Tuesday, January 31, 2006

இது விவாத மேடையல்ல!

நான் இப்பதிவைத் துவக்கி இன்றுடன் இரண்டு வாரங்கள் நிறைவடைகின்றன.

இப்பதிவின் நோக்கத்தை மிகவும் தெளிவாக முதல் இடுகையிலேயே கூறியிருந்தேன்.

மேலும் இப்பதிவின் தலைப்பிலும் (Mast)குறிப்பிட்டுள்ளேன்.

ஒரு மதத்தைப் பற்றி எழுதும் நேரத்தில் நான் எத்தனைக் கவனமாக என் இடுகைகளைக் கையாள வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டுதான் இதுவரை இட்டிருக்கிறேன்.

இப்பதிவு நான் சார்ந்த கத்தோலிக்க கிறீஸ்துவத்தின் சிறப்புகளை மட்டும் எடுத்துரைக்கவே துவக்கியுள்ளேன் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்.

இதை நான் துவக்கிய நாளிலிருந்தே சிலர் வேண்டுமென்றே பின்னூட்டங்கள் வழியாகவும், தனி மின்னஞ்சல்கள் வழியாகவும் தேவையற்ற விவாதங்களை (விதண்டா வாதங்கள் எனவும் கூறலாம்) சர்ச்சையைத் தூண்டும் விதமாக எழுதி வருகின்றனர்.

அவர்களுக்கு நான் கூறிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். You are barking at the wrong tree!!

உங்களுடைய கேள்விகள் நிச்சயம் பதிலளிக்கப்படும். அவை நியாயமானதாக இருக்கும் பட்சத்தில். அதாவது உங்களுடைய ஐயப்பாடுகளை நிவர்த்திச் செய்ய உதவும் பட்சத்தில்..

மற்றபடி கிறீஸ்துவ, இஸ்லாமிய, யூத மதங்களை ஒப்பிட்டுப் பார்த்து இதில் எது சிறந்தது என்றோ, அல்லது எது மோசமானதென்றோ கேட்கப்படும் கேள்விகளுக்கு நிச்சயம் என்னிடமிருந்து பதில் வராது என்பது மட்டுமல்ல அத்தகைய கேள்விகள், பின்னூட்டங்கள் என்னுடைய பதிவிலும் இடம் பெறாது என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இது ஆன்மீக தளம், விவாத மேடையல்ல!

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

இந்தியாவில் சலேசியர்கள்-நூறு வருடங்கள்!

இன்று தூய.தொன் போஸ்கோ (St.Don Bosco) பெருவிழா!

இவர்தான் இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் தொன் போஸ்கோ (Don Bosco) என்ற பெயரில் எண்ணற்ற பள்ளிகள், மாணவ, மாணவியருக்கு அனாதை இல்லங்கள், இளைஞர்களின் விளையாட்டு குழுக்கள் என பல நிறுவனங்களைத் துவக்கி திறம்பட நடத்திவரும் சலேசிய குருமார்கள் மற்றும் கன்னியர்களைக் கொண்ட சலேசியர் என்ற ஸ்தாபனத்தை (Congregation) 1854ம் வருடம் இத்தாலியில் துவக்கிய குருவானவர் (பாதிரியார்).

இவர் ஒரு கத்தோலிக்க பாதிரியார். இவர், இத்தாலியிலுள்ள தூரின் (Turin) நகரிலிருந்த தேவாலயத்துக்கு மாற்றலாகி சென்றார். அவர் அங்கு சென்ற சமயத்தில் இத்தாலியில் தொழிற்புரட்சி உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். கணக்கற்ற இளைஞர்கள் வேலையைத் தேடி தங்களுடைய பெற்றோர், மனைவி, மக்களை விட்டுவிட்டு தூரின் நகருக்குப் படையெடுத்த காலம். இத்தகைய இளைஞர்கள் பணி நேரம் கழிந்ததும் செய்வதறியாது திகைப்பதையும் அதில் சிலர் போதைப் பொருள், சிற்றின்பம் போன்ற தவறான பாதையில் செல்வதைப் பார்த்த போஸ்கோ அடிகளார் அவ்விளைஞர்களுக்கென ஒரு இலவச இல்லத்தை (Hostel) 1841ம் வருடம் தூரின் நகரில் துவக்கினார்.

பிறகு அனாதைகளாய் தூரின் நகரின் சேரிகளில் படிப்பு, வேலை இல்லாமல் சுற்றித் திரிந்த சிறுவர்களைக் கண்டார். அவர்களையும் ஒன்று சேர்த்து விளையாட்டுகளிலும், கேளிக்கைகளிலும் ஈடுபடச் செய்தார். சில வருடங்களுக்குப் பிறகு இச்சிறுவர்களுக்கென பள்ளிகள், விடுதிகள், விளையாட்டு மையங்கள் (Clubs) ஏற்படுத்தி அவர்களைத் தவறான வழிகளிலிருந்து மீட்டார்.

இங்ஙனம் இளைஞர்கள், இளைஞிகளின் வாழ்க்கைக்கே தன் குருத்துவப் பணியை அற்பனித்தார் போஸ்கோ அடிகளார். தன்னுடைய சேவை தூரின் நகரோடு நின்றுவிடக் கூடாது என்று எண்ணிய போஸ்கோ அடிகளார் குருக்களுக்கென தூய பிரான்சிஸ் டி சலேஸ் (Salesians of Don Bosco) என்ற ஸ்தாபனத்தை 1854லும் கன்னியர்களுக்கென கன்னி மரியாயின் கன்னியர்கள் (Salesian Sisters) 1872 ம் வருடத்திலும் துவக்கினார்.

இவ்விரு சபைகளும் நாளடைவில் இத்தாலியின் மற்ற நகரங்களிலும் பரவின. அத்துடன் இந்தியா போன்ற உலகின் பல நாடுகளிலும் இச்சபை பரவியது. இன்று உலகின் ஐந்து கண்டங்களிலும் சேர்த்து சுமார் 2000க்கும் கூடுதலான இல்லங்கள் (Hostels), அனாதை சிறுவர் இல்லங்கள் (Orphanages), பள்ளிகள், விளையாட்டு குழுக்கள் (Sports Clubs) பொழுதுபோக்கு மையங்கள் (Recreation Centres), விளையாட்டு பயிற்சி மையங்கள் என உலகெங்கும் சலேசியர்களின் ஸ்தாபனங்கள் பரவி இருக்கின்றன!

சலேசியர்கள் இந்தியாவுக்கு வந்து நூறாண்டுகள் ஆகின்றன!

இந்தியாவில் சலேசியர்களின் பணிகளைக் குறித்து விரிவாக அறிந்துக் கொள்ள கீழ்காணும் தளத்திற்கு சென்று பாருங்களென அன்புடன் அழைக்கிறேன்.

St.Don Bosco

இத்தருணத்தில் நான் பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புவது நானும் ஒரு தூய தொன் போஸ்கோ பள்ளியில் படித்த மாணவன்!

வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வெற்றி பெற சிறு வயதிலேயே கற்றுக் கொண்டது சலேசிய குருக்களிடத்திலிருந்துதான்!

Monday, January 30, 2006

பேரின்ப ஞானம்!


தாவீது (David) அரசரின் மறைவுக்குப் பிறகு இஸ்ராயேலரின் அரசராக அபிஷேகம் செய்யப்பட்டவர் அவருடைய புதல்வரான சாலமோன். அவர் ஒருநாள் இறைவனுக்கு பல தகனப் பலிகளை செலுத்தினார்.

தகனப் பலிகள் என்பவை என்ன?

அக்காலத்தில் நாட்டை ஆண்டு வந்த அரசர்கள் தங்களுக்கு இறைவன் செய்த சகல நன்மைகளுக்கும் நன்றி செலுத்துவதற்காக தங்களுடைய கால்நடைகளில் மிகச் சிறந்ததும், எந்தவித குறையும் இல்லாத ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதைக் கொன்று அதற்கென நிர்மானிக்கப்பட்டிருந்த பலி பீடத்தில் எரியூட்டி காணிக்கையாகக் கொடுப்பது வழக்கம்.

அப்படித்தான் சாலமோனும் காபாவோன்ற என்ற இடத்திலிருந்த பலிபீடத்தில் காணிக்கையளித்தார்.

அன்றிரவு இறைவன் அவருடைய கனவில் தோன்றி, ‘நீ விரும்புவதைக் கேள்’ என்றார்.

அதற்கு சாலமோன் ‘உம் மக்களுக்கு நீதி வழங்கவும், நன்மை தீமையைப் பகுத்தறியவும் வேண்டிய ஞானத்தை அடியேனுக்கு அளித்தருளும். ஏனெனில் என் அதிகாரத்திலிருக்கும் கணக்கற்ற உம் மக்களுக்கு நீதி வழங்க வேண்டுமே.’ என்றார்.

அவருடைய விண்ணப்பம் இறைவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆகவே அவர் சாலமோனை நோக்கி, ‘உனக்கென நீடிய ஆயுளையும் மிகுந்த செல்வத்தையும் உன் எதிரிகளின் உயிர்களையும் கேளாமல், நீ நீதி வழங்குவதற்கு ஏற்ற ஞானத்தை தரவேண்டும் என்று மன்றாடியதால் உன் வேண்டுகோளின்படியே அதை உனக்குத் தருகிறேன்’ என்றார். மேலும் ‘இதில் உனக்கு இணையானவன் இதற்குமுன் இருந்ததுமில்லை; இதற்குப்பின் இருக்கப் போவதுமில்லை. அத்துடன், நீ என்னிடன் கேளாத செல்வத்தையும் புகழையும் உனக்குத் தருகிறேன்.’ என்றார்.

சாலமோன் கண்விழித்தபோது  தான் கண்ட கனவின் பொருளைப் புரிந்து கொண்டார்.

‘சாலமோனின் ஞானம்’ என்று இன்றும் மேற்கோள் காட்டப்படும் அளவுக்கு இருந்தது அவருடைய ஞானமும், விவேகமும்!

அவருடைய ஞானத்துக்கு எடுத்துக்காட்டாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு நிகழ்ச்சியை  காண்போம்.

ஒருநாள் விலைமாதர் இருவர் அவரிடம் ஒரு புகாரைக் கொண்டுவந்தனர்.

அவர்களுள் ஒருத்தி அரசரைப் பார்த்து, ‘அரசரே, நானும் இப் பெண்ணும் ஒரே வீட்டில் குடியிருந்தோம். நான் படுக்கையறையில் இவளருகில் படுத்திருந்தபோது ஒரு பிள்ளையைப் பெற்றேன். எனக்கு பிள்ளை பிறந்த மூன்றாம் நாள் இவளும் ஒரு பிள்ளையைப் பெற்றாள். ஒரு நாள் இரவுத் தூக்கத்தில் இப் பெண் தன் பிள்ளையின்மேல் புரண்டு அழுத்தியதால் இவளுடைய பிள்ளை நசுங்கி இறந்து போயிற்று. அப்போது நான் உறங்கிக் கொண்டிருந்ததால் இவள் இறந்துப் போன தன் பிள்ளையை என் பக்கத்தில் கிடத்திவிட்டு என் பிள்ளையை தன் மடியில் கிடத்திக் கொண்டுவிட்டாள்.’ என்றாள்.

அதற்கு மற்றவள் மறுமொழியாக, ‘அப்படியன்று அரசரே. உயிரோடு இருப்பது என் பிள்ளை. இறந்துபோனதுதான் இவளுடைய பிள்ளை.’ என்றாள்.

இவர்களுடைய வாதத்தை சிறிது நேரம் கேட்ட சாலமோன் அரசர் தன் காவலாளியை நோக்கி, ‘ஒரு வாளைக் கொண்டுவா.’ என்று பணித்தார். ‘உயிரோடு இருக்கிற இந்த பிள்ளையை இரண்டாக வெட்டி ஆளுக்குப் பாதியாக கொடு.’

அப்போது உயிரோடு இருந்த பிள்ளையின் தாய் வயிற்றில் அடித்துக் கொண்டு, ‘வேண்டாம் அரசே, உயிரோடு இருக்கிற பிள்ளையைக் கொல்ல வேண்டாம். அதை அவளுக்கே கொடுத்துவிடுங்கள்.’ என்றாள்.

சாலமோன் அரசர் அவளைக் காட்டி, ‘பிள்ளையை இவளிடமே கொடுத்துவிடுங்கள். இவள்தான் அதன் தாய்.’ என்றார்.

இறைவன் அவருக்களித்த ஞானத்தின் ஆழத்தை எடுத்துரைக்கவே இச்சம்பவம் வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது.

நாம் எவ்வளவுதான் செல்வம் சேர்த்து வைத்தாலும் அதைக் கட்டிக் காப்பாற்ற நமக்கு உதவுவது நம்முடைய அறிவும், விவேகமும்தான்.

கல்வியா, செல்வமா, வீரமா இவற்றில் எது உனக்கு வேண்டும் என்ற கேள்வியை ஊமையனிடம் கேட்கப்பட்டபோது கல்விதான் வேண்டும் என்றதாக சிவபெருமானின் திருவிளையாட்டுகளில் கூறப்படுகிறது.

செல்வமும் வீரமும் அழியக்கூடியது. கல்வியொன்றுதான் அதாவது மனிதனின் அறிவும் அதனால் அவனுக்கு கிடைக்கும் ஞானமும்தான் அவனுடைய மரணம் வரைக்கும் துணையாய் நின்று அவனை வழி நடத்தும்.

நான் கடந்த பதிவில் குறிப்பிட்ட சீராக் (Sirach) ஆகமத்தில் இதற்கென ஒரு தனி அதிகாரமே எழுதப்பட்டுள்ளது.

‘ஞானத்தின் நன்மைகள்’ என்ற தலைப்பில் பட்டியலிடப் பட்டுள்ளவற்றில்  முக்கியமானவை சிலவற்றைப் பார்ப்போம்.

1.     தாழ்ச்சியுடையவனுடைய ஞானம் அவனை உயர்த்தும். சான்றோர் நடுவில் அவனை அமரும்படி செய்யும்.

2.     ஞானமும் நற்போதகமும் கட்டளைகளின் அறிவும் கடவுளிடமிருந்து வருகின்றன.

3.     கடவுளுடைய அருள் நீதிமான்கள் மேல் நிலைத்திருக்கின்றது. அவருடைய தயவு அதைப் பெருகச் செய்வதால் நீதிமான் நித்தியப் பேற்றைப் பெறுகிறான்.

விவேகத்தின் முக்கியத்துவத்தை புதிய வேதாகமத்திலும் காணலாம்.  

இயேசு கிறீஸ்து தன்னுடைய போதனைகள் அவர்களுடைய சீடர்களுக்கும் யூதமக்களுக்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சிறு சிறு கதைகள் வழியாகவும் உவமைவகள் வழியாகவும் பேசுவதுண்டு.

அவர் ஒருமுறை விண்ணரசை (சொர்க்கம்) ஒரு மணமகனை (மாப்பிள்ளை என்றும் பொருள் கொள்ளலாம்) அழைக்கச் சென்று பத்துக் கன்னியர்களுக்கு ஒப்பிட்டு பேசினார்.

அதன் சாராம்சம் ஞானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

அந்த பத்து கன்னியர்களுள் ஐந்து பேர் விவேகிகள் (புத்திசாலிகள்). மீதமுள்ளவர்கள் அறிவிலிகள். விவேகிகள் தங்களுடைய விளக்குடன் அதற்குத் தேவையான எண்ணெயும் ஒரு சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டார்கள். மற்றவர்கள் எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை. மணமகன் வர காலதாமதமாகவே அனைவரும் உறங்கிப் போயினர்.

நள்ளிரவில் மனமகன் வருகிறார், அவரை அழைக்க வாருங்கள் என்ற அழைப்பு வரவே பதறியெழுந்த கன்னியர்கள் அனைவரும் தங்கள் விளக்குகளை ஏற்ற ஆரம்பித்தனர். எண்ணெய் எடுத்துக் கொள்ளாத அறிவிலிகளின் விளக்குகள் அணையத் துவங்கவே அவர்கள் விவேகிகளிடம் உங்களுடைய எண்ணெயில் எங்களுக்கும் கொஞ்சம் கொடுங்கள் என்று கெஞ்சினர். விவேகிகளோ உங்களுக்கு எண்ணெய் கொடுத்தால் எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாமல் போய்விடக்கூடும். ஆகவே நீங்கள் விற்பவரிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர்.

அவர்கள் எண்ணெய் வாங்கிவரச் சென்றிருந்த நேரத்தில் மணமகன் வந்துவிடவே விளக்குகளுடன் தயாராயிருந்த விவேகமுள்ள கன்னியர் அவருடன் மணவீட்டுக்குள் நுழைய வாசற்கதவு சாத்தப் படுகிறது. எண்ணெயுடன் வந்த கன்னியர் பலமுறை வேண்டியும் கதவு திறக்கப்படவில்லை..

ஆகவே விவேகத்துடன் விழிப்பாயிருங்கள். விண்ணகத்திலிருந்து உங்களுக்கு எப்போது அழைப்பு வரும் என்று தெரியாது. நீங்கள் நினையாத நேரத்தில் அது வரலாம் என்று இயேசு கூறுவதாக முடிகிறது அந்த உவமை.

ஆம், மரணம் எப்போதும் வரலாம். இறைவனின் கட்டளைகளுக்குட்பட்டு விவேகத்துடன் நல்லது எது, தீயது எது என்று இனம் கண்டுக் கொள்பவர்களுக்கே சொர்க்கத்தின் பேரின்ப பேறு கிடைக்கும்.

இவ்வுலகில் நாம் சேர்த்துவைக்கும் சொத்துபத்துக்கள் விண்ணரசை, சொர்க்கத்தை, நமக்கு தராது. இறைக் கட்டளைகளை நம்முடைய விவேகத்தால், ஞானத்தால் அதாவது நம் மனக்கண்களால் கண்டு அதன்படி நடப்பதே நம்மை சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

Saturday, January 28, 2006

நம் மனசாட்சி!

நாம் முந்தைய சில பதிவுகளில் இறைவன் தாவீதை (David) எவ்வளவு நேசித்தார் எனவும் அதை எல்லோருக்கும் காண்பிக்கும் பொருட்டு அவருடன் இருந்து கோலியாத் போன்ற வலிமை மிக்கவரை வீழ்த்தச் செய்தார் எனவும் பார்த்தோம்.

இந்த தாவீது, சவுல் அரசரின் மரணத்துக்குப் பிறகு தன்னுடைய் முப்பதாவது வயதில் இஸ்ராயேலரின் இரண்டாவது அரசராக அபிஷேகம் செய்யப்பட்டார் (சாமுவேல் கமம்: இரண்டு: 5ம் அதிகாரம்: வசனங்கள் 1 முதல் 3 முடிய).

அத்துடன் இறைவன் அவரோடு இருந்து அவருடைய எதிரிகளை வீழ்த்தவும் செய்தார் (சாமு:8:1-14 மற்றும் 10:1-19).

ஆனால் இஸ்ராயேல் மக்களின் மதிப்பிற்கும், பெருமைக்கும் உரியவராயிருந்த தாவீதோ தன்னுடைய உடல் இச்சைக்கு அடிமையாகி தன் ஊழியர்களுள் ஒருவனான உரியாசின் மனைவி பெத்சேபாவை தன் இச்சைக்கு அடிபணிய வைத்து இறைவனுக்கு எதிராக பாவம் கட்டிக் கொள்கிறார்.

அத்துடன் நில்லாமல் அவளுடைய கணவனை நயவஞ்சகத்துடன் போர்முனைக்கு அனுப்பி எதிரிகளால் கொலையுறவும் செய்கிறார். அதன் பின் அவளை தன்னுடைய அரண்மனைக்கு அழைத்து வரச்செய்து மனைவியாகவும் ஆக்கிக் கொள்கிறார்.

தான் செய்த இந்த இழிச்செயல் இறைவனுக்கு எங்கே தெரியப் போகிறதென இறுமாப்புடன் இருந்த தாவீதின் மேல் இறைவனின் பார்வை விழுகிறது.

இறைவன் அக்காலத்தில் வாழ்ந்து வந்த இறைவாக்கினர் நாத்தானை அவரிடம் அனுப்பி இவ்வாறு கூறச் செய்கிறார். ‘ஒரு நகரில் இரு மனிதர் இருந்தனர். ஒருவன் செல்வந்தன்; மற்றவன் ஏழை. செல்வந்தனுக்கு ஆடுமாடுகள் மிகுதியாக இருந்தன. ஏழை மனிதனுக்கோ விலைக்கு வாங்கி வளர்த்த ஓர் ஆட்டுக் குட்டியைத் தவிர வேறொன்றுமில்லை. அது அவனோடும் அவன் பிள்ளைகளோடும் வீட்டில் வளர்ந்து, அவன் அப்பத்தைத் தின்று அவனது கிண்ணத்தில் குடித்து அவன் மடியில் தூங்கி, அவனுக்கு ஒரு மகளைப் போலவே இருந்து வந்தது. செல்வந்தனிடம் வழிப்போக்கன் ஒருவன் வந்தான். அவனுக்கு விருந்து செய்யத் தன் சொந்த ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனமின்றி, செல்வந்தன் அந்த ஏழை மனிதனுடைய ஆட்டைப் பிடித்துச் சமையல் செய்தான்.’

இதைக் கேட்ட தாவீது அரசன் அசெசெல்வந்தன் மேல் மிகவும் சினந்து நாத்தானை நோக்கி, ‘ஆண்டவர் மேல் ஆணை. இதைச் செய்தவன் சாக வேண்டும். இரக்கமின்றி அவன் இதைச் செய்தபடியால் அந்த ஆட்டுக்குப் பதிலாக நான்கு மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.’ என்றார்.

நாத்தான் அவரை நோக்கி, ‘நீரே அம்மனிதன்... இறைவன் உம்மை இஸ்ராயேலர் அனைவருக்கும் அரசராக அபிஷேகம் செய்தார். நீரோ இறைவன் முன்னிலையில் பாவம் செய்தீர். உம் ஊழியன் உரியாசின் மனைவியை உமக்கு மனைவியாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் அவனை அம்மோனியரின் வாளுக்கு இரையாக்கினீர். ஆகவே இறைவனின் வாளானது உம் வீட்டை விட்டு அகலாது.’ என்றார்( 2 சாமுவேல்: 12:1-8).

மேலும், ‘இதோ, ஆண்டவர் கூறுகிறார், உம் வீட்டின் தீமை உம்மேல் வரச் செய்வோம். உம் பார்வையிலேயே உம் மனைவியரை எடுத்து பிறனுக்குக் கொடுப்போம்.. நீர் மறைவில் செய்த காரியத்தை நாம் இஸ்ராயேல் அனைவருக்கும் முன்பாக செய்வோம்.’ என்றார்.

நாமும் அப்படித்தான். தீச்செயல்களில் ஈடுபடும்போது இது யாருக்குத் தெரியப் போகிறது? நம் செயலுக்கு யார் சாட்சிகள் என்றெல்லாம் நினைக்கிறோம்.

ஆனால் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களையும் ஏன், நாம் நம் மனதில் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களையும் இறைவன் அறிகிறார் என்பதை நினைவில் கொள்கிறோமா?

நாம் மறைவில் செய்வதை இறைவன் பலருக்கும் வெளிப்படுத்தி நம்மை அவமானம் கொள்ள செய்யமாட்டார் என்ற தைரியத்தினால் தானே இவ்வாறு நடந்துக் கொள்கிறோம்?

மனிதர்கள் செய்யும் தவறுகளை, பாவச் செயல்களை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கு அவ்வப்போது அனுப்பப்பட்டவர்கள்தான் இறைவாக்கினர் என்ற இறை ஊழியர்கள்.

அக்காலத்தில் இறைவன் தம் மக்களுடன் தம்முடைய இறைவாக்கினர் மூலமாக பேசினார் என்கிறது வேதாகமம். அதுமட்டுமல்ல, இறக்கத்தின் ஊற்றான இறைவன் தம் மக்கள் பாவம் செய்யும் போதெல்லாம் அவர்களை எச்சரித்து நல்வழிப்படுத்த இத்தகைய இறைவாக்கினரைப் பயன்படுத்தினார் என்றும் வேதம் கூறுகிறது.

ஆனால் இத்தகைய இறைவாக்கினரை யூதர் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. அவர்களை பித்துப் பிடித்தவன் என்று ஏளனம் செய்து புறக்கணிக்கவே செய்தனர். சிலரை கல்லால் எறிந்து கொன்று போட்டனர் என்றும் வேதம் கூறுகிறது.

இஸ்ராயேலரின் இத்தகைய நடத்தைகளை இயேசு கிறீஸ்துவும் புதிய வேதாகமத்தில் கடிந்துக் கொள்கிறார்.

‘வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே.. உங்களுக்கு ஐயோ கேடு, ஏனெனில் இறைவாக்கினர்களுக்கு கல்லறை கட்டி நீதிமான்களுடைய சமாதிகளை அலங்கரிக்கிறீர்கள். (ஆனால்) எங்கள் முன்னோர் காலத்தில் நாங்கள் இருந்திருந்தால், அவர்கள் இறைவாக்கினர்களின் இரத்தத்தை சிந்துவதற்கு உடந்தையாய் இருந்திருக்க மாட்டோம் என்கிறீர்கள். (மத்தேயு சுவிசேஷம்: 23:29-30).’

ஏன், இப்போது யாரேனும் பிறந்து வந்து நான் இறைவாக்கு உரைப்பவன். மனம் திரும்புங்கள், பாவ மன்னிப்பு பெறுங்கள் என்றால் நாமும் அவர்களுக்கு பைத்தியக்காரன் என்ற பட்டத்தைத் தானே அளிப்போம்?

அதனால்தானோ என்னவோ ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் மனசாட்சியைக் கொடுத்திருக்கிறார். நம் மனசாட்சிதான் அக்காலத்தில் இறைவன் தன் மக்களிடம் அனுப்பிய இறைவாக்கினர்களின் பிரதிநிதி.

நாம் தீய செயல்களில், தீய எண்ணங்களில் ஈடுபடும்போதெல்லாம் நம்மை எச்சரிக்கும் மனசாட்சிக்கு செவிமடுப்போம்..

நம் வாழ்வில் மன நிம்மதியையும், உண்மையான மகிழ்ச்சியையும் பெறுவோம்.


Thursday, January 26, 2006

பணம்+பதவி+பங்களா=நிம்மதி?

பொருளாசை, பொண்ணாசை, பதவி ஆசை..

இவைகளில் பற்றில்லாத மனிதன் உண்டா?

ஆனால் இவைகள் மனிதனுக்கு நிம்மதியை தருகின்றனவா? சற்று சிந்தித்துப் பார்ப்போமா?!

இல்லை. நிச்சயம் இல்லை, என்றுதான் பதில் வரும்..

என்னுடைய கற்பனை கதையான சூரியனில் (http://enkathaiulagam.blogspot.com) இதுவரை நீங்கள் சந்தித்துள்ள எல்லா குடும்பங்களுமே ஓரளவுக்கு பணம், பதவி, பங்களா என செல்வத்தின் எல்லா வசதிகளையும் பெற்றவர்கள்தான்.

ஆனாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரோரு விதமான பிரச்சினைகள்.

இக்குடும்பங்கள் கற்பனையே.. இல்லையென்று சொல்லவில்லை. ஆனால் இவர்கள் எல்லோருமே நாம் நம் வாழ்க்கையில் அன்றாடம் சந்திக்கும் நபர்கள் தான்.

வெளியிலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய சோகங்கள் நமக்கு தெரிவதில்லை.

அவர்கள் வசிக்கும் ஆடம்பரமான வீடுகளும், அவர்கள் பயணிக்கும் பளபளக்கும் வாகனங்களும், அவர்கள் உடுத்தும் பகட்டான ஆடைகளும்தான் நம் கண்களில் படுகின்றன.

ஆனால் அவர்களை அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் அவர்களுடைய உண்மையான மனநிலை, அவர்கள் வீடுகளிலுள்ள அபிப்பிராய பேதங்கள், அவற்றால் விளையும் பிரச்சினைகள், சோகங்கள்...

இதைக் குறித்து பைபிளில் என்ன கூறப்பட்டுள்ளதென சுருக்கமாக பார்ப்போம்.

பழைய வேதாகமம்:

சீராக் என்பவரின் மகன், யேசுவின் பொன்மொழிகள் (The Wisdom of Jesus, Son of Sirach -இயேசு கிறீஸ்து அல்ல!) என்கின்ற புத்தகம் பழைய வேதாகமத்தின் (Old Testament) ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. இதில் மதம், நன்னடத்தை மற்றும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல அறிவுரைகளும் ஒரு தந்தை தன் மகனை நோக்கி கூறுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் படிக்கும்போது இதில் கூறப்பட்டுள்ளவை யாவும் இன்றைய காலக் கட்டத்துக்கு மிகவும் பொருத்தமானவைகளைப் போல் தோன்றுகின்றன!

இதில் செல்வத்தால் விளையும் பிரச்சினைகள் (Problems caused by Money) என்ற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ளவற்றின் சுருக்கம்:

(சீராக் ஆகமம்: 31ம் அத்தியாயம்: வசனங்கள் 1-2 மற்றும் 5)
செல்வத்தைப் பற்றி கவலைக் கொள்வதால் பயனில்லை. அது உன் உறக்கத்தையும் உடல் வலுவையுமே இழக்க செய்கிறது. பணத்தை விரும்புவன் எவனும் நியாயமுள்ளவன், உன்னதன் என்று தீர்ப்பிடப்பட்டதில்லை. அவனுடைய அதீத செல்வம் அவனை
பாவ வழியில் இட்டுச் சென்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

பழமொழிகள் ஆகமம்

பழைய வேதாகமத்தில் யூத சமுதாயத்தில் பரவலாக உபயோகப்படுத்தப் பட்ட பழமொழிகள் அடங்கிய புத்தகமும் (The Book of Proverbs) சேர்க்கப்பட்டுள்ளது:

அதில் 22 - 23வது அதிகாரத்தில் முப்பது நீதி மொழிகள் (The Thirty Wise Sayings) என்று பிரத்தியேகமான பகுதியுள்ளது. அதில் ஏழாவது நீதி மொழி செல்வத்தைப் பற்றியது. அதன் சுருக்கம்:

செல்வந்தனாக வேண்டுமென்ற பேராசையுடன் உன்னை நீயே வருத்திக் கொள்ளாதே. உன்னுடைய செல்வம் நீ கண்ணை மூடித் திறப்பதற்குள்ளாகவே இறக்கைக் கொண்ட கழுகைப் போல் பறந்து சென்று விடக் கூடும்!.

அதீத செல்வத்தின் விளைவுகளைப் பற்றி புதிய வேதாகமத்திலும் பல இடங்களில் காண்கிறோம்.

அவற்றுள் சில:

புதிய வேதாகமம்:

(புனித மத்தேயு (St.Mathew) சுவிசேஷம்: 6ம் அத்தியாயம்: வசனம்: 19): மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டு திருடுவர்.

(புனித லூக்காஸ் (St.Luke) சுவிசேஷன்: 12ம் அத்தியாயம்: வசனம்:15) எவ்வகைப் பொருளாசையும் கொள்ளாதபடி கவனமாயிருங்கள். ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவுதானிருந்தாலும் செல்வப் பெருக்கினால் வாழ்வு வந்துவிடாது

பாடுபட்டு நாம் சேர்த்து வைக்கும் செல்வத்தை நாம் அனுபவிக்கும் முன்னரே நம் காலம் முடிந்துவிடக் கூடும்.

செல்வம் தேவைதான். எவ்வளவு சேர்த்தால் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரும்? நம்மில் யாருக்காவது இந்த ரகசியம் தெரியுமா?

நான் சிறுவனாய் வெறும் கால்களுடன் நடந்தபோது காலனி அணிந்து சென்றவனைப் பார்த்து பொறாமைப் பட்டேன். பிறகு காலனி கிடைத்தபோது சைக்கிளில் செல்பவனைப் பார்த்தேன். பிறகு சைக்கிளில் செல்ல முடிந்தபோது ஸ்கூட்டர் கண்ணில் பட்டது.. ஸ்கூட்டரில் சென்றபோது காரில் இருந்தால் சுகமாயிருக்குமே என்று நினைத்தேன். பிறகு பிரிமியரில் பத்மினியில் சென்றபோது மாருதி 800ல் செல்வது எவ்வளவு வசதியாயிருக்கும் என்று எண்ணினேன்..

இப்போதும் என்னுடையதை விட பெரிய, அழகான, பளபளப்புடன் எனக்கும் முன்னும், பக்கத்திலும் செல்லும ஆடம்பர வாகனங்களைப் பார்த்து பெருமூச்சு விடுகிறேன்..

நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அதிகாரம் செய்யக் கூடிய பதவி, ஐந்திலக்க ஊதியம், மூன்று படுக்கையறையுடன் சகல வசதிகளுடைய வீடு..

இது போதுமா மன நிம்மதியைக் கொடுக்க? அல்லது இனியும் கொஞ்சம் செல்வம் சேர்க்க வேண்டுமா? பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் இதுபோன்ற வசதிகளுடன் கூடிய வாழ்க்கை அமைய நான் இன்னும் அதிகம் செல்வம் சேர்க்க வேண்டுமா? அப்படியென்றால் இன்னும் எவ்வளவு சேர்க்க வேண்டும்?

Tuesday, January 24, 2006

பொறாமை என்னும் காட்டுத் தீ!

முந்தைய பதிவில் நாம் வாசித்தபடி தாவீது (David) என்ற இளைஞன் கோலியாத் என்ற மாமிச மலையை வென்று ஊருக்குள் கொண்டு செல்லப்பட்டபோது ‘சவுல் கொன்றது ஆயிரம் பேர்; தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்’ என்று ஊர் மக்கள் ஆர்ப்பரித்தைப் (யாத்திராகமம் அதி:17 வசனங்கள் 7 மற்றும் 8) பற்றி அதற்கு முந்தைய நாள் (சனிக்கிழமை) பதிவில் வாசித்தோம்.

அப்போது நாட்டை ஆண்டு வந்த மன்னனின் பெயர்தான் சவுல் (Saul). அவன் தன்னை விட பல ஆண்டுகள் இளையவனான தாவீதுக்கு கிடைத்த புகழைக் கண்டு பொறாமைப்பட்டு அவனை எப்படியாவது தொலைத்துவிட வேண்டுமென்று அலைந்தான் என்றும் பார்த்தோம்.

அதேபோல் இயேசு கிறீஸ்து வாழ்ந்த காலத்திலும் நடந்தது. புனித மாற்கு (St. Mark) எழுதிய சுவிசேஷம் (Gospel) 3வது அத்தியாயம் 1 முதல் 6ம் வசனங்களில் கூறுவதின் சாராம்சம்:

‘அக்காலத்தில் ஓய்வுநாள் ஒன்றில் மீண்டும் செபக்கூடத்தில் வந்த இயேசு அங்கே சூம்பிய கையன் ஒருவனைக் கண்டார். அவர் மேல் குற்றஞ்சாட்டும்படி, ஓய்வு நாளில் குணமாக்குகிறாரா என பார்த்துக்கொண்டிருந்தனர். யூதர்கள் சடங்கு முறைப்படி வாரத்தில் ஒருநாள் ஓய்வு நாளாக அனுசரிக்கப்பட வேண்டும் என்பது கட்டாயம். அந்நாட்களில் வாயில் ஊறிய எச்சிலை விழுங்குவது கூட தவறு என்று கருதப்பட்ட காலம். இயேசுவோ அவர்களுடைய தீய எண்ணத்தை அறிந்தவராய் சூம்பிய கையனைப் பார்த்து உன் கையை நீட்டு என அவனும் அவருடைய வார்த்தைகளை விசுவசித்து தன் கையை நீட்டினான். கை குணமாயிற்று. பரிசேயரோ (இயேசுவையும் அவருடைய போதனைகளையும் எதிர்த்த யூதர்களின் குழுக்களில் ஒன்று பரிசேயர் எனப்பட்டனர்) வெளியே போய் எரோதியரோடு (King Herod’s people) சேர்ந்துக் கொண்டு அவரை எப்படி தொலைக்கலாமென்று அவருக்கெதிராக ஆலோசனை செய்தனர்.’

பொறாமை மனிதனுடைய தீய குணங்களில் மிகவும் கொடியது. அது நம்மையே அழிப்பதுடன் நம்மைச் சார்ந்தவரையும் அழித்துவிடக்கூடியது. நம் நண்பர்கள், சுற்றம் சூழலென எவருடைய வளர்ச்சியையும் பொறுத்துக் கொள்ளாது. அவர்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ள இடம் தராது. தேவையில்லாமல் பிறரை வீண் கோபத்திற்குள்ளாக்கும். சண்டை, சச்சரவு, அவதூறு பேசுதல், புறங்கூறுதல், ஆணவம், குழப்பம் எல்லாவற்றிற்கும் மூல காரணம் பொறாமையே.

நம்மில் பொறாமையால் பீடிக்கப்பட்டவர்கள் பழைய வேதாகமத்தில் நாம் கண்ட சவுல் அரசனுக்கும் புதிய வேதாகமத்தில் நான் காணும் பரிசேயர்களுக்கும் இணையாக கருதப்பட தகுந்தவர்கள்.

பொறாமை விளைவிக்கும் தீய விளைவுகளை நாம் உணர்ந்திருக்கிறோமா? நமது அண்டை அயலாரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைகிறோமா? நம்மால் பிறரை மனம் திறந்து பாராட்ட முடிகிறதா? அல்லது குறைந்த பட்சம் அவர்களுடைய வெற்றியை குறைத்து மதிப்பிடாமலாவது இருக்கிறோமா?

***

Sunday, January 22, 2006

இறைவன் நம்மோடு இருந்தால்...

நேற்றைய பதிவில் தாவீது-கோலியாத் மோதலைப் பற்றி சுருக்கமாக கூறியிருந்தேன்..

அதைப் பற்றி மேலும் இன்று..

தாவீது பெத்லகேமைச் சார்ந்த யாசீனின் புதல்வர்களுள் இளையவன்.. பார்ப்பதற்கு மிகவும் அழகானவன், போர் புரிவதில் சூரன், யாழிசைப்பதில் வல்லவன்..

சவுல் அரசரின் எதிரிகளான பிலிஸ்தியர்கள் அவனை எதிர்த்து போருக்கு தயாராக நின்றபோது படைவீரர்களுடைய முன்வரிசையில் ஆஜானுபாகுவான, உருண்டு திரண்ட புஜங்களுடன் நின்றுக் கொண்டு கோலியாத் தன்னுடைய படைகளை எதிர்கொள்ள வந்த சவுலின் படைகளை நோக்கி சவால் விட்டான்.

‘உங்களில் பலசாலியான, போரிட திறமை வாய்ந்த ஒரு வீரனை தெரிந்தெடுத்து என்னுடன் மோத அனுப்புங்கள். நான் அவனிடம் தோற்றால் நான் மட்டுமல்ல இதோ போர்க்கோலத்தில் எனக்குப் பின்னால் அணிவகுத்து நிற்கும் அனைவருமே உங்களுக்கு அடிமையாகி சேவை புரிவோம். அதுபோல் அவன் தோற்றுப்போனால் நீங்கள் எல்லோரும் எங்களுடைய அடிமைகள். போட்டிக்கு தயாரா?’

தலையிலிருந்து கால்வரை வெண்கலத்தாலன கவசங்களை அணிந்துக் கொண்டு கையில் பயங்கரமான ஆயுதங்களுடன் நின்ற கோலியாத்தின் கோலத்தைக் கண்டு அஞ்சி நின்றனர் சவுலின் படைவீரர்கள்.

தாவீதின் மூத்த சகோதரர்கள் சவுலின் படையில் இருந்ததால் அவர்களும் யுத்தகளத்தில் இருந்தனர். அவர்களுடைய தந்தை ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தன் மகன் தாவீதை அழைத்து நீ போய் உன் சகோதரர்களுக்கு இந்த அப்பங்களை உண்பதற்கு உணவாக கொடுத்துவிட்டு வா என்று அனுப்பினார்.

ஓட்டமும் நடையுமாய் யுத்தகளத்தை சென்றடைந்தான் தாவீது. அப்பங்கள் ஒரு கையிலும் ஆடு மேய்க்க பயன்படுத்தும் கோலுடனும் தங்கள் முன் வந்து நின்ற தாவீதைப் பார்த்து கோபமுற்ற அவனுடைய சகோதரர்கள், ‘மேய்த்துக் கொண்டிருந்த ஆடுகளை யார் பொறுப்பில் விட்டு வந்தாய்? போர்க்களத்திற்கு உன்னை யார் வரச்சொன்னது? ஓடிப்போ இங்கிருந்து.’ என்று விரட்டினர்.

தாவீது, ‘ஐயோ.. நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று என்னை விரட்டுகிறீர்கள்? நம் தந்தைதான் என்னை உங்களுக்கு உணவைக் கொடுத்துவிட்டு வரச்சொன்னார்.’ என்றான்.

அவர்கள் அவனோடு உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் கோலியாத் மீண்டும் தன் சவாலை உரக்க கூவ அதைக் கேட்ட தாவீது அவன் என்ன கூறுகிறான் என்று அடுத்திருந்த படைவீரர்களைக் கேட்டான். அவர்களும் கோலியாத்தின் சவாலை எடுத்துரைக்க தாவீது உடனே ‘நான் உங்கள் சார்பில் போரிடுகிறேன்.. இறைவன் என்னோடு இருக்கையில் நான் எதற்கு, யாருக்கு அஞ்ச வேண்டும்’ என்றான்.

தாவீதின் சகோதரர்கள் சினம் கொள்ள மற்ற படைவீரர்களோ தங்களுடைய மன்னன் சவுலிடம் அவனை இழுத்துச் சென்று அவன் தங்களுக்கு கூறியதை அறிவித்தனர்.

சவுல் தன் முன்னே நின்ற ஆடு மேய்க்கும் சிறுவன் தாவீதை பார்த்து, ‘நீயோ சிறுவனாயிற்றே’ என்று தயங்கினான். அதற்கு தாவீது, ‘நான் சிறுவயது முதலே போர்வீரன்தான். நான் இறைவனின் படையை எதிர்த்து வந்துள்ளவர்களை இறைவனின் துணையோடு போரிட்டு வெல்வேன்.’ என்று மார்தட்ட சவுல் அவனுக்கு தன்னுடைய போர்க்கவசங்களை அணிவித்து, இறைவனின் நாமத்தால் ஆசீர்வதித்து அனுப்பினான்.

ஆனால் தாவீது தனக்கு முன்பின் பழக்கமில்லாத போர்க்கவசங்களை அணிந்துக் கொண்டு நடக்கமுடியாமல் தடுமாறினான். பிறகு, அவை எல்லாவற்றையும் கழற்றிவிட்டு தனக்கு வழக்கமான மரக்கோலையும், ஐந்து கூழாங்கற்களையும் தேர்ந்தெடுத்து தன் இடுப்பில் சொருகியிருந்த கவணை கையில் எடுத்துக் கொண்டு போர்க்களத்திற்கு விரைந்தோடினான்.

கையில் கோலுடன் தன் முன் வந்து நின்ற சிறுவனைப் பார்த்து ஆணவத்துடன் சிரித்த கோலியாத், ‘வா சிறுவனே.. உன்னைக் கொன்று உன் உடலை கழுகுகளுக்கு இரையாக்குவேன்.’ என்றான்.

தாவீது அவனுடைய உருவத்தையும் சிரிப்பையும் கண்டு அஞ்சாமல் கண்களை வானத்தை நோக்கி உயர்த்தி இறைவனை துணைக்கு அழைத்தான். பிறகு தன் பையிலிருந்த ஒரு கூழாங்கல்லை எடுத்து தன் கவணில் வைத்து சுழற்றி கோலியாத்தின் நெற்றியை குறிவைத்து எறிந்தான். மலையென நின்ற கோலியாத் இடிபட்ட மதிலென சரிந்தான்!

ஆடு மேய்க்கும் இளைஞனான தாவீது தனது பலத்தையோ, போரிடும் திறமையையோ மட்டும் நம்பி போரில் இறங்கவில்லை.. மாறாக தான் வணங்கும் இறைவனை நம்பி இறங்கினான். இறைவன் தன்னோடு இருக்கிறார் என்று அவன் முழுமையாய் நம்பினான், விசுவசித்தான். இறைவன் தன் எதிரியை தன்னிடம் ஒப்படைப்பார் என்றும் விசுவசித்தான்.

நாமும் அப்படித்தான். நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மை பயமுறுத்தும் சோதனைகளையும், தோல்விகளையும் நம் திறமையில் மட்டுமே நம்பி இறங்கினால் தோல்விதான் மிஞ்சும். ஆனால் நாம் அன்றாடம் வழிபடும் இறைவனை நம்பி, அவருடைய வல்லமையில் நம்பிக்கை வைத்து எதிர்கொண்டால் நிச்சயம் வெற்றி பெறுவோம்.

இறைவன் நம்மோடு இருக்கிறார்.. உறுதியுடன் இருப்போம்.. வெற்றி நிச்சயம்.

Saturday, January 21, 2006

பகைவரையும் அன்பு செய்யுங்கள்

பகைவருக்கு அன்பு

பழைய வேதாகமத்தில் (யாத்:21:24) கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..

அது அக்காலத்திய வாழ்க்கை முறைக்கு ஒருவேளை ஏற்ற விதியாயிருக்கலாம். இவ்வாசகங்களுக்கு முந்தைய வாசகங்களையும் சேர்த்து வாசித்துப் பார்த்தால் ஒருவேளை அதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றலாம்..

மனிதர் சண்டையில் ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின் அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான். ஆனால் அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்..(யாத்:21:22-23) என்று இவ்வாசகங்கள் கூறுகின்றன.

ஆயினும் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாவீது புதிய வேதாகமத்தில் (மாற்கு 3:13-19) கூறியுள்ளபடி பகைவரையும் அன்பு செய்கின்ற கட்டளையைக் கடைபிடித்ததாகவும் பழைய வேதாகமத்தில் காண்கிறோம்...

இதன் பின்னணியை சற்றே பார்ப்போம்.

யூதர்களின் முதல் அரசராக இறைவனால் தேர்ந்தெடுக்க்ப்பட்டவர் சவுல். அவர் அரசாட்சி செய்த காலத்தில்தான் சாமுவேலும் வாழ்ந்து வந்தார். இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட சவுல் நாளடைவில் இறைசித்தத்திற்கு எதிராய் நடந்துக் கொள்ளவே இறைவனின் கோபத்திற்காளானார்.

சாமுவேல் சிறுவயதிலேயே இறைவனால் அவருடைய இறைவாக்கை இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துரைக்க தெரிந்துக் கொள்ளப்பட்டவர். அவருடைய காலத்தில் இறைவன் அவர் வழியாகத்தான் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய காரியங்களையும் செய்தார்.

சவுலின் போக்கும் செயல்களும் தனக்கெதிராக திரும்புவதைக் கண்ட இறைவன் அவருடைய இடத்தில் வேறொருவரை அபிஷேகம் செய்ய விரும்பி சாலமோனைப் பார்த்து, ‘நீ போய் பெதகலேமைச் சேர்ந்த இசாயினின் புதல்வர்களுள் ஒருவரை அடுத்த அரசராக தெரிந்துக் கொண்டுள்ளோம் என அவனிடம் கூறு என்று பணித்தார்.

சாலமோனுக்கோ தான் அப்படி செய்தால் சவுல் அரசுருடைய கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்று அஞ்சினார். இருப்பினும் இறைவனின் சொல்லைத் தட்ட முடியாமல் இசாயினிடம் சென்றார். இசாயி தன்னுடைய புதல்வர்களில் ஏழு பேரை அவர் முன் கொண்டு நிறுத்தினார். ஆனால் இவர்களில் ஒருவரையும் இறைவன் தெரிந்துக் கொள்ளவில்லை என்று சாலமோன் அறிந்தார். அதைக் கேட்ட இசாயி எனக்கு இன்னுமொரு சிறவன் இருக்கிறான். அவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். சாலமோன் அவனை அழைத்து வரச்சொல்லி அவனைக் கண்டவுடனே இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவன் இவந்தான் என கண்டுகொண்டார். உடனே அபிஷேகமும் செய்து வைத்தார். தாவிது யாழிசைப்பதில் மிகவும் வல்லவன், பேச்சுத் திறமையும், போர் புரிவதிலும் தேர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. கோலியாத்துடன் தனித்து மோதி வெற்றிக் கொண்டவன் இவனே.

நாளடைவில் தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது. அவன் தனி மனிதனாய் நின்று பிலிஸ்தியரை வென்று ஊர் திரும்பியபோது மக்கள், ‘சவுல் கொன்றது ஆயிரம் பேர்;தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்.’ என்று ஆரவாரித்தனர். இதைக் கேட்ட சவுல் தாவீதின் மேல் ஆத்திரம் கொண்டான். ஆகவே அவனைப் பிடித்து தன்னுடைய எதிரிகளான பிலிஸ்தியரிடமே ஒப்படைக்க திட்டமிட்டான். ஆனால் இறைவனின் அருள் தாவீதின் மேல் இருந்தது. ஆகவே சவுல் அவனை தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்து அவனை தன்னுடைய சேனையிலிருந்த ஆயிரம் வீரர்களுக்கு தலைவனாக்கி தன் பார்வையினின்று அகற்றினார்.

இருப்பினும் அவனை தகுந்த நேரத்தில் கொல்ல சதித் திட்டம் தீட்டினார். அதைக் கேள்வியுற்ற தாவீது தப்பித்து ஊருக்கு அப்பால் குகைகளில் மறைந்து வாழ்ந்து வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் ஒருமுறை சவுல் தாவீதின் கையில் தப்பிக்க முடியாவண்ணம் சிக்கிக் கொண்டார். தாவீதினுடன் இருந்த போர் வீரர்கள், ‘இதோ நாம் உம் எதிரியை உம்மிடம் ஒப்படைத்து விட்டோம். உம் மனதுக்கு பிடித்தபடி அவனுக்கு செய்துக்கொள்ளும்’ என்றனர்.

ஆயினும் தாவீது சவுலைப் பார்த்து, ‘உமக்கும் எனக்கும் இறைவனே நடுவராய் இருப்பாராக.. நான் உம்மேல் கை போடமாட்டேன்...’ என்றார்.

தாவீதின் பெருந்தன்மை சவுலை நெகிழச் செய்கிறது. அவரை அழச் செய்கிறது. அவர் தாவீதைப் பார்த்து, ‘நீ என்னிலும் நீதிமான், நானோ உனக்கு தீமை செய்தேன். நீ எனக்கு நன்மை செய்தாய்’ என்று கூறுகிறார்.

அதாவது யேசு கிறீஸ்து புதிய வேதாகமத்தில் ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக செபியுங்கள்.’ என்று கூறியதை பழைய வேதாகம காலத்திலேயே தாவீது கடைப்பிடித்தார்!

அன்பு , நீதி, சமத்துவம், உண்மைம், எல்லாவற்றிற்கும் மேலாக பகைவனை மன்னித்து அன்பு செய்யும் பண்பு நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமும். இதில், சாதி, மதம், மொழி ஒன்றும் தடையாய் இருக்கலாகாது..

Friday, January 20, 2006

சீனாய் மலை - விவரங்கள்

பழைய வேதாகமத்தில் (யாத்திராகமம்:13லிருந்து 40 முடிய) எகிப்தில் அப்போது ஆண்டு வந்த பாரவோன் மன்னனின் அதிகாரத்துக்குக் கீழ் துன்புற்று வந்த யூத மக்களை மீட்டு மோயீசன் (Moses) அவர்களை இறைவனால் நிச்சயிக்கப்பட்டிருந்த நாட்டிற்கு அழைத்துச் சென்றார் என மிகவும் விளக்கமாக எழுதப்பட்டுள்ளது..

அவர்கள் கடந்து சென்ற பாதையில்தான் சீனாய் மலையின் உச்சியில் இறைவன் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வடிவத்தில் அவர்களுடைய தலைவர் மோயீசனுக்கு தோன்றி பத்து கட்டளைகள் அடங்கிய கற்களாலான பலகைகளைக் கொடுத்தார் என்கிறது பழைய வேதாகமம் (Old Testament).

அவர்கள் கடந்து சென்ற பாதையின் மாதிரி வடிவம் கீழே உள்ள சுட்டியில் உள்ளது.

 • Route


 • மோயீசனுக்கு இறைவன் முதன் முதலில் காட்சியளித்து (யாத்தி:3:3-6) 'நீ போய் பாரவோனிடம் என் மக்களை விடுவிக்க சொல்' என்று கட்டளையிட்டபோது திக்கு வாயனாயிருந்த மோயீசன் நானா என்று தயங்கினார். ஆயினும் இறைவன் அவரை உறுதிப்படுத்தி (யாத்தி:4:1-4) அனுப்பிவைத்தார்.

  மோயீசன் அஞ்சியது போலவே பாரவோன் அரசன் முதலில் மறுத்து பிறகு இறைவன் மோயீசன் மூலமாக பலப்பல அற்புதங்களை நிகழ்த்தி பாரவோன் மன்னனுடைய கல் மனதை மாற்றி யூத மக்களை விடுதலை செய்தான் என்பதை Ten Commandments என்ற ஆங்கிலப் படத்தில் மிக அழகாக சித்தரித்திருந்தார்கள்..

  ஆயினும் விடுதலையடைந்த யூத மக்கள் நன்றி மறந்து தங்களுக்கென உலோகங்களாலான விக்கிரகங்களைச் செய்துக் கொண்டு இறைவனுக்கெதிராய் திரும்பினர். இதைக் கண்ட இறைவன் பொறுக்க மாட்டாமல் சினம் கொண்டு சீனாய் மலை உச்சியிலிருந்து தம்மை அழைப்பதை மோயீசன் கேட்டார்.

  மோயீசன் அவருடைய அழைப்பிற்கு இணங்கி மலையுச்சிக்குச் சென்றார் எனவும் அப்போதுதான் இறைவன் 'எகிப்து நாட்டிலிருந்தும் அடிமை வாழ்விலிருந்தும் உன்னையும் உன் மக்களையும் விடுவித்த ஆண்டவராகிய நாமே உன் கடவுள்.. நம்மிடம் அன்பு கூர்ந்து நம் கட்டளைகளைக் கைக்கொண்டு ஒழுவுகிறவர்களுக்கு ஆயிரமாயிரம் தடவையும் தயவு காட்டுவோம்' என்று கூறினார் எனவும் வேதாகமம் கூறுகிறது.

  அதற்குப் பிறகு கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, உன் அயலானுக்கு விரோதமாய் பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் அயலான் வீட்டை விரும்பாதே, அவனுடைய மனைவி, வேலைக்காரன், வேலைக்காரி என்று அவனுக்குள்ள எதையும் விரும்பாதிருப்பாயாக என்பது போன்ற பல அற்புதமான நெறிமுறைகளைக் கட்டளைகளாக கொடுத்தார் என்றும் வேதாகமம் கூறுகிறது (யாத்தி:20:1-17)

  இந்த சீனாய் மலையின் இருப்பிடம் பற்றி பல ஆராய்ச்சியாளர்களும் ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர். அது எகிப்தில் உள்ள மிக உயர்ந்த மலைச் சிகரங்களுள் ஒன்று. இப்போதும் அது ஒரு வரலாற்று சின்னமாக, புனித ஸ்தலமாக போற்றப்பட்டு வருகிறது.

  நான் இணையதளங்களில் கண்டெடுத்த சிலவற்றின் முகவரிகளை கீழே கொடுத்துள்ளேன்.

  விருப்பமுள்ளவர்கள் அங்கே சென்று காணலாம்.


 • Sinai_Photo

 • Sinai

 • Sinai_1
 • Thursday, January 19, 2006

  சொர்க்கம் என் பரம்பரைச் சொத்தா?

  நான் என்னுடைய வங்கியின் சென்னை மத்திய கிளையில் துணை மேலாளராக இருந்தபோது எல்லா சனிக்கிழமைகளிலும் சென்னை அடையாறு பெசண்ட் நகரிலிருந்து அன்னை வேளாங்கன்னி ஆலயத்துக்கு செல்வது வழக்கம்.

  சென்னை பாரிமுனையிலிருந்து கடற்கரைச் சாலை வழியாக பெசண்ட் நகர் செல்லும் பேருந்தில் பயணம் செய்வேன். அப்படித்தான் ஒரு நாள் நான் பாரிமுனையில் நின்றுக் கொண்டிருந்த பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.

  சிறிது நேரத்தில் ஒருவர் பேருந்தில் ஏறினார். அவருடைய வலது தோளிலிருந்து ஒரு ஒலிபெருக்கி தொங்கியது. இடது தோளில் புத்தகங்கள், கையேடுகள் கொண்ட ஒரு பெரிய ஜோல்னா பை.. கண்களில் லென்ஸ் கண்ணாடி.. ஒரு அறுபது, அறுபத்தைந்து வயது தோற்றம்.. கோபப் பார்வை.. (ஜோ.. இதெல்லாத்தையும் எப்படி சார் ஞாபகம் வச்சிருக்கீங்கன்னு கேக்காதீங்க.. ஏன், எப்படீன்னு எனக்கே தெரியலை.. எழுத ஆரம்பிச்சதும் தானா அவரோட உருவம் கண் முன்னால வருது..).. எதுக்கு, யார் மேல் கோபம் என்று அவர் பேச ஆரம்பிச்சதும்தான் தெரிந்தது..

  ‘உங்களுக்கு மோட்ச ராஜ்ஜியம் வேணுமா, வேணாமா?’ என்றார்..

  எனக்கு தூக்கிவாரிப் போட்டது.. ஆனால் பேருந்திலிருந்த யாருமே அவரைக் கண்டுக் கொள்ளவில்லை.. தினமும் இவருடைய பேச்சைக் கேட்டிருப்பார்கள் போலத் தெரிந்தது..

  அவர் மேற்கொண்டு, ‘என் வழியாலென்றி மோட்ச ராஜ்ஜியத்தில் யாரும் பிரவேசிக்க முடியாது..’ என்று இயேசு கிறீஸ்து வேதாகமத்தில் கூறியிருந்த பல வாக்குகளையும் மேற்கோள் காட்டி தான் சொல்ல வந்ததை நியாயப்படுத்தினார்..

  என்னைத் தவிர வேறு யாருமே அவர் இருந்த திசையைக் கூட பார்க்காமல் ஜன்னல் வழியே சாலையில் சென்றுக் கொண்டிருந்தவர்களை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தார்கள்..

  ஓட்டுனரும், நடத்துனரும் பேருந்தில் ஏறியும் அவர் இறங்கவுமில்லை. தான் கூறிக் கொண்டிருந்ததை நிறுத்தவுமில்லை.. ஓட்டுனர் அவரைக் கண்டுகொள்ளாமல் தன் இருக்கையில் ஏறி அமர்ந்து வாகனத்தை ஸ்டார்ட் செய்ய.. நடத்துனர் அவருடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.

  அதாவது பொறி, கடலை, பேப்பர், பாசிமணி இத்யாதி, இத்யாதிகளை பேருந்தில் விற்பவரை எப்படி நடத்துவார்களோ அப்படித்தான் அவரும் நடத்தப் பட்டார்..

  இதில் வேடிக்கை என்னவென்றால் பேருந்து புறப்படும் நேரத்தில் தன் ஜோல்னா பையிலிருந்த புத்தகங்களை இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என விற்க முயற்சித்ததுதான். யாரும் வாங்கவில்லை.. நானும்தான்..

  ‘நீங்க எல்லாருமே நேரா நரகத்துக்குதாம்யா போவீங்க.’ என்ற சாபத்துடன் அவர் இறங்கிச் செல்ல... பேருந்து புறப்பட்டுச் சென்றது.. என்னுடன் பேருந்தில் அமர்ந்திருந்தவர்களை அவருடைய கடைசி சாபம் பாதித்தா என்று அவர்களைப் பார்த்தேன்.. Nobody simply bothered!

  வெட்றிவேல் அவர்கள் என்னுடைய பதிவில் இது சம்பந்தமாக இட்ட பின்னூட்டத்திற்கு இதுதான் என் பதில்..

  இவரையும் இவரைப் போல் இம்மாதிரி முட்டாள்தனமான போதனைகளை எவரும் கண்டுக் கொள்வதில்லை...

  பைபிளிலும் சில இடங்களில் இது போன்ற அறிக்கைகள் உள்ளன.. இல்லையென்று சொல்ல வரவில்லை.. ஆனால் அது எந்த நோக்கத்தில், யாரைப் பற்றி சொன்னதாக வருகின்றன என்று புரிந்துக் கொள்ளாமல் இவரைப் போன்றவர்கள் அவற்றை சான்றாக எடுத்துக் காட்டி போதிப்பதுதான் வேதனை..

  நான் ஒன்றும் பைபிளைக் கரைத்துக் குடித்தவனில்லை.. நான், ஏன், ஏறக்குறைய என்னைப் போன்ற கத்தோலிக்க கிறீஸ்துவ மதத்தைச் சார்ந்தவர்கள் யாருமே பைபிளை மனப்பாடம் செய்வதில் குறியாய் இருப்பதில்லை..

  கத்தோலிக்க கிறீஸ்துவர்கள். 'பிரிந்து சென்ற சகோதரர்கள்' என வர்ணிக்கும் சிலர்தான் இதை தவறு என்று தெரியாமல் செய்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை..

  ஆனால் இதற்கு நேர் எதிராக பைபிளில் காணப்படும் சில வாக்குகளை மட்டும் இங்கே பார்க்கலாம்.

  1. மத்தேயு:8.11: ‘கிழக்கிலும் மேற்கிலுமிருந்து பலர்* வந்து விண்ணரசில் ...உடன் பந்தி அமர்வார்கள். அரசின் மக்களோ வெளியிருளில் தள்ளப்படுவர்..’

  2. மாற்கு:10.14-15: ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள் ஏனனில் கடவுளின் அரசு இத்தகையோரதே.. கடவுளின் அரசைக்# குழந்தைபோல் ஏற்றுக்கொள்ளாத எவனும் அதனுள் நுழையவே முடியாது..’

  3.  சின்னப்பர் உரோமையருக்கு எழுதிய கடிதம்:2:16: கடவுளின் திருச்சட்டத்தைப் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்களாவார்கள். கடவுளின் திருச்சட்டத்தைப் பெற்றிராத புறவினத்தார்* அதில் உள்ள கட்டளைகளை இயல்பாகவே நிறைவேற்றும்போது .. அவர்களுக்கு திருச்சட்டம்$ இல்லாத போதிலும் அவர்கள் உள்ளமே (அச்)சட்டமாய் அமைகிறது.

  * பலர், புறவினத்தார் - கிறிஸ்துவை பின்பற்றாதவர்கள் என பொருள் கொள்ளலாம்.

  # கடவுளின் அரசு - கவனிக்க, கிறீஸ்துவர்களின் அரசு என கூறவில்லை. கடவுளின் அரசை சொர்க்கம், விண்ணகம், மோட்சம் என கொள்ளலாம்

  $ கடவுளின் திருச்சட்டம் -  இங்கும் கிறீஸ்துவின் சட்டம் என குறிப்பிடப்படவில்லை. கடவுளின் சட்டம், வழிமுறை என்னவாயிருக்கும்? உன்னை நீ அன்பு செய்வதுபோல் பிறரையும் அன்பு செய், நல்லவனாய் இரு, பாவம் செய்யாதே என்பதுதானே.. இதை அவரவர் மனசாட்சியின்படி கடைப்பிடிப்போர் சொர்க்கம் அடைவது உறுதி.

  இன்னும் இது போன்ற பல அத்தாட்சிகளை பைபிளிலிருந்து எடுத்துக்காட்டுகளுடன் எண்பிக்க முடியும். நேரமின்மையால் இத்துடன் நிறுத்துகிறேன்..

  இதற்கு எதிர்மறையாக வாதாட வேண்டுவோருக்கும் பைபிளில் சான்றுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது..

  அதுதான் பைபிளின் சிறப்பம்சம்.. பைபிள் கூறப்பட்டுள்ளவை யாவுமே கடவுளின் வார்த்தையென்று பொருள்கொள்வது கடினம்.. கடவுளின் வார்த்தையை பலரும், அவருடைய சீடர்கள், சீடர்களின் சீடர்கள் அவரவர் கேட்டபடி, பொருள் கொண்டு எழுதியுள்ளனர் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்..

  கடவுளின் அரசான சொர்க்கத்தில் நுழைய ஒரு நல்ல மனிதனாய், ஆன்ம சுத்தியுடன் வாழ வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை நியதி..

  சொர்க்கமா? அப்படியொன்று இருக்கிறதா என்றால்.. அங்கு சென்று பார்த்துவிட்டுத்தான் சொல்ல முடியும்.

  வெட்றிவேல் பின்னூட்டத்தில் மிக்லோஸ் ஜாக்கோ என்பவர் எழுதியிருந்த சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தார். அவற்றில் எல்லாவற்றையும் மறுத்துக் கூற முடியும். ஆனால் அதற்கு நான் முயலப்போவதில்லை:

  கீழே குறிப்பிட்டிருந்தவற்றிற்கு மட்டும் பதில் கூறுகிறேன்.

  it not abundantly clear that the Bible writers
  expected the world to end in their generation? But
  it?s 2,000 years later; the world continues. Clearly
  the Bible was wrong; the end was not near. The Bible
  did not speak the truth.

  But Christians have no problem rationalizing away the
  very plain meaning of the passages I cited.

  பைபிளில் குறிப்பிட்டிருப்பது இவ்வுலகின் அழியும் காலமல்ல.  இறுதி நாட்கள்  என்பதை நம் ஒவ்வோருவரின் மரணதருவாய் எனவும் பொருள் கொள்ளலாம். அதிலும் கூட இத்தனை வருடங்களுக்குள் காலம் அழிந்துவிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாய் எனக்கு தெரியவில்லை..

  சரித்திர ஆசிரியர்கள் கிறீஸ்துவுக்கு முன் இரண்டாயிரம் ஆண்டுகள்தான் உலகம் இருந்ததெனவும் வாதிடுவதில்லை. இரண்டாயிரம் வருடங்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது.. கிறீஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாயிரம் வருடங்கள் இருந்ததாகவும் ஆகவே கிறீஸ்து பிறந்ததிலிருந்து இரண்டாயிரம் வருடத்திற்குள் உலகம் அழிந்துவிடும் என்று பொருள் கொண்டுவிட்டு அடடா இன்னும் உலகம் அழியவில்லையே.. ஆகவே பைபிளில் கூறப்பட்டுள்ளதெல்லாம் பொய் என்று வாதிட்டால் அதற்கு முடிவே இருக்காது..

  வாதம் அர்த்தமுள்ளதாய் இருந்தால் பதில் கூற முயலலாம். அது பிடிவாதமாயிருந்தால் அதற்கு பதில் கூற விழைவது விழலுக்கு இறைத்த நீர் போலத்தான்.

  அதற்காகத்தான் நான் எப்போதும் சொல்வதையே மீண்டும் சொல்கிறேன்.

  மதம் மனித மனதைச் சார்ந்தது.. மனித மூளையை அல்ல.  பைபிளைப் பற்றி ஒரு முன்னுரை

  கிறீஸ்துவ மதத்தின் சாராம்சம்: உன்னைப் போல் உன் எதிரியையும் நேசி என்பதுதான்.

  ஏசு கிறீஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் அவர் இஸ்ராயேல் மக்களுக்கு, குறிப்பாக யூத இனத்தை சார்ந்தவர்களுக்கு கூறிய போதனைகள், அவர் தன் இனத்தைச் சார்ந்த மக்களாலேயே புறக்கணிக்கப்பட்டு, அவருடன் அவருடைய பணியில் பங்கு கொண்டிருந்த பண்ணிரு சீடர்களில் ஒருவராலேயே காட்டிக் கொடுக்கப்பட்டு, கசையடி பட்டு, சிலுவை சுமந்து, இரு கள்வர்களிடையில் சிலுவையில் தொங்க விடப்பட்டு, மரித்த மூன்றாம் நாள் உயிருடன் உயிர்த்தெழுந்து அவருடைய சீடர்களுக்கு பலமுறை தோன்றி, நாற்பது நாட்கள் கழித்து விண்ணகம் சென்றதை அடங்கியதுதான் பைபிள்.

  கிறீஸ்துவர்கள் பார்வையில் இப்புத்தகம் 'நற்செய்தி'என்றும் அழைக்கப் படுகிறது. அதாவது இறைவன் தன் ஒரே மகனாகிய இயேசு கிறீஸ்துவை தன் மக்களுக்கு நல்ல செய்தியை அறிவிக்கவே அனுப்பினார் என்பது கிறீஸ்துவர்களின் நம்பிக்கை.

  குறிப்பு: இது நான் டிசம்பர் மாதம் பதிந்த இடுகையின் மறுபதிப்பு.

  அன்புடன்,
  டிபிஆர்.

  Tuesday, January 17, 2006

  பைபிள் என்பது என்ன?

  பைபிள் என்பது என்ன?

  என்னுடைய ‘தினசரி பைபிள் சிந்தனைகள்’ என்ற தொடரை எழுதுவதற்கு முன் இந்த கேள்வியை கேட்டு அதற்கு பதிலும் கூறலாம் என்று நினைக்கிறேன்.

  பழைய வேதாகமம், புதிய வேதாகமம் என்று இரு முக்கிய பகுதிகளைக் கொண்டது பைபிள். வேதாகமம் என்றால்? சுருக்கமாக கூற வேண்டும் என்றால் இறைவன் மனிதனோடு கொண்ட உறவின் வரலாற்றைப் பற்றி உரைக்கும் நூலே வேதாகமம்.

  ஆங்கிலத்தில் இதை Testament என்கிறார்கள்.

  Testament என்றால்?

  நிரூபிக்க உதவும் சாட்சியம், அதாவது, ஒரு நிகழ்ச்சியை நேரில் பார்த்த அல்லது பிறர் மூலம் கேள்விப் பட்ட ஒரு நபரின் சாட்சியம் என்று கூறலாம்.

  ஆக, பைபிளில் அடங்கியுள்ளவை எல்லாமே யேசுபிரானின் தோற்றத்திற்கு முன்னும் பின்னும் நடந்தவற்றை நேரில் கண்டு எழுதப்பட்டவைதான்.

  பைபிள் அடங்கியுள்ளவை யாவும் ஆதிகாலம் துவங்கி இறைவன் செய்தவைகளுக்கு சாட்சியங்களாய் திகழ்கின்றன என்றும் பொருள் கொள்ளலாம்..

  இதில் பழைய வேதாகாமம் என்பது இறைவன் இஸ்ராயேல் மக்களுக்கு அதாவது யூதர்களுக்கு, செய்தவைகளையும் இறைமகன் யேசுவின் வருகைக்கு அவர்களை தயார் செய்தவற்றையும் பற்றி சொல்கிறது..

  இவை கி.மு 1400 வருடத்திலிருந்து கி.மு. 400ம் வருடத்திற்கு இடையிலான காலக்கட்டதில் எழுதப் பட்டிருக்கலாம் என்று கணிக்கப் பட்டுள்ளது.

  இயேசு பிரானின்  தோற்றம் (பிறப்பு), வாழ்க்கை, போதனைகள், சேவைகள், அதனால் இஸ்ராயேல் மக்களிடையே ஏற்பட்ட மாற்றங்கள், விளைவுகள், பின்பு அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் இவற்றைப் பற்றியெல்லாம் அவருடன் இருந்த சீடர்களால் எழுதப்பட்டவற்றை அடங்கியதுதான் புதிய வேதாகம்.

  இவை சுமார் கி.பி.50லிருந்து இரண்டாவது நூற்றாண்டு இறுதிக்குட்பட்ட காலங்களில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் இவற்றை எழுதி வைத்தவர்கள் பெரிய சொல் வித்தகர்களோ, அல்லது சரித்திர ஆசிரியர்களோ அல்ல என்பதுதான். நம்மைப் போன்ற சாதாரண, அத்தனை படிப்பறிவில்லாத நபர்கள்..

  அவர்கள் தாங்கள் கண்டதையும் கேட்டதையும் தங்களுக்கு தெரிந்த மொழியில், நடையில் எழுதி வைத்தவைதான் இவைகள். ஆனால் அவர்கள் தாமாக எழுதவில்லை, தூய ஆவியின் (கடவுள் பிதா, சுதன், தூய வி என மூன்றாட்களாய் இருக்கிறார்.. ஆயினும் மூவரும் ஒருவரே என்பதுதான் கிறீஸ்துவ மதத்தின் மிக முக்கியமான தேவ ரகசியம் என கருதப்படுகிறது..) தூண்டுதலால்தான் என்பது கிறீஸ்துவ மதத்தினரின் நம்பிக்கை!

  இத்தகைய இறைவனின் தூண்டுதலால் எழுதப்பட்டவையாக கருதப்பட்டவை மட்டுமே பைபிளில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை இறை தூண்டுதலால் எழுதப்பட்டவையாக கருதியவர்களும் அதே தூண்டுதலுக்குள்ளானவர்களே என்பதும் காலங்காலமாக இருந்து வரும் நம்பிக்கை..

  இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் கலவையே இன்று பைபிள் என்று அழைக்கப்படும் புத்தகம். தமிழில் இவற்றை நற்செய்தி என்றும் அழைக்கின்றனர்.

  பைபிளில் அடங்கியுள்ள எல்லா பகுதிகளும் அவை எழுதப்பட்ட காலங்களில் வசித்த  இறையருள் பெற்றவர்களால்  அர்ச்சிக்கப் பட்டவையாகவும் கருதப்படுகின்றன.

  ஆகவேதான் பைபிள் இன்றும் கிறீஸ்துவர்களால் ஒரு புனித புத்தகமாகக் கருதப்படுகிறது..

  சரி. இனி பழைய வேதாகமம் என்ன சொல்கிறதென சுருக்கமாக பார்ப்போம்..

  அதற்கு முன் ஒரு வார்த்தை..

  நாம் எந்த மதத்தைச் சார்ந்தவர்களானாலும்  அவற்றில் சொல்லப்படுபவற்றை ஆழமாய் ஆராய்ந்து பார்க்காமல் அப்படியே நம்புகின்ற மனது வேண்டும். இல்லையா?

  இறை படைப்பின் நோக்கங்களையெல்லாம் ஆராயத் துவங்கினால் அதற்கு முடிவே இருக்காது..

  மனிதனின் படைப்பின் துவக்கம், தீயவனின் (சாத்தான்) சோதனையால் இறைவனின் கோபத்திற்காளாகி தொல்லைகள் அனுபவித்தது, மக்களினத்தின் தலைவராக ஆபிரகாம் ஏற்படுத்தப்படுவது இஸ்ரயேலரின் துவக்க வரலாறு ஆகியவற்றைக் கூறுகிறது.. ஆதியாகமம்,

  தங்கள் சொந்த நாடுகளை விட்டு பல நூற்றாண்டுகளாக எகிப்தில் தங்கியிருந்த இஸ்ராயேல் இனத்தவர் கடவுளுடைய மக்களென தேர்ந்தெடுக்கப்படுதல், அவர்கள் குடியேறிய நாட்டில் துன்புறுத்தப்பட்டு, கடவுளால் மீட்கப்பட்டு, அவர்களுக்கென இறைவனால் வாக்களிக்கப்பட்ட நாட்டுக்கு மோயீசன் தலைமையில் பயணமாய் புறப்பட்டு செல்வது (இதைத்தான் Ten Commandments என்ற ங்கிலப் படத்தில் இயக்குனர் செசில் பி. டிமெல் மிக தத்ரூபமாக எடுத்திருந்தார்) அதற்கடுத்த யாத்திராகமம். ஆகமம் என்றால் மத ஆசாரத்துடன் புனிதமென கருதப்படும் நூல்கள் எனலாம்.

  அதைத் தொடர்ந்து சுமார் 42 ஆகமங்களில்  யூத மக்களை ஆண்ட சவுல், சாமுவேல், தாவீது, எனும் அரசர்கள், அவர்கள் ஆட்சிக் காலத்தில் யூத மக்களிடையே தோன்றிய பல தீர்க்கதரிசிகள், இறைவாக்கினர்கள் என இறைமகன் எனப்படும் இயேசுபிரான் பிறப்புவரை நடந்தவை யாவும் எழுதப்பட்டுள்ளன..

  புதிய வேதாகமம்

  இயேசுபிரானின் பன்னிரு சீடர்களாக அவருடன் இருந்த மத்தேயு, அருளப்பர், மற்றும் சீடர்களில் இயேசுபிரானால் தலைவராக தெரிந்துக் கொள்ளப்பட்ட சீமோன் எனும் இராயப்பரின் சீடரான புனித மாற்கு, இறுதியாக யூத குலத்தைச் சாராமல் பிறகு மனந்திரும்பி பவுல் எனப்படும் புனித சின்னப்பருடன் (இவரும் மனந்திரும்பியவர்தான்) வேதாகமப் பணியில் ஈடுபட்ட  புனித லூக்காஸ் ஆகிய நால்வர் தனித்தனியாக எழுதி நான்கு முக்கிய புத்தகங்களைக் கொண்டதுதான் புதிய வேதாகமம்!

  அத்துடன் இயேசுபிரான் உய்ர்த்தெழுந்து வின்னகம் சென்றபின் ஆரம்பகால கிறிஸ்துவர்களின் வாழ்க்கைமுறை (இவர்கள் கிறிஸ்துவர்கள் என பெயரிடப்பட்டதும் இக்காலகட்டத்தில்தான்) அவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் எழுதிய கடிதங்கள்.. இறுதியில் யோவான் எனப்படும் அருளப்பர் எழுதிய உலகின் இறுதிநாட்கள் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி சூசகமாக தெரிவித்தவை என்பவையும் அடங்கியுள்ளன..

  பழைய வேதாகமம், புதிய வேதாகமம் ஆகிய இரு பாகங்களிலும் இருப்பதையெல்லாம் எழுதுவதென்பதல்ல என் நோக்கம்..

  இவற்றில் கூறப்பட்டுள்ளவற்றை இணைத்து இறைவன் நம்முடைய நன்மைக்காக கூறப்பட்டுள்ளவற்றை தினமொரு சிந்தனையாக சுருக்கமாக, எளிய நடையில் எழுத வேண்டும் என்பதுதான் என் ஆவல்.

  தினமும் எழுத முடியாவிட்டாலும் வாரத்தில், அதாவது திங்கள், புதன், வெள்ளி என மூன்று நாட்கள் எழுதலாம் என்றிருக்கிறேன்.

  அன்புடன்,
  டிபிர். ஜோச·ப்