Friday, January 20, 2006

சீனாய் மலை - விவரங்கள்

பழைய வேதாகமத்தில் (யாத்திராகமம்:13லிருந்து 40 முடிய) எகிப்தில் அப்போது ஆண்டு வந்த பாரவோன் மன்னனின் அதிகாரத்துக்குக் கீழ் துன்புற்று வந்த யூத மக்களை மீட்டு மோயீசன் (Moses) அவர்களை இறைவனால் நிச்சயிக்கப்பட்டிருந்த நாட்டிற்கு அழைத்துச் சென்றார் என மிகவும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது..

அவர்கள் கடந்து சென்ற பாதையில்தான் சீனாய் மலையின் உச்சியில் இறைவன் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வடிவத்தில் அவர்களுடைய தலைவர் மோயீசனுக்கு தோன்றி பத்து கட்டளைகள் அடங்கிய கற்களாலான பலகைகளைக் கொடுத்தார் என்கிறது பழைய வேதாகமம் (Old Testament).

அவர்கள் கடந்து சென்ற பாதையின் மாதிரி வடிவம் கீழே உள்ள சுட்டியில் உள்ளது.

 • Route


 • மோயீசனுக்கு இறைவன் முதன் முதலில் காட்சியளித்து (யாத்தி:3:3-6) 'நீ போய் பாரவோனிடம் என் மக்களை விடுவிக்க சொல்' என்று கட்டளையிட்டபோது திக்கு வாயனாயிருந்த மோயீசன் நானா என்று தயங்கினார். ஆயினும் இறைவன் அவரை உறுதிப்படுத்தி (யாத்தி:4:1-4) அனுப்பிவைத்தார்.

  மோயீசன் அஞ்சியது போலவே பாரவோன் அரசன் முதலில் மறுத்து பிறகு இறைவன் மோயீசன் மூலமாக பலப்பல அற்புதங்களை நிகழ்த்தி பாரவோன் மன்னனுடைய கல் மனதை மாற்றி யூத மக்களை விடுதலை செய்தான் என்பதை Ten Commandments என்ற ஆங்கிலப் படத்தில் மிக அழகாக சித்தரித்திருந்தார்கள்..

  ஆயினும் விடுதலையடைந்த யூத மக்கள் நன்றி மறந்து தங்களுக்கென உலோகங்களாலான விக்கிரகங்களைச் செய்துக் கொண்டு இறைவனுக்கெதிராய் திரும்பினர். இதைக் கண்ட இறைவன் பொறுக்க மாட்டாமல் சினம் கொண்டு சீனாய் மலை உச்சியிலிருந்து தம்மை அழைப்பதை மோயீசன் கேட்டார்.

  மோயீசன் அவருடைய அழைப்பிற்கு இணங்கி மலையுச்சிக்குச் சென்றார் எனவும் அப்போதுதான் இறைவன் 'எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்விலிருந்தும் உன்னையும் உன் மக்களையும் விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.. நம்மிடம் அன்பு கூர்ந்து நம் கட்டளைகளைக் கைக்கொண்டு ஒழுவுகிறவர்களுக்கு ஆயிரமாயிரம் தடவையும் தயவு காட்டுவோம்' என்று கூறினார் எனவும் வேதாகமம் கூறுகிறது.

  அதற்குப் பிறகு கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, உன் அயலானுக்கு விரோதமாய் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் அயலான் வீட்டை விரும்பாதே, அவனுடைய மனைவி, வேலைக்காரன், வேலைக்காரி என்று அவனுக்குள்ள எதையும் விரும்பாதிருப்பாயாக என்பது போன்ற பல அற்புதமான நெறிமுறைகளைக் கட்டளைகளாக கொடுத்தார் என்றும் வேதாகமம் கூறுகிறது (யாத்தி:20:1-17)

  இந்த சீனாய் மலையின் இருப்பிடம் பற்றி பல ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். அது எகிப்தில் உள்ள மிக உயர்ந்த மலைச் சிகரங்களுள் ஒன்று. இப்போதும் அது ஒரு வரலாற்று சின்னமாக, புனித ஸ்தலமாக போற்றப்பட்டு வருகிறது.

  நான் இணையதளங்களில் கண்டெடுத்த சிலவற்றின் முகவரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

  விருப்பமுள்ளவர்கள் அங்கே சென்று காணலாம்.


 • Sinai_Photo

 • Sinai

 • Sinai_1
 • 10 comments:

  டி ராஜ்/ DRaj said...

  யூதர்கள் சென்ற பாதை, இறைவன் மோசசுக்கு காட்சியளித்த இடம், எறிந்த புதர் ஆகியவற்றை பற்றி Discovery-யில் ஒரு டாகுமென்டரி வந்தது. நீங்கள் கூறியுள்ள தகவல்கள் பலவற்றையும் பார்த்தேன்.

  tbr.joseph said...

  வாங்க ராஜ்,

  அப்படியா? நான் மிஸ் பண்ணிட்டேன் போலருக்குதே..

  குமரன் (Kumaran) said...

  நானும் ten commandments படம் பார்த்திருக்கேன் சார். நீங்க சொன்ன மாதிரி மோஸஸ் இறையருளால் செய்யும் அற்புதங்களை நன்றாய் எடுத்திருக்கிறார்கள்.

  tbr.joseph said...

  வாங்க குமரன்,

  அந்த அற்புதமான படம் வந்த பிறகுதான் மக்களுக்கு பைபிளைப் பற்றிய ஒரு ஆர்வம் வந்தது என்றால் மிகையாகாது..

  நான் அப்போது பணிபுரிந்த கிளையில் ஏறக்குறைய எல்லோருமே கிறீஸ்துவர்கள் அல்லாதோர்.. அவர்கள் இப்படத்தில் காண்பிக்கப் பட்டவைகளைப் பற்றி பைபிளையே படித்துக் காட்டி விளக்கியது இப்போதும் என் மனதில் நிற்கிறது..

  தேவ் | Dev said...

  தொடர் நல்லாத் தான் போகுது... முடிஞ்சா படங்கள் சேருங்க சார்.

  tbr.joseph said...

  வாங்க தேவ்,

  முடிஞ்ச வரைக்கும் சேர்க்கிறேன்.

  நன்றி.

  G.Ragavan said...

  இந்தப் பதிவை நான் எப்படிப் பார்க்காமல் விட்டேன்...சரி. இப்பொழுது பார்த்தாகி விட்டது.

  எகிப்திய மன்னர்கள் எல்லாரும் நீக்ரோவினர் என்று தெரியப்படுகிறது. அங்கிருந்த பிரமீடுகளில் உள்ள மம்மிகளைப் பார்த்தாலும் அப்படித்தான் தெரிகிறது.

  அப்படியிருக்க, இஸ்ரேலியரும் நீக்ரோவினரா? கொஞ்ச காலம் முன்பு அடிமைகளைப் போல நடத்தப்பட்ட நீக்ரோவினர் முன்பு இஸ்ராலியர்களை அடிமைகளாக வைத்திருந்தனரா?

  இஸ்ராலியர்கள் வெளுத்த தொலியும் எகித்திய ஃபேரோக்கள் கருத்த தொலியும் கொண்டவர்களாயின் எப்படி ஒரு இஸ்ரேலியரின் மகன் ஃபேரோவின் வீட்டில் வளர்ந்திருக்க முடியும்?

  இந்தக் கேள்விகள் எல்லாம் எகிப்தியர்/இஸ்ரேலியர் வரலாறு தெரியாமையால் கேட்கப்படும் கேள்விகள் எனக் கொள்க.

  tbr.joseph said...

  வாங்க ராகவன்,

  உங்க கேள்விக்கு பைபிள்ல விடை கிடையாது..

  உண்மைய சொல்லணும்னா சீனாய் மலைக்கு இருக்கற சரித்திர சான்றுகள் மோயீசனுக்கு பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்ட காலகட்டத்துக்கு சரியான சரித்திர சான்றுகள் இல்லை.

  ஆயினும் சில சரித்திர ஆசிரியர்களின் கூற்றுப் படி மோயீசன் பிறந்த காலத்திலும் அவர் யூத மக்களை விடுவித்து எகிப்தவிட்டு புறப்பட்ட காலத்திலும் எகிப்தை ஆண்டு வந்த ரமசீஸ் (Ramesses) என்ற மன்னன் உட்பட நீக்ரோ இனத்தைச் சார்ந்தவர்களல்லர்.ராமசீஸ்சின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகுதான் நீக்ரோக்கள் எகிப்தில் குடியேற வெள்ளையர்களுக்கும் நீக்ரோ எனப்படும் கறுப்பினத்தவருக்கும் உறவு ஏற்பட கருப்பினர் எகிப்தில் தோன்றினர். நீங்கள் கூறியதுபோன்ற மம்மியின் நிறத்திற்கும் வேறொரு பின்னணி இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அப்போதெல்லாம் மரித்த அரச வம்சத்தினரின் உடல்களை மஞ்சள் மற்றும் ஹென்னா எனப்படும் தாவரங்களின் சாருடன் சேர்த்து பூசப்படுவதால் வழக்கமாம். மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் விலாசங்களில் சென்று பாருங்க..
  link

  நல்லடியார் said...

  // எகிப்தை ஆண்டு வந்த ரமசீஸ் (Ramesses) என்ற மன்னன் உட்பட நீக்ரோ இனத்தைச் சார்ந்தவர்களல்லர்//

  இரண்டாம் ராம்ஸஸ் என்ற எகிப்திய கொடுங்கோலனை நாங்கள் "ஃபிர் அவ்ன்" என குர் ஆனின் மூலம் அறிகிறோம். இவன் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வும், இவனின் உடல் உலகம் அழியும் வரை அத்தாட்சியாக பாதுகாக்கப்படும் என்ற செய்தியும் குர்ஆனில் உள்ளது.

  Ramses-II இன் கெடாத உடல் இன்றும் எகிப்திலுள்ள அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு உள்ளது.

  Shan said...

  //இந்தக் கேள்விகள் எல்லாம் எகிப்தியர்/இஸ்ரேலியர் வரலாறு தெரியாமையால் கேட்கப்படும் கேள்விகள் எனக் கொள்க. //

  ராகவன் மற்றும் டி.பி.ஆர். ஜோசஃப் அவர்களுக்கு,

  முடிந்தால் குமுதம் ரிப்போட்டரில் தொடராக வந்த எழுத்தாளர் பா.ராகவனின் "நிலமெல்லாம் ரத்தம்" படித்துப்பாருங்கள்.. http://nilamellam.blogspot.com/

  தொகுத்தவரின் தகவல்கள் இல்லையெனினும், அருமையான பதிவு.

  Post a Comment