Saturday, January 21, 2006

பகைவரையும் அன்பு செய்யுங்கள்

பகைவருக்கு அன்பு

பழைய வேதாகமத்தில் (யாத்:21:24) கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

அது அக்காலத்திய வாழ்க்கை முறைக்கு ஒருவேளை ஏற்ற விதியாயிருக்கலாம். இவ்வாசகங்களுக்கு முந்தைய வாசகங்களையும் சேர்த்து வாசித்துப் பார்த்தால் ஒருவேளை அதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றலாம்..

மனிதர் சண்டையில் ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின் அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான். ஆனால் அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்..(யாத்:21:22-23) என்று இவ்வாசகங்கள் கூறுகின்றன.

ஆயினும் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாவீது புதிய வேதாகமத்தில் (மாற்கு 3:13-19) கூறியுள்ளபடி பகைவரையும் அன்பு செய்கின்ற கட்டளையைக் கடைபிடித்ததாகவும் பழைய வேதாகமத்தில் காண்கிறோம்...

இதன் பின்னணியை சற்றே பார்ப்போம்.

யூதர்களின் முதல் அரசராக இறைவனால் தேர்ந்தெடுக்க்ப்பட்டவர் சவுல். அவர் அரசாட்சி செய்த காலத்தில்தான் சாமுவேலும் வாழ்ந்து வந்தார். இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட சவுல் நாளடைவில் இறைசித்தத்திற்கு எதிராய் நடந்துக் கொள்ளவே இறைவனின் கோபத்திற்காளானார்.

சாமுவேல் சிறுவயதிலேயே இறைவனால் அவருடைய இறைவாக்கை இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துரைக்க தெரிந்துக் கொள்ளப்பட்டவர். அவருடைய காலத்தில் இறைவன் அவர் வழியாகத்தான் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய காரியங்களையும் செய்தார்.

சவுலின் போக்கும் செயல்களும் தனக்கெதிராக திரும்புவதைக் கண்ட இறைவன் அவருடைய இடத்தில் வேறொருவரை அபிஷேகம் செய்ய விரும்பி சாலமோனைப் பார்த்து, ‘நீ போய் பெதகலேமைச் சேர்ந்த இசாயினின் புதல்வர்களுள் ஒருவரை அடுத்த அரசராக தெரிந்துக் கொண்டுள்ளோம் என அவனிடம் கூறு என்று பணித்தார்.

சாலமோனுக்கோ தான் அப்படி செய்தால் சவுல் அரசுருடைய கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்று அஞ்சினார். இருப்பினும் இறைவனின் சொல்லைத் தட்ட முடியாமல் இசாயினிடம் சென்றார். இசாயி தன்னுடைய புதல்வர்களில் ஏழு பேரை அவர் முன் கொண்டு நிறுத்தினார். ஆனால் இவர்களில் ஒருவரையும் இறைவன் தெரிந்துக் கொள்ளவில்லை என்று சாலமோன் அறிந்தார். அதைக் கேட்ட இசாயி எனக்கு இன்னுமொரு சிறவன் இருக்கிறான். அவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். சாலமோன் அவனை அழைத்து வரச்சொல்லி அவனைக் கண்டவுடனே இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவன் இவந்தான் என கண்டுகொண்டார். உடனே அபிஷேகமும் செய்து வைத்தார். தாவிது யாழிசைப்பதில் மிகவும் வல்லவன், பேச்சுத் திறமையும், போர் புரிவதிலும் தேர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. கோலியாத்துடன் தனித்து மோதி வெற்றிக் கொண்டவன் இவனே.

நாளடைவில் தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது. அவன் தனி மனிதனாய் நின்று பிலிஸ்தியரை வென்று ஊர் திரும்பியபோது மக்கள், ‘சவுல் கொன்றது ஆயிரம் பேர்;தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்.’ என்று ஆரவாரித்தனர். இதைக் கேட்ட சவுல் தாவீதின் மேல் ஆத்திரம் கொண்டான். ஆகவே அவனைப் பிடித்து தன்னுடைய எதிரிகளான பிலிஸ்தியரிடமே ஒப்படைக்க திட்டமிட்டான். ஆனால் இறைவனின் அருள் தாவீதின் மேல் இருந்தது. ஆகவே சவுல் அவனை தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்து அவனை தன்னுடைய சேனையிலிருந்த ஆயிரம் வீரர்களுக்கு தலைவனாக்கி தன் பார்வையினின்று அகற்றினார்.

இருப்பினும் அவனை தகுந்த நேரத்தில் கொல்ல சதித் திட்டம் தீட்டினார். அதைக் கேள்வியுற்ற தாவீது தப்பித்து ஊருக்கு அப்பால் குகைகளில் மறைந்து வாழ்ந்து வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் ஒருமுறை சவுல் தாவீதின் கையில் தப்பிக்க முடியாவண்ணம் சிக்கிக் கொண்டார். தாவீதினுடன் இருந்த போர் வீரர்கள், ‘இதோ நாம் உம் எதிரியை உம்மிடம் ஒப்படைத்து விட்டோம். உம் மனதுக்கு பிடித்தபடி அவனுக்கு செய்துக்கொள்ளும்’ என்றனர்.

ஆயினும் தாவீது சவுலைப் பார்த்து, ‘உமக்கும் எனக்கும் இறைவனே நடுவராய் இருப்பாராக.. நான் உம்மேல் கை போடமாட்டேன்...’ என்றார்.

தாவீதின் பெருந்தன்மை சவுலை நெகிழச் செய்கிறது. அவரை அழச் செய்கிறது. அவர் தாவீதைப் பார்த்து, ‘நீ என்னிலும் நீதிமான், நானோ உனக்கு தீமை செய்தேன். நீ எனக்கு நன்மை செய்தாய்’ என்று கூறுகிறார்.

அதாவது யேசு கிறீஸ்து புதிய வேதாகமத்தில் ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக செபியுங்கள்.’ என்று கூறியதை பழைய வேதாகம காலத்திலேயே தாவீது கடைப்பிடித்தார்!

அன்பு , நீதி, சமத்துவம், உண்மைம், எல்லாவற்றிற்கும் மேலாக பகைவனை மன்னித்து அன்பு செய்யும் பண்பு நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமும். இதில், சாதி, மதம், மொழி ஒன்றும் தடையாய் இருக்கலாகாது..

14 comments:

பரஞ்சோதி said...

அண்ணா, விரும்பி படித்து, சேமித்து வைக்கும் வகையில் எளிமையாக எழுதுகிறீர்கள்.

ஞானவெட்டியான் said...

"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்."

G.Ragavan said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜோசப் சார். அதற்குத் தக்கவாறு அருமையான குறளைச் சொல்லியிருக்கிறார் ஞானவெட்டியான். இருவருக்கும் எனது நன்றி.

மற்றொரு ஐயம். மாற்கு யாத் என்பவை எதைக் குறிப்பவை. அத்தோடு வரும் எண்கள் குறிப்பதென்ன?

இந்த சாலமன்தான் கிங் சாலமன் என்று புகழ் பெற்றவரா?

tbr.joseph said...

வாங்க மரஞ்சோதி,

உங்க வாழ்த்துக்கு நன்றி.

tbr.joseph said...

வாங்க ஞானவெட்டியான்,

மிகவும் பொருத்தமான குறள். நன்றி.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

மாற்கு= புதிய வேதாகமத்தில் மாற்கு என்பவர் எழுதிய சுவிசேஷங்கள். முதல் எண் அத்தியாயத்தையும் அதற்கு அடுத்தபடியாக வரும் எண்கள் வாசகங்களையும் குறிக்கின்றன.

யாத்: என்பது யாத்திராகமம் என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் Exodus என்போம். இந்த ஆகமத்தில்தான் யூதர்கள் எகிப்தை ஆண்டு வந்து பாரவோன் மன்னரிடமிருந்து மோயீசனால் விடுவிக்கப் பட்டு அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. யாத்திரை என்றால் பயணம் என்றுதானே பொருள்.

சாலமோன்= நீங்கள் கேட்ட கேள்வி என்னுடைய தவறை கண்டுக்கொள்ள உதவுகிறது ராகவன். அது சாலமோன் அல்ல, சாமுவேல். சாமுவேல் ஒரு இறைவாக்கினர்.. அதாவது இறைவனுடைய வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சென்றவர்!

G.Ragavan said...

நன்றி ஜோசப் சார். இன்னொரு உதவி. சில பெயர்கள் தமிழாக்கத்தோடு அவைகளின் ஆங்கிலப் பெயர்களையும் கொடுங்களேன். ஏனென்றால் அரைகுறையாக சில ஆங்கிலப் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பதால் உதவியாக இருக்குமென நம்புகிறோம்.

tbr.joseph said...

வாங்க ராகவன்,

இனி வரும் பதிவுகளில் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.

பரஞ்சோதி said...

அண்ணா,

பரஞ்சோதியை மரஞ்சோதியாக்கி விட்டீங்க :))

இராகவன் அண்ணா.

கோலியாத்தை வென்ற தாவூது அரசனான பின்பு, அவரது மகன் சாலமோன் ஆட்சிக்கு வருவார். அவர் தான் புகழ் பெற்ற சாலமோன் அரசர்.

tbr.joseph said...

அட! ஆமாம்!!

மன்னிச்சுருங்க பரஞ்ஜோதி..

கைப்பிழை..

ராகவனுக்கு விளக்கம் கூறியதற்கு நன்றி..

துளசி கோபால் said...

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய்

பொன்னம்பலம் said...

ஆமாமுங்கோ! அம்மா! ஆமாமுங்கோ!

ஆனாலும் பாருங்க, இந்த காலத்தில ஒதவி செஞ்சா ஒவத்திரியமாப் போயிருதில்ல?

"விவேக சிந்தாமணி"ன்னு ஒரு புஸ்தகத்தில இப்பிடிப் போட்டிருக்கு.

"கெற்பபந்தான் மங்கையருக் கழகு குன்றுங்
கேள்வியில்லா வரசனா னுலகம் பாழாந்
துற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ்
சொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தா லற்பர் கேளாற்
நன்மைசெய்யத் தீமையுட நைந்து செய்வார்
அற்பரோ டிணங்கிடிற் பெருமை தாழு
மரியதவங் கோபத்தா லழிந்துபோமே."

tbr.joseph said...

வாங்க துளசி,

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் ..

முழுப்பதிவையும் எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க துளசி..

Hats off to you.

tbr.joseph said...

வாங்க பொன்னம்பலம்,

கெற்பபந்தான் மங்கையருக் கழகு குன்றுங்
கேள்வியில்லா வரசனா னுலகம் பாழாந்
துற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ்
சொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்
நற்புத்தி கற்பித்தா லற்பர் கேளாற்
நன்மைசெய்யத் தீமையுட நைந்து செய்வார்
அற்பரோ டிணங்கிடிற் பெருமை தாழு
மரியதவங் கோபத்தா லழிந்துபோமே."//

உரைநடையா சொன்னாலே என்ன மாதிரி மரமண்டைகளுக்கு புரியாது.. நீங்க செய்யுள வேற போட்டு பயமுறுத்தரீங்க.. கொஞ்சம் சிரமத்த பாக்காம விளக்குங்களேன்..

Post a Comment