Saturday, January 28, 2006

நம் மனசாட்சி!

நாம் முந்தைய சில பதிவுகளில் இறைவன் தாவீதை (David) எவ்வளவு நேசித்தார் எனவும் அதை எல்லோருக்கும் காண்பிக்கும் பொருட்டு அவருடன் இருந்து கோலியாத் போன்ற வலிமை மிக்கவரை வீழ்த்தச் செய்தார் எனவும் பார்த்தோம்.

இந்த தாவீது, சவுல் அரசரின் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய் முப்பதாவது வயதில் இஸ்ராயேலரின் இரண்டாவது அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார் (சாமுவேல் கமம்: இரண்டு: 5ம் அதிகாரம்: வசனங்கள் 1 முதல் 3 முடிய).

அத்துடன் இறைவன் அவரோடு இருந்து அவருடைய எதிரிகளை வீழ்த்தவும் செய்தார் (சாமு:8:1-14 மற்றும் 10:1-19).

ஆனால் இஸ்ராயேல் மக்களின் மதிப்பிற்கும், பெருமைக்கும் உரியவராயிருந்த தாவீதோ தன்னுடைய உடல் இச்சைக்கு அடிமையாகி தன் ஊழியர்களுள் ஒருவனான உரியாசின் மனைவி பெத்சேபாவை தன் இச்சைக்கு அடிபணிய வைத்து இறைவனுக்கு எதிராக பாவம் கட்டிக் கொள்கிறார்.

அத்துடன் நில்லாமல் அவளுடைய கணவனை நயவஞ்சகத்துடன் போர்முனைக்கு அனுப்பி எதிரிகளால் கொலையுறவும் செய்கிறார். அதன் பின் அவளை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து மனைவியாகவும் ஆக்கிக் கொள்கிறார்.

தான் செய்த இந்த இழிச்செயல் இறைவனுக்கு எங்கே தெரியப் போகிறதென இறுமாப்புடன் இருந்த தாவீதின் மேல் இறைவனின் பார்வை விழுகிறது.

இறைவன் அக்காலத்தில் வாழ்ந்து வந்த இறைவாக்கினர் நாத்தானை அவரிடம் அனுப்பி இவ்வாறு கூறச் செய்கிறார். ‘ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர். ஒருவன் செல்வந்தன்; மற்றவன் ஏழை. செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன. ஏழை மனிதனுக்கோ விலைக்கு வாங்கி வளர்த்த ஓர் ஆட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடும் வீட்டில் வளர்ந்து, அவன் அப்பத்தைத் தின்று அவனது கிண்ணத்தில் குடித்து அவன் மடியில் தூங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே இருந்து வந்தது. செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவனுக்கு விருந்து செய்யத் தன் சொந்த ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமின்றி, செல்வந்தன் அந்த ஏழை மனிதனுடைய ஆட்டைப் பிடித்துச் சமையல் செய்தான்.’

இதைக் கேட்ட தாவீது அரசன் அசெசெல்வந்தன் மேல் மிகவும் சினந்து நாத்தானை நோக்கி, ‘ஆண்டவர் மேல் ஆணை. இதைச் செய்தவன் சாக வேண்டும். இரக்கமின்றி அவன் இதைச் செய்தபடியால் அந்த ஆட்டுக்குப் பதிலாக நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.’ என்றார்.

நாத்தான் அவரை நோக்கி, ‘நீரே அம்மனிதன்... இறைவன் உம்மை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசராக அபிஷேகம் செய்தார். நீரோ இறைவன் முன்னிலையில் பாவம் செய்தீர். உம் ஊழியன் உரியாசின் மனைவியை உமக்கு மனைவியாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அவனை அம்மோனியரின் வாளுக்கு இரையாக்கினீர். ஆகவே இறைவனின் வாளானது உம் வீட்டை விட்டு அகலாது.’ என்றார்( 2 சாமுவேல்: 12:1-8).

மேலும், ‘இதோ, ஆண்டவர் கூறுகிறார், உம் வீட்டின் தீமை உம்மேல் வரச் செய்வோம். உம் பார்வையிலேயே உம் மனைவியரை எடுத்து பிறனுக்குக் கொடுப்போம்.. நீர் மறைவில் செய்த காரியத்தை நாம் இஸ்ராயேல் அனைவருக்கும் முன்பாக செய்வோம்.’ என்றார்.

நாமும் அப்படித்தான். தீச்செயல்களில் ஈடுபடும்போது இது யாருக்குத் தெரியப் போகிறது? நம் செயலுக்கு யார் சாட்சிகள் என்றெல்லாம் நினைக்கிறோம்.

ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஏன், நாம் நம் மனதில் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களையும் இறைவன் அறிகிறார் என்பதை நினைவில் கொள்கிறோமா?

நாம் மறைவில் செய்வதை இறைவன் பலருக்கும் வெளிப்படுத்தி நம்மை அவமானம் கொள்ள செய்யமாட்டார் என்ற தைரியத்தினால் தானே இவ்வாறு நடந்துக் கொள்கிறோம்?

மனிதர்கள் செய்யும் தவறுகளை, பாவச் செயல்களை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு அவ்வப்போது அனுப்பப்பட்டவர்கள்தான் இறைவாக்கினர் என்ற இறை ஊழியர்கள்.

அக்காலத்தில் இறைவன் தம் மக்களுடன் தம்முடைய இறைவாக்கினர் மூலமாக பேசினார் என்கிறது வேதாகமம். அதுமட்டுமல்ல, இறக்கத்தின் ஊற்றான இறைவன் தம் மக்கள் பாவம் செய்யும் போதெல்லாம் அவர்களை எச்சரித்து நல்வழிப்படுத்த இத்தகைய இறைவாக்கினரைப் பயன்படுத்தினார் என்றும் வேதம் கூறுகிறது.

ஆனால் இத்தகைய இறைவாக்கினரை யூதர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அவர்களை பித்துப் பிடித்தவன் என்று ஏளனம் செய்து புறக்கணிக்கவே செய்தனர். சிலரை கல்லால் எறிந்து கொன்று போட்டனர் என்றும் வேதம் கூறுகிறது.

இஸ்ராயேலரின் இத்தகைய நடத்தைகளை இயேசு கிறீஸ்துவும் புதிய வேதாகமத்தில் கடிந்துக் கொள்கிறார்.

‘வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே.. உங்களுக்கு ஐயோ கேடு, ஏனெனில் இறைவாக்கினர்களுக்கு கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள். (ஆனால்) எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தை சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்க மாட்டோம் என்கிறீர்கள். (மத்தேயு சுவிசேஷம்: 23:29-30).’

ஏன், இப்போது யாரேனும் பிறந்து வந்து நான் இறைவாக்கு உரைப்பவன். மனம் திரும்புங்கள், பாவ மன்னிப்பு பெறுங்கள் என்றால் நாமும் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டத்தைத் தானே அளிப்போம்?

அதனால்தானோ என்னவோ ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார். நம் மனசாட்சிதான் அக்காலத்தில் இறைவன் தன் மக்களிடம் அனுப்பிய இறைவாக்கினர்களின் பிரதிநிதி.

நாம் தீய செயல்களில், தீய எண்ணங்களில் ஈடுபடும்போதெல்லாம் நம்மை எச்சரிக்கும் மனசாட்சிக்கு செவிமடுப்போம்..

நம் வாழ்வில் மன நிம்மதியையும், உண்மையான மகிழ்ச்சியையும் பெறுவோம்.


0 comments:

Post a Comment