துப் போன தன் பிள்ளையை என் பக்கத்தில் கிடத்திவிட்டு என் பிள்ளையை தன் மடியில் கிடத்திக் கொண்டுவிட்டாள்.’ என்றாள்.

அதற்கு மற்றவள் மறுமொழியாக, ‘அப்படியன்று அரசரே. உயிரோடு இருப்பது என் பிள்ளை. இறந்துபோனதுதான் இவளுடைய பிள்ளை.’ என்றாள்.

இவர்களுடைய வாதத்தை சிறிது நேரம் கேட்ட சாலமோன் அரசர் தன் காவலாளியை நோக்கி, ‘ஒரு வாளைக் கொண்டுவா.’ என்று பணித்தார். ‘உயிரோடு இருக்கிற இந்த பிள்ளையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக கொடு.’

அப்போது உயிரோடு இருந்த பிள்ளையின் தாய் வயிற்றில் அடித்துக் கொண்டு, ‘வேண்டாம் அரசே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம். அதை அவளுக்கே கொடுத்துவிடுங்கள்.’ என்றாள்.

சாலமோன் அரசர் அவளைக் காட்டி, ‘பிள்ளையை இவளிடமே கொடுத்துவிடுங்கள். இவள்தான் அதன் தாய்.’ என்றார்.

இறைவன் அவருக்களித்த ஞானத்தின் ஆழத்தை எடுத்துரைக்கவே இச்சம்பவம் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

நாம் எவ்வளவுதான் செல்வம் சேர்த்து வைத்தாலும் அதைக் கட்டிக் காப்பாற்ற நமக்கு உதவுவது நம்முடைய அறிவும், விவேகமும்தான்.

கல்வியா, செல்வமா, வீரமா இவற்றில் எது உனக்கு வேண்டும் என்ற கேள்வியை ஊமையனிடம் கேட்கப்பட்டபோது கல்விதான் வேண்டும் என்றதாக சிவபெருமானின் திருவிளையாட்டுகளில் கூறப்படுகிறது.

செல்வமும் வீரமும் அழியக்கூடியது. கல்வியொன்றுதான் அதாவது மனிதனின் அறிவும் அதனால் அவனுக்கு கிடைக்கும் ஞானமும்தான் அவனுடைய மரணம் வரைக்கும் துணையாய் நின்று அவனை வழி நடத்தும்.

நான் கடந்த பதிவில் குறிப்பிட்ட சீராக் (Sirach) ஆகமத்தில் இதற்கென ஒரு தனி அதிகாரமே எழுதப்பட்டுள்ளது.

‘ஞானத்தின் நன்மைகள்’ என்ற தலைப்பில் பட்டியலிடப் பட்டுள்ளவற்றில்  முக்கியமானவை சிலவற்றைப் பார்ப்போம்.

1.     தாழ்ச்சியுடையவனுடைய ஞானம் அவனை உயர்த்தும். சான்றோர் நடுவில் அவனை அமரும்படி செய்யும்.

2.     ஞானமும் நற்போதகமும் கட்டளைகளின் அறிவும் கடவுளிடமிருந்து வருகின்றன.

3.     கடவுளுடைய அருள் நீதிமான்கள் மேல் நிலைத்திருக்கின்றது. அவருடைய தயவு அதைப் பெருகச் செய்வதால் நீதிமான் நித்தியப் பேற்றைப் பெறுகிறான்.

விவேகத்தின் முக்கியத்துவத்தை புதிய வேதாகமத்திலும் காணலாம்.  

இயேசு கிறீஸ்து தன்னுடைய போதனைகள் அவர்களுடைய சீடர்களுக்கும் யூதமக்களுக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சிறு சிறு கதைகள் வழியாகவும் உவமைவகள் வழியாகவும் பேசுவதுண்டு.

அவர் ஒருமுறை விண்ணரசை (சொர்க்கம்) ஒரு மணமகனை (மாப்பிள்ளை என்றும் பொருள் கொள்ளலாம்) அழைக்கச் சென்று பத்துக் கன்னியர்களுக்கு ஒப்பிட்டு பேசினார்.

அதன் சாராம்சம் ஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அந்த பத்து கன்னியர்களுள் ஐந்து பேர் விவேகிகள் (புத்திசாலிகள்). மீதமுள்ளவர்கள் அறிவிலிகள். விவேகிகள் தங்களுடைய விளக்குடன் அதற்குத் தேவையான எண்ணெயும் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை. மணமகன் வர காலதாமதமாகவே அனைவரும் உறங்கிப் போயினர்.

நள்ளிரவில் மனமகன் வருகிறார், அவரை அழைக்க வாருங்கள் என்ற அழைப்பு வரவே பதறியெழுந்த கன்னியர்கள் அனைவரும் தங்கள் விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தனர். எண்ணெய் எடுத்துக் கொள்ளாத அறிவிலிகளின் விளக்குகள் அணையத் துவங்கவே அவர்கள் விவேகிகளிடம் உங்களுடைய எண்ணெயில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று கெஞ்சினர். விவேகிகளோ உங்களுக்கு எண்ணெய் கொடுத்தால் எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாமல் போய்விடக்கூடும். ஆகவே நீங்கள் விற்பவரிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.

அவர்கள் எண்ணெய் வாங்கிவரச் சென்றிருந்த நேரத்தில் மணமகன் வந்துவிடவே விளக்குகளுடன் தயாராயிருந்த விவேகமுள்ள கன்னியர் அவருடன் மணவீட்டுக்குள் நுழைய வாசற்கதவு சாத்தப் படுகிறது. எண்ணெயுடன் வந்த கன்னியர் பலமுறை வேண்டியும் கதவு திறக்கப்படவில்லை..

ஆகவே விவேகத்துடன் விழிப்பாயிருங்கள். விண்ணகத்திலிருந்து உங்களுக்கு எப்போது அழைப்பு வரும் என்று தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் அது வரலாம் என்று இயேசு கூறுவதாக முடிகிறது அந்த உவமை.

ஆம், மரணம் எப்போதும் வரலாம். இறைவனின் கட்டளைகளுக்குட்பட்டு விவேகத்துடன் நல்லது எது, தீயது எது என்று இனம் கண்டுக் கொள்பவர்களுக்கே சொர்க்கத்தின் பேரின்ப பேறு கிடைக்கும்.

இவ்வுலகில் நாம் சேர்த்துவைக்கும் சொத்துபத்துக்கள் விண்ணரசை, சொர்க்கத்தை, நமக்கு தராது. இறைக் கட்டளைகளை நம்முடைய விவேகத்தால், ஞானத்தால் அதாவது நம் மனக்கண்களால் கண்டு அதன்படி நடப்பதே நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

4 comments:

G.Ragavan said...

ஜோசப் சார். உங்கள் பதிவு எனக்குச் சில தமிழ்ச் செய்யுள்களை நினைவுக்குக் கொண்டு வருது. இதே பொருளில்.

நல்ல பதிவு. நல்ல அறிவுரைகள். தொடரட்டும் இந்தப் பணி.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி.

Aravindan Neelakandan said...

This is typical catholic hypocracy. Catholic Church was an active supporter of Hitler. Present Pope was in Hitler's youth wing.These people preaching love is simly obscene.

tbr.joseph said...

வாங்க அரவிந்தன்,

I think you are a bit confused about what I said.

The Catholic religion does not suffer from inequities of the people who govern the Church. As Hinduism did not suffer any damage due to the misbehaviour of some of its preachers, gurus, swamis, etc.

The people do not preach love, God is. I speak only about God. When I speak about HIM I tend to quote verses from Bible because I know only Bible.

Post a Comment