Sunday, January 22, 2006

இறைவன் நம்மோடு இருந்தால்...

நேற்றைய பதிவில் தாவீது-கோலியாத் மோதலைப் பற்றி சுருக்கமாக கூறியிருந்தேன்..

அதைப் பற்றி மேலும் இன்று..

தாவீது பெத்லகேமைச் சார்ந்த யாசீனின் புதல்வர்களுள் இளையவன்.. பார்ப்பதற்கு மிகவும் அழகானவன், போர் புரிவதில் சூரன், யாழிசைப்பதில் வல்லவன்..

சவுல் அரசரின் எதிரிகளான பிலிஸ்தியர்கள் அவனை எதிர்த்து போருக்கு தயாராக நின்றபோது படைவீரர்களுடைய முன்வரிசையில் ஆஜானுபாகுவான, உருண்டு திரண்ட புஜங்களுடன் நின்றுக் கொண்டு கோலியாத் தன்னுடைய படைகளை எதிர்கொள்ள வந்த சவுலின் படைகளை நோக்கி சவால் விட்டான்.

‘உங்களில் பலசாலியான, போரிட திறமை வாய்ந்த ஒரு வீரனை தெரிந்தெடுத்து என்னுடன் மோத அனுப்புங்கள். நான் அவனிடம் தோற்றால் நான் மட்டுமல்ல இதோ போர்க்கோலத்தில் எனக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் அனைவருமே உங்களுக்கு அடிமையாகி சேவை புரிவோம். அதுபோல் அவன் தோற்றுப்போனால் நீங்கள் எல்லோரும் எங்களுடைய அடிமைகள். போட்டிக்கு தயாரா?’

தலையிலிருந்து கால்வரை வெண்கலத்தாலன கவசங்களை அணிந்துக் கொண்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் நின்ற கோலியாத்தின் கோலத்தைக் கண்டு அஞ்சி நின்றனர் சவுலின் படைவீரர்கள்.

தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுலின் படையில் இருந்ததால் அவர்களும் யுத்தகளத்தில் இருந்தனர். அவர்களுடைய தந்தை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மகன் தாவீதை அழைத்து நீ போய் உன் சகோதரர்களுக்கு இந்த அப்பங்களை உண்பதற்கு உணவாக கொடுத்துவிட்டு வா என்று அனுப்பினார்.

ஓட்டமும் நடையுமாய் யுத்தகளத்தை சென்றடைந்தான் தாவீது. அப்பங்கள் ஒரு கையிலும் ஆடு மேய்க்க பயன்படுத்தும் கோலுடனும் தங்கள் முன் வந்து நின்ற தாவீதைப் பார்த்து கோபமுற்ற அவனுடைய சகோதரர்கள், ‘மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளை யார் பொறுப்பில் விட்டு வந்தாய்? போர்க்களத்திற்கு உன்னை யார் வரச்சொன்னது? ஓடிப்போ இங்கிருந்து.’ என்று விரட்டினர்.

தாவீது, ‘ஐயோ.. நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று என்னை விரட்டுகிறீர்கள்? நம் தந்தைதான் என்னை உங்களுக்கு உணவைக் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்.’ என்றான்.

அவர்கள் அவனோடு உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோலியாத் மீண்டும் தன் சவாலை உரக்க கூவ அதைக் கேட்ட தாவீது அவன் என்ன கூறுகிறான் என்று அடுத்திருந்த படைவீரர்களைக் கேட்டான். அவர்களும் கோலியாத்தின் சவாலை எடுத்துரைக்க தாவீது உடனே ‘நான் உங்கள் சார்பில் போரிடுகிறேன்.. இறைவன் என்னோடு இருக்கையில் நான் எதற்கு, யாருக்கு அஞ்ச வேண்டும்’ என்றான்.

தாவீதின் சகோதரர்கள் சினம் கொள்ள மற்ற படைவீரர்களோ தங்களுடைய மன்னன் சவுலிடம் அவனை இழுத்துச் சென்று அவன் தங்களுக்கு கூறியதை அறிவித்தனர்.

சவுல் தன் முன்னே நின்ற ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீதை பார்த்து, ‘நீயோ சிறுவனாயிற்றே’ என்று தயங்கினான். அதற்கு தாவீது, ‘நான் சிறுவயது முதலே போர்வீரன்தான். நான் இறைவனின் படையை எதிர்த்து வந்துள்ளவர்களை இறைவனின் துணையோடு போரிட்டு வெல்வேன்.’ என்று மார்தட்ட சவுல் அவனுக்கு தன்னுடைய போர்க்கவசங்களை அணிவித்து, இறைவனின் நாமத்தால் ஆசீர்வதித்து அனுப்பினான்.

ஆனால் தாவீது தனக்கு முன்பின் பழக்கமில்லாத போர்க்கவசங்களை அணிந்துக் கொண்டு நடக்கமுடியாமல் தடுமாறினான். பிறகு, அவை எல்லாவற்றையும் கழற்றிவிட்டு தனக்கு வழக்கமான மரக்கோலையும், ஐந்து கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்து தன் இடுப்பில் சொருகியிருந்த கவணை கையில் எடுத்துக் கொண்டு போர்க்களத்திற்கு விரைந்தோடினான்.

கையில் கோலுடன் தன் முன் வந்து நின்ற சிறுவனைப் பார்த்து ஆணவத்துடன் சிரித்த கோலியாத், ‘வா சிறுவனே.. உன்னைக் கொன்று உன் உடலை கழுகுகளுக்கு இரையாக்குவேன்.’ என்றான்.

தாவீது அவனுடைய உருவத்தையும் சிரிப்பையும் கண்டு அஞ்சாமல் கண்களை வானத்தை நோக்கி உயர்த்தி இறைவனை துணைக்கு அழைத்தான். பிறகு தன் பையிலிருந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து தன் கவணில் வைத்து சுழற்றி கோலியாத்தின் நெற்றியை குறிவைத்து எறிந்தான். மலையென நின்ற கோலியாத் இடிபட்ட மதிலென சரிந்தான்!

ஆடு மேய்க்கும் இளைஞனான தாவீது தனது பலத்தையோ, போரிடும் திறமையையோ மட்டும் நம்பி போரில் இறங்கவில்லை.. மாறாக தான் வணங்கும் இறைவனை நம்பி இறங்கினான். இறைவன் தன்னோடு இருக்கிறார் என்று அவன் முழுமையாய் நம்பினான், விசுவசித்தான். இறைவன் தன் எதிரியை தன்னிடம் ஒப்படைப்பார் என்றும் விசுவசித்தான்.

நாமும் அப்படித்தான். நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மை பயமுறுத்தும் சோதனைகளையும், தோல்விகளையும் நம் திறமையில் மட்டுமே நம்பி இறங்கினால் தோல்விதான் மிஞ்சும். ஆனால் நாம் அன்றாடம் வழிபடும் இறைவனை நம்பி, அவருடைய வல்லமையில் நம்பிக்கை வைத்து எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இறைவன் நம்மோடு இருக்கிறார்.. உறுதியுடன் இருப்போம்.. வெற்றி நிச்சயம்.

11 comments:

பரஞ்சோதி said...

ஜோசப் அண்ணா,

அருமையான கதையும் கருத்தும்.

கடவுளை நம்பியோர் கைவிடப்படார்.

ஆணவக்காரனை ஆண்டவன் கூட கை விட்டு விடுவார்.

என் வாழ்க்கையில் கூட இறைவன் நம்பி இறங்கிய காரியம் அனைத்தும் வெற்றி.

நான் சிறுவர் பூங்காவில் கோலியாத், தாவூது போன்ற ஒரு கதை சொல்லிய போது, என்னார் அண்ணா, தாவூது கதையை கேட்டிருந்தார்கள்.

இதை படித்தால் மகிழ்ச்சியடைவார்.

பகுத்தறிவாளன் said...

//நாம மதக் கோட்பாடுகளைப் பற்றி மட்டும்தான் பேசுகிறோம். தனி நபர்களையல்ல..//

அன்புள்ள டி.பி.ஆர் ஜோசப் அவர்களுக்கு,

தங்களின் "என் பைபிள்" பதிவு ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து படித்து வருகிறேன். பல்வேறு கேள்விகள், சந்தேகங்கள் இருந்தாலும் அவற்றை கேட்பதன் மூலம் இங்கு அவை "தனி மனித தாக்குதல்"களாக சித்தரிக்கப் படுவதும், அல்லது அவ்வாறு மாற்றப்படுவது நடப்பதால் இது வரை பின்னூட்டமிடாமல் இருந்து வந்தேன்.

மேற்கண்ட உங்களின் வரி மட்டுமே என்னை இங்கு பின்னூட்டமிட வைத்தது. முழுக்க முழுக்க இந்த கண்ணோட்டத்தில் விவாதிக்க நான் விரும்புகிறேன்.

நாம் அனைவரும் மனிதர்கள். நம்மை நல்வழிபடுத்த அல்லது நமக்கு நல்வழியை, நேரான வழியை போதிக்க வந்தவையே மதங்கள் என்ற எண்ணமுடையவன் நான். பிறப்பில் இஸ்லாமியனாக இருந்தாலும் வளர்ந்த சூழ்நிலைகளில் பல்வேறு கேள்விகளால் உந்தப்பட்டு(இஸ்லாத்தைக் குறித்து தான்) மதங்களின் அடிப்படையைக் குறித்து ஆராய்ந்திருக்கிறேன். அதில் எனக்கு சில தீர்மானங்களுக்கும் வர முடிந்தது.

அடிப்படையில் ஒன்றான யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் இன்று ஒன்றுக்கொன்று பிரிந்து நிற்பதன் காரணம் என்ன? உண்மையில் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமியர் உட்பட உலக மக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய இறைவனால் அருளப்பட்ட வேதம் எது? பைபிளில் அடங்கப்பட்டவைகளை அப்படியே ஏற்றுக் கொள்ள இயலுமா?

இதனைக் குறித்து ஓர் நீண்ட விவாதத்திற்கு விரும்புகிறேன் - மனிதத்தை குறித்தல்லாமல் மதத்தை - பைபிளைக் குறித்து. இக்கேள்விகளை நான் இங்கு வைக்கலாமா? நோக்கம் உண்மையை அறிய வேண்டும் என்பது தான். யாரையும் தாழ்த்துவது நோக்கமல்ல. நான் அறிந்தவைகளில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கும், யார் தவறான வழியில் இருக்கிறார்களோ அவர்கள் சத்தியத்தினை விளங்கி நேரான வழியில் வருவதற்காக மட்டுமே உங்களுடன் இதனைக் குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.

என்றும் அன்புடன் பகுத்தறிவாளன்.

G.Ragavan said...

ஜோசப் சார். அற்புதமான கருத்து. இறைவனை நம்பினோர் கைவிடப் படார். ஆண்டவனைத் தோன்றாத் துணை என்று தமிழ் கூறுகிறது. எல்லாத் துணைகளின் இருப்பும் நமக்குத் தோன்றும். ஆனால் இறைவனின் இருப்பு எப்பொழுதும் தோன்றாது. துன்பம் வருகையில்தான் பெரும்பாலானாருக்குத் தோன்றுகிறது. அந்த வேளையிலாவது நாமெல்லாம் இறைவனைத் தொழ வேண்டும்.

இராமநாதன் said...

அருமை ஜோசஃப் சார்.

//இறைவன் நம்மோடு இருக்கிறார்.. உறுதியுடன் இருப்போம்.. வெற்றி நிச்சயம்.//
அதே.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததெனின் 'Star of David' ஏன் யூதர்களின் குறியாக மட்டுமே இருக்கிறது? கிறிஸ்தவர்களுக்கில்லை?

துளசி கோபால் said...

இறைவன் எப்போதுமே 'நம்மோடு' இருக்கிறார்.
அதிலென்ன சந்தேகம்?

'மனசாட்சி' னு சொல்றமே அது என்னவாம்?

tbr.joseph said...

வாங்க பரஞ்சோதி,

என் வாழ்க்கையில் கூட இறைவன் நம்பி இறங்கிய காரியம் அனைத்தும் வெற்றி. //

கேக்கறதுக்கே எவ்வளவு சந்தோஷமாயிருக்கு.

tbr.joseph said...

வாங்க பகுத்தறிவாளன்,

நான் அறிந்தவைகளில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதற்கும், யார் தவறான வழியில் இருக்கிறார்களோ அவர்கள் சத்தியத்தினை விளங்கி நேரான வழியில் வருவதற்காக மட்டுமே உங்களுடன் இதனைக் குறித்து விவாதிக்க விரும்புகிறேன்.//

தாராளமா விவாதிக்கலாமே.. என்னால் இயன்ற அளவு, எனக்கு தெரிந்த அளவு பதிலளிக்க முயல்கிறேன். என்னால் முடியாதவைகளை நம்முடைய நண்பர்கள் விளக்குவார்கள் என்று நம்புகிறேன். தூய மனதுடன், தர்க்கம் செய்யவேண்டுமே என்ற நினைப்பில் எழுப்பப்படாத எந்த ஒரு வாதமும் நல்லதுக்குத்தான்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

எப்பவும் போலவே நச்சுன்னு இருக்கு உங்க கருத்து..

வாழ்த்துக்கள்.

tbr.joseph said...

வாங்க இராமநாதன்,

'Star of David' ஏன் யூதர்களின் குறியாக மட்டுமே இருக்கிறது? கிறிஸ்தவர்களுக்கில்லை? //

Star of David ஐ குறித்து பல கருத்துகள் உள்ளன. அதன் சரித்திரத்தை முழுமையாக அறிந்துக் கொள்ள கீழ் காணும் தளத்தை சென்று பாருங்கள்.

http://www.helpingmormons.org/six_pointed_star.htm

இக்கால கிறீஸ்துவர்களைப் பொறுத்தவரை இயேசு கிறீஸ்து மரித்த சிலுவையே முக்கிய சின்னமாக கருதப்படுகிறது.

tbr.joseph said...

வாங்க துளசி,

மனசாட்சி இறைவன் நம்மோடு இருப்பதன் அடையாளம்தான். ஒத்துக்கொள்கிறேன். ஆனால் கயவனின் மனசாட்சி நாளடைவில் அவன் செய்யும் எல்லா கயமைத்தனத்தையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்து விடுவதேன்?
தான் செய்வது தவறு என்றும் தெரிந்தே அவன் செய்கிறானா அல்லது அவனுடைய மனசாட்சியும் மழுங்கி போய்விடுகிறதா?

பகுத்தறிவாளன் said...

// தூய மனதுடன், தர்க்கம் செய்யவேண்டுமே என்ற நினைப்பில் எழுப்பப்படாத எந்த ஒரு வாதமும் நல்லதுக்குத்தான்.//


மிகவும் நன்றி டி.பி.ஆர் அவர்களே!இவ்வுலகிற்கு இறைவன் ஒருவன் என்ற விஷயத்திலும் , அந்த இறைவனால் படைக்கப் பட்ட எந்த ஓர் பொருளையும் விக்ரகமாக உருவாக்கக் கூடாது என்ற விஷயத்திலும் யூத , கிறிஸ்தவ , இஸ்லாமிய சமயங்கள் ஒரே கண்ணோட்டம் உடையவை.

இம்மூன்று சமயங்களின் கண்ணோட்டத்தில் இவ்வுலகைப் படைத்த இறைவன் , அதில் தான் உருவாக்கிய மனிதன் நேர்வழி தவறும் போது அவனுக்கு நேர் வழியை போதிக்க அம்மனிதர்களிலிருந்தே சிலரை தனது போதனைகளை போதிப்பதற்கான தூதர்களாக (தீர்க்கதரிசிகளாக)தேர்ந்தெடுக்கிறான். இத்தீர்க்கதரிசிகளை யார் நிராகரிக்கிறார்களோ அல்லது இறைவன் தேர்ந்தெடுக்காத கள்ள தீர்க்கதரிசிகளை யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் இறைவனின் மார்க்கத்திலிருந்து விலகிச் செல்கிறார்கள். இதனை இம்மூன்று சமயத்தினருமே ஏற்றுக் கொள்கின்றனர்.

அந்த அடிப்படையில் ஆதாம் முதல் மோசே வரை வந்த தீர்க்கதரிசிகளை ஏற்று இயேசுவை ஏற்காதவர்கள் யூதர்களாகவும்(இவர்களுக்கு இயேசுவும் , முகம்மதும் கள்ளதீர்க்கதரிசி) , இயேசுவையும் சேர்த்து ஏற்றவர்கள் கிறிஸ்தவர்களாகவும்(இவர்களுக்கு முகம்மது கள்ளதீர்க்கதரிசி) , ஆதம் முதல் இயேசு வரையும் ஏற்று அதற்கு பின்னும் மற்றொருவரை(முகம்மத்) ஏற்றவர்கள் இஸ்லாமியர்களாகவும் ஆபிரகாமின் சந்ததியினர் பிரிந்துள்ளனர் என்பது நாமறிந்ததே.

நிச்சயமாக "இம்மூவரும் கூறுவது சரிதான்" என அறிவுடைய யாரும் கூற மாட்டார்கள்.

1. இயேசுவும், முகம்மதும் கள்ள தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும் - யூதர்களின் பார்வை சரி.

2. முகம்மது மட்டுமே கள்ளதீர்க்கதரிசி - கிறிஸ்தவர்களின் பார்வை சரி.

3. முகம்மதுவும் தீர்க்கதரிசி தான் - முஸ்லிம்களின் பார்வை சரி.


யூத , கிறிஸ்தவ, இஸ்லாமிய அடிப்படையில் பொதுவாக இம்மூன்றில் ஒரு கூட்டத்தினர் கூறுவதே சரியாக இருக்க முடியும்.


என்னுடைய சந்தேகம் என்னவென்றால் , எதனால் கிறிஸ்தவர்கள் முகம்மதை தீர்க்கதரிசியாக ஏற்றுக் கொள்ளவில்லை ?; எதை ஆதாரமாக வைத்து இயேசுவை கிறிஸ்த்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் ?

Post a Comment