Saturday, December 30, 2006

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

‘ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் நம்முடைய கணக்குப் புத்தகங்களை சரிபார்ப்பது போலவே நம்முடைய உள்ளத்தையும் ஆராய்ந்து பார்ப்போம். எதிர் வரும் புத்தாண்டுக்கு நம்மை நாமே தயார் செய்துக்கொள்வோம்.’

நம் அலுவலகங்களைப் பொருத்தவரை இன்று ஆண்டின் இறுதி வேலைநாள்.

முன்பெல்லாம் வங்கிகளின் கணக்குகளை முடிக்கும் நாளாகவும் இந்நாள் இருந்தது. அப்போதெல்லாம் வருட இறுதி வேலை நாளன்று வீடு திரும்பவே நள்ளிரவைக் கடந்துவிடும். பத்தாண்டுகளுக்கு முன் நிதியாண்டை ஏப்ரல் முதல் மார்ச் வரை என்று மாற்றிய பிறகு டிசம்பர் மாத இறுதி வேலை நாள் ஒரு சாதாரண வேலை நாள் போலாகிவிட்டது.

என்னுடைய வங்கியில் ஆண்டின் இறுதி வேலைநாளன்று வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வைப்புக் கணக்குகளுக்கும், வழங்கப்பட்டிருந்த கடன் கணக்குகளுக்கும் கொடுக்க வேண்டிய, வரவு வைக்கப்பட வேண்டிய வட்டியைக் கணக்கிடுவது. மொத்த வருமானத்திலிருந்து வர்த்தகத்தை நடத்திச் செல்ல எத்தனை செலவழித்திருக்கிறோம் என்பதைக் கணக்கிட்டு என்னுடைய கிளையின் நிகர லாபம் என்ன என்பதை கணக்கிட்டு முடிக்கும் நேரத்தில் சில சமயம் மகிழ்ச்சியாகவும் சில சமயம் கவலையாகவும் இருக்கும்.

சில மேலாளர்களுக்கு பாராட்டும் சிலருக்கு ஏச்சும் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும்.

அதுபோலவே நம்முடைய சொந்த வாழ்க்கையையும் ஆராய்ந்து பார்க்க வேண்டிய நாள் இது.

இன்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் இவை:

1. எனக்கு நானே உண்மையாக இருந்திருக்கிறேனா?

2. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் இவர்களுக்கு உண்மையாக இருந்திருக்கிறேனா?

3. நான் கடமைப்பட்டவர்களிடத்தில் - பெற்றோர், மனைவி - மக்கள், நண்பர்கள் – விசுவாசமாக, நன்றியுள்ளவனாக இருந்திருக்கிறேனா?

4. உண்மைக்கு புறம்பாக பேசி பிறரை வஞ்சித்திருக்கிறேனா?

5. வேண்டுமே தெரிந்தும் பிறர் மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறேனா (Character assassination)?

6. பேராசை, அழுக்காறு கொண்டிருக்கிறேனா?

இன்னும் இதுபோன்ற எத்தனை கேள்விகளை வேண்டுமானாலும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ளலாம்.

நாம் புனிதர்கள் அல்ல. சாதாரண மனிதர்கள்.

ஒரு மனிதனுக்கு இயற்கையாகவே ஏற்படும் சபலம், சலனம், சஞ்சலம் எல்லாவற்றிற்கும் அடிமையானவர்கள் நாம்.

சோதனைகள் நிறைந்த இவ்வுலகில் இவற்றை முற்றிலுமாக விலக்கி வைக்க எந்த ஞானியாலும் இயலாது என்பதும் நமக்குத் தெரியும்.

இக்கேள்விகளுக்கு நம்மிடமிருந்து எத்தகைய பதில் வரவேண்டுமென்றோ அல்லது சரியாக வரும் பதில்களுக்கு இத்தனை மதிப்பெண், தவறான பதில்களுக்கு இத்தனை எதிர்மறை மதிப்பெண் (Negative marks) இரண்டையும் கூட்டிக் கழித்து பார்த்து இத்தனை மதிப்பெண் வந்தால் நான் நல்லவன்.. இல்லையென்றால்..

இதுவல்ல நாம் செய்ய வேண்டியது..

நம்முடைய பதில்கள் எதுவாக இருப்பினும் நம்முடைய த்ம சோதனையில் நாம் உண்மையாக இருந்தால் போதும்..

நாம் யாராக இருந்தோம், நாம் யாராக இருக்க வேண்டும் என்பது நமக்கு தெளிவாகிவிடும்.

கடந்த ஆண்டில் நாம் வாழ்ந்த வாழ்க்கையில் நமக்கு திருப்தி உண்டென்றால் அப்படியே தொடர்ந்து இருப்போம்.

இல்லையென்றால் நம்மை திருத்திக்கொள்ள முயல்வோம்.

மலரும் புத்தாண்டு நம் அனைவருடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வெற்றிகளையும் வாரி வழங்க வேண்டும் பிரார்த்திக்கிறேன்..

*****

Thursday, December 28, 2006

பணியில் சேர ஜாதகம் தேவை!!

வேலைக்கொரு ஜாதகம்!


இன்றைய ஃபைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வந்திருந்த இந்த தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ வேடிக்கைக்காக கொடுத்த தலைப்பு என்று நினைத்தேன்.

Your horoscope holds the key to a plum job!

ஆனால் கட்டுரையைப் படித்துமுடித்ததும்தான் விளங்கியது இது வெறும் வேடிக்கைக்காக எழுதப்பட்டத்தல்ல என்பது.

இதை முழுவதும் படிக்க இங்கு

http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=150118
செல்லுங்கள்.

இதைப் படித்து முடித்ததும் என் உள்ளத்தில் எழுந்த வினாக்கள் இவை:

சாதாரணமாக முதல் தர நிறுவனங்களில் பணிக்கு அமர்த்த எழுத்துத் தேர்வு (Written Exam), குழு உரையாடல் (GD), தொழில் சம்பந்தப்பட்ட மற்றும் மனித வள நேர்காணல் (Technical and HR Interview) என மூன்று சுற்றுகள் நடத்தப்படுகின்றன. இனி ஜாதக பொருத்தம் என்ற நான்காவது சுற்றும் இருக்குமோ?

இந்த கேள்விக்கு ஆம் என்பது பதிலானால்..

எனக்கு தெரிந்தவரை இந்துக்கள் அல்லாதவர்கள் ஜாதகம் கணிப்பதில்லை. ஒருவேளை அவர்கள் இந்த சுற்றுக்கு தகுதி பெற மாட்டார்களோ?

அதுவரை எல்லா சுற்றுகளிலும் முதலாவதாக வந்தவருடைய ஜாதகம் சரியில்லை என்றால் அவர் நிராகரிக்கப்படுவாரோ?

சரி. நான்காவது சுற்றில் கலந்துக்கொள்ளும் ஜாதகம் யாருடைய ஜாதகத்துடன் பொருந்த வேண்டியிருக்கும்? நிறுவனத்துடனா? அப்படியொரு ஜாதகம் இருக்குமா? அல்லது அதன் முதல்வர் அல்லது மூத்த பங்குதாரர் இவர்களுடைய ஜாதகத்துடனா?

இன்னுமொரு கேள்வி. ஜாதகப் பொருத்தத்தை சரிவர கணிப்பதற்கு எல்லோரும் ஒத்துக்கொள்ளக் கூடிய தரத்தில் ஒரு கருவி அல்லது முறை வகுக்கப்பட்டுள்ளதா என்ன?

எங்களுடைய வங்கியில் கடன் பெற வருபவர்கள் வங்கிகளுக்கு ஒன்று, வரி இலாக்காவிற்கு ஒன்று என இரு வேறு நிதியறிக்கைகளை வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.

அதுபோலவே திருமணத்திற்கு ஒன்று, பணியில் சேர ஒன்று என இரு ஜாதகத்தையும் குழந்தை பிறந்தவுடனே கணித்து வைத்து விட வேண்டும் போலிருக்கிறது!

இப்போதெல்லாம் குழந்தை நல்ல நேரத்தில் பிறந்துவிட வேண்டுமென்பதற்காக சுகப் பிரசவத்தை தவிர்த்து தங்களுக்கு வேண்டிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தைப் பிறக்கச் செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

இந்த ஜாதகப் பொருத்தம் பார்த்து பணிக்கு சேர்க்கும் முறை பிரபலமானால் குழந்தைப்பேறு மருத்துவர்களுக்கு கொண்டாட்டம்தான்..

இது மூடநம்பிக்கையின் உச்சக்கட்டம் என்றல்லாமல் வேறென்ன!

வாழ்க இந்தியா!

*****

Wednesday, December 27, 2006

இன்றைய சாதனை!

‘இன்று ஒன்றும் பெரிதாக சாதிக்க முடியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். இன்று நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் உங்களுடைய அன்பை வெளிப்படுத்துங்கள். அதுவே ஒரு பெரிய வெற்றியை அடைந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கும்.’

சாதனை என்பது தினமும் சாத்தியமல்ல.

தினமும் சாதிக்கக் கூடியது எதுவும் பெரிய சாதனையுமல்ல.

ஆனால் பிறரன்பு அப்படியல்ல.

நம்மை நாமே அன்பு செய்வது பெரிய விஷயமல்ல. அதை ஐந்தறிவு படைத்த விலங்குகளும் செய்கின்றன.

நம்மை நாம் அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டும்!

செய்து பாருங்கள். அது எத்தனை சிரமம் என்பது விளங்கும்.

மனித இயல்புக்கு அப்பாற்பட்ட விஷயம் அது.

நம்மை நம்முடைய எல்லா குறைகளுடனும் நாம் ஏற்றுக்கொள்வதுபோல பிறரையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இயலாத காரியம்தான். ஆனால் முயன்றால் முடியாதது எதுவுமில்லையல்லவா?

ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் பிணைப்பை காதல் என்கிறோம்.

காதலின் அடித்தளமே இந்த பிறரன்புதான்.

இதில் கண்டதும் காதல் சேர்த்தியல்ல. இது கதைகளில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் நடைமுறை வாழ்வில் ஏற்படும் இத்தகைய காதல் நாளடைவில் வெறும் காகிதக் காதலாகிவிட வாய்ப்புண்டு.

இறைவனுக்கு மனிதர்களை இனம் பிரித்து பார்க்க தெரிவதில்லை. சாதி, மதம், மொழி, நிறம் இவை எவற்றையுமே பார்க்காமல் அன்பு செய்கிறவர் இறைவன்.

ஆகவேதான் அன்பே உருவானவர் இறைவன் என்கிறோம்.

இறைவனால் இது முடிகிறது. ஏனெனில் அவரே அனைத்தையும் படைத்தவர்.

நம்மால் இது முடிவதில்லை.

முடியாததை செய்து முடிப்பதே ஒரு சாதனைதானே..

பெரிதாய் எதையும் சாதிக்க முடியவில்லையே என வருந்துவதைத் தவிர்த்து இதையாவது சாதிக்க முயல்வோம்!

****


Monday, December 25, 2006

கிறிஸ்த்துமஸ் வாழ்த்துக்கள்!!

கடலைத் தேடி நதிகள் பாயும்,
மலரைத் தேடி வண்டுகள் நாடும்,

இது இயற்கை!

மனிதனைத் தேடி இறைவன் வந்த நாள் இது!!Photobucket - Video and Image Hosting
அனைவருக்கும் கிறிஸ்த்துமஸ் தின வாழ்த்துக்கள்!!!


அன்புடன்,
ஜோசஃப்

Wednesday, December 20, 2006

நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்!

‘நமக்கு நல்லது நடக்கும் சமயங்களில் நாமும் பிறருக்கு அதை செய்ய முயல வேண்டும்.’

தினை விதைத்தவன் தினையையும் வினை விதைத்தவன் வினையையும் அறுவடை செய்வான் என்பதைக் கேட்டிருக்கிறோம்.

நமக்கு நல்லது  நடக்க வேண்டும் என்று  எப்படி விரும்புகிறோமோ அது பிறருக்கும் நடக்க வேண்டும் என்று விரும்ப வேண்டும்.

நாமும் நம்மைச் சார்ந்தவர்கள் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பது போலவே மற்றவர்களும் நினைக்க வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்து போகிறோம்.

இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களை பலரும் இன்றும் பாசத்துடன் நினைவுகூரக் காரணம் அவர் தனக்கு கிடைத்த சன்மானங்களையெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்த அந்த நல்ல உள்ளம்!

இவரைப் போன்று நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதற்கு சான்றாக சான்றோர்கள் பலர் வாழ்ந்த பூமி இது.

நாம் நல்லவற்றையே நினைத்தால் நமக்கும் நல்லது நடக்கும் நம்மால் பிறருக்கும் நல்லவற்றை செய்ய முடியும் என்பதை நம்புகிறவன் நான்.

பிறருடைய நல்லவைகளில், அவர்களுடைய வெற்றியில் நாம் பங்குகொள்கிறோமோ இல்லையோ அதைப் பார்த்து அழுக்காறு கொள்ளாமலாவது இருக்க முயல வேண்டும்.

ஆனால் அதற்கு மேலே ஒரு படி சென்று அவர்களுடைய மகிழ்ச்சியில் கலந்துக்கொள்ள முயன்றால் அதில்தான் மனிதம் முழுமைப் பெறுகிறது.

இப்படிப்பட்டவர்களைத்தான் சரித்திரம் என்றென்றும் நினைவில் கொண்டிருக்கும்.

நல்லதை நினைப்போம், நல்லதையே செய்வோம்.

*****

Monday, December 18, 2006

சாதனை படைப்போம்!!

‘பெரிய சாதனைகளை படைக்க பெரியவர்களாக (வல்லவர்கள்) இருக்க வேண்டும் என்பதல்ல.. பெரியவற்றை சாதிக்க வேண்டுமென்ற எண்ணமுள்ள சிறியவர்களாலும் முடியும்’

‘தம்மை உயர்த்திக்கொள்வோர் தாழ்த்தப்படுவோர். தம்மை தாழ்த்திக்கொள்வோர் உயர்த்தப்படுவோர்’ : இது பைபிள் வாக்கு

இறைவனின் படைப்பிலே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்றில்லை.

அவரவர் சொல், செயல், சிந்தனை இவைகளை வைத்தே ஒருவர் பெரியவரா சிறியவரா என்பதை இவ்வுலகம் கணிக்கின்றது.

ஒருவரை பெரியவர் என்று கணிக்க அவருடைய  பணம், பதவி அல்லது செல்வாக்கு ஆகியவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன என்பதையும் மறுப்பதற்கில்லை.

ஆனால் அத்தகைய கணிப்பு நிரந்தரமானதல்ல என்பதையும் நான் கண்டுணர்ந்திருக்கிறோம்.

இன்று முதல்வராயிருந்தவர் நாளை கைதியாவதும், இன்று கைது செய்யப்படுபவர் நாளை முதல்வராவதும் சரித்திரம்!

சமுதாயத்தின் அடிமட்டத்தில் வறுமையில் உழலும் குடும்பத்திலிருந்து வந்த எத்தனையோ இளைஞர், இளைஞிகள் உலகில் எவரும் கனவிலும் நினைத்துப் பார்க்கவியலாத சாதனைகள¨ நிகழ்த்தியிருப்பதை சமீப காலமாக பல பத்திரிகைகளில் வாசித்திருக்கிறோம்.

சாதனைகளைப் படைப்பதற்கு நாம் பெரியவர்களாக, அதாவது மெத்தப் படித்த மேதைகளாகவோ, அல்லது செல்வாக்குள்ளவர்களாகவோ அல்லது செல்வாக்குள்ளவர்களை பரிச்சயமுள்ளவர்களவோ இருக்க வேண்டும் என்பது அவசியமல்ல என்பதை இவை நிரூபித்துள்ளன.

சாதனைகளைப் படைக்க நம்முடைய சமுதாய மற்றும் பொருளாதார நிலை ஒரு பொருட்டே இல்லை.

சாதனைகளைப் படைக்க அதை படைக்க வேண்டுமென்ற எண்ணம், நம்மால் அதை அடைய முடியும் என்ற ஒரு முழுமையான ஈடுபாடு இருந்தாலே போதும்.

சாதனைகள் நம் காலடியில் வந்து விழும் என்பது நிச்சயம்!

சாதனைகள் படைக்க சந்திரனை எட்டிப் பிடிக்க வேண்டுமென்பதில்லை.

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நம்மால் எட்ட முடியாதவற்றை எட்டிப்பிடிப்பதும் சாதனைதான்.

சாதனை படைப்போர் புது சரித்திரத்தையே எழுதுபவர்கள் என்பதை மறக்கலாகாது..

வாருங்கள். புது சாதனை படைப்போம், புது சரித்திரம் எழுதுவோம்!!

****Friday, December 15, 2006

குழந்தைகளாய் மீண்டும் பிறப்போம்!

‘பிறர் மீது நம்பிக்கை வைப்பது, முழுமையான, எந்த நிபந்தனைகளும் இல்லாத அன்பு, மற்றும் மகிழ்ச்சி இவைகளில் குழைந்தகைளைப் போலவும் அனுபவம், பிறர் சிநேகம் மற்றும் விவேகம் இவற்றில் பெரியவர்களாகவும் இருப்போம்.’

நமக்கு பல உருவங்கள் உண்டு.

என்னுடைய குடும்பத்தினருக்கு பாசமுள்ள தலைவனாக, என் நண்பர்களுக்கு நல்லதொரு நண்பனாக, என்னுடைய அலுவலகத்தில் எனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு நல்ல பொறுப்புள்ள அதிகாரியாக, என் சக அதிகாரிகள் மத்தியில் நம்பிக்கையுள்ளவனாக, என்னுடைய மேலதிகாரிகளுக்கு நல்ல பணிவுள்ள ஊழியனாக, சமுதாயத்தில் சட்டத்தைக் கடைபிடிக்கும் நல்ல குடிமகனாக என பல உருவங்கள், பல முகங்கள் எனக்கு இருக்கின்றன.

இது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

நேரம், காலம், இடம் இவற்றிற்கேற்றார்போல் நம்முடைய நடத்தை, பேச்சு, குணாதிசயங்கள் ஆகியவை மாற வேண்டும்.

இல்லையேல் ஆங்கிலத்தில் சொல்வதுபோல சமுதாயத்தில் நாம் ஒரு misfit ஆகக் கருதப்பட்டுவிடுவோம்.

நான் என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன், நான் செல்கின்ற பாதையில்தான் செல்வேன் என்று பிடிவாதத்துடன் செயல்பட்டால் நமக்கு மட்டுமல்ல நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பிரச்சினைதான்.

நம்முடைய குழந்தைகளைப் பாருங்கள்.

எந்த சூழலுக்கும் சட்டென்று தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தியைப் போல தங்களை flexible ஆக வைத்துக்கொள்வது குழந்தைகளுக்கு கைவந்த கலை.

அவர்களால் மட்டும் எப்படி முடிகிறது?

தங்களை சுற்றியுள்ள் எவரையும் எளிதில் நம்பிவிடும் வெள்ளை மனம், எந்த எதிர்பார்ப்புமில்லாத அன்பு, தொட்டதற்கெல்லாம் மகிழ்ச்சியடையும் உள்ளம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என தரம் பிரிக்கத் தெரியாத பார்வை இவைதான் குழந்தைகள் தங்களை எந்த சூழலிலும் ஒன்றிப்போய்விட உதவுகிறது.

நாம் வளர்ந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் சமயங்களிலெல்லாம் நானா, நானா இப்படியெல்லாம் இருந்தேன் என்றும் அந்த நாள் மீண்டும் திரும்பி வராதா என்றும் ஏங்குகிறோமே, ஏன்?

அந்த நாட்களில் நாம் எவ்வித கவலையும் இல்லாமல் இருந்தோம் என்பதால்தானே..

நாம் கடந்து வந்த பாதையில் நாம் சந்தித்த நபர்கள், நமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியான, கசப்பான அனுபவங்கள், வெற்றி தோல்விகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள்..

இவற்றிலிருந்து நாம் கற்று தெளிந்தது என்ன?

நம்முடைய நிழல் மீதே அவநம்பிக்கை, நம் உடன்பிறப்புகளின் மீதே பொறாமை, ஏன், நம்மில் சிலருக்கு நம்முடைய பிறப்புகளிடமே பொறாமை, எதிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடிக்கும் அபார திறமை.

நம்முடைய கடந்த கால அனுபவங்கள் நம்மை எதையும் மன முதிர்ச்சியுடனும் விவேகத்துடனும் எதிர்கொள்ளும் முழு மனிதர்களாக மாற்றியிருக்கிறதா? நம்முடைய குழந்தைப் பருவத்து குணங்களை இழந்துவிடாமல் இப்போதும் கொண்டிருக்கிறோமா?

நம்மை நாமே சோதித்துப் பார்ப்போம்..

****

Thursday, December 14, 2006

ஆக்கபூர்வமான அறிவு!

‘அறிவை (Knowledge) வளர்த்துக்கொள்வது நம்முடைய நோக்கத்தை அடைய உதவும் பாதை மட்டுமே. அதுவே நம்முடைய நோக்கமல்ல. நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் பாதையாகவும் மாறிவிடக்கூடும்’

மனித படைப்பிலே மிகவும் அற்புதமானது மனிதனுடைய மூளை.

அது நம் எல்லோருக்குமே பொதுவானது, அதாவது அளவைப் பொருத்தவரை.

ஆனால் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறோம்.

ஆயிரம் மனிதர்கள் ஒன்று சேர்ந்து சாதிப்பதைவிட பன்மடங்கு ஒரு இயந்திர மனிதனால் (Robot) சாதித்துவிட முடியும் என்பதை மனிதன் நிரூபித்திருக்கிறான். ஏனெனில் அதன் கர்த்தா மனிதன்!

மனித மூளையில் இத்தனை விஷயத்தைத்தான் சேமித்து வைக்க முடியும் என்ற எல்லையை இதுவரை எவரும் கண்டறிந்ததில்லை. இத்தனை கிலோ பைட்ஸ் விவரங்களை மட்டுமே சேமித்து வைக்க முடியும் என்ற எவ்வித எல்லையும் இல்லை.

ஆனால் மனிதன் சேகரித்து வைக்கும் இத்தகைய அறிவு (விஷய ஞானம்) மட்டுமே ஒரு மனிதனை அறிவாளியாக்கிவிட முடியாது.

ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானிக்கு நிகராக விஷய ஞானமுள்ள தீவிரவாதியையும் இன்றைய உலகில் நம்மால் ஒருசேர பார்க்க முடிகிறது.

எத்தனை பாதுக்காப்புகள் நிறைந்த மென்பொருளை ஒரு ஆக்கபூர்வமான மென்பொருள் பொறியாளன் கண்டுபிடித்தாலும் அடுத்த நிமிடமே அதை ஊடுருவி நாசப்படுத்தக்கூடிய கிருமியையும் கண்டுபிடித்துவிடுகிறான் அவனுக்கு நிகரான அல்லது அவனை விடவும் விஷய ஞானமுள்ள, ஆற்றல்படைத்த வேறொரு பொறியாளன்!

இருவருமே ஒரே அளவுள்ள மூளையைக் கொண்டவர்கள்தான். ஒருவேளை ஒரே பல்கலைக்கழகத்தில் ஏன் ஒரே ஆசிரியரிடம் பயின்ற மாணவர்களாகக் கூட இருக்கலாம்.

தான் சேகரித்து வைத்த சேமிப்பை அது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும் அல்லது இவை இரண்டையும் பெருமளவில் ஈட்டக் கூடிய விஷய ஞானமாக இருந்தாலும் அதை எந்த நோக்கத்திற்கு பயன்படுத்துகிறான் என்பதில்தான் மனிதன் வேறுபடுகிறான்.

ஏவுகணை தயாரிப்பில் பயிற்சி பெறும் ஒரு ஆக்கபூர்வமான விஞ்ஞானி தன்னுடைய விஷய ஞானத்தை தன் நாட்டின் பாதுகாப்புக்கு பயன்படுத்துகிறார் என்றால் அதே விஷய ஞானத்தை ஒரு தீவிரவாதி அழிவுக்கு பயன்படுத்துகிறான்.

ஆக்கபூர்வமான நோக்கம் இல்லாத அறிவு அழிவுக்கு இட்டுச் செல்லும் ஒரு கருவி, ஒரு பாதை என்பதில் சந்தேகமேயில்லை.

அறிவை வளர்ப்போம். அதை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவோம்.

*****

Tuesday, December 12, 2006

உதவி கோருவது யாசகம் அல்ல!

‘பிறருதவி என்பது ஒருவழிப்பாதையல்ல’

நாம் செயல்படுத்த நினைத்ததை செயல்படுத்த இயலாமல் தடங்கலையோ, தாமதங்களையோ எதிர்கொள்ளும் நேரங்களில் மற்றவர் உதவியை நாடுவதில் தயக்கம் காட்டலாகாது.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை உள்ளது.

சிலர் சிறுவயது முதலே நினைவாற்றல் உள்ளவர்களாக இருப்பார்கள். சிறிது நேரம் படித்தாலே போதும். அப்படியே மனதில் பதிந்துவிடும். படித்தவற்றை அப்படியே தேர்வில் எழுதி சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுவிடுவர்.

வேறு சிலருக்கு படித்ததையே மீண்டும், மீண்டும் படித்தால்தான் நினைவில் நிற்கும்.

இன்னும் சிலருக்கு எத்தனை முறை படித்தாலும் நினைவில் நிற்கவே நிற்காது.

இது மாணவப் பருவத்தில்.

படிப்பு முடிந்து ஒரு அலுவலில் அமர்ந்தாயிற்று.

சிலர் தங்களுடைய அலுவல்களில் முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுவார்கள்.

அவர்களுக்கு நிகரான அறிவாற்றலும் செயல்திறனும் இருந்தும் சிலருக்கு எத்தனை கடினமாக முயற்சி செய்தாலும் வெற்றி கிடைப்பது அரிதாக இருக்கும். பல தோல்விகளுக்குப் பிறகே வெற்றிக்கனியை அவர்கள் அடையமுடிகிறது.

இன்னும் சிலருக்கோ எத்தனை முயன்றாலும் தாங்கள் நினைத்ததை அடைய முடியாமல் தோல்வியிலேயே முடிவதுண்டு.

இத்தகைய சூழலில் நம்மில் பலரும் இருந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் சாரார், அதாவது முதல் முயற்சியிலேயே வெற்றியடைந்துவிடுபவர்களுடைய அணுகு முறையைக் கூர்ந்து கவனித்தால் அவர்களுடைய வெற்றியின் ரகசியம் நமக்கு தெரியவரும்.

எந்த ஒரு காரியத்திலும் நாம் ஈடுபடுவதற்கு முன் அதை முழுமையாக செய்து முடிக்கக் கூடிய ஆற்றல் நம்மிடம் உள்ளதா என்பதை ஆராய்ந்து தேவைப்பட்டால் நம்முடைய சக அலுவலர்களுடைய உதவியை நாடிப் பெற்றால் வெற்றி நிச்சயம்.

உதவி கோருவதை யாசகம் என்று கருதுபவர்களும் மற்றவர்களிடம் உதவி கேட்டு சென்றால் அவர்களும் பிறகு நம்மிடம் உதவி கேட்டு வந்து நிற்பார்களே என்றும் கருதுபவர்களுமே தங்களுடைய முயற்சிகளில் தேக்கத்தையும், தோல்விகளையும் சந்திக்கிறார்கள் என்பதை நான் என்னுடைய அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன்.

உதவி கேட்டு நிற்பது நம்முடைய கையாலாகாத்தனத்தை மற்றவர்களுக்கு காட்டிவிடுமே என்று ஒருபோதும் சிந்திக்கலாகாது.

ஆனால் ஒன்று. நாம் பிறருக்கு உதவி செய்திருந்தால் மட்டுமே நமக்கு தேவைப்படும் நேரத்தில் மற்றவர்கள் நம்முடைய துணைக்கு வர தயாராயிருப்பார்கள்!

பிறருதவியைக் கோருவதென்பது ஒரு வழிப்பாதையல்ல என்பதையும் நாம் மறந்துவிடலாகாது.

நாம் செய்யும் உதவி நமக்கு தேவைப்படும்போது கேட்காமலே திரும்பி வரும்!

*******


Wednesday, December 06, 2006

குழந்தைக் குறும்பு!

நம்முடைய குழந்தைகளிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

பல சமயங்களில் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிப் போய்விடுவது சகஜம்.

உதாரணத்திற்கு சில:

ஏழு வயது சிறுமி தன்னுடைய தாயின் தலைமுடியில் சில நரைத்திருப்பதைப் பார்க்கிறாள்.

‘என்னம்மா சில முடிங்க மட்டும் நரைச்சிருக்கு?’

‘நீ வம்பு பண்ணும்போதெல்லாம் என்னோட தலைமுடியில ஒன்னு நரைச்சிருது.. அம்மா முடி நரைக்காம இருக்கணும்னா நீ நல்ல பிள்ளையா இருக்கணும்.’

சிறுமி சிறிது நேரம் தன்னுடைய தாயின் பதிலை அசைபோடுகிறாள். ‘ஓ! அதான் பாட்டியோட தலை சுத்தமா நரைச்சிருச்சா?’

***

டீச்சர்: திமிங்கிலம் பார்ப்பதற்கு பெரிசா இருந்தாலும் அதோட தொண்டை மிகவும் குறுகலானது. ஆகவே அது நம்மை விழுங்காது.

சிறுமி: டீச்சர்,  ஜோனாவை திமிங்கிலம் முழுங்கி வயித்துக்குள்ள மூனு நாள் வச்சிருந்து வெளியே துப்பிருச்சாமே.. எங்க சண்டே பைபிள் க்ளாஸ்ல சொல்லியிருக்காங்க.

டீச்சர்: (எரிச்சலுடன்): அதெல்லாம் இருக்காது.

சிறுமி: அப்படியா? நா மோட்சத்துக்கு போறப்போ அவரையே கேக்கப் போறேன்.

டீச்சர்: அவர் நரகத்துக்கு போயிருந்தா?

சிறுமி: அப்ப நீங்க கேளுங்க.

****

ஒரு LKG வகுப்பில் சிறுமிகள் மும்முரமாக வரைந்துக்கொண்டிருக்கின்றனர்.

டீச்சர்: என்னம்மா வரையறே?

சிறுமி: கடவுள்!

டீச்சர்: யாருக்குமே கடவுள் எப்படி இருப்பாருன்னு தெரியாதே.

சிறுமி: இன்னும் ஒரு நிமிஷத்துல தெரிஞ்சுரும்.

****

ஒரு வகுப்பிலுள்ள சிறுமிகளின் கூட்டு புகைப்படத்தின் (Group Photo) நகலை வாங்குவதற்கு அவர்களைத் தூண்டும் நோக்கத்துடன்:

டீச்சர்: நீங்க வளர்ந்து பெரியவங்களானதுக்கப்புறம் இதுலருக்கற ஒவ்வொருத்தரையா காமிச்சி இது மீனா.. இப்ப இவ பெரிய டாக்டர். இது லீனா இது பெரிய வக்கீல்னு சொல்லலாமீல்ல?’

வகுப்பின் பின்னாலிருந்து ஒரு சின்ன குரல்: இது எங்க டீச்சர். செத்துப் போய்ட்டாங்க. இப்படியும் சொல்லலாம்.

******

ஒரு வகுப்பில் ரத்த ஓட்டத்தைப் பற்றிய பாடம் நடத்தும்..

டீச்சர்: இங்க பாருங்க.. நா தலைகீழா நிக்கப் போறேன். என் உடம்புலருக்கற ரத்தம் முழுசும் என் தலையில இறங்கி முகம் முழுசும் சிவக்கப் போவுது.

சிறுமிகள்: ஆமாம் டீச்சர்!

டீச்சர்: இப்ப சொல்லுங்க. நாம நேரா நிக்கறப்போ ஏன் ரத்தம் முழுசும் காலுக்குள்ள இறங்க மாட்டேங்குது?

சிறுமி: ஏன்னா ஒங்க கால்ங்க காலியாயில்லையே!

******

ஒரு வகுப்பிலுள்ள குழந்தைகள் உணவகம் ஒன்றில் வரிசையில் நிற்கின்றன. அவர்களை அழைத்துச் சென்ற கன்னியர்களுள் ஒருவர்..

பிள்ளைங்களா.. இங்கருக்கற ஆப்பிள்கள்ல ஆளுக்கு ஒன்னுதான் எடுக்கணும்.. கடவுள் பாத்துக்கிட்டிருக்கார். மறந்துராதீங்க.

உணவகத்தின் மறுகோடியில் ஒரு இடத்தில் சாக்லேட் வைக்கப்பட்டிருந்தது. அதன் முன் சிறுமி அவசரமாக எழுதி வைத்திருந்த வாக்கியம்: ‘எவ்வளவு வேணும்னாலும் எடுத்துக்கலாம். ஏன்னா கடவுள் அங்க ஆப்பிள பாத்துக்கிட்டிருக்கார்.’

***

Monday, December 04, 2006

மகிழ்ச்சியும் உற்சாகமும்..

‘நாம் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்க வேண்டுமென்றால் அதை மற்றவர்களுக்கு உணர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும் நம்முடைய நடவடிக்கைகள். அப்போதுதான் நாமும் உண்மையில் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருக்கவியலும்.’

நான் உள்ளூர உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறிவிட்டு நம்முடைய கிரிக்கெட் வீரர்கள் தலையைத் தொங்க போட்டுக்கொண்டு மைதானத்தில் காட்சியளிப்பதைப் போல நடந்தால் யார் அதை நம்புவார்கள்?

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது எத்தனை உண்மை!

மகிழ்ச்சி உள்ளத்தில் இருந்தால் அது நிச்சயம் நம்முடைய பிரகாசமான முகத்தில் தெரியும்.

துக்கத்தை வேண்டுமானாலும் மறைத்துவிடலாம். ஆனால் மகிழ்ச்சியை நம்மால் மறைக்க முடியாது.

துக்கம் பகிரப் பகிர குறையும்.. மாறாக மகிழ்ச்சி பலுகிப் பெருகும்.

மற்றவர்களுடன் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொள்ள அதை நம்முடைய முகத்தைத் தவிர வேறு எதில் காட்டமுடியும்?

உற்சாகமும் அப்படித்தான். அது ஒரு தொற்று நோய் போல என்றாலும் மிகையாகாது.

நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ளும் அனைவரையும் நம்முடைய மகிழ்ச்சியும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும், பாதிக்கும்..

நாம் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறோமோ அதுபோலத்தான் நாமும் ஒரு நாள் ஆவோம் என்பது உண்மைதானே..

நான் இன்று செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெற்றியடையப் போகிறேன் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும்.

நம்மையுமறியாமலே நாம் இன்று செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலிலும் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் ஈடுபடுவோம்.

உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும் நாம் செய்யும் எந்த ஒரு செயலாவது தோல்வியில் முடியுமா?

வெற்றியில் முடியும் எந்த ஒரு செயலும் நமக்கு மகிழ்ச்சியை அளிக்காது இருக்கவியலுமா?

ஒவ்வொரு நாளையும் நம்பிக்கையான, மகிழ்ச்சியான, உற்சாகமான சிந்தனைகளுடன் துவக்குவோமானால் அந்த நாள் மிக மகிழ்ச்சியான நாளாக முடியும் என்பதில் சந்தேகமேயில்லை..

இது நான் என் அனுபவத்தில் கண்டுணர்ந்த உண்மை..

என்னுடைய அலுவலக அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புவோர் என் உலகத்திற்கு வருமாறு அழைக்கிறேன்: http://ennulagam.blogspot.com/2006/12/ii-1.html

***Friday, December 01, 2006

முயற்சி திருவினையாக்கும்!

‘நாம் எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த முயற்சி செய்தால் மட்டுமே அது நம்மால் இயலுமா, இயலாதா என்பது நமக்கே தெரியவரும்.’

இயலாமை என்று ஒன்றும் இல்லை.

பள்ளிப் பயிலும் சிறுவனுக்கு இரு சக்கர சைக்கிள் ஓட்டுவது மலைப்பாகத்தான் தோன்றுகிறது.

ஆனால் தந்தையின் உதவியுடன் தட்டுத் தடுமாறி பயிலும்போது பலமுறை விழுந்து, சிறாய்ப்புக் காயங்களுக்கு ஆளாகி நாளடைவில் சில்லென்று காற்று முகத்தில் வீச தன்னுடைய நண்பர்கள் முன்னிலையில் ஹாண்டில்பாரிலிருந்த கைகளையும் எடுத்துவிட்டு ஜாலவித்தைக் காட்டுகையில் மனதில் தோன்றும் மகிழ்ச்சி!

அதற்கு ஈடு இணை உண்டா என்ன?

அதை செயல்படுத்த அச்சிறுவன் எடுத்துக்கொண்ட முயற்சிகளில் சந்திக்க வேண்டிய தோல்விகளையும் வேதனைகளையும் முன்கூட்டியே சிந்தித்துப் பார்த்திருந்தால் அவனால் அதில் இறங்கியிருக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே..

ஆனால் நம்முடைய வயதும் படிப்பும் அளித்திருக்கும் இந்த  அனுபவம் சில சமயங்களில் நம்மால் எந்த ஒரு விஷயத்திலும் இறங்குவதற்கு முன்பு அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை எல்லாம் சிந்தித்துப் பார்த்து அதில் நம்மை இறங்கவிடாமலே செய்துவிடுகிறது.

எழுந்து நடந்தால் விழுந்துவிடுவேன் என்று பத்து மாத பாலகனுக்கு தெரியாததால்தானே பல முறை விழுந்தும் எழுந்து நடப்பதில் குறியாயிருக்கிறது?

அதுபோன்ற மனநிலையுடன்தான் நாமும் ஒவ்வொரு விஷயத்திலும் இறங்குகையில் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

ஒரு விஷயத்தை செயல்படுத்த முனைகையில் அது நம்மால் முடியுமா, முடியாதா என்ற கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்வதில் தவறில்லைதான்.

ஆனால் முடியாது என்று நம்முடைய உள்ளுணர்வு கூறுமானால் அதை உடனே ஏற்றுக்கொண்டு நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வரலாகாது.

ஏன் முடியாது என்ற எதிர்கேள்வியையும் நம்மை நாமே கேட்டு அதற்கு நம்முடைய பகுத்தறிவு கூறும் காரணங்கள் என்னென்ன என்பதை அமர்ந்து ஆராய்ந்து அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்பதைக் கண்டுணரவேண்டும்.

அப்போதுதான் நம்முடைய முயற்சி வெற்றியைத் தரும்..

சரி.. அப்படியே நம்முடைய முயற்சி தோல்வியில் முடிந்தாலும் சோர்வடையாமல் மீண்டும் அமர்ந்து நம்முடைய முயற்சி ஏன் தோல்வியில் முடிந்தது என்பதை அலசி ஆராய தயக்கம் காட்டக்கூடாது.

இன்றைய தோல்வியில் நாளைய வெற்றி உதயமாகலாம் அல்லவா?

********

Wednesday, November 29, 2006

நம்முடைய அனுபவங்கள்!

‘நம்முடைய ஒவ்வொரு அனுபவமும் நம்மை வலுவுள்ளவர்களாக மாற்றுகின்றது என்பதை மறக்கலாகாது’

நெடுஞ்சாலை ஓரங்களில் காணப்படும் மைல் கற்களைப் போன்றவைதான் நம்முடைய அனுபவங்களும்.

நம்முடைய வாழ்க்கையும் ஒருவகையில் ஒரு நெடுந்தூரப் பயணம்தானே!

நம்முடைய நெடுந்தூரப் பயணங்களில் சாலையில் ஒவ்வொரு மைல் கல்லையும் கடக்கும் போது நாம் அடையவிருக்கும் இடத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்கின்ற உவகை நம்மை மேலும் உற்சாகப் படுத்துகிறது அல்லவா?

இது ஒரு பார்வை.

ஆனால் சிலருக்கோ ச்சே.. இன்னும் இத்தனை தூரம் பயணம் செய்ய வேண்டுமா? எப்போதுதான் இப்பயணம் முடிவுக்கு வருமோ என்றும் தோன்றக்கூடும்.

இதுவும் ஒரு பார்வைதான்.

அதுபோலவேதான் நம்முடைய அனுபவங்களும்.

அது வெற்றியில் முடிந்தாலும் தோல்வியில் முடிந்தாலும் நமக்குக் கிடைக்கும் அனுபவங்கள் நம்மை வலுவிழக்கச் செய்யலாகாது. மாறாக நம்முடைய மன உறுதியை மேலும் வலுவுள்ளதாக்கி நம்முடைய நெடு நோக்கு பார்வையை மேலும் கூர்மையானதாக்க வேண்டும்.

என்னுடைய வாழ்க்கையில் நான் இதை அனுபவித்து அறிந்ததால்தான் என்னால் இத்தனை உறுதியாகக் கூற முடிகிறது.

என்னுடைய ஐம்பதாவது வயதில் என்னுடைய வங்கியின் புதிதாகத் துவக்கப்பட்ட கணினி இலாக்காவை தலைமையேற்று நடத்த நியமிக்கப்பட்ட போது எனக்கு மிகவும் மலைப்பாக இருந்தது.

நானோ வெறும் காமர்ஸ் பட்டம் பெற்று முழுக்க முழுக்க வங்கி அதிகாரியாக சுமார் இருபத்தைந்து ஆண்டு காலம் பணிபுரிந்தவன். நானாக ஒரு கணினியை வாங்கி அத்துடன் கையில் கிடைத்த புத்தகங்களையெல்லாம் வாங்கி எனக்கு நானே ஆசிரியனாக இருந்து அதை ஒருவாறு இயக்க அறிந்திருந்தவன். ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதே என்றுதான் இருந்தது என் சிந்தனை அப்போது.

ஆரம்பகாலத்தில் நான் சந்தித்தது எல்லாமே கசப்பான அனுபவங்களதான். என்னால் புரிந்துக்கொள்ள முடியாததெல்லாம் தவறானவை என்று எண்ணம் கொண்டிருந்த மேலதிகாரிகளைத் திருப்திப்படுத்த முயன்று சோர்ந்துபோயிருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே சுமார் முப்பது இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து எனக்குக் கீழே பணிக்கு அமர்த்தியபோது அவர்களுக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்றுக்கூட என்னால் தீர்மானிக்க முடியவில்லை.

பிறகு என்னுடன் முன்பு கிளைகளில் பணியாற்றிய இளம் வங்கி அதிகாரிகளுள் சிலபேரை திரட்டி அவர்களுடன் பல வாரங்கள் அமர்ந்து எங்களுடைய வங்கியிலுள்ள நிர்வாக அலுவலகங்களுடைய தினசரி செயல்பாட்டை கணினி மயமாக்குவதென தீர்மானித்து வாரங்கள், மாதங்களாக சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு ஒரு ப்ராஜக்ட் திட்டத்தை முழுமையாக தயாரிக்க முடிந்தது.

இதோ ஐந்தாண்டுகள் உருண்டோடிவிட்டன.

துவக்கத்தில் முப்பது பொறியாளர்களுடன் துவக்கப்பட்ட என்னுடைய இலாக்கா இன்று சுமார் நூறு பேர் கொண்ட இலாக்காவாக, என்னுடைய வங்கியின் மென்பொருள் தேவையில் அறுபது விழுக்காடு வரை நாங்களாக வடிவமைத்து தயாரித்து அளிக்கக் கூடிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதில் என்னுடன் இணைந்து பணிபுரிந்த என்னுடைய இளயை நண்பர்கள துவக்கக் காலத்தில் அவர்களுக்கு கிடைத்த ஏமாற்றங்களையும், சோதனைகளையும் ஒரு படிப்பினையாக எடுத்துக்கொண்டதுதான் காரணம்.

நம்முடைய முயற்சிகள் வெற்றிபெறும் சமயங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியில் தலைகால் தெரியாமல் ஆடுவதும் தோல்வியுறும் சமயங்களில் அதல பாதாளத்துக்கு சென்றுவிடுவதும் நல்லதல்ல.

நம்முடைய அனுபவங்கள் நமக்கு பாடமாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம். அப்போதுதான அவை நம்மை வலுவுள்ளவர்களாக்கும்.

****Tuesday, November 28, 2006

காதலில் நம்பிக்கை அவசியம்!

‘காதலும்  நம்பிக்கையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.’

காதல் என்பது காதலனுக்கும் காதலிக்கும் இடையில் உள்ளது மட்டுமல்ல.

கணவன், மனைவி, தந்தை, மகன்/மகள், நண்பர்கள் என எல்லா உறவுக்குமே காதல் பாலமாக அமைகிறது.

அத்தகைய காதலால் உருவாகும் நட்புக்கும், உறவுக்கும் பரஸ்பர நம்பிக்கை அடித்தளமாக அமைய வேண்டும்.

நம்பிக்கையில்லாத நட்பும் உறவும் வெறும் மேலோட்டமான, உடல் சம்பந்தப்பட்ட, செயற்கையான, உள் நோக்கம் கொண்டதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

மேலை நாடுகளில் ஏன் நம் இந்தியாவிலும் கூட சமீப காலமாக திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட முதன்மைக் காரணமாக இருப்பது இந்த நம்பிக்கையற்றத்தனம்தான் என்றால் மிகையாகாது.

பைபிளில் வருகின்ற ஒரு வாக்கியத்தை இங்கு குறிப்பிடலாம் என்று நினைக்கின்றேன்.

‘மலையை அசைக்கவல்ல நம்பிக்கை இருந்தும் உன்னிடம் அன்பில்லையென்றால் பயனில்லை..’

இது எதைக் காட்டுகிறது?

‘உன் மீது நான் அன்பு கொண்டிருக்கிறேன். ஆனால் உன் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நீ எனக்கு துரோகம் செய்கிறாய் என்று நினைக்கிறேன்.’ என்று காதலன் தன் காதலியிடமோ அல்லது கணவன் தன் மனைவியிடமோ கூறினால் அந்த உறவு நிலைத்திருக்க முடியுமா?

அந்த உறவில் காதல், அன்பு இருக்கத்தான் முடியுமா?

நான் உன்மீது வைத்திருக்கும் காதல் முழுமையானது ஆனால் நம்பிக்கை? அது சந்தர்ப்ப சூழலைப் பொறுத்தது. அப்படியென்றால் அந்த காதலும் அதே சூழலைப் பொறுத்ததுதான் என்று பொருளாகிறது.

நட்பிலும் பரஸ்பர நம்பிக்கை மிகவும் அவசியம்.

ஒரு குடும்பத்தில் அமைதியும், சமாதானமும், சந்தோஷமும் நிலைத்து நிற்க குடும்பத்தினரிடையில் பரஸ்பர நம்பிக்கை எந்த அளவுக்கு அவசியமோ அதே போன்ற ஏன் அதற்கும் மேலான அளவு நம்பிக்கை ஒரு நிறுவனம் சிறப்பாக பரிணமிக்க அவசியமாகிறது.

தனக்குக் கீழே பணிபுரிகிறவர்களுக்கு தேவைப்படும் அதிகாரத்தை வழங்க அவர்களுடைய தலைவருக்கு அவர்கள் மீது முழு நம்பிக்கை மிக, மிக அவசியமல்லவா?

அவர்களை நம்பாமல் முழு அதிகாரத்தையும் தன் வசம் வைத்துக்கொள்ளும் அதிகாரிக்கு எந்த அளவுக்கு ஊழியர்கள் விசுவாசத்துடன் உழைப்பார்கள் என்று நாம் அனுபவித்து உணர்ந்ததுதானே?

‘இந்த காலத்து ஆண் பிள்ளைகளை நம்ப முடியாது. அதனால அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கறதுக்குள்ள அவன் சம்பாத்தியத்துல நமக்குன்னு தேவையானத சேர்த்து வச்சிக்கணும்.’ என்று சிந்திக்கும் பல பெற்றோர்களை திருமணம் முடிந்தவுடன் கைவிட்டு விட்டு செல்லும் பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன்.

‘நான் இப்படி செய்வேன்னு நினைச்சித்தான இதுவரைக்கும் நான் சம்பாதிச்சு குடுத்தத சேர்த்து வச்சிக்கிட்டீங்க? இப்ப அதையே வச்சிக்கிட்டு சந்தோஷமா இருங்க.. நான் எதுக்கு?’ என்று மகன் கேட்டால் அது நியாயந்தானே?

காகித மலர்களில் வாசத்தை எதிர்ப்பார்த்துப் பயனில்லை..

நம்பிக்கையில்லாத உறவுகளும் நாளடைவில் கசங்கி கிழியத்தான் செய்யும்..

*******

Monday, November 27, 2006

மற்றவர்களைப் பற்றி நம் கருத்து

‘மற்றவர்களைப் பற்றி நாம் என்ன நினைத்திருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. நம்மைப் பற்றி அவர்கள் நல்லவிதமாய் நினைக்கவேண்டுமெனில் நாம் அவர்களைப் பற்றி அதே முறையில் நினைக்கவேண்டும்.’

தினை விதைப்பவன் தினையையும் வினை விதைப்பவன் வினையையும் அறுப்பான் என்பது பண்டைய மொழி.

நீ எந்த அளவையால் அளக்கிறாயா அதை அளவையால்தான் உனக்கும் அளக்கப்படும் என்கிறது பைபிள்.

இதை எல்லா சமயங்களுமே வலியுறுத்துவதை நாம் பார்க்கிறோம்.

நான் நல்லவன் என்பது எத்தனை உண்மையோ அதே போன்றுதான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்களும் என்பதை நாம் பல நேரங்களில் உணர்வதில்லை.

நான் மட்டுமே நல்லவன் என்கின்ற மனப்போக்கு நம்மில் பலரிடமும் உள்ளதை நம்முடைய அன்றாட வாழ்விலே பார்க்கிறோம்.

பிறரை அவர்கள் நல்லவர்கள் என்று நிரூபிக்கப்படும் வரை அவர்கள் தீயவர்களே என்ற கண்ணோட்டமும் நம்மில் பலரிடமும் காணப்படுகிறது என்றால் அது மறுக்க முடியாத உண்மை.

The Law treats everyone innocent until proved otherwise. But the law enforcing authorities think otherwise. They feel everyone is guilty until proved otherwise.

சட்டத்தின் பார்வையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படும்வரை நிரபராதிகளே.. ஆனால் அச்சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுடைய பார்வையோ இதற்கு நேர் எதிரானது. அவர்களைப் பொருத்தவரை எல்லோரும் குற்றவாளிகளே அவர்கள் நிரபராதிகள் என நிரூபிக்கப்படும்வரை.

நம்மில் பலரும் பல சமயங்களில் இவ்வாறே நினைக்கிறோம், நடக்கிறோம்.

ஏழை என்றால் அவன் கள்வன், பணம்படைத்தவன் களவில் ஈடுபடமாட்டான் என்பது நாமாகவே கற்பித்துக்கொள்கிறோம்.

களங்கமில்லா மனதுடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை, நம்மைச் சார்ந்திருப்பவர்களைக் காணக் கூடிய மனப்பக்குவம் வரவேண்டும்.

நண்பர்களை, உறவுகளை அவர்களுடைய எல்லா குற்றங்குறைகளுடன் ஏற்றுக்கொள்ள நம்மை நாமே பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எதையும் எதிர்பார்க்காத நட்பிலும் உறவிலும் எவ்வித ஏமாற்றங்களும், அபிப்பிராய பேதங்களும் இருப்பதில்லை.

அப்படிப்பட்ட நட்பும், உறவுமே தலைமுறைக்கும் நீடித்திருக்கும்.

****

Friday, November 24, 2006

Differently abled!

சிங்கத்திற்கு வாலாய் இருப்பதைவிட எலிக்கு தலையாய் இருப்பது மேல்.

என்னுடைய இளைய மகள் சுமார் மூன்று மாத காலமாக சென்னையிலுள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்தார்.

அந்நிறுவனத்தில் அவளுக்கு கிடைத்த சில அனுபவங்கள் அவளுடைய பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையல்ல.

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் அவள் இப்போதெல்லாம் கோபப்படுவதைக் கட்டுப்படுத்த  முயல்வது நன்றாகவே தெரிகிறது.

எனக்கு அது இல்லை இது இல்லை என்று சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் சோர்ந்து போகும் அவள் இப்போதெல்லாம் தனக்கு இருப்பதே அதிகம் என்று சிந்திக்க துவங்கியிருப்பதும் தெரிகிறது.

ஏன்? அப்படியென்ன அனுபவங்கள் என்னுடைய மகளை மாற்றியிருக்க முடியும்?

அவள் பணியாற்றிய அந்த நிறுவனத்தின் சிறப்பம்சம் அங்கு பணிபுரியும் ஊழியர்களில் சுமார் முப்பத்து விழுக்காடு உடல் ஊனமுற்றவர்கள்.

ஆங்கிலத்தில் முன்பெல்லாம் Disabled என்று குறிப்பிடப்பட்ட இவர்களை சமீப காலமாக மிகவும் பொருத்தமாக Differently abled என்று சொல்கிறார்கள்!

ஆம். உடலில் சில ஊனங்களை இவர்களுக்கு கொடுத்த இறைவன் அதனை ஈடுகட்டும் விதமாக அபிரிமிதமான ஆற்றலை அள்ளிக் கொடுத்திருக்கிறான் என்றால் மிகையாகாது.

அவர்களுடன் சேர்ந்து பழகி, பணியாற்றிய என்னுடைய மகளுடைய அனுபவம்தான் அவளை பெருமளவு மாற்றியிருக்கிறது!

அந்நிறுவனத்திற்கு நானும் பலமுறை சென்றிருக்கிறேன். துவக்கத்தில் ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் இத்தகையோர் பலரைப் பார்த்து சற்றே கலக்கமுற்ற எனக்கு இப்போது பழகிப் போனது.

‘அவங்க நம்ம கிட்டருந்து எதிர்பார்க்கிறது அனுதாபத்தையில்லப்பா.. சமமான ட்ரீட்மெண்ட்ட.’ என்பாள் என் மகள்.

உண்மைதான். அங்கீகாரத்தையுமல்ல. சமமான, தோழமையான நட்பை.

‘அவங்களோடல்லாம் நம்மள கம்பேர் பண்ணவே முடியாதுப்பா. அவ்வளவு ஷார்ப் அவங்க. கைவிரல்கள வச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள பேசி, சிரிச்சி, எங்க எல்லாரையும் கலாய்க்கிறப்ப ஆச்சரியமா இருக்கும்ப்பா..’ என்றாள் இன்னொரு நாள்..

உண்மைதான்.. தங்களுடைய நிலையை ஒரு குறையாக நினைக்காமல் அதையே ஒரு வலுவாக மாற்றிக்கொண்டவர்கள் அவர்கள்.

மென்பொருளில் அடிப்படை படிப்பு இல்லாத இத்தகையோர் பலரையும் பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு தேவையான பயிற்சியும் கொடுத்து நல்லதொரு வாழ்க்கையை கொடுத்துள்ள அந்நிறுவனத் தலைவரை எத்தனை போற்றினாலும் தகும்.

அந்நிறுவனத்திலிருந்த ஒருவர் வேறொரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்து சென்று சில நாட்களிலேயே அங்கிருக்க விரும்பாமல் திரும்பி வந்தபோதும் எந்த வருத்தமுமில்லாமல் மீண்டும் பணிக்கு சேர்த்துக்கொண்ட அவரை என்னவென்று சொல்வது?

அப்படித் திரும்பி வந்தவர் கூறிய வார்த்தைகள்தான் இன்றைய சிந்தனையின் கரு: சிங்கத்திற்கு வாலாய் இருப்பதை விட எலிக்கு தலையாய் இருப்பது மேல்!

உண்மைதானே?

அந்நிறுவனத்தில் நம்முடைய தமிழ்மண நண்பர் ஒருவரும் பணியாற்றுகிறார் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியவில்லை!

Thursday, November 23, 2006

வாழ்க்கை லட்சியம்!

‘புலரும் ஒவ்வொரு பொழுதும் நாம் இழந்துவிட்டதை மீண்டும் அடைய ஒரு புது வாய்ப்பு!’

நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம் இருக்கும்.

நம்மில் சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட லட்சியங்களும் இருக்கும்!!

இன்னும் சிலருக்கு லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும்!!

ஒரு குட்டிக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு மூன்று வயது சிறுவனை அவனுடைய தாய் கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார். சிறுவன் மருத்துவரின் அறையை விட்டு வெளியே வந்ததும், ‘அம்மா நான் பெரியவனானதும் கண் டாக்டராகப் போகிறேன்.’ என்கிறான். தாய் தன் மகனுடைய லட்சியத்தை செவியுற்று மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். வருகின்ற வழியில் மாநகரப் பேருந்தில் பயணம் செய்துவிட்டு இறங்கி வீட்டை நோக்கி நடக்கையில் மகன், ‘அம்மா நான் பெரியவனானதும் கண்டக்டராகப் போகிறேன்.’ என்றான்.

நம்முடைய வயதும் அனுபவமும் அதிகரிக்க, அதிகரிக்க, நம்முடைய பார்வையின் கோணமும், ஆழமும் மாறத்தான் செய்கின்றன. இல்லையென்று சொல்வதற்கில்லை.

ஆனால் அந்த மாற்றம் நம்முடைய வாழ்க்கையின் போக்கை அடியோடு புரட்டிப் போட்டுவிட நாம் அனுமதிக்கலாகாது.

கள்வனைப் பார்த்து கள்வனைப் போலானால் என்ன என்றும் காவலனைப் பார்த்து காவலானானால் என்ன என்றும் நினைத்தால் அது ஒன்றுக்கொன்று முரணான பார்வையாகிவிடும்.

நம்முடைய லட்சியம் ஒன்றே ஒன்றுதான்..

அது என்னவென்பதைக் குறித்த காலத்தில் கணித்துக்கொண்டு அந்த இலக்கை நோக்கியே நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வும் அமைய வேண்டும்.

லட்சியத்தையடைய நாம் வகுத்திருக்கும் பாதைகள் மாறலாம், ஆனால் நோக்கம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

நம்முடைய தவறான பாதையால், அணுகு முறையால் தோல்விகளை, சரிவுகளைச் சந்திக்க நேரலாம்.

ஆனால் நம்முடைய லட்சியப்பயணத்தில் சோர்வோ, தயக்கங்களோ அல்லது தடுமாற்றங்களோ இருக்கலாகாது.

இன்று இல்லையேல் நாளை, நாளையில்லையேல் மறுநாள்..

புலரும் ஒவ்வொரு பொழுதும் நமக்கு புதுப்புது வாய்ப்புகளை ஏற்படுத்தும் யுகங்கள் என்பதை நினைவில்கொள்ள வேண்டும்..

புலரும் ஒவ்வொரு நாளும் எப்படி மடிகிறதோ அதுபோன்றே தோல்விகளும், சரிவுகளும்..

ஒரு சரிவு முடிவடையும் இடத்திலிருந்து மற்றொரு உயர்வு ஆரம்பமாகிறது என்பதையும் மறக்கலாகாது..

புலரும் ஒவ்வொரு பொழுதும் முந்தைய இரவின் முடிவுதானே!

********

Tuesday, November 21, 2006

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும்!

‘உலகில் வல்லவர்களும் நல்லவர்களும் வாய் மூடி மெளனியாக இருப்பதால்தான் வாய்ச் சவடால் பேர்வழிகளும் தீயவர்களும் பலுகிப் பெருகி வருகிறார்கள்.’

இது இருபத்தியோரு நூற்றாண்டின் நிதர்சனம் என்றால் மிகையாகாது.

இது நம் நாட்டுக்கு மட்டும் பொருத்தமானதல்ல. அகில உலகத்துக்கும் மிகவும் பொருத்தமானது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பது இப்போதெல்லாம் பரவலாகி வருகிறது.

இப்போது வெளிவரும் திரைப்படங்களும் இத்தகையோரைத்தானே வெளிச்சமிட்டு காட்டுகின்றன!

நம்முடைய அலுவலகங்களிலும், சமுதாயத்திலும் இத்தகையோரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் பலுகிக்கொண்டே போகிறது என்றாலும் மிகையாகாது.

வாயுள்ள பிள்ளைதான் பிழைக்கும், அழுகின்ற குழந்தைக்குத்தான் பால் கிடைக்கும் என்பது பண்டைய மொழி.

அதற்கு நம்மைப் பற்றி, நம்முடைய அறிவாற்றலைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நாம்தான் எடுத்துரைக்க வேண்டும், அதை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதும்
நமக்கு தேவையுள்ளதை நாம்தான் கேட்டுப் பெறவேண்டும் நாம் வாய் மூடி மவுனியாக இருந்தால் நம்முடைய தேவைகளை அதிகாரத்திலுள்ளவர்களுக்கு தெரியாமலே போய்விடும் என்பதும்தான் பொருள்.

ஆனால் இவ்விரண்டு பழமொழிகளையும் நன்றாக புரிந்து வைத்துக்கொண்டிருப்பவர்கள் நம்முடைய முன்னோர் எண்ணியிருந்த வல்லவர்களும், நல்லவர்களும் அல்ல..

மாறாக வாய்ச்சவடால் பேர்வழிகளும் தீயவர்களும்தான்.

வாயுள்ள பிள்ளை என்பவன் இன்று உரக்க பேசுபவன் என்றும், தீய வார்த்தகைளை சரமாரியாக உதிர்ப்பவன் என்றும், கைகளில் வாளுடனும், பட்டாக்கத்தியுடனும், உருண்டு திரண்ட சவுக்கு தடிகளுடனும் சாலைகளிலும் சந்தைகளிலும் உலா வருபவன் என்றும் உருபெற்றிருக்கிறான்.

அழுகின்ற குழந்தை என்பவன் இன்று என்ன நல்லது செய்தாலும் போறாது என்ற பேராசை மனப்பான்மையுடன் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று அலைகின்றவனாய் மாறியிருக்கிறான்.

இவ்விரு மனப்பாண்மைக் கொண்டவர்களால் நல்ல திறமை படைத்த, நல்ல மனம் படைத்த வல்லவர்கள், நல்லவர்கள் இன்று சமுதாயத்தில் அடையாளம் தெரியாமல் மறைந்துப் போயிருக்கிறார்கள்.

இத்தைகையோரை இணங்கண்டு வெளிக்கொண்டுவருவதே இன்றைய இளைய சமுதாயத்தின் தலையாயப் பணியாயிருக்க வேண்டும்..

அப்போதும் வீடும், நாடும் ஏன் இவ்வுலகமே உயர்வு பெறும்!

****

Monday, November 20, 2006

நம்மால் முடியும்!

‘நம்மில் பலருடைய வாழ்விலும் ‘முடிக்க முடிந்தது’ என்பதை விட ‘முடித்திருக்க முடியும்’ என்பதுதான் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.’

என்னுடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்க்கிறேன்.

என்னுடைய தகுதிக்கும், திறமைக்கும் உட்பட்ட பல காரியங்களிலும் கூட, அதாவது அவற்றை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய எல்லா வாய்ப்புகளும் எனக்கு கிடைத்தும் கூட ஏதோ ஒரு காரணத்திற்காக அவற்றைத் தவற விட்டிருப்பது இப்போது தெளிவாக தெரிகிறது.

ஏன்?

ஏன் என்று அலசிப் பார்ப்பதை விட அப்படிப்பட்ட சூழலில் நான் இனி என்ன செய்யப் போகிறேன் என்று சிந்திப்பதுதான் இனி அப்படியொரு நிலமை ஏற்படாமலிருக்க சிறந்த வழி என்று எண்ணுகிறேன்.

ஆங்கிலத்தில் also ran, என்பார்களே அதுபோல ஒரு ஓட்டப் பந்தயத்தில் எட்டு பேர் கலந்துக்கொண்டாலும் ஒருவரால் மட்டுமே முதலில் வந்து கோப்பையைத் தட்டிச் செல்ல முடிகிறது.

ஆனால் ஒன்று. Could have run என்பவர்களை விட Also ran என்பவர்கள் எவ்வளவோ மேல்.

என்னால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்க முடியும் என்பவர்கள் வெறும் வாய்ச் சவடால் பேர்வழிகள். நானும் ஓடினேன், அல்லது நானும் முயற்சி செய்தேன் என்பவர்கள் குறைந்த பட்சம் இறுதி போட்டியில் கலந்துக் கொண்டார்கள் என்பதாவது உண்மை..

நம்முடைய வாழ்க்கையையும் திரும்பிப் பார்ப்போம்.

ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கக் கூடிய எத்தனைச் சந்தர்ப்பங்களை நம்முடைய தவறுகளால், அல்லது ஆணவத்தால், அல்லது அளவுகடந்த நம்பிக்கையால் தவற விட்டிருக்கிறோம்.

நம்முடைய விளையாட்டு வீரர்களை, குறிப்பாக நம்முடைய கிரிக்கெட் அணியைக் குறித்து சொல்லக் கேட்டிருக்கிறோம்.. Capable of snatching defeat from the jaws of success என்று..

எளிதில் வெற்றிப் பெறக் கூடிய பல சந்தர்ப்பங்களிலும் அவர்கள் தோல்வியைத் தழுவ என்ன காரணம்?

அளவுகடந்த தன்னம்பிக்கையினாலா, ஆணவத்தாலா அல்லது மனித இயல்பான தவறுகளாலா?

நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவேன் அல்லது வெற்றி பெற்றே தீருவேன் என்ற உறுதியான முடிவுடன் அதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றிற்கெல்லாம் நம்மை நாமே தயாரித்துக்கொண்டு ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்..

நம்முடைய கடந்த கால தோல்விகளுக்கு காரணமாயிருந்தவை எவை என்பதை ஆராய்ந்து அவற்றை நம்மால் இயன்றவரைத் தவிர்த்தாலே போதும் எதிர்வரும் காலத்தில் நாம் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி உறுதி!

********

Saturday, November 18, 2006

அழியா செல்வம்!

‘உலகின் மிகப் பெரிய செல்வந்தனும் ஏழைதான்.. உள்ளத்தில் அன்பு இல்லாவிட்டால்...’

உலகின் செல்வங்கள் உறவைத் தருவதில்லை.

அப்படியே புதிய உறவுகளை ஏற்படுத்தினாலும் அவை நிலைத்து நிற்பதில்லை.

பணம் வந்தால் பத்தும் பறந்துபோகும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை பணம் போனால் பந்துக்களும் பறந்துபோகும் என்பதும்.

பணத்தால் ஏற்படும் பந்தம் பணம் இருக்கும்வரைதான். பாசத்தால் ஏற்படும் பந்தமோ பத்து தலைமுறைக்கும் நிலைத்து நிற்கும்..

‘நீ உலகையே தனதாக்கிக் கொண்டாலும் உன் ஆன்மாவை இழந்துவிட்டால் என்ன பயன்?’ என்றார் கிறித்துவ புனிதர் ஒருவர்.

ஆன்மாவையே இழந்துவிடுவதென்றால் அன்பு இல்லாத, பாவ சிந்தனைகள் நிறைந்த உள்ளம்.. அது இருந்தென்ன பயன்?

ஆணவம் பிடித்த மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?

பிறருடைய வெற்றியைச் சகித்துக்கொள்ள இயலாத ஒரு மனிதனிடத்தில் அன்பை எப்படி எதிர்பார்ப்பது?

பணம் பாதாளம்வரை பாயும் என்பது உண்மைதான்.

அன்பு இல்லாத பணம் படைத்த மனிதன் மரணத்திற்குப் பிறகு செல்லும் இடமும் பாதாளம்தான்.

செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த அன்னைத் திரேசா ஏழை எளியவர்கள் மீது மாளா அன்பு கொண்டிருந்தார்.

அவருடைய ஆசிரமத்தைத் துவங்கிய சமயத்தில் அவரிடம் பணம் இருக்கவில்லை, நிம்மதியாக வசிக்க இடம் இருக்கவில்லை. ஆனால் அவருடைய உள்ளத்தில் அன்பு நிறைந்து வழிந்தது.

அந்த அன்புதான் கொல்கொத்தா வணிகர்கள், செல்வந்தர்கள் ஏன் அவருடைய அலுவலிலே இடைஞ்சலாயிருந்தவர்களுடைய கடின மனதையும் கரைத்தது..

பொருளில்லார்க்கு இல்லை இவ்வையகம் என்றான் வள்ளுவன்..

ஆனால் அன்பில்லார்க்கு இல்லை சொர்க்கம், மறுவாழ்வு!

இதுதான் நிரந்தர உண்மை!

Friday, November 17, 2006

உங்க தயவை விரும்பவில்லை=உதவி!

‘மகிழ்ச்சியோடு நாம் பிறருக்கு செய்யும் உதவி நாம் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத திசையிலிருந்து திரும்பி நம்மிடமே வந்து சேரும்.’

இந்த அவசர உலகத்தில் நம்முடைய தேவைகளையே பூர்த்தி செய்ய நமக்கு அவகாசம் இல்லாதபோது பிறருடைய தேவைகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே?

இது நம்மில் பலரும் கேட்கும் கேள்வி.

ஆனால் அதே சமயம் நமக்கு தேவை என்று தோன்றும்போது நமக்கு தெரிந்தவர், தெரியாதவர் யாராயிருந்தாலும் உதவி கேட்க தயங்குவதில்லை.

அச்சமயங்களில் நாம் உதவி கோரும் நபர் தன்னுடைய இயலாமையை பணிவுடன் தெரிவித்தாலும் அதை நாம் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதில்லை.

அன்றுமுதல் அவரை நம்முடைய ஜன்ம விரோதியாக பாவிக்கத் துவங்கிவிடுகிறோம்.

இது மனித இயல்புதான். இல்லையென்று மறுப்பதற்கில்லை.

இது நம்முடைய சமுதாயத்தில் நான் மிகச் சாதாரணமாக காணும் ஒன்று.

முக்கியமாக சென்னை, மும்பை, கொல்கொத்தா போன்ற பெரு நகரங்களில் ஒரே குடியிருப்பில் வசிக்கும் பல நூறு குடும்பங்கள் தனித்தனி தீவுகளாக வசிப்பதைப் பார்த்திருக்கிறோம்.

நான் தற்போது வசிக்கும் குடியிருப்பிலும் இதே நிலைதான். இந்தியாவிலுள்ள சகல மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றோம். நான் புதிதாக குடியேறிய சமயத்தில் நான் வசிக்கும் தளத்தில் குடியிருந்தவர்களிடம் நானாக வலியச் சென்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்ட போதும் என்னை ஏதோ அயல் கிரகத்திலிருந்து வந்தவனைப் போன்று பார்த்தவர்கள்தான் அதிகம்.

சிரித்துப் பேசினால் எங்கே உதவி கேட்டு வந்து நிற்பாரோ என்ற அச்சம் காரணமாக இருக்கலாம்.

இப்படி செய்பவர்கள் தங்களுக்கும் பிறருடைய உதவி தேவைப்படும் காலம் ஒன்று வரும் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன்.

என்னுடைய குடியிருப்பில் வசித்து வந்த ஒருவருக்கு ஒரு நாள் விடியற்காலையில் மாரடைப்பு ஏற்பட்டு ஒரு கையும் காலும் செயலிழந்துப் போனது. வீட்டில் மனைவியும் அவரும் மட்டுமே. ஒரேயொரு மகள். அண்டை மாநிலத்தில் பணிபுரிகிறார்.

அவருடைய மனைவியே அண்டையில் யாரிடமும் உதவி கோராமல் அப்போலோ மருத்துவமனைக்கு தொலைப்பேசி செய்து அங்கிருந்து ஆம்புலன்ஸ் சயரன் ஒலியுடன் வாசலில் வந்து நின்றபோதுதான் குடியிருப்பிலிருந்த பலருக்கும் தெரியவந்தது.

மருத்துவ மனை ஊழியர்கள் அவரை ஆம்புலன்சில் ஏற்றி புறப்பட்டுச் செல்வதை அடுத்த குடியிருப்பில் குடியிருந்தவர்கள் முதல் ஜன்னல் வழியாக பார்த்தவாறு நின்றிருந்தனரே தவிர யாரும் வெளியில் வந்து என்ன ஏது என்று விசாரிக்க முன் வரவில்லை.

அவரைச் சந்திக்க நானும் என் மனைவியும் மருத்துவமனைக்கு சென்றிருந்தபோதுதான் தெரிந்தது அவருடைய மனைவி, கணவன் வலியால் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

‘ஏன் யாருக்கும் தெரிவிக்காமல் இருந்துவிட்டீர்கள்?’ என்றேன். அதற்கு ‘எதுக்கு சார்? கேட்டாலும் யாரும் உதவி பண்ண வரமாட்டாங்கன்னு தெரியும். அதான் எதுக்குன்னு விட்டுட்டோம்.’

என்னுடைய நீண்ட கால நண்பர், சென்னை வாசி ஒருமுறை வேடிக்கையாகக் கூறினார். ‘சார் இங்க நீங்களா போய் உதவி செஞ்சாக் கூட ஏத்துக்கமாட்டாங்க. இவன் எதுக்கோ அடி போடறான்னு நினைப்பாங்க. இங்க உதவிங்கற வார்த்தைக்கு ஒரு புது அர்த்தம் இருக்கு. அதாவது ங்க யவை விரும்பவில்லை! அதனால நம்ம வேலைய பாத்துக்கிட்டு போறதுதான் சேஃப்.’

என்ன கொடுமை பாருங்கள்!

Thursday, November 16, 2006

புகழ்ச்சியும் இகழ்ச்சியும்!

‘நம்மில் பலரும் புகழில் மட்டுமே பங்குகொள்ள விரும்புகிறோம்.. இகழ்வில் அல்ல.’

எந்த ஒரு செயலிலும் தனி நபராக ஈடுபடுவதைவிட ஒரு குழுவாக பலருடன் இணைந்து ஈடுபடுவது சற்று சிரமம்தான்.

நாம் தனியாக செயல்படுகையில் நம்முடைய மனதில் உருவகப்படுத்தியிருப்பதை அப்படியே செயல் வடிவில் கொண்டு வந்துவிட இயலும். சற்று சிரமம்தான் என்றாலும் அதே குறிக்கோளுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

ஆனால் சில விஷயங்களில் அது இயலாமற் போய்விடுகிறது. குறிப்பாக நம்முடைய அலுவலகங்களில்.

இத்தகைய சூழ்நிலைகளில் குழுவாக செயல்படவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

பலவிதமான பின்னணிகளிலிருந்து வரும் பலதரப்பட்ட குணாதிசயங்களைக் கொண்ட நபர்கள் அடங்கியுள்ள எந்த குழுவிலும் கருத்து பேதங்கள் இருக்கத்தான் செய்யும்.

குழுவினருக்கு முன்னேயுள்ள இலக்கை அடைவதுதான் அனைவருடைய நோக்கமாக இருந்தாலும் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகளில் ஒற்றுமை அல்லது ஒருமித்த கருத்து இருப்பது அபூர்வம்தான்.

குழுவின் ஒட்டுமொத்த செயல்பாடு தோல்வியுறும் நேரத்தில் அதற்கு பொறுப்பேற்க யாருமே முன்வராததை பார்க்கிறோம்.

அதுவே குழுவிலுள்ள வெகு சிலருடைய உழைப்பால் கிடைக்கும் வெற்றியில் பங்குக்கொள்ள குழுவிலுள்ள அனைவருமே முண்டியடிப்பதையும் பார்க்கிறோம்.

தோல்வியில் பங்குபெற விரும்பாத எவருக்கும் வெற்றியில் பங்குபெற உரிமையில்லை.

கடமைகள் இல்லாத பொறுப்புகள் இருக்க முடியாது என்பது எந்த அளவுக்கு உண்மையோ அதுபோலவே தோல்விகளில்லாத வெற்றிகளும் இல்லை என்பதும் சத்தியமான உண்மை.

நாம் அடையும் வெற்றி நம்முடைய உழைப்பால் மட்டும் கிடைத்ததல்ல என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமோ இல்லையோ நாம் அடையும் தோல்விகளுக்கு நாமும் ஒரு காரணம் என்பதை உணர்ந்திருத்தல் மிக அவசியம்.

தோல்விகளால் வரும் இகழ்வை தாங்கிக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே புகழ் தரும் பெருமையில் மயங்கிவிடமாட்டோம்.

பிறர் நம்மைப் புகழும்போது விண்ணுக்கு உயராமலும் இகழப்படும்போது பாதாளம் அளவுக்கு சரியாமலும் இருக்கக் கூடிய வலுவான மனப்பக்குவமும் தன்னால் நமக்கு வந்துவிடும்.

புகழ்ச்சியும் இகழ்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நினைவில்கொள்வோம்!

If we want a share of the fame, we have got to be willing to take a share of the blame as well!
******

Wednesday, November 15, 2006

இளைய தலைமுறை!

‘நம்முடைய குழந்தைகளுக்கு முன்பு நாம் நல்லது செய்தாலும், தீயது செய்தாலும் அது அவர்களுடைய மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.’

எல்லா தலைமுறையினருமே அவர்களுக்கு அடுத்து வரும் தலைமுறையினரைக் குறை கூறுவதிலேயே முனைப்பாயிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

நான் என்னுடைய தாத்தா, தந்தை என்னுடைய தலைமுறையினரிடம் கண்ட அதே குற்றத்தையே நானும் இப்போது என்னுடைய மக்களிடத்தில் காண்கிறேன்.

இது இனி வரும் எல்லாத் தலைமுறையினரும் பாடும் பாட்டாகவே இருக்கும்.

ஆனால் இதற்கு காரணம் யார் என்பதை நாம் அனைவருமே மறந்துபோகிறோம்.

நம்முடைய பெற்றோர்கள் நம்முடைய இளம் பருவத்தில் நம் கண்ணெதிரே பேசிய பேச்சு, செய்த செய்கைகள் இவைகளைத்தானே நாமும் நம்முடைய பிள்ளைகளுக்கும் எதிரில் பேசுகிறோம், செய்கிறோம்?

நம்முடைய பெற்றோர்கள் பேசிய பேச்சும், செய்த செய்கைகளும் நல்லவைகளாய் இருந்திருந்தால் நாமும் நல்லதையே பேசி, நல்லதையே செய்திருப்போம்.

அதையே நம்முடைய பிள்ளைகளும் கடைப்பிடித்திருப்பார்கள். நாமும் நம்முடைய பெற்றோர்கள் செய்த தவறுகளையே செய்துவிட்டு நம்முடைய இளைய தலைமுறையனரை மட்டும் இதைச் செய்யாதே, அதைச் செய்யாதே என்று குறை காணுவதில் என்ன பயன்?

ஏசு வாழ்ந்த காலத்தில் ஒருமுறை தன்னைக் காண வந்த இளஞ்சிறார்களை சீடர்கள் தடுத்து நிறுத்துவதைப் பார்த்து இவ்வாறு கூறுவார். ‘குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோரதே..’ மேலும் ‘இச்சிறார்களுக்கு யாரேனும் இடைஞ்சலாயிருந்தால் (அதாவது அவர்கள் வழிதவறிச் செல்ல காரணமாயிருந்தால்) அவர்களுடைய கழுத்தில் இயந்திரக் கல்லைக் கட்டி நடுக்கடலில் தள்ளவேண்டும்’ என்பார்.

ஆம்..

மாசு, மருவற்ற இளம் உள்ளங்களில் தவறான சிந்தனைகளை விதைப்பது அவர்களுக்கு விஷத்தை ஊட்டுவதற்கு சமம்.

நம்முடைய பெற்றோர்களுக்கு அவர்களுடைய வயதான காலத்தில் நாம் செய்வது: அது நல்லதாக இருந்தாலும் சரி, தீயதாக இருந்தாலும் சரி அதையேத்தான் நம்முடைய பிள்ளைகளும் நமக்குச் செய்வார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

ஆகவெ இன்று முதல் நம்முடைய பிள்ளைகளுக்கு முன்பு நல்லதையே பேசுவோம், நல்லதையே செய்வோம்.

****

Tuesday, November 14, 2006

நம்மால் பிறருக்கு ஏற்படும் பிரச்சினைகள்

‘நாம் பிறருடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவர்களுடைய பிரச்சினைகளுக்கு நாமே காரணமாக இல்லாமல் இருக்க வேண்டும்.’

பிரச்சினைகளில் இரு வகை உண்டு.

ஒன்று நமக்கு நாமே உண்டாக்கிக்கொள்ளும் பிரச்சினை.

மற்றவர்களுடைய நலன் இவற்றால் பாதிக்கப்படாதவரை இத்தகைய பிரச்சினைகளால் நமக்கு மட்டுமே தொல்லைகள், துன்பங்கள்.

நம்மால் உண்டாக்கப்படும் பிரச்சினைகளுக்கு நாமேதான் தீர்வு காண வேண்டியிருக்கும்.

ஆனால் இரண்டாவது வகை பிரச்சினை மற்றவர்களால் ஏற்படுவது.

இத்தகைய பிரச்சினைகளை நம்முடைய அலுவலகத்திலும் சரி குடும்ப வாழ்க்கையிலும் சரி அன்றாடம் சந்திக்கிறோம்.

குடும்பத்தில் மனைவியால், மக்களால் ஏன் சில சமயங்களில் நம்முடைய பெற்றோர்களாலும்..

‘ஒங்க வேலைய பார்த்துக்கிட்டு இருக்காம ஏம்மா அவ கிட்ட போய் வாய குடுத்து வாங்கிக் கட்டிக்கிறீங்க? இதுனால ஒங்களுக்கு மட்டுமா டென்ஷன், எனக்குந்தான்.. ஒங்க ரெண்டு பேரோட சண்டையால ஆஃபீசுக்கு போனாக் கூட எதுலயும் கவனம் செலுத்த முடியமாட்டேங்குது..’

இது தினந்தோறும் காலை நேரங்களில் ஏறத்தாழ எல்லா கூட்டுக் குடும்பங்களிலும் கேட்கக்கூடிய வசனம்.

‘டேய்.. காலேஜுக்கு போனமா வந்தமான்னு இல்லாம என்னடா இது தினம் ஒரு பிரச்சினைய வீட்டுக்கு கொண்டுவரே.. இருக்கற தொல்லை போறாதுன்னு ஒங்க பிரின்சிக்கிட்ட வேற வந்து நிக்கணுமாக்கும்?’

இது தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் எல்லா தகப்பன்களுக்கும் அடிக்கும் லெக்சர்.

‘ஏங்க ஒங்கக்கிட்ட எத்தன தரம் சொல்லியிருக்கேன். மத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்கன்னு.. ஒங்களால எனக்குதான் கெட்ட பேர்.’ இது மனைவியர் கணவன்மாருக்கு கொடுக்கும் டோஸ்..

ஆக, நாம் எல்லோருமே சில நேரங்களில் மற்றவர்களுக்கு பிரச்சினைகளாகவே இருக்கிறோம்..

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகளாவது பரவாயில்லை.

ஆனால் அலுவலகங்களில் ஏற்படும் போட்டி பொறாமைகளால் ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்தும் பிரச்சினைகள் இருக்கிறதே..

அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமானவை.

அது சில சமயங்களில் மிகவும் மோசமான விளைவுகளையும், பாதிப்புகளையும் மற்றவர்களுடைய வாழ்க்கையில் ஏற்படுத்திவிடுவதை பார்க்கிறோம்.

என்னுடைய அலுவலக அனுபவத்தில் ஒரு சிலருடைய வக்கிரமங்களால் பலரும் தங்களுடைய நிம்மதியை இழந்து தவிப்பதை கண்கூடாக பார்த்திருக்கிறேன்.

இதைத்தான் நம்மால் இயன்றவரை தவிர்க்க வேண்டும்.

நம்மால் இயன்றவரை மற்ற எவருக்கும் பிரச்சினையாக இல்லாமலிருக்க இன்று முதல் முயற்சி செய்வோம்.

***

Monday, November 13, 2006

நம்முடைய கடமையைச் செய்வோம்!

‘நாம் தினமும் ஆலயத்துக்குச் சென்றுதான் இறைவனை வழிபடவேண்டும் என்று இல்லை. அதை எந்த மதமும் வலியுறுத்துவதுமில்லை!’

இறைவன் ஒரு முறை தன்னை அன்றாடம் அழைக்கும் பக்தன் ஒருவனை சந்திப்பதென முடிவு செய்தாராம்.

அந்த பக்தனோ அன்று இரவு முழுவதும் கண்விழித்து பணியாற்ற வேண்டிய இரவு ஷிப்ட்டில் படு பிசியாக இருந்தார்.

இறைவன் அவன் முன்னால் நின்று பார்த்தார், பக்கத்தில் நின்று பார்த்தார், பின்புறம் நின்று பார்த்தார்.

ஹுஹும்.. பக்தன் தன்னுடைய கர்மமே கண்ணாயிருந்தார்.

இறைவனுக்கு மிகவும் ஏமாற்றமாகிப் போனது. அவனுக்கு மறைவாய் இருந்தபோது தன்னை அன்றாடம் அழைத்தவன் அருகில் வந்து நின்றும் கண்டுக்கொள்ள மாட்டேனென்கிறானே என்று நொந்துபோனார்.

சரி அவன் ஓய்வாய் இருக்கையில் தன்னை அழைப்பான் போலிருக்கிறது என்று நினைத்தவாறு விண்ணகம் திரும்பினார்.

அவர் விண்ணகம் சென்றடையும் வழியிலேயே பகதனின் அழைப்பு வந்தது. ‘என்ன?’ என்றார் இறைவன்.

‘சாரி சாமி.. நீங்க பக்கத்துல வந்து நின்னப்போ நா ரொம்ப பிசியா இருந்தேன்.. இப்பத்தான் ஓய்வு கிடைத்தது.’ என்றான் பக்தன்.

இறைவனுக்கு வியப்பு. ‘என்ன நான் பக்கத்தில் வந்து நின்றதைப் பார்த்தாயா?’ என்றார்.

‘நான் உங்களைப் பார்த்தேன் என்பதும் ஆனால் உங்களிடம் நின்று பேசக்கூட முடியாமல் நான் வேலையில் கவனமாயிருந்தேன் என்றும் உமக்கு தெரியுமே.. பிறகு ஏன் என்னை கேட்கிறீர்?’

இறைவன் சிரித்தார். ‘உண்மைதான்.. உன்னைக் குறை கூற விரும்பவில்லை.. உன்னுடைய அலுவலில் கடமையே கண்ணாக இருப்பதன் மூலம் என்னுடன் உரையாடிக்கொண்டிருக்கிறாய் என்பது எனக்கு தெரியும்.. இருந்தாலும் உன்னை சோதிக்கவே இப்படி கேட்டேன்.’

ஆம்..

நம்முடைய அனுதின அலுவல்களை, நம்முடைய கடமைகளை சரிவர செயலாற்றுவதன் மூலமாகவே நம்மால் இறைவனுடன் உரையாட முடியும்.

மாறாக நம்முடைய கடமைகளை புறக்கணித்துவிட்டு அனுதினமும் ஆலயத்தில் அமர்ந்து இறைவனே, இறைவனே என்று கூவுயழைப்பதில் இறைவனுக்கே விருப்பமில்லை..

செய்யும் தொழிலே தெய்வம் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருப்பது இதைக் குறித்துதான்.

கடவுளே, கடவுளே என்று கூறுபவனெல்லாம் இறையரசில் நுழைந்துவிட மாட்டான் என்று உறுதியாக உங்களுக்கு கூறுகிறேன் என்று ஏசு கூறியதாக பைபிளிலும் வருகிறது.

கிறித்துவ மதம் மட்டுமல்ல எல்லா மதங்களுமே இதைத்தான் வலியுறுத்துகின்றன.

***

Saturday, November 11, 2006

தவறுகள்!

‘வாழ்க்கையில் நாம் அவ்வப்போது செய்யும் தவறுகள் நமக்கு பாடம் கற்பிப்பதுடன் மற்றவர்களுடைய தவறுகளையும் பொறுத்துக்கொள்ள உதவுகிறது.’

தவறு செய்வது மனித இயல்பு.

ஆனால் செய்த தவறுகளை திருத்திக்கொள்வதுடன் மீண்டும் அதே தவறுகளை செய்யாமல் இருப்பதை இயல்பாக்கிக் கொள்வது அவசியம்.

தவறு செய்வது மனித இயல்பு என்பதை நாம் உணர்ந்துவிட்டால் போதும் பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து மறப்பது எளிதாகிவிடும்.

பைபிளிலும் இதைக் குறித்து ஒரு வாசகம் வருகிறது. ‘உன் கண்ணில் இருக்கும் உத்தரத்தை மறந்துவிட்டு உன் அயலான் கண்ணில் இருக்கும் துரும்பைப் பார்க்காதே.’

உண்மைதானே..

நம்முடைய தவறுகளால் நமக்கு ஏற்படும் இழப்பைத் தாங்கிக்கொள்வது நமக்கு எளிதாகத் தெரிகிறது.

அதுவே பிறருடைய தவற்றால் என்றால் மட்டும் நம்மால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை.

இதுவும் மனித இயல்புதான். அப்படி நினைக்காமல் இருப்பதற்கு மிகுந்த மனப்பக்குவம் தேவை.

அது போகப் போக, நம்முடைய வாழ்நாளில் கிடைக்கும் அனுபவங்களே நம்மை அத்தகைய பக்குவத்துக்கு இட்டுச் செல்லக் கூடும்.

அத்தகைய மனப்பக்குவமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும்.

இன்றைய குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் அத்தனை விரிசல்களுக்கும் இத்தகைய மனப்பக்குவம் இல்லாமலிருப்பதே காரணம் என்றால் மிகையாகாது.

மாமியார் உடைத்தால் மண்குடம். மருமகள் உடைத்தால் பொன்குடம் என்ற பண்டைய காலத்து சொல் இப்போதும், இந்த 21ம் நூற்றாண்டிலும் பொருத்தமாக இருப்பதுதான் வேதனை, வெட்கக் கேடு.

சுருங்கிக் கிடக்கும் நம்முடைய மனதை விசாலப்படுத்தி பிறருடைய தவறுகளைப் பொருத்துக்கொள்ளக் கூடிய மனப்பக்குவம் பெற என்ன செய்ய வேண்டும் என்று நாம் எல்லோருமே சிந்திக்க வேண்டும்..

சிந்திப்போமா?

Friday, November 10, 2006

இறுதி தீர்ப்பு

‘இன்று உங்களுடைய வாழ்நாளின் இறுதி நாள் என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த இருபத்தி நாலு மணி நேரத்தில் என்னவெல்லாம் செய்வீர்கள்?’

சில ஆண்டுகளுக்கு முன்பு நான் பங்குகொண்ட ஒரு மனித வள மேம்பாட்டு கருத்தரங்கில் கேட்கப்பட்ட கேள்வி இது.

அரங்கத்தில் என்னுடன் இருந்தவர்கள் வங்கித் துறையின் உயர் அதிகாரிகள்.

பலரும் பணியிலிருந்து ஓய்வு பெறும் தருவாயில் இருந்தவர்கள்.

அவர்களில் பலர் அளித்த பதில்கள் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தன.

ஒருவர் சொன்ன பதில் மட்டும் என் மனதில் அப்படியே பதிந்துபோனது.

‘என்னுடைய முப்பதாண்டு கால அலுவலக வாழ்க்கையில் நான் எத்தனையோ நண்பர்களால் நிந்திக்கப்பட்டிருக்கிறேன். அவர்களையெல்லாம் மனமுவந்து மன்னிக்கிறேன். அதுபோன்றே நானும் பலரை நிந்தித்திருக்கலாம். அவர்களிடமெல்லாம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குற்ற உணர்வு இல்லாத மனதுடன் இன்றைய நாளை முடித்திடுவதே என்னுடைய இறுதி விருப்பம்.’

மறப்பதும் மன்னிப்பதும் இறை இயல்பு என்பது உண்மைதான். ஆனால் அதை மனிதன் செயல்படுத்துகையில் இறைவனாகிறான்.

உலக அழிவு என்பது நம் ஒவ்வொருவருடைய இறுதி நாளையே குறிக்கிறது என்றுதான் நான் நினைக்கிறேன்.

கிறிஸ்த்துவ சமயத்தில் இறுதி தீர்ப்பு உண்டு என்ற நம்பிக்கை உள்ளது.

நாம் மரித்தவுடன் இறைவன் சன்னதியில் நிறுத்தப்பட்டு நம்முடைய வாழ்நாளிலே செய்த நல்லவை, தீயவை யாவும் அலசப்பட்டு தீர்ப்பிடப்படுவோம் என்று கிறிஸ்த்துவர்கள் நம்புகிறார்கள்.

உன் வாழ்நாளில் உனக்கு தீங்கிழைத்த யாரையுமே நீ மன்னிக்க தயாராக இருக்கவில்லையே. நான் மட்டும் உன்னை எதற்கு மன்னிக்க வேண்டும் என்று இறைவன் கேட்கும் பட்சத்தில் நம்முடைய பதில் என்னவாயிருக்கும்?

********Thursday, November 09, 2006

தீர்வுகள்!

‘பிரச்சினைகளின் தீவிரம் நம்மை பாரமாய் அழுத்தும் சமயங்களில் எத்தனை முயன்றும் தீர்வு கிடைக்கவில்லையா? கவலைப்படுவதை விட்டு விட்டு சற்றே எட்ட நின்று அதை மற்றவர்களுடைய கண்ணோட்டத்தில் காண முயலவேண்டும். அதுவரை நம்முடைய அறிவுக்கு எட்டாத தீர்வு சட்டென்று நம் முன்னே தென்பட வாய்ப்புள்ளது.’

என்னுடைய அலுவலக வாழ்விலே பல பிரச்சினைகளை சந்தித்திருக்கிறேன்.

சில சமயங்களில் எத்தனை முயன்றும் சில பிரச்சினைகளுக்கு தீர்வே இல்லையென்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டதுண்டு.

அப்போதெல்லாம் என்ன செய்தால் தீர்வு கிடைக்கும் என்ற நினைப்பிலேயே பிரச்சினைகளை மேலும் தீவிரப் படுத்தியிருக்கிறேன்.

சென்னையில் நான் பணியாற்றிக்கொண்டிருந்த காலம் அது. தத்துவ மேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் உரையை கேட்கும் வாய்ப்பு கிடைத்டிருக்கிறது.

ஒருமுறை வாழ்க்கையும் கவலைகளும் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை இப்போது நினைவுக்கு வருகிறது.

“துவக்கத்தில் சவாலாக தென்படும் பிரச்சினைகளே இறுதியில் நம்முடைய திறமையை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்துவிடுகின்றன. தீர்வு காண முடியாத பிரச்சினைகள் என்று உலகில் ஒன்றுமே இல்லை..

நம் கண்முன்னே நிற்கும் பிரச்சினைகளை விட்டு சற்று நேரம் விலகியிருந்து பிரச்சினைகளை மட்டும் பாராமல் அதனுடன் தொடர்புடையவைகளை ஒரு விரிந்த கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்..

அதுவரை நம்முடைய சிந்தனைக்கு புலப்படாதிருந்த தீர்வு நம் முன்னேயே இருப்பதை காண முடியும்..” என்றார்.

ஒரு பிரச்சினையை தீர்க்க இயலாத சில தீர்வுகள் வேறு சில பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைந்துவிடுவதும் உண்டு.

ஒரு அமெரிக்க நிறுவனம் பிரித்தெடுக்க முடியாத பசையை (Adhesive) உருவாக்க பல கோடி டாலர்களை செலவழித்து தோல்வியடைந்ததாம். அதாவது எத்தனை முயன்றும் பசை ஒட்டாமல் பிரிந்துக்கொண்டிருந்தது.

அந்த நேரத்தில் நிறுவனத்தின் கடைநிலை ஊழியர் ஒருவர் சட்டென்று இதையே நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பாக மாற்றலாமே என்றாராம். அப்படி தோன்றியதுதான் நாம் அன்றாடம் அலுவலகங்களில் உபயோகிக்கும் சதுர வடிவ மஞ்சள் நிற ஸ்டிக்கர்கள் (Sticker Pads).

ஆக, நம்முடைய ஆக்கபூர்வமான சிந்தனைகளுக்கும் உரமிடுவதுதான் பிரச்சினைகள்.

பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கை நாளடைவில் போரடித்துவிடும்..

உடனடி தீர்வு (Instant solution) என்று எதுவுமில்லை. அதுபோலவே தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இல்லை.

உடனே கிடைக்கும் வெற்றியளிக்கும் மகிழ்ச்சியை விட நம்முடைய ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டிவிட்டு அதன் பயனாக நாம் அடையும் வெற்றி தரும் மகிழ்ச்சி கூடுதல் நிறைவை அளிப்பதுடன் அது நிரந்தரமானதும் கூட..

********

Wednesday, November 08, 2006

அன்பு எங்கே?

‘அன்பு ஒரு மந்திரக்கோலைப் போன்றது. அது திறவாத வாசல்களையும் திறக்கவல்லது. காது கேளாதவர்களும் ரசிக்கக் கூடிய இசை, முடவர்களையும் நடனமாட தூண்டும் தாளம், பார்வையிழந்தவர்களுக்கும் தெரியும் சூரிய உதயம்!’

அன்பு என்பது நாம் மனத்தளவில் உணரக்கூடிய ஒன்று..

அன்பில்லாதவர்க்கு இல்லை இவ்வையகம்..

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்..

மாணவ பருவத்தில் இதை பள்ளி வகுப்புகளில் கேட்டு, கேட்டு நம்முடைய மனம் மரத்துப் போனதாலோ என்னவோ அதன் உள்ளர்த்தம் என்ன என்பதே மறந்துப் போய்விட்டது.

நம் உடலில் மனம் என்பதே எங்கிருக்கிறதென்று தெரியாதபோது அதில் சுரக்கும் அன்பை எப்படி உணர்வது என்று கேட்கிறோம்.

உண்மையான அன்பு என்பதே அரிதாகிப் போயிவிட்ட இக்காலத்தில் அதைப் பற்றி பேசுவது கூட ஒரு வீண் வேலை என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.

Domestic violence Act நடைமுறைக்கு வந்த வெகு சில நாட்களிலேயே நாட்டிலேயே முதன்முதலாக தமிழகத்தில் ஒரு கணவருக்கெதிராக காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி..

இதில் விசித்திரம் என்னவென்றால் கிறித்துவர்கள் தங்களுக்கு முன்மாதிரியாக வரித்திருக்கிற சூசை-மரி (Joseph & Mary) என்ற தம்பதியரின் பெயரைத்தான் இவர்களுக்கும் சூடியிருக்கிறார்கள் இவர்களுடைய பெற்றோர்!

அன்பு அழுக்காறு கொள்ளாது, ஆணவம் கொள்ளாது, தன்னலம் பேணாது, பிறர் குறை காணாது என்று சிறுபருவ முதலே பைபிளின் வார்த்தைகளைக் கேட்டு, கேட்டு வளர்ந்த பாரம்பரியத்திலிருந்து வந்த தம்பதியரே இச்சட்டத்தின் கீழ் தங்களுடைய தாம்பத்திய சச்சரவை தீர்க்க முனைந்திருக்கிறார்கள்!

அடுத்த சில நாட்களில் ஆவேசத்தில் கணவனை சுட்டுக்கொன்ற பெண் காவல் நிலையத்தில் சரண் என்ற செய்தி!

இதெல்லாம் எதைக் காட்டுகிறது?

அன்பு இல்லாமல் போனதைத்தான்!

அன்பு மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, நட்பு மூன்றெழுத்து என்று கலைஞர் அவர்கள் ஒரு விழாவில் அடுக்கிக் கொண்டே சென்றது நினைவுக்கு வருகிறது..

இத்தகைய அடுக்கு மொழி பேச்சைக் கேட்கும்போது அரங்கமே கரவொலி எழுப்பி ஆர்ப்பரிக்கிறது..

பேச்சு முடிந்து வீடு திரும்புகையில் கேட்டது மறந்துபோகிறது..

மறதியும் மூன்றெழுத்துதானே..

********

Tuesday, November 07, 2006

நான், நீ, நாம்..

‘நீ, நான், நாம்.. தன்னலம், பிறர்நலம், நம்நலம்.. இதில் எது முக்கியம் என்றால்? எல்லாமேதான்..’

தன்னலம் கருதாது பிறர்நலம் பேண்.. அதுவே உண்மையான மகிழ்ச்சிக்கு வழி.

இது நம் முதியோர் நமக்கு கற்றுத் தந்த பாடம்.

ஆனால் இதை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிப்பது அத்தனை எளிதல்ல.

அதற்கு ஒரு தேர்ந்த மனமுதிர்வு, பக்குவம் வேண்டும்.

ஆனால் இதற்கு மாற்றாக நம் எல்லோருடைய நலம் என்று சிந்தித்துப் பாருங்கள்..

இதில் என்னுடைய நலம், பிறருடைய நலம் எல்லாமே அடங்கியிருக்கிறதல்லவா?

ஆனால் இப்போதெல்லாம் தன்னலமே மேல்நோங்கி நிற்கிறது.

அதனால்தானோ என்னவோ கூட்டுக்குடும்பம் என்ற தத்துவம் செல்லாத காசாகிப் போய்விட்டது.

என் மனைவி, என் கணவன், என் பிள்ளை என்று குடும்பம் சுருங்கிப் போய்விட்டது.

நம்முடைய அலுவலகங்களிலும் ஏன் பொதுவாழ்விலும் இத்தகைய எண்ணம் பெருகி சமுதாயநலம் என்ற எண்ணமே நம்மில் பலருக்கும் இல்லாமல் போய்விட்டது.

தனி மரம் தோப்பாகாது.. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை..

இதெல்லாம் வெறும் தத்துவ சிந்தனைகளாகவே நின்றுபோனதுதான் இன்றைய சமுதாய சீர்கேட்டுக்கு அடிப்படைக் காரணம்..

இன்றைக்கு, இந்த நொடியில் கிடைக்கும் வெற்றியே நமக்கு முக்கியம் என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் மேலோங்கி நிற்பதும் இந்த சீர்கேட்டுக்கு காரணம் என்பதை நாம் உணரவேண்டும்..

அதற்காக நான், எனக்கு என்பது தவறு என்று சொல்ல வரவில்லை.

அதையே நாம், நமக்கு என்று சிந்தித்து பார்க்க முயல வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள்..

தனிநபராய் ஒரு காரியத்தை அணுகுவதைவிட ஒரு குழுவாய் அணுகுவது மிகவும் எளிது..

தனிநபர் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சியை விட ஒரு குழுவாய் இணைந்து செயல்பட்டு கிடைக்கும் வெற்றி அளிக்கும் மகிழ்ச்சி பன்மடங்கு பெரிது.

இது நம் விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும்..

சமீப காலமாக இதை அவர்கள் மறந்துபோனதன் விளைவுதான் தொடர்ந்து அடையும் தோல்விகள்..

இதை செயல்படுத்துவது கடினம்தான்..

ஆனால் முயன்றால் முடியும்தானே..

****

  

Monday, November 06, 2006

வண்ணங்கள்!

‘ஒரு ஒவியத்தின் முழுமைக்கு சகல வண்ணங்களும் தேவை. அவற்றில் தேவை என்றோ தேவையில்லாதவை என்றோ வேறுபாடு இருப்பதில்லை.’

வண்ணங்களின் அடிப்படை சிவப்பு, பச்சை, நீலம் என்ற மூன்று வண்ணங்களே.

இம்மூன்று வண்ணங்களையும் வெவ்வேறு விகிதத்தில் கலக்கும் ஒரு ஒவியனின் கைத்திறனே பலவித வண்ணங்களின் பிறப்பிடம்.

ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு பொருளையும் நாம் காலப்போக்கில் அளித்திருக்கிறோம்.

கருப்பு என்றால் துக்கம், எதிர்மறை (Negativity), துவேஷம் (hatred), குற்ற உணர்வு (Guilt), தோல்வி (Defeat) என்றும்

பச்சை என்றால் பசுமை, நல்லுணர்வு, அமைதி, பக்குவம் (Balance or wisdom) என்றும்

சிகப்பு என்றால் தீவிரம் (Aggression), சந்தோஷம் (Joy) என்றும் வரித்திருக்கிறோம்..

ஆனால் அதற்கு அந்த வண்ணங்கள் பொறுப்பல்ல..

ஓரு ஓவியனின் பார்வையில் எல்லா வண்ணங்களும் ஒன்றுதான்.. எந்தெந்த இடத்தில் எந்த வண்ணத்தைக் கலந்தால் ஓவியம் முழுமைப் பெறுமோ அந்த வண்ணங்களை தேவையான விகிதத்தில் கலப்பதில் மட்டுமே தன்னுடைய கவனத்தைச் செலுத்துகிறான்.

அதுபோல்தான் மனிதர்களும்..

ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு குணம்..

பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்..

இது மனிதர்களுக்கும் பொருந்தும்..

பிறவியிலேயே ஒருவன் நல்லவனாகவோ தீயவனாகவோ பிறப்பதில்லை..

காலப் போக்கில் குடும்பம், உறவுகள், நட்பு மற்றும் அவன் வாழும் சமுதாயம் ஒருவனை நல்லவனாகவோ தீயவனாகவோ உருவாக்கிவிடுகின்றது..

ஓவியனுக்கு வண்ணங்கள் எப்படியோ அப்படித்தான் இறைவனுக்கும்..

கடவுளின் பார்வையில் அவருடைய படைப்புகளில் மிகவும் உன்னத படைப்பான மனிதர்கள் எல்லாருமே ஒன்றுதான்..

நல்லவன் அல்லது தீயவன் என்றோ,
பணம் படைத்தவன் அல்லது வறியவன் என்றோ,
தலைவன் அல்லது தொண்டன் என்றோ
மேல் ஜாதி அல்லது கீழ் ஜாதி என்றோ..

எந்தவித பாகுபாடும் இல்லை..

கடவுள் நல்லது என்று படைத்ததை நீ தீயது என்று சொல்லாதே என்று பைபிளில் ஒரு வாக்கியம் உள்ளது..

ஆம் நண்பர்களே..

நம்மில் தாழ்ந்தவர் என்றோ.. தீண்டப்படாதவர் என்றோ எவரும் இல்லை..

நம்முடைய தோலின் நிறம் வேண்டுமானால் கறுப்பு என்றோ வெள்ளை என்றோ இருக்கலாம்..

நம்முடைய ரத்தத்தின் நிறம் ஒன்றுதான்..

சிகப்பு என்றால் சந்தோஷமாம்..

நினைவில் கொள்வோம்..

****

Saturday, November 04, 2006

தானம்!

“தானம் பிறரன்பின் வெளிப்பாடு. குறிப்பாக தனக்குள்ளதையும் பிறருக்கு தானம் செய்யும்போது.”

தானத்திற்கு முன்மாதிரியாக கொடிக்கு தன்னுடைய தேரையே வழங்கிவிட்டு தன் வழியே நடந்த பாரி வள்ளலைக் குறிப்பிடுவதுண்டு.

ஆனால் இப்போதெல்லாம் சுயவிளம்பரத்திற்காக தானம் செய்யும் சிலரால் தானம் என்ற சொல்லே மதிப்பிழந்து போய்விட்டது.

வலக்கை செய்வதை இடக்கை அறியாமல் தானம் செய் என்பது நமக்கெல்லாம் மறந்துபோனது.

நன்கொடை வழங்கியதுமே அதற்குரிய ரசீதைப் பெற்று அதற்குண்டான வருமான வரி விலக்கைப் பெறுவதிலேயே குறியாயிருக்கிறோம்.

இன்னும் சிலர் நன்கொடை வழங்காமலேயே போலி ரசீதுகளைப் பெற்று வருமான வரி விலக்கைப் பெறுவதிலும் கைதேர்ந்தவர்களாயிருக்கிறார்கள்.

இதுவல்ல தானம்.

ஒருமுறை ஏசு தன்னுடைய சீடர்களுடன் தேவாலய காணிக்கைப் பெட்டியில் காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

இறுதியில் ஒரு ஏழைப் பெண்மனி தன்னுடைய கையிலிருந்த இரண்டு செப்புக் காசுகளையும் காணிக்கைப் பெட்டியில் போடுவதைப் பார்த்த ஏசு தன் சீடர்களிடம் இவள்தான் மிக அதிகமான காணிக்கையை அளித்தாள் என்று கூறுகிறார்.

சீடர்களோ அதிர்ந்துபோய், ‘என்ன போதகரே, எத்தனையோ பேர் பொன் மற்றும் வெள்ளிக் காசுகளை செலுத்திவிட்டு சென்றனரே?’ என்கின்றனர்.

ஏசு புன்னகையுடன் அவர்கள் தங்களுக்குள்ளவற்றில் மிகுதியையே கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினர். இவளோ தன்னிடமிருந்த அனைத்தையுமே செலுத்தினாள் என்கிறார்.

இக்காலத்தில் தனக்குள்ள அனைத்தையும் தானம் செய்துவிட்டால் அவனுக்குப் பைத்தியக்காரன், பிழைக்கத் தெரியாதவன் என்ற பட்டமே கிடைக்கும்.

ஆனால் உண்மையான பிறரன்பு அதில்தான் இருக்கிறது என்று நம் மதங்கள் கூறுகின்றன.

அதை அப்படியே கடைப்பிடிப்பதென்பது நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்தான்..

ஆனாலும் நம்மால் இயன்றவரை, நம்முடைய வருட வருமானத்தில் ஒரு பங்கை தானம் வழங்குவதென்ற முடிவை இன்று எடுப்போம்.

இறைவன் நமக்கு வாரி வழங்கியவற்றில் ஒரு சிறு துளியை நம் சகோதரர்களுக்கு வழங்க முன் வருவோம், நம் பிறரன்பை வெளிப்படுத்துவோம்.

***

Friday, November 03, 2006

பிரச்சினைகள் இல்லாத பொழுது!

“நம்முடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் ஒரு புது பிரச்சினைகளுடனே விடிகின்றது. இப்பிரச்சினைகளை எதிர் கொள்வதை தவிர்த்து ஒளிந்து ஓடுவதில் பலனில்லை.”

நம்மில் யாராவது என்னுடைய நிழலை அறவே ஒழித்துவிட்டேன் என்று கூற இயலுமா?

என்னால் முடியும் என்றால் என்னைப் பார்த்து எள்ளி நகையாட எனக்கு நெருங்கிய நண்பர்களும் தயங்கமாட்டார்கள்.

அப்படித்தான் நம்முடைய பிரச்சினைகளும்.

பிரச்சினைகள் இல்லாத மனிதனும் இல்லை. பிம்பங்கள் இல்லாத பொருளும் இல்லை.

எனக்கு எந்தவித பிரச்சினையுமில்லை நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்று எவராவது கூறினால் அதுவேதான் அவர்களுக்கு பிரச்சினை!

‘ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே..’

இந்த பாடல் வரிகளை மறக்க முடியுமா?

எத்தனை சத்தியமான உண்மையை எவ்வளவு எளிதாக அளித்திருக்கிறார் பாடலாசிரியர்!

பிரச்சினைகளைக் கண்டு ஓடி ஒளிவதைக் காட்டிலும் அவற்றை எதிர்கொள்வது எப்படி என்பதை நாம் கண்டுணரவேண்டும்.

எப்படி பிரச்சினைகள் இல்லாமல் இருக்காதோ அதுபோன்று தீர்வுகள் இல்லாத பிரச்சினைகளும் இருக்க முடியாது.

அது என்ன என்பதைக் கண்டுணர்வதில்தான் நம்முடைய செயல்பாடு இருக்க வேண்டும்.

நேற்றைய பிரச்சினைகளுக்கு நாம் கண்டுணர்ந்த தீர்வு இன்றைய பிரச்சினைக்கு தீர்வாக இருக்க முடியாது என்பதையும் நாம் உணர வேண்டும்.

பிரச்சினைகள் புதிது புதிதாய் முளைத்துவரும் நேரங்களில் அவற்றிற்கு தீர்வு காண நாமும் புதிய வழிகளைக் காண வேண்டும்.

நேற்றைய பிரச்சினையை வெற்றிகொண்டவந்தானே நான் என்று இன்றைய பிரச்சினையை அணுகலாகாது.

இன்றைய பிரச்சினையை எல்லா கோணங்களிலுமிருந்து ஆராய்ந்து அதற்கு தீர்வு காண முயல்வதை விட்டுவிட்டு கடந்த கால வெற்றியில் களித்திருப்பதில் பலனில்லை.

நம்முடைய ஐந்து விரல்களும் ஒன்றில்லையல்லவா?

அதுபோல்தான் பிரச்சினைகளும்.

இன்றைய பொழுது நாளைய பொழுதாகும் முன் இன்றைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

சோர்ந்து போகாமல் சிந்தித்து செயல்படுவோம். வெற்றிகொள்வோம்


Friday, October 27, 2006

நேர்மறையான எண்ணங்கள்

‘நம்முடைய முகம் எப்போதும் ஒளியை நோக்கியே இருக்க வேண்டும். அப்போதுதான் இருள் நம்மை சூழ்ந்துக் கொள்ளாது’

எந்த ஒரு பொருளுமே ஒளியே நோக்கி இருக்கும்போது அது பிரகாசிக்கின்றது.

இருள் சூழ்ந்திருக்கும் எந்த ஒரு பொருளும் அது வைரமேயானாலும் இருண்டு, களையிழந்துதான் காணப்படும்.

இது நமக்கும் பொருந்தும்.

அதனால்தானோ என்னவோ புகைப்பட நிலையங்களில் கண்கள் கூசும் விளக்கொளியை பயன்படுத்துகின்றனர்.

நம்முடைய புறத்தோற்றத்தைக் குறித்து மட்டும் நான் கூற வரவில்லை.

நம்முடைய பார்வையும், நோக்கமும், குறிக்கோளும் ஒளியை அதாவது, முன்னேற்றத்தை நோக்கியே இருக்க வேண்டும்.

இன்னும் குறிப்பாக கூறவேண்டுமானால் நம்முடைய எதிர்கால  பார்வை எப்போதும் நேர்மறையான எண்ணங்களுடன் (Positive Thoughts) இருக்க வேண்டும். அப்போதுதான் எந்த ஒரு விஷயத்திலும் நம்மால் வெற்றிபெற முடியும்.

ஒரு வெள்ளைப் பலகையின் மையத்தில் இருக்கும் கரும்புள்ளி நேர்மறையான, நம்பிக்கையான எண்ணங்களுடன் பார்ப்பவர்களுக்கு புலப்படாது. மாறாக அதைச் சுற்றிலும் இருக்கும் வெள்ளை நிறமே தெரிகிறது.

ஆனால் எதிர்மறையான எண்ணங்களுடன் (Negative Thoughts) பார்ப்பவர்களுக்கு அக்கரும்புள்ளியே பூதாகரமாக தெரிகிறது.

மிகக் குறுகலான பாதையும் விசாலமானதாக நம்முடைய மனக் கண்களுக்கு தெரிகிறதென்றால் அது நம்முடைய நேர்மறையான எண்ணங்களின் தூண்டுதலால்தான்.

எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிக்க இத்தகைய எண்ணங்கள் மிகவும் அவசியம்.

இன்று சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் தலைவர்கள் பலரும் இத்தகைய குறுகலான பாதையில் பயணம் செய்தவர்களே.

அதற்கு மிக நல்ல உதாரணம் நம்முடைய ஜனாதிபதி திரு. கலாம் அவர்கள்.

அவர் மாணவர்கள் மத்தியில் ஆற்றும் ஒவ்வொரு உரையிலும் இதை வலியுறுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

பைபிளிலும் இதைக் குறித்து ஒரு சொல் வருகிறது. ஏசு தன்னுடைய சீடர்களிடத்திலும் தன்னுடைய போதனைகளைக் கேட்க வரும் கூட்டத்தினரிடையிலும், ‘நீங்கள் ஒளியின் மக்களாக இருங்கள்’ என்று கூறுகிறார்.

ஆம் நண்பர்களே, அவநம்பிக்கை என்னும் அந்தகாரம் நம்மை சூழ்ந்துக்கொள்ள ஒருபோதும் நாம் இடந்தரலாகாது.

நம்முடைய பார்வை ஒளியை நோக்கியே இருக்கட்டும். அப்போதுதான் நாம் மட்டுமல்ல நம்முடைய பார்வையும், நோக்கமும் மற்றவர்களுக்கு நன்றாக தெரியும்.

நாம் செல்ல வேண்டிய இடத்தை சென்றடைய நேர்மறையான எண்ணங்கள் என்ற ஒளி நம்மை வழிநடத்த வேண்டும்.

நம்முடைய இலக்கை நோக்கி செல்லும் நம்முடைய பயணம் இலகுவாக அமைய இந்த ஒளி நமக்கு மிகவும் அவசியம்.

****

Thursday, October 26, 2006

பதவியும் பொறுப்பும்

‘மறதி இல்லாத மனிதன் எப்படி இருக்க முடியாதோ அதுபோல  பொறுப்புகளும், கடமைகளும் இல்லாத சுதந்திரமும் இருக்க முடியாது’

மறதி என்பது மனித இயல்புகளுள் ஒன்று.

எத்தனை படித்த மேதாவிக்கும், மாநிலத்திலேயே தேர்வில் முதலாவதாக வரும் மாணவனுக்கும் கூட மறதி என்பது மிகவும் சகஜம்.

மனதில் இருத்திக்கொள்ள தேவையில்லாதவற்றை சேமித்து வைத்துக் கொள்ள தேவையில்லை என்பதை நம்முடைய மூளையே தீர்மானித்துவிடுவதுதான் இதற்குக் காரணம்..

இது மனித இயல்பு. இதில் படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை.

மறதி இல்லாத மனிதன் இவ்வுலகில் இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை, நிதர்சனம்!

அதுபோலத்தான் பொறுப்புகள் இல்லாத சுதந்திரம் அல்லது அதிகாரமும்.

நம்மில் பலருக்கும் சுதந்திரமாக செயல்பட நம்முடைய பெற்றோரும் மேலதிகாரிகளும் அனுமதிப்பதில்லையே என்ற தங்கம் உள்ளது.

ஆனால் அந்த சுதந்திரத்தை தகுந்த வழியில் அதாவது ஆக்கபூர்வமாக செயல்படுத்த நம்மால் முடியுமா அல்லது அதன் விளைவாக நாம் செயல்படுத்த வேண்டிய கடமைகளை நிறைவேற்ற தேவையான தகுதிகள் நம்மிடம் உள்ளனவா என்பதை  ஆராய  தவறிவிடுகிறோம்.

‘என்ன பெரிய மேனேஜர் பதவி. எங்கிட்ட விட்டா இவர விட பிரமாதமா இந்த பிராஞ்ச மேனேஜ் செஞ்சிருப்பேன்.’ இது  நான் குமாஸ்தாவாகவும், கடை நிலை அதிகாரியாகவும் இருந்த நேரத்தில் மனதில் நினைத்துக் கொள்வதுமட்டுமல்லாமல் என்னுடைய மேலாளரின் முதுகுக்குப் பின்னால் பேசிய பொறுப்பில்லா பேச்சு.

ஆனால் நானே ஒரு கிளைக்கு மேலாளரான பிறகுதான் தெரிந்தது அந்த பதவியின் பொறுப்பும், கடமைகளும்.

தனக்கு வந்தாத்தான் தெரியும் தலவலியும், திருகுவலியும் என்பார்கள்..

அதுபோல்தான் அதிகாரமும், சுதந்திரமும்..

இவை கிடைக்கின்றவரை கிடைக்காதா என்று ஏக்கம் இருக்கும்.

கிடைத்தபிறகு அவற்றுடன் வரும் பொறுப்புகளும், கடமைகளும் நம்மில் பலருக்கும் தாங்கவொண்ணா பாரமாக தோன்றும்.

ஆகவே நம் பெற்றோர்களை, அதிகாரத்திலிருப்பவர்களைக் குறை கூற முயல்வதற்கு முன் நமக்கு அதற்குண்டான தகுதி இருக்கிறதா என்பதை ஆராய்வோம்..

சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் கேட்கும் நமக்கு அதனுடன் வரும் பொறுப்புகளையும், கடமைகளையும் சரிவர செயலாற்றும் தகுதியும் நமக்கு இருக்கிறதா என்பதையும் ஆராய்வோம்..

பதவி என்பது தூரத்து பச்சை. தொலைவிலிருந்து பார்ப்பதற்குத்தான் அழகாக இருக்கும். அருகில் சென்றால்தான் தெரியும் அது ஒரு முள் இருக்கை என்பது.

****Monday, October 23, 2006

நேற்றைய விரோதி இன்றைய நண்பன்!

‘நம்முடைய எதிரிகளை வெற்றிகொள்ள சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்கிக் கொள்வதுதான்’

இது நம்முடைய அரசியல்வாதிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய நல்ல பாடங்களுள் ஒன்று.

முக்கியமாக, நம்முடைய தமிழக அரசியல்வாதிகளிடத்தில் சமீப காலமாக மிக சகஜமாக காணப்படும் ஒன்று இக்குணம்.

கடந்த ஐந்து வருட காலத்தில்தான் எத்தனை கூட்டணிகளையும் பிரிவுகளையும் கண்டிருக்கிறோம்?

நேற்றைய எதிரி இன்றைய நண்பன். இன்றைய நண்பன் நாளைய எதிரி. என் எதிரியின் எதிரி என் நண்பன்.

அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று ‘ஜெ’ மட்டுமல்ல மு.கவும் பல நேரங்களில் பகிரங்கமாக ஒத்துக்கொண்டிருக்கிறார்.

அரசியல்வாதிகளைப் போல் ‘இன்றைய நண்பன் நாளைய எதிரி’ அல்லது ‘என் எதிரியின் எதிரி என் நண்பன்’ என்றெல்லாம் நாம் கருதத் தேவையில்லை..

ஆனால் ‘நேற்றைய எதிரி இன்றைய நண்பன்’. இது நமக்கு தேவையான ஒன்று.

பைபிளில் ஒரு கூற்று வருகிறது. ‘உன்னைவிட பலசாலியான எதிரியுடன் மோத செல்லும் வழியில் உன்னுடைய பலம் என்ன பலஹீனம் என்ன என்பதை எண்ணிப் பார். அவனை வெற்றிக்கொள்ள முடியுமானால் முன்னேறு. இல்லையேல் அவனிடம் சமாதானமாகிவிடு.’

இது இன்றைக்கு மட்டுமல்ல. இவ்வுலகம் உள்ளவரை பொருந்தும்.

ஆனால் எவரும் நமக்கு நிரந்தர நண்பனும் அல்ல.. நிரந்தர எதிரியும் அல்ல, என்பதும் உண்மைதான்.

நம்முடைய கருத்துக்கு மாற்று கருத்து நிச்சயம் இருக்கும் இருக்க வேண்டும் என்பதை நாம் உணர்ந்திருந்தாலே போதும், பாதி பிரச்சினை தீர்ந்தமாதிரிதான்.

என்னுடன் ஒத்துப்போகாதவரெல்லாம் எனக்கு எதிரானவர் என்ற கருத்துள்ளவருக்கே எதிரிகள் இருப்பர்.

கருத்து வேற்றுமைகள் உறவுகளை முறிக்கத் தேவையில்லை என்று மனப்பக்குவம் நமக்கு வந்துவிட்டாலே போதும், இத்தகைய அர்த்தமற்ற விரோத மனப்பான்மை அறவே அகன்றுபோய்விடும்.

வாழும் காலம் சொற்பமே. இதில் நம்மால் முடிந்தவரை நண்பர்களையும் உறவுகளையும் சம்பாதித்துக் கொள்ளாமல் விரோத மனப்பான்மையை மனதில் வளர்த்துக்கொள்வதில் எவ்வித அர்த்தமும் இல்லை, லாபமும் இல்லை..

மனதை விசாலமாக வைத்துக்கொள்வோம்.

நட்பும், உறவும் மலர வழி வகுப்போம்.

****

Sunday, October 22, 2006

உண்மைத் தலைவன் யார்/

ஞாயிற்றுக் கிழமைகளில் கிறித்துவ தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடக்கும் என்பதைக் கேட்டிருப்பீர்கள்.

திருப்பலியின் நடுவில் இரண்டு வாசகங்களும், அதற்குப் பிறகு நற்செய்தியும் (Gospel) வாசிக்கப்படும்.

இன்றைய இரு வாசகங்களும், நற்செய்தியும் நமக்கு இன்றும் பொருத்தமானதாக எனக்கு தோன்றவே அதை உங்களிடமும் பகிர்ந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இன்றைய நற்செய்தி வாசகம் மாற்கு (St.Mark) என்ற சுவிசேஷகர் எழுதிய சுவிசேஷம் 10ம் அதிகாரத்திலிருந்து 35முதல் 45வது வசனம் முடிய பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

அதன் சுருக்கம்:

ஒரு நாள் ஏசு தன் சீடர்களுடம் அமர்ந்திருக்கையில் யாக்கோபும் (Jacob) யோவானும் (John) அவரையணுகி, ‘நீர் அரியணையில் அமர்ந்திருக்கையில் எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்துக் கொள்ள எங்களுக்கு அருளும்’ என்றனர்.

மறுமொழியாக ஏசு இவ்வாறு கூறுகிறார்.

உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் முதலில் அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் நான் தொண்டு ஏற்பதற்கன்று தொண்டு ஆற்றவே வந்தேன்.’

ஏசு கூறிய இறையரசை அவருடன் பல நாட்கள் தங்கியிருந்த சீடர்களே புரிந்துக்கொள்ளவில்லை. அவர் ஏதோ இவ்வுலகில் ஒரு பேரரசை நிறுவ பிறந்தவர் என எண்ணிக்கொண்டிருந்தனர். ஆகவேதான் அவருடைய வலக்கை மற்றும் இடக்கையாக இருந்து அந்த அரசின் அதிகாரத்தையும், வசதிகளையும் அனுபவிக்க தங்களுக்குள் போட்டியிட்டனர்.

ஏசு அன்று தன் சீடர்களுக்கு கூறிய அறிவுரை இன்றும் நம் தலைவர்களுக்கு எப்படி பொருந்துகிறது பாருங்கள்.

இன்றைய தலைவர்கள் தேர்தல் நேரத்தில் வீதி வீதியாக கொளுத்தும் வெயிலிலும் கொட்டும் மழையிலும் கும்பிட்ட கரங்களுடன் வலம் வரவும் வீடு வீடாக சென்று நம் காலைத் தொட்டு வணங்கவும் தங்களுக்குள் போட்டிப் போடுவதென்ன..

தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்ததும் தங்களை உதவி கேட்டு நாடி வருபவர்களிடம் காட்டும் அலட்சியமும், ஆணவமுமென்ன..

நான் உங்கள் தொண்டன் என்று தேர்தல் அறிக்கையில் அறைகூவல் இடுபவர்கள் தேர்தல் முடிந்ததும் தங்களுக்கென அடியாட்களை வைத்துக் கொண்டு வலம் வருவதென்ன..

‘பதவிகள் பணிபுரியவே’ என்று அன்று ஏசு தம் சீடர்களுக்குச் சொன்ன அறிவுரை இத்தகைய பதவி வெறி பிடித்து அலையும் நம்முடைய இன்றைய தலைவர்களுக்கும் சேர்த்துத்தான் என்று இப்போது தோன்றுகிறது..

ஏன் அரசியல் தலைவர்களைச் சொல்கிறீர்கள்?

நம் குடும்பங்களில் என்ன நடக்கிறது?

நாந்தான் வீட்டுக்கு தலைவன், என் சொல்படிதான் எல்லாமே நடக்க வேண்டும் என்று நம்மில் எத்தனைபேர் நினைக்கிறோம்..

இல்லத்தரசி என்பவர் உண்மையிலேயே அரசியைப் போல்தான் நடத்தப்படுகிறாரா?

நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது!

*******

Friday, October 20, 2006

அன்பு செய்வோம்.

“அன்பு என்பது ஒரு வழி பாதையல்ல. இரும்புப் பெட்டகத்திற்குள் வைத்து பூட்டி வைக்க வேண்டிய புதையலும் அல்ல.”

அன்பு ஒரு வணிகப் பொருளும் அல்ல. காசு கொடுத்து வாங்குவதற்கு.

அன்பை அன்பால் மட்டுமே வாங்க முடியும், பெற முடியும்.

ஒருதலைக் காதலைப் போன்ற துன்பம் தரக்கூடிய துன்பம் உலகில் வேறொன்றும் இல்லை.

நான் அன்பு பிறரை அன்பு செய்கிறேன் என்று என்னுடைய மனதில் பூட்டி வைத்திருந்தால் போறாது. அதை வெளிப்படையாகக் காட்ட வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒருவர் இப்படித்தான்.

தன் மனைவி மக்களிடத்தில் அளவுகடந்த அன்பு வைத்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.

ஆனால் அவர் இல்லாத நேரத்தில் ஒரு நாள் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தேன்.

அவருடைய மனைவி என்னிடம் சரமாரியாக கேள்வி கேட்டு துளைத்துவிட்டார்.

‘ஏங்க அவரோட பெஸ்ட் ஃப்ரெண்டுன்னு சொல்றீங்க. நீங்களாச்சும் அவர்கிட்ட கொஞ்சம் எடுத்துச் சொல்லக் கூடாதா?’ என்றார் எடுத்த எடுப்பில்.

நான் வியப்புடன், ‘ஏன், என்ன செஞ்சார்?’ என்றேன்.

அவர் சலிப்புடன் பேச ஆரம்பிக்க அவருடைய இரண்டு பிள்ளைகளும் (ஒரு ஆண், ஒரு பெண்) சேர்ந்துக்கொண்டனர்.

‘அவர கல்யாணம் செஞ்ச நாள்லருந்து அவர் மூஞ்சில சிரிப்பையே பார்த்ததில்லீங்க. எப்ப பார்த்தாலும் கடுவன் பூன கணக்கா மூஞ்ச வச்சிக்கிட்டு. சரிங்க.. என்னையத்தான் பிடிக்கலன்னு வச்சிக்குவம். எம் பிள்ளைங்க என்ன பாவம்க செஞ்சாங்க, இவருக்கு பிள்ளைங்களா வந்து பொறந்ததத் தவிர? அவர் ஆஃபீஸ்லயும் அப்படித்தான் இருப்பாரா?’

எனக்கு எப்படி சொல்லி விளக்குவதென தெரியவில்லை. என்னுடைய நண்பர் அலுவலகத்திலும் அப்படித்தான் இருப்பார். யாரையும் நெருங்க விடமாட்டார். கண்டிப்பு, கறார் பேர்வழி என்று அவருடைய முகத்தைப் பார்த்தாலே தெரியும்.

ஆனால் அவருடன் நெருங்கிய என்னைப் போன்ற நண்பர்கள் சிலருக்கே தெரியும் அவர் எத்தனை பூஞ்சை மனதுடையவர், தனக்கு வேண்டியவர்கள் மீது எத்தனை அன்பும் பாசம் வைத்திருப்பவர் என்று.

ஆம் அன்பு என்பது இரும்பு பெட்டகத்தில் பூட்டி வைக்க வேண்டிய புதையல் அல்ல.

அது ஒரு மணம் வீசும் மலரைப் போல.

நாம் பிறர் மீது அன்பு செய்கிறோம் என்பது நம்மால் அன்பு செய்யப்படுபவர்களுக்கு தெரியவேண்டும்.

நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்..

நீங்கள் உலகை அன்பு செய்தால் உலகம் உங்களை அன்பு செய்யும்.

மாறாக நீங்கள் உலகை வெறுத்தால் உலகம் உங்களை நிச்சயம் வெறுத்து ஒதுக்கிவிடும்..

காசா, பணமா?

அன்பு கொடுக்க, கொடுக்க குறைந்துப் போகக்கூடிய செல்வமும் இல்லை. மாறாக நீங்கள் கொடுப்பதற்கு பண்மடங்கு அது உங்களிடமே திரும்பி வரும்.. வட்டியும், முதலுமாய்.. ஏன் போனசும் சேர்த்து.

தீபத் திருநாளாம் இந்நாள் முதல்..

நாம் அன்பு செய்வோம்.. அதை பிறர் அறியும் வண்ணம் வெளியில் காட்டவும் செய்வோம்..

என்னுடைய சக வலைப்பதிவாள நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ஜோசப்

Wednesday, October 18, 2006

பிரார்த்தனையும் கோரிக்கையும்

‘பிரார்த்தனை. அதன் வலிமையை உலகெங்குமுள்ள கோடானு கோடி மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். பிரார்த்தனையில் வலிமையை நாம் பரீட்சித்து பார்க்க வேண்டாமா? காசா, பணமா?’

பிரார்த்தனை என்றவுடனே அது கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே செய்கிற வேலை. அது மூட நம்பிக்கையை தூண்டுகிறது என்று நம்மில் சிலருக்கு தோன்றுகிறது.

ஆனால் பிரார்த்தனை என்ற சொல்லுக்கு 'நம்பிக்கையுடனான கோரிக்கை' என்றும் கூறுகின்றன அகராதிகள்.

‘சார்.. என் மனைவிக்கு சென்னையில வேல கிடைச்சிருக்கு. அதனால எனக்கும் சென்னைக்கே மாற்றம் கொடுத்தீங்கன்னா நல்லாருக்கும். ஒங்களால செய்ய முடியுங்கற நம்பிக்கையிலதான் கேக்கேன் சார், ப்ளீஸ்.’

இது நம்மில் பலரும் நம்முடைய உயர் அதிகாரிகளிடத்தில் வைக்கும் கோரிக்கை.

இதுவும் ஒருவகை பிரார்த்தனைதான்.

நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்ட சில காரியங்கள் நடைபெற பிறருடைய அதாவது, அதை செய்து முடிக்கக் கூடிய சக்தி அல்லது திறன் படைத்தவர்களுடைய உதவியைக் கேட்பது.

அதில் தவறு இருக்கிறதா என்ன?

அதுபோல்தான் இறைவன் முன் வைக்கும் பிரார்த்தனையும்.

இறைவன் என்றால் ஒரு சக்தி. கண்ணுக்கு தெரியாத, என் அறிவுக்கு எட்டாத ஒரு சக்திவாய்ந்த சக்தி என்று வைத்துக் கொள்வோம்.

அநத சக்திக்கு ஏசு என்றோ, புத்தர் என்றோ அல்லது ராமர் என்றோ, விநாயகர் என்றோ உருவம் கொடுக்க விரும்புவர்கள் கொடுத்துக்கொண்டு தங்களுடைய கோரிக்கையை முன்வைப்பதில் மட்டும் என்ன தவறு? அதை மட்டும் ஏன் மூட நம்பிக்கை என்று நின¨க்கிறோம்?

இறைவன் மீது நமக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அது வேறு விஷயம்.

ஆனால் நம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

அதற்காக சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பவர் ‘சாமி எனக்கு நாளைக்கே ஒரு ஓப்பல் ஆஸ்ட்ரா கார் வேணும்’ என்று கேட்டால் கிடைக்குமா என்று வாதாட வராதீர்கள்.

‘சரி நமக்கு என்ன தேவை என்று இறைவனுக்கு தெரியுமே பிறகெதற்கு கேட்பது?’ என்றும் வாதாடாதீர்கள்.

எனக்கு மாற்றம் தேவை என்று என்னுடைய சேர்மனுக்கும் தெரிந்துதானிருந்தது. ஆனால் அதை நான் கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். நான் கேட்டால் எங்கே கிடைக்கப் போகிறதென்ற என்ற அவநம்பிக்கையில் நான்கு வருடம் கேட்காதிருந்தேன்.

ஒரு நாள் திடீரென்று தோன்றியது, காசா, பணமா? கேட்டுத்தான் பார்ப்போமே என்று கேட்டேன்.

‘அப்படியா? சரி, நேரம் வரும்போது நிச்சயம் ஒங்க ரிக்வெஸ்ட்ட எச்.ஆர். கமிட்டியில வைக்கறேன்.. சரின்னு சொன்னா.. செஞ்சிரலாம் என்றார் என் சேர்மன். அடுத்த கமிட்டி கூட்டத்திலேயே என்னுடைய மாற்றத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

இதோ.. நான் சென்னையில் என் மனைவி மக்களுடன்..

‘கதவு தட்டுனாத்தான் திறக்கும்.. உள்ள வேலையா இருக்கறவங்களுக்கு நீங்க வெளிய நிக்கறீங்கன்னு ஜோஸ்யமா தெரியும்?’

அதுபோல்தான் நம்முடைய பிரார்த்தனையும்.

‘கிடைத்துவிட்டதென்ற விசுவாசத்துடன் நீங்கள் எதைக் கேட்டாலும் வானகத்திலுள்ள என் தந்தை உங்களுக்கு அருள்வார்.’ என்றார் ஏசுபிரான்.

கிடைக்குமா கிடைக்காதா என்ற அவநம்பிக்கையுடன் வைக்கும் எந்த கோரிக்கையும் நிறைவேறாதல்லவா?

ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்யுங்கள்.. அதாவது, நாம் கேட்பது கிடைத்துவிட்டதென்ற நம்பிக்கையுடன்..

******

Tuesday, October 17, 2006

செல்வம்

‘நம்மில் சிலர் திரண்ட செல்வத்துக்கு அதிபதிகளாக உள்ளோம். நம்மில் பலருடைய செல்வமோ நமக்கு அதிபதியாக உள்ளது.’

ஒரு நாள் ஏசுபிரான் மக்களிடையே போதித்துக்கொண்டிருந்த சமயத்தில் ஒரு வாலிபன் அவரை அணுகி ‘போதகரே நான் கடவுளுக்கு உகந்தவனாக ஆவலாய் உள்ளேன். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்றி வினவினான்.

‘நீ கடவுளுடைய கட்டளைகளைக் கடைபிடி. மீட்பு பெறுவாய்.’ என்றார் ஏசு.

அந்த இளைஞன் மறுமொழியாக, ‘போதகரே நான் கடவுளுடைய கட்டளைகள் யாவற்றையும் சிறுவயது முதலே கடைபிடித்து வருகிறேன்..’ என்றான்.

அந்த இளைஞன் ஒரு பெரும் செல்வந்தன் என்பதை ஏசு அறிந்திருந்தார். ஆகவே, ‘நீ போய் உன் செல்வத்தை விற்று வறியவர்களுக்குக் கொடு. பிறகு என்னை வந்து பின்செல்’ என்றார்.

இளைஞன் வாடிய முகத்தோடு திரும்பிச் சென்றான்.

ஏசு கூறியதன் பொருள் செல்வந்தர் எவரும் சொர்க்கத்தையடைய முடியாதென்றோ அல்லது செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்களாக இருக்க் முடியாதென்rறோ பொருள் அல்ல.

செல்வந்தர்கள் இறைவனுக்கு உகந்தவர்கள்தான். செல்வத்துக்கு அடிமையாகிப் போனவர்கள் அல்ல.

நம்மில் பலருக்கும் நம்முடைய உடல் மற்றும் ஆத்ம நலனைவிட நம்மிட ஆஸ்திகள்தான் முக்கியமாகத் தெரிகிறது..

இளம் வயதில் நேரம் காலம் பாராமல் உழைக்கிறோம். எதற்கு? கூடிய மட்டும் செல்வம் சேர்ப்பதற்கு.

ஆனால் அதை ஆற அமர்ந்து அனுபவிக்கும் வயதில் நோய்க்கும் மருந்துக்குமே நம்முடைய செல்வம் கரைந்து போகிறது.

செல்வம் தேவைதான். ஆனால் அது நம்முடைய தேவைக்குள் இருக்க வேண்டும்.

நாம் எத்தனை செல்வந்தர்களாகவோ, செல்வாக்குள்ளவர்களாகவோ இருப்பினும் இறுதியில்நமக்கு கிடைக்கப்போவதென்னவோ ஆறடி நிலம்தான்.

அதை உணர்ந்திருந்தாலே போறும், குறைகள் தீரும், கவலைகள் மாறும், குழம்பிய மனதில் அமைதி வந்தேகும்..

***

Monday, October 16, 2006

இடைஞ்சல்கள்

“விஞ்ஞானம் எந்த அளவு முன்னேறியிருந்தாலும் வீசும் சூறாவளி காற்று, பேய் மழை, கண்களைக் கூசவைக்கும் மின்னல், நடுங்க வைக்கும் இடி என்ற இயற்கைச் சீற்றங்களை தடுக்க முடிவதில்லை. ஆனால் அது இவற்றின் அழிவுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும், பாதிப்புகளைக் குறைத்துக் கொள்ளவும் உதவுகிறது.”

அதுபோல்தான் நம் வாழ்விலும்.

சில சமயங்களில் நமக்கு ஏற்படும் சோதனைகள், ஏமாற்றங்கள், தோல்விகள் ஆகியவற்றிற்கு காரணம் என்னவென்பது நமக்கு விளங்காத புதிராகவே இருக்கிறது.

‘நான் எவ்வளவோ கவனமாகத்தானே செயல்பட்டேன்.. பிறகெப்படி?’ என்ற மாய்ந்து போகிறோம்.

காரணத்தை அல்லது காரணகர்த்தாவைத் தேடி அலைகிறோம்..

நமக்கு தோல்வியின் தாக்கத்தைவிட நான் இதை எதிர்பார்க்காமல் போனேனே என்ற அங்கலாய்ப்பே அதிகமாகிறது.

புயல், மழை, இடி, மின்னல். இவற்றிற்கு காரணங்களைத் தேடி அலைந்தால்.. இறைவனையல்லாது யாரை குற்றம் சொல்வது?

இயற்கையின் சீற்றத்திற்கு காரணகர்த்தா இறைவந்தானே? அவராக பார்த்து வீசியது போதும், பெய்தது போதும் என்று நினைக்கும்வரை (இதற்கும் இறைவனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று வாதாடுவர்களுடன் வாதாடி பலனில்லை) பொறுத்திருக்க வேண்டியதுதான்.

ஆட்டத்தை துவக்கியவந்தானே முடிக்க வேண்டும்?

அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..

நம்மால் ஓரளவுக்குத்தான் கவனமாக இருக்க முடியும்.

சாலையில் நாம் எவ்வளவு கவனமாக வாகனத்தை செலுத்தினாலும், பாதசாரிகளுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் நாம் நடந்து சென்றாலும் சில சமயங்களில் விபத்துகளில் சிக்கிக்கொள்வதில்லையா?

நடக்கும் விபத்து பிறருடைய கவனக்குறைவாலும் ஏற்படலாம் அல்லவா?

அதுபோல்தான் நம்முடைய வாழ்விலும்..

நம்மால் இயன்ற அளவு கவனமாக, உண்மையாக இருப்போம், முழு மனதுடன் உழைப்போம். நல்லவற்றையே நினைப்போம்.

அதன் பிறகும் ஏற்படும் தோல்விகளை, ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவத்தை நமக்களிக்கும்படி இறைவனை வேண்டுவோம்..

இறைவனின் அருள் நமக்கு இருக்கும் வரை இத்தகைய தாற்காலிக இடைஞ்சல்களை நம்மால் நிச்சயம் தாங்கிக்கொள்ள முடியும்.

ஒவ்வொரு மழைக்கு பின்னாலும் வானவில் உண்டுதானே..

***

Thursday, October 12, 2006

சந்தேகம்.

“எந்த ஒரு விஷயத்திலும் நிதானித்து முடிவெடுங்கள். ஏனெனில் ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் என்பது அந்தக்காலம். இப்போதெல்லாம் இரண்டென்ன, மூன்று, நான்கு என பல கோணங்கள் இருக்க வாய்ப்புள்ளது.”

தனி நபர் உறவுகள் பாதிக்கப்படுவதே சில்லறை விஷயங்களினால்தான் என்பதை நாம் எல்லோரும் அறிந்தே இருக்கிறோம்.

"மலைபோலருக்கற விஷயத்துல ரோட்ல போறவனையெல்லாம் நம்பிருவா. துரும்பு மாதிரி விஷயத்துல யாரையும் நம்பாம.."

"இவர் கூட முப்பது வருசமா குடும்பம் நடத்தற என்னெ நம்பாம.. அவன் சொன்னா, இவன் சொன்னான்னு.."

இது சாதாரணமாக நம் குடும்பங்களில் கேட்கும் புகார்.

கணவன்-மனைவி, தந்தை-மகன்/மகள், அலுவலகத்தில் பணியாளர்-மேலாளர் ஏன் நெருங்கிய நண்பர்கள் மத்தியிலும் உறவுகள் பாதிக்கப்படுவதே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவெடுப்பதால்தான் என்றால் மிகையாகாது.

சந்தேகம் என்பது ஒரு பிசாசு.

அது ஒரு குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்கள் மத்தியிலோ நுழைந்துவிட்டால் அதன் ஆதிக்கம் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்குமே துக்கத்தை மட்டுமே அளித்துவிடுகிறது.

ஆகவே ஒரு விஷயத்தில் முடிவெடுப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவருடைய கோணத்திலிருந்தும் ஆராய்ந்து பாருங்கள்.

அதே சமயம் தனி மனித உறவுகளில் எல்லாவற்றையுமே ஆராய்ந்து பார்த்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. சிலவற்றை கண்டும் காணாமல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தீர ஆராய்ந்த பிறகும் சந்தேகம் இருப்பின் அதன் சாதகத்தை சம்பந்தப்பட்டவருக்கு தாருங்கள். கிரிக்கெட் ஆட்டத்திலும் கூட the benefit of doubt should be given to the batsman என்பார்கள்.

உங்களுடைய பெருந்தன்மை பாதிக்கப்படுவதிலிருந்து தப்பித்தவர்களால் பாராட்டப்படுவதுடன் அவர்களுடைய பார்வையில் உங்களுடைய மதிப்பு பண்மடங்கு உயரவும் வாய்ப்புள்ளது.

உறவும் நட்பும் ஏற்பட பல ஆண்டுகள் தேவை.. ஆனால் அறுத்தெறிவதற்கு ஒரு நொடி போதும்..


சிந்திப்போம்..

Monday, October 09, 2006

புன்னகை!

“புன்னகை நம் முகத்திற்கு அழகூட்டுகிறது. அது மட்டுமா? நம் வயதையும் அல்லவா குறைத்து காட்டுகிறது! புன்னகை செய்ய முடியாத எதையும் அழகு சாதனங்களோ, அழகு கூடங்களோ செய்யாது”

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.

உண்மைதான். முகத்தில் தெரியும் புன்னகை உள் மனதில் இருக்கும் அமைதி, சந்தோஷம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடி என்றால் மிகையாகாது.

பொறாமை, அகங்காரம், காமம் ஆகிய தீய குணங்கள் மண்டிக் கிடக்கும் உள்ளம் கொண்டவருடைய முகத்தில் எத்தனை பொன் நகையணிந்தாலும் புன்னகை தரக்கூடிய அழகு வரவே வராது.

பெண்களின் முகத்துக்கு மட்டுமே அழகூட்டுவதல்ல புன்னகை. குழந்தை முதல் வயோதிகர் வரை ஆணாயினும் பெண்ணாயினும் முகத்திற்கு அழகூட்டுவது புன்னகைதான்.

புன்னகையால் என்னென்ன பயன்?

1. புன்னகை பிறருடன் நமக்கிருக்கும் நட்பைக் காட்டுகிறது
2. புன்னகை புதிய நண்பர்களை நமக்கு தருகிறது
3. புன்னகை நம்முடைய அன்றைய நாளையே பிரகாசிக்கச் செய்கிறது 4. புன்னகை அத்துடன் நில்லாமல் நாம் அன்று சந்திக்கும் எல்லோருடைய நாளையும் பிரகாசிக்கச் செய்கிறது
5. புன்னகை நம்மைப் பற்றிய நல்லெண்ணத்தை மற்றவர் மனதில் விதைக்கிறது
6. புன்னகை நம் உள்ளத்திலிருக்கும் அமைதி, தன்னம்பிக்கை, மகிழ்ச்சி ஆகிய நல்ல உணர்வுகளுக்கு ஒரு வெளி அடையாளம்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

நாம் விரும்பும் பெண்ணோ, ஆணோ நம்முடைய விருப்பத்தை அங்கீகரிக்க காட்டும் அடையாளமே புன்னகைதானே!

காசில்லாமல் ஒரு நகை கிடைக்கிறதென்றால் அது புன்னகையைத் தவிர வேறென்ன?

அணிந்துக் கொள்வோம், வருகிறீர்களா?

***