Tuesday, January 24, 2006

பொறாமை என்னும் காட்டுத் தீ!

முந்தைய பதிவில் நாம் வாசித்தபடி தாவீது (David) என்ற இளைஞன் கோலியாத் என்ற மாமிச மலையை வென்று ஊருக்குள் கொண்டு செல்லப்பட்டபோது ‘சவுல் கொன்றது ஆயிரம் பேர்; தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்’ என்று ஊர் மக்கள் ஆர்ப்பரித்தைப் (யாத்திராகமம் அதி:17 வசனங்கள் 7 மற்றும் 8) பற்றி அதற்கு முந்தைய நாள் (சனிக்கிழமை) பதிவில் வாசித்தோம்.

அப்போது நாட்டை ஆண்டு வந்த மன்னனின் பெயர்தான் சவுல் (Saul). அவன் தன்னை விட பல ஆண்டுகள் இளையவனான தாவீதுக்கு கிடைத்த புகழைக் கண்டு பொறாமைப்பட்டு அவனை எப்படியாவது தொலைத்துவிட வேண்டுமென்று அலைந்தான் என்றும் பார்த்தோம்.

அதேபோல் இயேசு கிறீஸ்து வாழ்ந்த காலத்திலும் நடந்தது. புனித மாற்கு (St. Mark) எழுதிய சுவிசேஷம் (Gospel) 3வது அத்தியாயம் 1 முதல் 6ம் வசனங்களில் கூறுவதின் சாராம்சம்:

‘அக்காலத்தில் ஓய்வுநாள் ஒன்றில் மீண்டும் செபக்கூடத்தில் வந்த இயேசு அங்கே சூம்பிய கையன் ஒருவனைக் கண்டார். அவர் மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வு நாளில் குணமாக்குகிறாரா என பார்த்துக்கொண்டிருந்தனர். யூதர்கள் சடங்கு முறைப்படி வாரத்தில் ஒருநாள் ஓய்வு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அந்நாட்களில் வாயில் ஊறிய எச்சிலை விழுங்குவது கூட தவறு என்று கருதப்பட்ட காலம். இயேசுவோ அவர்களுடைய தீய எண்ணத்தை அறிந்தவராய் சூம்பிய கையனைப் பார்த்து உன் கையை நீட்டு என அவனும் அவருடைய வார்த்தைகளை விசுவசித்து தன் கையை நீட்டினான். கை குணமாயிற்று. பரிசேயரோ (இயேசுவையும் அவருடைய போதனைகளையும் எதிர்த்த யூதர்களின் குழுக்களில் ஒன்று பரிசேயர் எனப்பட்டனர்) வெளியே போய் எரோதியரோடு (King Herod’s people) சேர்ந்துக் கொண்டு அவரை எப்படி தொலைக்கலாமென்று அவருக்கெதிராக ஆலோசனை செய்தனர்.’

பொறாமை மனிதனுடைய தீய குணங்களில் மிகவும் கொடியது. அது நம்மையே அழிப்பதுடன் நம்மைச் சார்ந்தவரையும் அழித்துவிடக்கூடியது. நம் நண்பர்கள், சுற்றம் சூழலென எவருடைய வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ளாது. அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள இடம் தராது. தேவையில்லாமல் பிறரை வீண் கோபத்திற்குள்ளாக்கும். சண்டை, சச்சரவு, அவதூறு பேசுதல், புறங்கூறுதல், ஆணவம், குழப்பம் எல்லாவற்றிற்கும் மூல காரணம் பொறாமையே.

நம்மில் பொறாமையால் பீடிக்கப்பட்டவர்கள் பழைய வேதாகமத்தில் நாம் கண்ட சவுல் அரசனுக்கும் புதிய வேதாகமத்தில் நான் காணும் பரிசேயர்களுக்கும் இணையாக கருதப்பட தகுந்தவர்கள்.

பொறாமை விளைவிக்கும் தீய விளைவுகளை நாம் உணர்ந்திருக்கிறோமா? நமது அண்டை அயலாரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறோமா? நம்மால் பிறரை மனம் திறந்து பாராட்ட முடிகிறதா? அல்லது குறைந்த பட்சம் அவர்களுடைய வெற்றியை குறைத்து மதிப்பிடாமலாவது இருக்கிறோமா?

***

11 comments:

பரஞ்சோதி said...

மனிதனிடம் இருக்கக்கூடாத ஆமைகளில் முதலிடம் பொறாமைக்கு தான்.

tbr.joseph said...

வாங்க பரஞ்சோதி,

அதனாலதான் ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் விளங்காதுன்னு சொன்னாங்க போலருக்குது..

பிந்தைய ஆளாவது கடன் வாங்குனாத்தான் வருவாரு.. முந்தையது சும்மா இருக்கறவங்களுக்கும் வரும்..

G.Ragavan said...

பொறாமை என்பது முயலாமையின் கொடும் பிள்ளை. ஆமைக்கு ஆமைதானே பிறக்கும்.

வாரியார் அடிக்கடி சொல்வார். இறைவனுக்கு எதிரிகளே கிடையாதாம். இறையடிவர்களுக்குத்தான் எதிரிகள் இருப்பார்களாம். எந்தவொரு இறையடியவரையும் எடுத்துப் பாருங்கள்.

அப்பரைக் கல்லில் கட்டிக் கடலில் போட்டான் மகேந்திர பல்லவன். பின்னர் அவனே திருந்தி மன்னிப்புக் கோரினான். ஞானசம்பந்தர் மடத்துக்குத் தீ வைத்தார்கள். மதுரைப் பக்கத்தில் பலப்பல தமிழ் அறிஞர்களைக் கொன்றார்கள். அருணகிரிக்குச் சம்பந்தாண்டான். முகமது நபியையும் அழிக்கப் பார்த்தார்கள். அதை "வரைதடத்தைக் கொதுக்கினங்கள் அழிப்பதென" என்று சீறாப்புராணம் சொல்கிறது. அதாவது மலையை அரிக்கக் கொசுக்கள் கூடியது போல என்று பொருள்.

ஆனால் எவ்வளவு செய்தாலும் இறையருள் முன்னின்று காக்கும். தாவிதின் வாழ்விலும் அப்படித்தானே.

நான் கேட்டுக் கொண்டபடி ஆங்கிலப் பெயர்களையும் கொடுத்தமைக்கு நன்றி சார்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

சரித்திர ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் இறைவனை நம்புங்கள், அவன் சொல்வதைக் கேளுங்கள், அவன் காட்டிய வழியில் செல்லுங்கள் என்று போதித்த அனைவரையுமே மக்கள், இக்காலத்திலும் சரி, அக்காலத்திலும் சரி, ஏற்றுக்கொண்டதேயில்லை.. அது எம்மதத்தவராயினும்..

சமுதாயம் சீர்கெட்டிருப்பதற்கு அதுதானே காரணம்?

படித்து முடித்த நல்லதொரு வேலையில் அமர்ந்து வாழ்க்கையில் நல்லதொரு நிலையை அடைந்தபிந்தான் நம்மில் பலருக்கு 'எனக்கு கடவுள்மேல் நம்பிக்கையில்லை' என்று சொல்லத் தோன்றுகிறது.. சொல்லப் போனால் அதுவே இப்போது ஃபாஷனாகிவிட்டது..

கடவுளை நம்புவன் முட்டாள், காட்டுமிராண்டி என்று சொன்னவரெல்லாம்தான் புத்திசாலி என்ற நிலை..

G.Ragavan said...

ஜோசப் சார். உண்மையைச் சொன்னால்....கல்லூரிக்காலத்தின் தொடக்கத்திலெல்லாம் எனக்கும் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் அரிதாகவே இருந்தது எனவே நினைக்கிறேன். குறிப்பிட்டு எந்தக் கோயிலுக்கும் போன நினைவோ....வழக்கமாக தொழுகை செய்த நினைவோ இல்லை. ஆனால் அதற்குப் பின்னால் படித்து முடித்து வேலைக்குச் சேர்ந்து இன்று சொந்தக் காலால் நிற்கும் பொழுதுதான் இறை நம்பிக்கை இந்த காலகட்டங்களில் என்னுள் எப்படி வேரூன்றி இருக்கின்றது என்பதே தெரிகிறது.

சத்தியமாகச் சொல்கிறேன். ஒவ்வொரு படியிலும் என்னைத் தூக்கி வைத்து உயர்த்தி வைத்தது அனைத்தும் கந்தன்(கடவுள்) கருணையே! கடவுள் உண்டு. உண்டு. உண்டு. பேர்கள் வேறானாலும். வழிபடும் ஊர்கள் வேறானாலும்....கடவுள் உண்டு. உண்டு. உண்டு.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

பேர்கள் வேறானாலும். வழிபடும் ஊர்கள் வேறானாலும்....கடவுள் உண்டு. உண்டு. உண்டு. //

கோர்ட்ல சொல்றா மாதிரி எல்லாத்தையும் மூனுதரம் சொல்றீங்க..

உண்மைய அழுத்தி சொன்னா இன்னும் உண்மையாயிரும். அப்படித்தானே..

ரொம்ப கரெக்ட்..

Suka said...

அருமை.

"அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்"

இதுபோல ஒரு அதிகாரமே ஒதுக்கி வள்ளுவர் பொறாமையின் தன்மையை விளக்கியுள்ளார்.

பொறாமை..போட்டி இரண்டிற்கும் நூலிழை அளவே வித்யாசம் என காண்கிறேன். இவை இரண்டிற்கும் பொதுவானது, கர்வம் அதாவது தன் பலத்தை நிரூபிக்கத் துடிக்கும் துடிப்பு..இது மிக மிகத் தேவையே...வித்தியாசம் என்னவெனில் வெற்றியை அடைய, முந்தையது அழிக்க நினைக்கிறது.. பிந்தையது ஆக்க நினைக்கிறது.

சுகா

tbr.joseph said...

வாங்க சுகா,

பொறாமை..போட்டி இரண்டிற்கும் நூலிழை அளவே வித்யாசம் என காண்கிறேன்.//

ரொம்ப சரியா சொல்லிட்டீங்க..

இப்பல்லாம் போட்டியா ஆரம்பிக்கிறது கடைசியில பொறாமையா மாறிடுது..
அத பாலிஷா Killer's Instinctனு சொல்லிடறாங்க.. இல்லன்னா Rat raceல இதல்லாம் பாக்கமுடியுமாங்கறாங்க..

பொறாமையும், போட்டியும் இருந்தாத்தான் வாழ்க்கையில முன்னுக்கு வரமுடியும்னு பிள்ளைங்களுக்கு பெற்றோரோ சொல்லிக் குடுக்கற காலம் இது.

tbr.joseph said...

சாரி சுகா,

பெற்றோரோ அல்ல. பெற்றோரே என்று இருக்க வேண்டும்..

Suka said...

:) வார்த்தைகளை எப்படியும் வளைக்கமுடியும். தக்கன தப்பிப் பிழைக்குமென்பது எதார்த்தம் என எண்ணுகிறேன்.

சுகா

மணியன் said...

சிறுவயதில் இங்கொன்றும் அங்கொன்றுமாக பைபிள் கதைகள் படித்துண்டு. கிருஸ்துமஸ் நாளில் இயேசு அவதாரக் கதையை கேட்டதுண்டு. விவிலியத்தை எளிய தமிழில் உங்கள் மூலம் கேட்பது (படிப்பது) மகிழ்ச்சியளிக்கிறது.

கடவுளின் தேவை ஆன்மாவிற்கே. ஆன்மாவை அறியும் வரை கடவுள் எங்கே என்றோ இல்லை என்றோ தான் தோன்றும்.

Post a Comment